Monday, February 8, 2021

DATTATREYA 2


 

தத்தாத்ரேயருக்கு யார் குரு? - 2
J K SIVAN
'அவதூத கீதை ''

தத்தாத்ரேயர் வேதாந்தம் விவேகானந்தர் விரும்பி படித்து பேசிய ஒரு தத்துவ பொக்கிஷம். பாகவத புராணத்தில் தத்தாத்ரேயரின் 24 குருமார்களை பற்றி ஸ்ரீ கிருஷ்ணன் உத்தவருக்கு உபதேசித்ததாக பாகவத புராணம் சொல்கிறது.

மஹா பாரதத்தில் வரும் ஒரு புகழ்பெற்ற யது குல ராஜரிஷி பெயர் யயாதி. கிருஷ்ணனின் குலம். யயாதிக்கு அசுர குரு சுக்ராச்சார்யார் மகள் தேவயானி மனைவி. வயதாகியும் உலக ஆசைகள் யயாதியை விடவில்லை. மீண்டும் இளமையைத் தேடினான். யார் கொடுப்பார்கள்? . கிழவன் யயாதி தனது மகன் யதுவை ஒருநாள் கேட்கிறான்.

''என் அன்பு மகனே யது, நாம் இருவரும் வயதை மாற்றிக் கொள்ளலாமா?''

'' ஸாரி அப்பா, நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை''

கோபித்த யயாதி, மகன் யதுவை நாடு கடத்து கிறான். யது மனது உடைந்து காட்டுக்கு போகிறான். அவன் மனதுக்கு இதமாக யாராவது அவனுக்கு ஆறுதல், உபதேசங்கள் சொல்ல மாட்டார்களா?? தேடுகிறான். அப்போது தான் அங்கே உடல் முழுதும் வெண்ணிற சாம்பல் பூச்சு. ஞான ஒளி வீச எதிரே வருகிறார் ஒரு இளம் முனிவர். அப்படியே ஓடி அவர் காலில் விழுகிறான் யது . அந்த அவதூதரை (முற்றும் துறந்த நிர்வாண ரிஷி ) காண்கிறான்.

''மகரிஷி நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?
''ஒரு அவதூதன்''
''அப்படியென்றால்?''
'' உலக பற்றை அறவே விட்டொழித்தவன், ஆத்ம ஞானப் ப்ரம்மானந்தத்தை பிடித்துக் கொண்டு அதில் திளைப்பவன்'' .
'' மகரிஷி நீங்கள் யாத்ரிகராக எங்கெல்லாமோ அலைபவராக காண்கிறீர்கள், ஒரு குழந்தை மாதிரி துளியும் கவலை இன்றி உங்களால் எப்படி உலகில் வாழ முடிகிறது.?
அளவற்ற ஞானம் வைராக்யம் எல்லாம் உங்களுக்கு எங்கே எப்படி அடையமுடிந்தது? . எல்லோரும் ஏதோ ஒரு விருப்பு, வெறுப்பு, ஆசை பாசம் இதிலெல்லாம் மூழ்கி தவிக்கும்போது தாங்கள் மட்டும் எப்படி நிச்சிந்தையாக உலவுகிறீர்கள்?.

''எல்லாம் குருமார்களிடம் கற்றுக்கொண்ட பாடம்''

''குருமார்களா, பலர் உங்கள் குருவா? மகரிஷி எனக்கும் அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு அழியாத ஞானம் பெற உபதேசம் செய்வீர்களா '' என்கிறான் யது .

அவதூதரான தத்தாத்ரேயர் யதுவை கூர்ந்து கவனிக்கிறார். அவன் ஆர்வம் உண்மையானது என அறிகிறார்.

''அப்பனே, நானும் உன் மாதிரி சாதகன் தான். வாழ்க்கையே உலகில் பெரிய பள்ளிக்கூடம். அதில் எண்ணற்ற சாதகர்களுக்கு குருமார்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருபத்திநாலு சந்தர்ப்பங்களில் எனக்கு உபதேசம் செய்தவர்களை என்னை உய்விக்க வந்த இருபத்து நாலு குருக்களாக ஏற்றுக் கொண்டவன்''

நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. சாக்ஷாத் ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு ஒரு குரு அவசியமா என்ன? அவரே ஜகத் குரு. அவதூதராக அவர் சென்று கொண்டிருந்தவர்.

யதுவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மண்டை வெடித்து விடும்போல ஆகிவிட்டது.

''சுவாமி என்ன சொல்கிறீர்கள் உங்களுக்கு 24 குருவா?
எப்படி அத்தனை பேரிடம் பயின்றீர்கள். என்ன தெரிந்துகொண்டீர்கள்?'

'''குரு என்று நீ யாரையெல்லாம் நினைக்கிறா
யோ அவர்கள் எல்லோருமே குரு தான்''

''உங்கள் பெற்றோர்களிடமிருந்து ஞானம் பெற்றீர்களோ?''

''பெற்றோர் மட்டுமல்ல, மற்றோர் யாராக இருந்தாலும் அவர்களுடமிருந்தும் அறிய வேண்டியவை இருந்தால் அவர்களும் குரு தான்''

''உங்களது 24 குருமார்களை தெரிந்துகொள்ள வெகு ஆர்வமாக இருக்கிறது. யார் அவர்கள்?'

'''நீ சரியான சாதகன். ஞான மார்க்கத்தை அடைய விழைபவன் என்று புரிகிறது. எனவே சொல்கிறேன் கேள்'' என்று ஆரம்பிக்கிறார் தத்தாத்ரேயர்.:

1 . என் முதல் குரு - பூமி.
அகழ்வாரையும் இகழாது தாங்குவது. பொறுமை யின் சின்னம். இன்னா செய்தாலும் நன்மை செய்தல், பொறுமை, எல்லாவற்றையும் இது தான் கற்றுக்கொடுத்தது.

''குருவே, நீங்கள் சொன்னதற்குப்பிறகு தான் யான் யோசிக்கிறேன். ஆம் முதல் குரு எல்லோருக்குமே பூமாதேவி தான். ''

2. தண்ணீர் தான் உலகத்துக்கே ஆதாரசுருதி . உயிர் நிலைஅல்லவா.. நீரின்றி அமையாது உலகம் என்பது உனக்கு தெரியுமே. உயிர் கொடுப்பதுடன் பரிசுத்தப்படுத்துவதும் நீரே. தேங்கி நிற்கும் நீர் அல்ல. எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் நதியின் நீர் தான் பரிசுத்தமானது. எனக்கு ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டே இருக்க சொல்லிக் கொடுத்தது நதி நீர் தான். தேங்கினால் அசுத்தம் சேர்கிறது. மனதில் எதையும் சேர விடக்கூடாது என்று இந்த ரெண்டாவது குரு நதி நீரிடம் கற்றுக்கொண்டேன்.

''ஆஹா ஆச்சர்யம் மகரிஷி''

3. நெருப்பு என்னுடைய மூன்றாவது குருவாக அமைந்தது. சத்தை, ஈரம், உளுத்தது, புதுசு, பழசு, பெரிசு சிறிசு எதை அதனிடம் போட்டாலும் அதை எரித்து ஒளியும் ஜ்வாலையும் தரும் நெருப்பு தான் எதையும் சமமாக பாவித்து எரித்து, ஒளியை வீச எனக்கு கற்றுத்தந்தது. இது மட்டமானது, இது பரவாயில்லை, இது நல்லது என்று எல்லாம் பாகுபாடு அறியாத எனது மூன்றாவது குரு நெருப்பு.

''அடடா, இப்படி ஒரு விளக்கமா நெருப்புக்கு. உண்மையிலேயே நெருப்பு குருவே தான் சுவாமி.''

அவதூதர் தத்தாத்ரேயருக்கு மற்றும் யார் யார் குருமார்கள் என்பதையும் அவர் வாய்மூலம் அறிவோம்.

அந்த அடர்ந்த வனம் மஹாராஜா யதுவுக்கு ஸ்வர்கபுரியாக தோன்றியது. கையைக் கட்டிக்கொண்டு தத்தாத்ரேயர் எதிரே அமர்ந்து அடுத்து அவரது நான்காவது குரு யார் என்று அறிய ஆவலோடு இருந்தான். நம்மைப் போல.

4 ''அப்பனே, இதைக்கேள். வேடிக்கையாக இருக்கும் உனக்கு. எனது அடுத்த குரு காற்று.
எதன் மீது பட்டாலும் , எதோடு, எவரோடு தொடர்பு கொண்டாலும், அதனால். அவர்களால் பாதிக்கப்படாமல், அவர்கள் உற்சாகத்தையே, புத்துணர்ச்சியே பெற உதவ காற்றாகிய அந்த 4ம் குருவிடம் தான் கற்றுக் கொண்டேன். முள்ளும், மலரும், நல்லவரும், கெட்டவரும் எல்லாருமே சமம் என்று உணர உதவியது அந்த குருவே.

''அபாரம் மகரிஷி''

5. அடுத்தது என்னுடைய ஐந்தாவது குரு யார் என்று கேட்கப்போகிறாய்? நீ கேட்கும் முன்பாக நானே சொல் கிறேன். கேள். பஞ்ச பூதம் உனக்கு தான் தெரியுமே. நீர், நிலம், காற்று, தீ, ஆகாசம். இதில் ஆகாசம் எனது 5வது குரு ஆகும் எரிக்கும்
சூரியனோ, குளிர்ந்த சந்திரனோ, நக்ஷத்திரங் களோ எல்லாமே தன்னுள் அடக்கம் கொண்டது பரந்த ஆகாசம். இன்னும் எது வந்தாலும் எவ்வளவு தான் வந்தாலும், அதற்கும் தன்னிடம் இடம் உண்டு என்று அமைதியாக எந்த சந்தர்ப்பத் திலும் தன்னிலை இழக்காத எதையும் வித்தியாசமின்றி பரந்த நோக்குடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையை ஆகாசம் கற்றுக் கொடுத்தது.

''சுவாமி, இப்படி கற்றுக்கொடுக்கும் குரு கிடைப்பது துர்லபம். வெகு ஆச்சர்யம் சுவாமி.''

6. ''என்ன ஆச்சர்யம் இதில்?. எனது அடுத்த குருநாதன் பற்றி தெரிந்து கொண்டால் சந்தோஷப்படுவாய். என் 6வது குரு ச ந்திரன்.

பதினைந்து நாள் வளர்ந்தாலும் தேய்ந்தாலும், தனது மொத்த உருவில் குறைவில்லாமல் ஒரே நிலையில் உள்ள சந்திரன். பதினைந்து நாள் வளர்பிறையில் வளர்கிறான். பிறகு பதினைந்து நாள் தேகிறான். இதே மறுபடியும் தொடர்கிறது. அலுப்பில்லாமல் அமைதியாக இதை செய்கி றானே. எனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் குறை பட்டாலும் மீண்டும் மீண்டும் நிறைவு பெற ஒரே நிலையில் இருக்க கற்றுக்கொடுத்த ஆறாவது குரு இந்த சந்திரன் தான்.'' என்கிறார் தத்தாத்ரேயர்.

attached is the immortal artist Raja Ravi Varma's painting of Sri Dattatreya.

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...