Monday, February 8, 2021

ENDHAIYE NANDHALAALA

 

எந்தையே நந்தலாலா:   J  K   SIVAN 

           நீ   யார்,  சிஷ்யனா, குருவா?


குரு, வாத்தியார்,  எப்போது மகிழ்கிறார்?  பணம்  பரிசு, சம்பாவனை கிடைத்தபோதா?  இல்லை. 

''என்னுடைய  சிஷ்யன், என்னை மிஞ்சியவன், அடாடா, என்ன  பேரும்  புகழும் பெறுகிறான். என்னை  தனது குருவாக அவன் அறிவித்து  அவன் புகழுக்கு நான் காரணம்  எனும்போது  நான் அவனது குரு என்ற பெருமை, பெருமிதம்  ஒன்றே  எனக்கு போதும்.''

எனக்கு  அந்த பாக்கியம்  கிடைத்ததா? புரியவில்லை தலையைச் சொறிகிறேன். எனக்கு வாய்த்த  சீடனைப்  பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை.  விசித்ரமானவன்.  என்னைப்  போலவே  தான் சிலசமயம்  அவன்.  சில நேரங்களில் வேறு ஒருவனாக ,  மற்ற நேரங்களில் இரண்டும் கலந்த வகையாக, மிகுந்த நேரங்களில் இரண்டுமே இல்லாமல்,  ஒரு  புரிபடாத,  சரியாகப் புலப்படாத  வஸ்து அவன்.  மாயக் கள்ளன், .    திருட்டு கொட்டு  என்போமே  அந்த  டைப், ரகம்.  ஏன் தெரியுமா?  என்னைக்காட்டிலும்  அறிவில் குறைந்தவன் போல்  நடிப்பான்.  ஏதோ  என் தயவால்,  துணையால்,  என் முயற்சியால், என்னோடு பழகுவதால்,  என் அறிவுரைகளைக் கேட்பதால், முன்னேற விரும்புபவன் போல்  நடந்து கொள்வது ஏமாற்று வேலை தானே?  

''குருநாதா,  என்ன  இனிமை, சாதுரியமானது உங்கள்  கவிதை என்று தலையாட்டுவான். என்ன அறிவுக் கூர்மை  குருவே உங்களுக்கு. அடடா  என்னமாக  உங்கள் ஞானம் அதில்  வீசுகிறது என்பான்.''  எல்லாமே  நடிப்பு.  

முதல் முதல்   ஒருநாள்  '' குருவே,  சரணம். எனக்கு  நீங்கள் தான்  குருவாக  இருந்து  கற்பிக்கவேண்டும் என்று  சொல்லிக்கொண்டு வந்தான். நம்பினேன். அவன் வலையில் சிக்கினேன்.  அவனிடம் வகையாகச் சிக்கிக்கொண்டதால்  நான்  பட்ட  அனுபவம்,  அப்பப்பா,  சொல்லி மாளாது. அது  ஒரு  மஹா  பாரதம்''  

 நான்  இந்த உலக மாயையை வென்றிடாதவன்.  உள்ளத்தைக்  கட்டுப்பாட்டில்  கொண்டுவராதவன். சித்தத்தை  நிறுத்தி சிவன் பாலே  வைக்கத்  தெரியாதவன், என்னுள்ளே  அவனைக்  காணாதவன், தெளிவற்றவன், என்னுள் பேரானந்தம் தேடாதவன். ஆனால்  எப்போதும்  என் ஆழ் மனதில் இந்த ஜகத்தில் எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் உண்டு. . இதை அறிந்து தான் எனக்கு தண்டனை கொடுக்கத்தான்,  என்னைத்  திருத்தத்தான், அந்த மாயக்கள்ளன்  என் சீடனாக வந்து வாய்த்தானோ?.

 வலிய  வந்தவன் என்னைப் புகழ்ந்தான்.  உச்சி குளிர்ந்தது எனக்கு. என் புலமையை  வியந்தான். ஆகாயத்தில் மிதந்தேன். என்  அகம்பாவம் வளர வழியெல்லாம் செய்தான்.  வெறும் வாயை மெல்லும் கிழவி ஒருத்திக்கு  ஒரு பிடி அவலும் கிடைத்தால் எப்படி மெல்லுவாள்?  நான்  தான் அந்தக் கிழவி  போங்கள்.

நான்  நல்ல  குரு.  எனவே   பாவம்,  இந்த  சீடனை  உயர்ந்தவனாக பண்ணவேண்டியது என் கடமை என்று மனதில்  விடா முயற்சி, ஊக்கம்  கொண்டேன்.

''இதோ  பாரடா, சீடா,  நீ  இனிமேல்  நான்  சொன்னதை கவனமாகக் கேட்கவேண்டும்.  இதெல்லாம்   இனிமேல் நீ  செய்யக் கூடாது.  இன்னாரோடெல்லாம்  பழகவே கூடாது. இப்படி தான்  பேச வேண்டும்.  இதெல்லாம் இனி நீ  ஆசைப்படக் கூடாது,  இதெல்லாம்  கற்றுக்கொள்ளக்கூடாது.  இதெல்லாம்  நீ படிக்கவேண்டும்.  இதோ  பார் நான் காட்டுபவரை எல்லாம் கெட்டியாகப் பிடித்துக்கொள்.  கற்றுக்கொள்''   என்றெல்லாம்  பெரிய  லிஸ்ட்   கொடுத்தேன். எத்தனை எத்தனையோ  அறிவுரை எல்லாம்  இரவும் பகலாக  அவனுக்கு  உயிரை விட்டு   உபதேசித்தேன்.  ரொம்ப  ஆர்வமுள்ளவனாக  ''சரி  அப்படியே'' என்று தலையாட்டினான்.  

நயவஞ்சகன் அவன்.  நான்  சொல்லியதற் கெல்லாம் நேர்  எதிராகவே  எல்லாம்  செய்யலானான். கதையிலே சொல்வார்களே  ஒரு  மனைவி தன் கணவன் சொல்லுவதற்கு எதிராகவே செய்தாள்  என்று  அது போலவே தான் இங்கும்  என் வீட்டில் என் சீடன் நடந்து கொண்ட விதமும் .

எனக்கு  நாலு பேர்  உலகில் என்னை  மதிக்கவேண்டும், பெருமைப் படுத்தவேண்டும் என்ற  எண்ணம் இருக்காதா?. அவர்கள் புகழ நடக்கவேண்டும் என்ற சிறுமதி என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்கிறேன்.  இந்த  சீடன்  செய்யும்  செய்கையால்  என் திட்டத்துக்கு, எண்ணத்துக்கு எதிராக இவன்   நடந்து வருவது  விநோதமாயிருக்கிறது. எல்லோரும் என்னை அவமதிப்பார்களே,பழிப்பார்களே,  வெறுப்பார்களே, எதற்கு இந்த சங்கடம் எனக்கு இவனால்?
 
என்ன  நடந்தது தெரியுமா?.  வருவோர்  போவோர்  எல்லாம் தெருவில், கிழவிகள் கூட,  சரியான கிறுக்கன் இவன் என்று , இந்த  குருவின் சீடன், என்று என்  பெயரை வேறு சேர்த்து சொல்லி, இகழ்ந்தார்கள். ஐயோ  பாவம் அந்த அப்பாவி குரு என்று என்மீது  சிலரின்  பரிதாபம் வேறு.   பாவம்  பைத்தியக்காரன் இவன் குரு என்று என் மீது இரக்கம் வேறு.     என் வருத்தத்தை  யாரிடம்  போய்  சொல்வேன்?

எவனை நான்  இரவு பகல்  மெனக்கெட்டு  அறிவு முத்தியவனாக காட்ட நினைத்தேனோ  சரியான பித்தன் என அவன் பேர் எடுத்தான். என் பேர் கெடுத்தான்.  என் நெஞ்சு துகள் துகளாகியது. ஒன்றா இரண்டா.  எத்தனை சாஸ்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம் சொல்லிக்கொடுத்தேன்.  சரியான ரெண்டும் கெட்டானிடம்  மாட்டிக் கொண்டேனே.

நீ பெரிய தேவனாக  வேண்டாம்.  சாதாரண மனிதனாகவாவது மாறி விடு. அதுவே போதும் என்று கூட கெஞ்சும்  நிலையை  அடைந்தேன்.  கோபம்  பீரிட்டு வந்தது.  வாய் வலிக்க திட்டியும் விட்டேன். அவனை எப்படியாவது திருத்த வேண்டும் என்று இன்னமும் எனக்கு ஆர்வம்  இருக்கிறதே?

சிரித்து சிரித்துச்  சொன்னேன்,   சள்ளென்று  விழுந்தேன்.  திட்டினேன். கேலி செய்தேன், வாயைக் கிளறி னேன். என்னென்னவோ   செய்து பார்த்தாயிற்று.  எதற்கும் அவன் மசியவில்லை. என்வழிக்குகொண்டு வர முயன்று தோற்றேன்.   என் சீடன் பித்தன். நிச்சயம்.

எந்த தொழிலிலும் தன்னை  ஈடுபடுத்திக்கொள்ளாதவன். எதிலும்  எண்ணம் கொள்ளாதவன். எந்த  பயனும் எதிர்பார்க்காதவன்.  குரங்காக, கரடியாக,  கொம்புகள் கொண்ட பிசாசாகி, ஏதோ ஒரு பொருளாக  எங்கேயோ ஏதோ நிலையாய்  நின்றவன் அவன்.

இதால்  என்னாயிற்று தெரியுமா?

என் அகந்தை, தான் என்ற  என்  மமதை, உள்ளே  ஆயிரம் வடுக்களோடு, கடுஞ்சினமுற்று,  இவனை விடுவதில்லை, உனக்காயிற்று, எனக்காயிற்று  ஒரு கை பார்ப்பேன் என்று அவனை நேர்ப்படுத்தியே விடுவது என்று தீர்மானம் கொண்டேன். எப்படியாவது இவனை ஒரு தொழிலில் ஈடுபடுத்தியே விடுவது என்று சபதம் செய்து கொண்டேன்.

எங்காவது ஒரு இடத்தில் இவனை கெட்டியாக நிலை திருத்தவேண்டும் என்று கருதி சமயம் வரக் காத்திருந் தேன்.  ஒரு நாள்  வகையாக என்னிடம் மாட்டினான்.  தனியாக அழைத்து அவனை என் வீட்டிற்கு கூட்டி வந்தேன்.

''அப்பா,   மகனே, என் மீது உனக்கு எல்லையில்லாத  நேசமும் பாசமும் உண்டல்லவா?.  அதனால் உன்னிடம் உரிமையோடு ஒன்று கேட்கப்போகிறேன். எனக்காக நீ அதை  தவறாமல் செய்யவேண்டும். சரியா பையா?
''நான் உன்னிடம் கேட்பது என்ன தெரியுமா.  சாஸ்திரங்களில் நாட்டம், தர்க்கம்,  கவிதையில் மெய்ப் பொருள் காண்பது, இது போன்று  உலக வாழ்விற்கான பொருள் தேடும்  வழிகளில்  ஈடுபடும் நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் நீ என்னுடனேயே  இருக்கவேண்டும். அதுவே எனக்கு நன்மை தரும். என்னோடு நீ பொழுதைக் கழிக்கவேண்டும். உன்னைப் போன்ற பொறுப்புள்ள, அறிவுள்ள பிள்ளையை நான் பார்த்ததே இல்லையடா மகனே.  எனக்காக, என்  நலனுக்காக  நீ  எனக்குத் துணையாக, சில காலம் என்னோடு நீ இருக்க வேண்டுமப்பா.  செய்வாயா?''

''ஆஹா, அதற்கென்ன குருவே,  நீங்கள் சொன்னபடியே  செய்கிறேனே''  என்றான் அவன். ஆனால்  எவ்வாறு  ஒருவேலையுமில்லாமல் உங்களோடு இருப்பது.  ஏதாவது ஒரு  வேலை கொடுங்களேன். கூடவே இருக்கிறேன்''

சரி  உனக்கு  ஏற்றதாக ஒரு வேலை தருகிறேன்.   இதோ பார்  நான்  தினமும் தோன்றும்போதெல்லாம் செய்யுள்  எழுதுகிறேன் அல்லவா.  அவற்றையெல்லாம்  நீ அழகாக  பிரதி எடுக்கிறாயா?. ''

''ரொம்ப சரி செய்கிறேன்''  என்றான் 
எனக்கு உள்ளூர  கடுங்கோபம் அவன் மேல்.  உள்ளே சென்றேன்.  எனது பழங் கதைகள் எழுதிய  பெரிய   குண்டு  நோட்டு புத்தகம் ஒன்றை கொண்டுவந்து அவன் கையில் கொடுத்து  '' நீ  என்ன செய்கிறாய், இதெயெல்லாம்  படித்து அழகாக பிரதியெடுத்து விடு''

கையில் வாங்கிப் புரட்டினான்.  ''அப்படியே செய்கிறேனே .சரி,   நான்  அப்போது  நான்  வரட்டுமா''  என்று எழுந்தான்.

எனக்கு  கோபம் தலைக்கேறியது.   ''அடே, பயலே, உன்னை  எல்லோரும்  பித்தன்  என்று சொல்வது எவ்வளவு பொருத்தம் என்று இப்போது தான்  தெரிகிறது.  இங்கிருந்து நீ நகரக் கூடாது. இங்கேயே உட்கார்ந்து எழுது''.

 ''ஏன் குருவே,  , நான்  நாளை வந்து இதை  எழுதி முடிக்கிறேனே'' என்றான்.
''இதோபார், இதை இங்கேயே  இப்போதே  செய்யப்போகிறாயா இல்லையா அதை முதலில் சொல் '' என்றேன்.
''இல்லை  செய்யப்போவதில்லை '' என்று யோசிக்காமல் பதில் சொன்னான்.
''சீச்சி, பேயே!  ஒரு  வினாடி நேரமும் இனி என் கண் எதிரே  தோன்றாதே  ஓடு. இனி நான் உன்னை ஒருபோதும்  உன் முகத்தை கூட பார்த்திடக் கூடாது.  தப்பித் தவறி கூட  என் முன் வந்து விடாதே. போ  முதலில் இங்கிருந்து ஓட்டம் பிடி'' என்று  கோபம் தலைக்கேறி  கத்தினேன்.

ஒன்றுமே சொல்லவில்லை அவன். எழுந்து செல்ல முயன்றான்.

என் கண்களில் நீர் தளும்பியது.  ''மகனே,  போடா போ.  எங்கிருந்தாலும் வாழ்க. உன்னை தெய்வங்கள்  காத்திடட்டும். உன்னை சீர்படுத்த  என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். தோற்றுப் போனேனடா. நான்  பரிதாபமாக  தோற்றுப்போனேன்.  போ. இனி என்னிடம் வராதே. எங்காவது சௌக்கியமாக இரு''

என் சீடன்  கண்ணன் சென்றான். அவன் பேர் இதுவரை சொல்லவில்லையே.  ஆம் அவன் பேர் கண்ணன். கையோடு  திரும்பி வந்தான் .  ஒரு அருமையான  எழுதுகோல் எனக்குக்  கொண்டுவந்தான்.

''ஐயனே, நீங்கள் சொன்ன வழியே நடப்பேன்.  சிறிதும் மாற மாட்டேன்.  நிறைய தொழில்கள் செய்வேன். என்னால் உங்களுக்கு எந்த  துன்பமும்  நேராமல்  உங்களுக்கு  எந்த  அவப்பெயரும்  எய்திடாவண்ணம்   நடப்பேன். என்னைப்  பார்த்து சிரித்து  தலை சாய்த்து மரியாதை செய்தவாறே  சென்று மறைந்தான்.

என்ன ஆச்சர்யம்.   என்னெதிரே இருந்து மறைந்த  கண்ணன் அடுத்த கணமே  என் நெஞ்சிலே 
 தோன்றி
னானே.    எனக்கு உரைக்கும்படியாக  அவன் என்ன சொன்னான் தெரியுமா?
அவன் குரு  நான்  சீடன்  இப்போது.   கண்ணன்  சொன்னது என் காதில் ரீங்காரம் செய்துகொண்டே இருக்கிறது அவன் சொன்னான்":

'' ஒன்றை ஆக்குவதும்,  மாற்றுவதும்,  அழிப்பதும்  உன்  செயல்  அல்ல.  எப்போது  நான்  தோற்று விட்டேன்  என்று நீ  மனமாரச்  சொன்னாயோ,  அப்போதே நீ  ஜெயித்து விட்டாய் .  இந்த உலகத்தில்  வேண்டிய  தொழில்கள் என்ன தெரியுமா? செய்யும்  தொழில் எதையுமே  விருப்பும்  வெறுப்பும் இல்லாமல்  செய்வது தான்.  வாழ்க நீ  வாழ்க மற்றவர்களும்''  
கண்ணனை பித்தன் என்ற  நான் தான் பித்தன். மிகப் பெரிய  ஞானிகள்  பித்தர்களாகத்தான் நம் கண்ணுக்கு தெரிவார்கள்.    கண்ணனை நான் இப்போது நான் நன்றாகவே புரிந்து கொண்டேன் .இதுவரை பித்தனாக
 இருந்தது  நான் .

(மேலே கண்டது  மகா கவி சுப்ரமணிய பாரதியார்  எழுதிய  ''கண்ணன் என் சீடன்''  பாக்களின்  தொகுப்பு.)

   கண்ணன் -- என் சீடன்
யானே யாகி என்னலாற் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மாயக் கண்ணன்,
என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்,
என்னைத் துணைக்கொண்டு என்னுடை முயற்சியால்

என்னடை பழகலால் என்மொழி கேட்டலால்
மேம்பா டெய்த வேண்டினோன் போலவும்,
யான்சொலுங் கவிதை என்மதி யளவை
இவற்றினைப் பெருமை யிலங்கின வென்று
கருதுவான் போலவும், கண்ணன் கள்வன்10

சீடனா வந்தென்னைச் சேர்ந்தனன், தெய்வமே!
பேதையேன் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்து
பட்டன தொல்லை பலபெரும் பாரதம்;
உளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும்
பு{[பாட பேதம் ]: ‘நித்தச் சோற்றினுக் கேவல்’ -- கவிமணி}
தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும்

சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்
தன்னுளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன் இந்தச் சகத்திலே யுள்ள
மாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி
இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத்

தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு,
மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து,
புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்,
பலவகை யால் அகப் பற்றுறச் செய்தான்;
வெறும்வாய் மெல்லுங் கிழவிக் கிஃதோர்25

அவலாய் மூண்டது; யானுமங் கவனை
உயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய்,
“இன்னது செய்திடேல், இவரோடு பழகேல்,
இவ்வகை மொழிந்திடேல், இனையன விரும்பேல்,
இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய்,

இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்”
எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி,
ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன்.
கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம்
எதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டு

நெறியினுக் கெல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பா னாயினன். நானிலத் தவர்தம்
மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமாக் கொண்ட சிறுமதி யுடையேன்,
கண்ணனாஞ் சீடன்யான் காட்டிய வழியெலாம்

விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்,
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும்
தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும்
இகழுமிக் கவனாய், என்மனம் வருந்த
நடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக்

கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர்
கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை
இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும்
நிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத்

தோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாது.
முத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன்
பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென்
நெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும்

சொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன்.
தேவ நிலையிலே சேர்த்திடா விடினும்
மானுடந் தவறி மடிவுறா வண்ணம்,
கண்ணனை நானும் காத்திட விரும்பித்
தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும்,

சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,
கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும்
எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக்
கொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றில்லை.
கண்ணன் பித்தனாய்க் காட்டா ளாகி,

எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய்,
எவ்வகைப் பயனிலுங் கருத்திழந் தவனாய்,
குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்,
யாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான்.
இதனால்,

அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற,
யான் கடுஞ் சினமுற்று ‘எவ்வகையானும்
கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்’
எனப் பெருந்தாபம் எய்தினே னாகி,
‘எவ்வா றேனும் இவனையோர் தொழிலில்

ஓரிடந் தன்னில் ஒருவழி வலிய
நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்’
என்றுளத் தெண்ணி, இசைந்திடுஞ் சமயங்
காத்திருந் திட்டேன், ஒருநாள் கண்ணனைத்
தனியே எனது வீட்டினிற் கொண்டு,

பு{[பாட பேதம்]: ‘கொள்பய னொன்றில்லை’ -- கவிமணி.}

“மகனே, என்பால் வரம்பிலா நேசமும்
அன்புநீ யுடையை; அதனையான் நம்பி,
நின்னிட மொன்று கேட்பேன்; நீயது
செய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியே
மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய்.85

சாத்திர நாட்டமும், தருக்கமும், கவிதையில்
மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோர் தமையே அருகினிற் கொண்டு,
பொருளினுக் கலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி

இருந்திட லாகுமேல், எனக்குநன் றுண்டாம்;
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன்.
ஆதலால்,
என்பயன் கருதி, எனக்கொரு துணையாய்

என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை
வேண்டிநிற் கின்றேன், வேண்டுதல் மறுத்தே
என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே,
இவ்வுரைக் கிணங்குவாய்” என்றேன். கண்ணனும்,
“அங்ஙனே புரிவேன். ஆயின் நின் னிடத்தே

தொழிலிலா துயாங்ஙனம் சோம்பரில் இருப்பது?
காரிய மொன்று காட்டுவை யாயின்.
இருப்பேன்” என்றான். இவனுடை இயல்பையும்
திறனையுங் கருதி, “என் செய்யுளை யெல்லாம்
நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக்
105

கொடுத்திடுந் தொழிலினைக் கொள்ளுதி” என்றேன்.
நன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்;
“செல்வேன்” என்றான்; சினத்தொடு நானும்
பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன்
கையினிற் கொடுத்துக் “கவினுற இதனை110

எழுதுக” என்றேன்; இணங்குவான் போன்றதைக்
கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான்;
“செல்வேன்” என்றான். சினந்தீ யாகிநான்,
“ஏதடா, சொன்னசொல் அழித்துரைக் கின்றாய்?
பித்தனென் றுன்னை உலகினர் சொல்வது115

பிழையிலை போலும் “ என்றேன். அதற்கு
“நாளைவந் திவ்வினை நடத்துவேன்” என்றான்.
“இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச்
செய்கின் றனையா? செய்குவ தில்லையா?
ஓருரை சொல்” என்றுறுமினேன். கண்ணனும்120

“இல்லை” யென் றொருசொல் இமைக்குமுன் கூறினான்.
வெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக்
கண்சிவந் திகழ்கள் துடித்திடக் கனன்றுநான்
“சீச்சீ, பேயே, சிறிதுபோழ் தேனும்
இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே.125

என்று மிவ்வுலகில் என்னிடத் தினிநீ
போந்திடல் வேண்டா, போபோ, போ” என்று
இடியுறச் சொன்னேன்; கண்ணனும் எழுந்து
செல்குவ னாயினன். விழிநீர் சோர்ந்திட
“மகனே, போகுதி, வாழ்கநீ, நின்னைத்130

தேவர் காத்திடுக! நின்றனைச் செம்மை
செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்.
தோற்றுவிட் டேனடா! சூழ்ச்சிகள் அழிந்தேன்.
மறித்தினி வாராய், செல்லுதி, வாழிநீ!”
எனத் துயர்நீங்கி, அமைதியோ டிசைத்தேன்;135

சென்றனன் கண்ணன் திரும்பியோர் கணத்தே
எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்;
காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான்.
“ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்வேன்.
தொழில்பல புரிவேன். துன்பமிங் கென்றும்,140

இனிநினக் கென்னால் எய்திடா” தெனப்பல
நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான்.
மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்:
“மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல்145

அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்;
பு{[மு-ப.]: ‘பிழையிலைப் போலும்’}
தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெலாம்
ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ” என்றான். வாழ்க மற்றவனே

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...