Monday, February 22, 2021

PESUM DEIVAM

 



பேசும் தெய்வம்    -     J K   SIVAN 


 ''எந்த பரமேஸ்வரனை சொல்றேள்?


சென்ற வாரம் ஒருநாள்  ஸ்ரீ  வரகூரான் நாராயணன் என்ற அற்புத மனிதருடன் பேசும் சந்தர்ப்பம் கிட்டியது. மஹா பெரியவா செய்திகள் அநேகமாக  எல்லாமே  தட்டச்சு  வரகூரான் நாராயணனாக தான் இருக்கும். சிறந்த விஷயங்களை தேனீ போல் சேகரித்து தருபவர். நீண்ட காலம் மஹா பெரியவா அனுகிரஹத்தோடு வாழ்ந்து இந்த  திருப்பணியை தொடரவேண்டும். அவரை ஒருநாள்  நேரில் அழைத்து உங்கள் சார்பில் கௌரவிக்க ஒரு ஆசை. கொரோனா கொஞ்சம்  அடங்கட்டும். சந்திப்போம். பேசவைப்போம்.

 

ஒரு விஷயம்  அவர்  மூலம்  நான் அறிந்ததை  தான் இன்று  தருகிறேன்.

காஞ்சி சங்கரமடத்தில் எண்ணற்ற பக்தர்கள்  உண்டு. அனைவருக்கும்  ஒரே  இன்ஸபிரேஷன், ஜீவ சக்தி  மஹா பெரியவா என்று சொல்லவேண்டியதில்லை.

அவர்களில் ஒருவர்   சிவசங்கரன்.   பல்லாண்டுகள் பரமாச்சார்யா பக்தர். 

மடத்தில் பெரியவா  தரிசனத்துக்கு வந்தபோது  யாரோ ஒரு  தொண்டர்  அவரிடம் கொஞ்சம் மரியாதையில்லாமல் நடந்துகொண்டதில்  சிவசங்கரனுக்கு வருத்தம்.   இதைப் போய்  யாரவது மஹா பெரியவாளிடம் சொல்வார்களா? அன்று  பெரியவா சற்று  நேரம்  பக்தர்களோடு  பேச வாய்ப்பு இருந்தது சிவசங்கரன் அதிர்ஷ்டம் எனலாம்.  பேச்சு வாக்கில்  நைஸாக  பெரியவாளிடம்  ''என்ன செய்வது மஹா பெரியவா,  மடத்தில் கூட சிலர்  துஷ்டத்தனமாக நடப்பதும்,  பேராசை பிடித்தவர்களாக இருப்பது தப்பு தான். இப்படிப்பட்டவர்களோடு  நீங்கள்  எப்படியோ  சமாளிக்கிறீர்கள். 

மஹா பெரியவா  வாய் விட்டு சிரித்தார்.  .
“நீ சொல்றது  எனக்கு ஒண்ணும்  புதுசு இல்லை.,  இதுக்கென்ன  சொல்றே,   ஆயிரம் பேர் வேலை செய்கிற ஒரு பாக்டரியில் எல்லாத் தொழிலாளர்களும் திறமைசாலிகளாக, யோக்யர்களாக, ஸின்ஸியராக இருக்கறாளா?
கவர்மென்டிலே  எத்தனையோ லக்ஷம் பேர்  வேலையா இருக்கா.   எல்லோரும்  ஒரே லெவெல்ல  வேலை செய்யறாளா? எவ்வளவோ பேர்  வேலையே செய்யாமல் சுத்தறதா கேள்விப்படறேன்.  சிலர் தெரிந்தும் தப்பு பண்ணுகிறார்கள்.  செய்யறவேலை  எல்லாம் தப்பும் தவறுமா தான் நடக்கிறது.  அவர்களை அப்படியே வீட்டுக்கு அனுப்ப முடியுமா?  அவர்களை  வைத்துக்கொண்டு தானே  ராஜாங்க காரியங்கள் நடக்கிறது.   அரசுன்னா அதற்கு  ஒரு தலைமை வேணும் இல்லையா. அவசியமா அது இருந்தால் தானே  கொஞ்சமாவது வேலை நடக்கும்.  வேலை செய்யறவாளை பார்க்காதே, தலைமை,   பொறுப்பா இருக்கான்னு தான் பார்க்கணும். பொறுப்பான  ஆசாமி  எல்லாருக்கும் மேலே உட்கார்ந்திருந்தா  எல்லாம் சரியாயிடும்.


நமது காஞ்சி “ஸ்ரீமடம் ஒரு சமஸ்தானம். பல வகையான சிப்பந்திகள் இருக்கத் தான் செய்வார்கள்…” என்று சொல்லிவிட்டு ரெண்டு மூணு நிமிஷகாலம் மௌனம்.  பிறகு  

“உனக்கு பரமேசுவரனை தெரியுமோ?”--  மஹா பெரியவா 
சிவசங்கரனுக்கு   பரமேஸ்வரன் என்று அரை  டஜன்  ஆளுக்கு மேலே தெரியும்.  யாரைச் சொல்றார் பெரியவா?
''பெரியவா  எந்த பரமேஸ்வரனைச் சொல்றேள்?''
'' நான்  சொல்றது  கைலாசபதி பரமேஸ்வரனை டா.  அவர் கழுத்தில் பாம்பு,  கையில் அக்னி, காலின் கீழ் அபஸ்மாரம் இருக்கு. அவருடைய ருத்ரகணங்கள் எல்லாமே  யார்  பார்?  பிரேத, பைசாசங்கள் !   இதுகள் இத்தனையும் தன்னிடத்தில்  வச்சுண்டு தானே  அவர்  உலகம் பூரா சஞ்சரிக்கிறார். நடனமும் ஆடறார்.
“பாம்பைக் கீழே போட்டுவிட்டால் அது திரிந்து எல்லோரையும் பயமுறுத்தும், கடிக்கும்.
நெருப்பை கீழே போட்டால், வீடு - காடு எல்லாவற்றையும் அழிச்சிடும்.
அபஸ்மார தேவதையை போக விட்டால், கண்ட பேர்களையெல்லாம் தாக்கி மயக்கம் போடச் செய்யும்.
ப்ரேத – பைசாசங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
இப்படி துஷ்டர்களை தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருப்பது தான் பரமேசுவரனுடைய பெருமை!”
புரியறதா உனக்கு?

சிவசங்கரன் அசந்து போய் நின்றார். பெரியவா ஏதோ சமாதானம் சொல்லித் தன்னை அடக்குவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால், என்ன தெள்ளத் தெளிவான உலகியலை ஒட்டிய பதிலைக் கூறி விட்டார்.
உம்மாச்சி என்பது  உமா மஹேஸ்வரனான  ஸ்ரீ  சாக்ஷாத் பரமேஸ்வரனே.  பெரியவா  உம்மாச்சி தாத்தா தானே.!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...