Tuesday, February 2, 2021

THIRUVAIYARU SAPTHASTHANAM

 

திருவையாறு சப்தஸ்தானம்     -      J K  SIVAN 


     
 திருநெய்த்தானம்

  திருவையாறு சப்தஸ்தானம்  என்று  ஏழு ஊர்களை  திருவையாற்றுக்குப்பக்கத்தில்  காவேரி ஓரமாக  சுகமாக நடந்து  பல்லக்கின் பின்னாலேயே  போய்  தரிசித்தோம்.  ஏழுஸ்தலங்களில்  ஏழாவதாக நிறைவு பெரும் ஸ்தலம் திருநெய்த்தானம் எனும்  தில்லை ஸ்தானம்.  இந்த ஏழுமே  இயற்கை வளம் கொஞ்சும் கண் நிறைந்த, மனம் நிறைந்த க்ஷேத்ரங்கள்.  அவற்றை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.  அதிசயமான பெயர் கொண்டது இந்த  திருநெய்த்தானம்.

மஹா பெரியவா  சொன்னது:   ''நம் திருவையாற்றுக்குப் பக்கத்தில் இருக்கிற தில்லை ஸ்தானத்திலும் ஸ்வாமி பெயர் ‘நெய்யாடியப்பர்’ என்றே இருப்பதிலிருந்து அங்கும் ஸ்வாமி நெய்யால் அபிஷேகம் பெற்றவர் என்றே தெரிகிறது. அந்த ஸ்தலத்தின் பெயரே ‘திருநெய் ஸ்நானம்’ என்றுதான் ஆதியில் இருந்து அது தமிழ்வழக்குப் படி அப்பர், ஸம்பந்தர் தேவாரங்களில் ‘திருநெய்த்தானம்’ என்று வந்து, ‘திருநெய்த்தானம்’ என்பதுதான் பொது ஜனங்கள் பேச்சில் ‘தில்லைஸ்தானம்’ என்று ஏதோ சிதம்பர ஸம்பந்தம் உள்ள மாதிரி ஆகியிருக்கிறது!''

திருநெய்த்தான  ஈஸ்வரன் பெயர்    க்ருதபுரீஸ்வரர்,  நெய்யாடியப்பர். அம்பாள்:  பாலாம்பிகை. மாசி மகத்தில் பிரம்மோத்சவம் விமரிசையாக நடக்கும் .   அப்பர்  சம்பந்தர்  பாடல்கள் பெற்ற  ஸ்தலம்.

 திருக்காட்டு பள்ளி  சாலையில்  திருவையாற்றுக்கு  அருகிலேயே  ரெண்டு கி.மீ. தூரத்திற்குள்  உள்ளது.  சரஸ்வதி, காமதேனு, கௌதம முனிவர் வழிபட்ட ஸ்தலம்.  காவிரி வடகரை  சிவாலயங்களில் 52வது. 

கிழக்கு பார்த்த  ஐந்து நிலை இராஜகோபுரம்.  உள்ளே  விசாலமான வெளிப் பிரகாரம் இருக்கிறது. இராஜகோபுரத்திற்கு நேரே  கொடிமரம், பலிபீடம், நந்தியை  நமஸ்கரித்து   உள் வாயில் வழியாக போகும்போது,  மூலவர் நெய்யாடியப்பர் சந்நிதி.  உள் பிரகாரம் சுற்றி ப்ரதக்ஷிணம் பண்ணும்போது  சூரியன், ஆதிவிநாயகர், சனி பகவான், சரஸ்வதி, மகாலட்சுமி, காலபைரவர், சந்திரன்  சந்நிதிகள்.  கோஷ்ட மூர்த்திகளாக   ''நிற்கும்'' தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மாவை  தரிசிக்கலாம். 


நெய்  கொழுப்பை தரும். குண்டாகிவிடுவோம் என்று சொல்கிறார்களே, நெய்யாடியப்பரே ஒல்லியான உயரமான   ஸ்வயம்பு லிங்கமாக இருக்கிறார்.  நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் செய்வது இங்கே  விசேஷம். அதிசயம்.   நெய்  அபிஷேகம் என்றால் முதலில் சபரிமலை அய்யப்பன்  நினைவில் நிற்கிறார்.  அடுத்தது இங்கே.    அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் பாலாம்பிகை நின்ற கோலம்.  காமதேனு, சரஸ்வதி மற்றும் கெளதம முனிவர் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

திருநெய்த்தான  சுப்பிரமணியன்  பிரபலமானவர்.  கருவறைத் திருச்சுற்றில் மூலவருக்கு நேர் பின்புறம் மேற்குச் சுற்றில் இவர் சந்நிதி கொண்டு உள்ளார்.    வள்ளி தேவசேனா சமேத முருகன்  ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற கோலத்தில் மயிலுடன் காட்சி தருகிறார். 
 
திருவையாறு ஸப்தஸ்தானம்  சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும் செல்வார். ஒவ்வொரு  ஸ்தலத்திலும் உள்ள  சிவன் பஞ்சநதீஸ்வரனை எதிர் கொண்டு வரவேற்பார்.  ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.  இந்த நிகழ்ச்சி  நடைபெறுவது  திருநெய்த்தானத்தில் . இரவு வாண வேடிக்கையுடன் விழா சிறப்புற நடைபெறும். சப்தஸ்தான  விழா இந்த  பூப்போடல் நிகழ்ச்சியுடன் நிறைவுறும்.

செவிக்கினிமையாக   திருமுறைகள் ஓதிக்கொண்டு பல்லக்குடன் பக்தர்கள் செல்வர். செல்லும் இடங்களில் பக்தர்களின் தாகம் தீர்க்கவும், தொடர்ந்து நடக்கும் அவர்களுக்கு சோர்வு தெரியாமல் இருக்கவும் பானகம் நீர் மோர்  எல்லாம்  கொடுப்பார்கள்.  இன்றும் தான்.   எல்லா  இடத்திலும்  அன்னதானம். மனமும் வயிறும் நிறைந்தே  இருக்கும். 

காலையில் கிளம்ப ஆரம்பித்தால் மறுநாள் காலை வரை  ஐயாறப்பனோடு   ஊர்வலமாக போவது  ஒரு அற்புத அனுபவம். வழியெல்லாம்  ஆங்காங்கே நிறுத்தி  பூஜைகள், கற்பூர தீப ஆராதனை.  தெருக்களில் இருபுறமும்  வீடுகளில்  குடும்பத்தோடு வெற்றிலை பாக்கு புஷ்பம் நிறைந்த  தட்டுகளோடு நின்று 
நின்றுகொண்டு பல்லக்குகளை எதிர்கொண்டு அழைப்பர். பல்லக்கு தூக்கிகளின் கால்களை குளிர்ந்த நீரால் நனைப்பார்கள் . வழியெல்லாம்  பூக்கோலங்கள். மாக்கோலங்கள். மாவிலை  புஷ்ப  தோரணங்கள்.  பல்லக்கின் பின் நடக்கும் நமக்கு  எல்லோரும் நம்மை  வரவேற்பது போல தோன்றும்.  இறைவன் தம்மைத் தேடி வரும்போது அவனுக்காகக் காத்திருப்பதையும், இருந்த இடத்திலிருந்தே வழிபாடு செய்வதில் தான் எத்தனை பெருமை, விருப்பம்,  அன்பு, பக்தி.  அதை எந்த சக்தியும்   அழிக்கமுடியாது .

அப்பர்  பாடிய  பாடல்  நினைவுக்கு வருகிறது:  

''காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயின் மேய
நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே

அப்பா   நீலகண்டா , இந்த அற்புத குளிர் சோலைகள் வாவிகள் நிறைந்த க்ஷேத்ரம்  திருநெய்த்தானத்தில்  நான் எதை நினைக்கிறேன் தெரியுமா?  காலஸம்ஹரமூர்த்தியாக   யமனை உதைத்த உன் திருவடிகள் என் சிரத்தில், மார்பில் வைத்து அருள் பெறுவதை, என்கிறார்  அப்பர்.

அருணகிரிநாதர்  திருநெய்த்தானம் (முகிலைக் காரை என்று  பெயர் சூட்டுகிறார்!!) எனக்கு முன்பே  வந்து அற்புதமான ஒரு திருப்புகழ் தந்திருக்கிறார்: 

முருகா
மாதர் மயலில் முழுகி இருந்தாலும்,
தேவரீரது திருவடிகளை மறவேன்.
தனனத் தானத் தனதன தனதன
     தனனத் தானத் தனதன தனதன
     தனனத் தானத் தனதன தனதன ...... தனதான

முகிலைக் காரைச் சருவிய குழலது
     சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர
     முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் ...... முகம்வேர்வ

முனையிற் காதிப் பொருகணை யினையிள
     வடுவைப் பானற் பரிமள நறையிதழ்
     முகையைப் போலச் சமர்செயு மிருவிழி......குழைமோதத்
துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ்
     பருகிக் காதற் றுயரற வளநிறை
     துணைபொற் றோளிற் குழைவுற மனமது ...களிகூரச்
சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத
     நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை
     துவளக் கூடித் துயில்கினு முனதடி ...... மறவேனே
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
     திமிதித் தீதித் திமிதியென் முரசொடு
     குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள் ...... களமீதே
குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
     குவியக் கூடிக் கொடுவர அலகைகள்
     குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு ...... குமரேசா
செகசெச் சேசெச் செகவென முரசொலி
     திகழச் சூழத் திருநட மிடுபவர்
     செறிகட் காளப் பணியணி யிறையவர் ...... தருசேயே
சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
     கலசத் தாமத் தனகிரி தழுவிய
     திருநெய்த் தானத் துறைபவ சுரபதி ...... பெருமாளே.

'' குகுகுக் கூகுக் குகுகுகு குகு எனவும், திமிதித் தீதித் திமிதி ''  என்று   முரசுகள்  ஒலிக்கிறது.  கோபத்தோடு, போர் புரிகின்ற அசுரர்கள் போர்க் களத்தில் உன்னை  எதிர்க்கிறார்கள்.  எண்ணற்ற அசுரர் உடல்கள்  கிடப்பதால்   பெரிய  கழுகுகள்  கொண்டாட்டத்தோடு கூச்சலிட்டு கும்பலாக வந்துவிட்டன. யுத்த காலத்துக்கு  அஷ்ட பைரவர்கள் வந்தாச்சு.  பேய்கள்  பைசாசங்கள்  ஆனந்தமாக  அசுரர் உடல் பக்ஷணம்  கிடைத்ததில்  மகிழ்கிறது.  பசி நீங்கி வயிறு நிறைகிறது.  குமரேசா,  உன் வேல் தந்த பரிசு இது. 

முருகா என் கண்முன் நீ  எப்படி தோன்றுகிறாய் தெரியுமா?
 செகசெச் சேசெச் செக என்னும் தாள  சப்தம் முழங்க,  பறைகள்  நிறைய  உன்னை சூழ்ந்து ஒலிக்க  தாளத்திற்கேற்ப   ஆனந்தமாக அப்பாவைப் போல் நடனம் ஆடுகிறாய்.   கட்செவி  என்று  பேர்கொண்ட  கண்ணே  காதாக  உடைய  நாகங்களை  ஆபரணமாக  அணிந்த 
சிவபெருமானின்  செல்ல மகனே ,
 சிகரங்களை உடைய பெருத்த மலையில் வாழ்ந்திருந்த குறமகளாகிய வள்ளிநாயகி  மணாளா, 
 திருநெய்த்தானம் என்னும்   இந்த ஸ்தலத்தில் கோயில் கொண்ட குமரா.  தேவ சேனாபதி  பெருமாளே
 தேவரீரது திருவடிகளை அடியேன் மறவேன்.

இத்துடன்  திருவையாறு சப்தஸ்தான தரிசன நமஸ்காரங்களுடன்  சென்னை நங்கநல்லூர் திரும்புகிறேன்.







No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...