Friday, February 12, 2021

SIVAKAVI

 


   சிவ கவி  2   --      J K   SIVAN

எனது நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்குச்  சில வருஷங்கள் முன்பு  திருப்பூர் சென்ற போது  பேச்சு வாக்கில் இங்கே  என்னென்ன  ஆலயங்கள் இருக்கிறது என்று கேட்க, '' திருமுருகன் பூண்டி என்ற பழைய ஆலயம் இருக்கிறது போவோம்'' என்று அழைத்து சென்றார்கள்.  இங்கே தான் பொய்யா மொழி  புலவரை மடக்கி  முருகன் வேடனாக வந்து ''முட்டை'' மேல் பாட வைத்தது.

திருப்பூரிலிருந்து அவிநாசி செல்லும் வழியிலே அருகிலேயே இருக்கிறது. அவிநாசியிலிருந்து  6 கி.மீ.    அகஸ்தியர், மார்க்கண் டேயர், துர்வாசர்  போன்றோர்  வழிபட்ட ஸ்தலம்.  திருமுருகன் பூண்டிக்கு  மாதவிவனம்,  என்று பெயர்.    ஆச்சர்யமாக  இங்கே  சிவனின் பெயர்  முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி.  அம்பாள் ஆலிங்க பூஷண ஸ்தனாம்பிகை, (முயங்குபூண்முலையம்மை) ஆவுடைநாயகி, மங்களாம்பிகை.   மூலவர்  அம்பாள்  மேற்கே பார்க்கின்ற வர்கள்.  ராஜகோபுரம் இல்லை

முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தி.  உள்ளே  சென்றதும் பதினாறுகால் மண்டபம். அதில்  விநாயகர் சந்நிதி.   கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம்; இடப்புறத்தில் ஞானதீர்த்தம்; வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

 பிரம்ம தாண்டவ நடராஜர்  கண்ணைப் பார்க்கிறார்.    கோவிலுக்கு  சற்று தூரத்தில்  மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நிதியும்  விசேஷமானது.   அங்கே  சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார். (சுயம்பு என்கிறார்கள்.)   இக்கோயிலின் முன் மண்டபத்திற்கு மேலே  புதுமையாக பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு ஜம்மென்று  அமர்ந்திருப்பது அழகாக இருக்கிறது. 

முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சன்னிதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்கே  முருகன் கையில் வேல் இல்லை. அவனுக்கு  மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு உள்ளே  வந்து சிவனை முருகன் வழிபட்டதாக ஐதீகம்.   சுந்தரர்  பொருள்களை ளைப் பறிகொடுத்த இடமான கூப்பிடு விநாயகர் கோவில் அவினாசிக்கு அருகில் அமைந்துள்ளது.

வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான், குலோத்துங்க சோழ தேவன், விக்கிரம சோழதேவன், வீர நஞ்சையராய உடையார் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ள  பழைய கோவில். 

சேரமான் பெருமாள் தந்த சன்மானங்கள், பரிசுகள், பொருள்களுடன் சுந்தரர் திருவாரூர் புறப்பட்டார். அத்தனை பரிசுகளையும் சுமந்து தூக்கிக்கொண்டு வர அரசன் சில ஆட்களையும் அனுப்பினான் அல்லவா.
அந்தக் காலத்தில் எல்லாமே காட்டுப் பாதைகள் தான். சில நாட்கள் நடந்து சென்றவர்கள் திரு முருகன் பூண்டி வந்து அடைந்தார்கள். இரவு நேரம் ஆகிவிட்டதால் எங்காவது தங்க எண்ணம்.   இந்த  விநாயகர் கோவிலில்  தான்  தங்கினார்.   

திடீரென்று சில வேடுவர்கள் ஆயுதங்களுடன் அங்கே சுந்தரரைச் சூழ்ந்து கொண்டார்கள். சுந்தரருடன் வந்த ஆட்களால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. வேடர்கள் பலசாலிகளாகவும் ஆயுதம் தாங்கிகளாகவும் வேறு இருந்தார்கள். அனைத்து பரிசு பொருள்கள், நாணயங்கள், துணிமணிகள் எல்லாமே பறித்துக்கொண்டு வேடர்கள் சென்றுவிட்டார்கள். சுந்தரர் திகைத்து நின்றார்.

''விநாயகா  இதென்ன  அக்கிரமம். கொள்ளையர்கள் என் பொருள்களை சூறையாடிச்  செல்கிறார்களே.  நீ உதவமாட்டாயா?''  என்கிறார்  சுந்தரர்.

''சுந்தரரே , அதோ பாரும்  உமது சிவன் குடிகொண்டிருக்கும்  ஆலயம். அங்கே செல்லும்.  உதவி கிடைக்கும் என்று வழிகாட்டுகிறார்  பிள்ளையார்.  சுந்தரரரும்   சிவன் ஆலயம்  சென்று சிவனை நிந்தித்துப் பாட  பாடலில் மகிழ்ந்த சிவன்  பறிபோன சுந்தரரின்  பொருட்களைத் திருப்பியளித்தது  இந்த  திருமுருகன் பூண்டியில் தான். வழி மறித்து நிதிபறித்ததே   சிவன்  தானே.  கூப்பிட்டு  சுந்தரருக்கு  வழி காட்டிய (வேடுபறி நடந்த இடம்) இடத்தில்  தான்   'கூப்பிட்டு விநாயகர்'  உள்ளார்.    பார்க்க வேண்டிய  அருமையான  சிலைகள்:  

சிவன்  வேடனாக வந்து சுந்தரரை  வழிப்பறி செய்த  வேட உருவம்.  சுந்தரரின்  பொருள்களை பறி கொடுத்த
பரிதாப  முக  உருவம்.  பொருள்கள் மீண்டதும்  சந்தோஷ நிலையிலும் உள்ள  சுந்தரர். .சிற்பிகள் அந்தக் காலத்தில் உயிரோட்டம் கொடுத்து சிற்பங்களை வடித்தார்கள். 

(உங்களுக்கு  ஞாபகம் இருக்கிறதா.  நாம்  எவ்வளவு  கேவலமாக போய் விட்டோம் இப்போது. ஒரு  ''அம்மா '' வின் சிலையை வடிக்க சொன்னால் வேறு யாரோ ஒரு அம்மாவின் முகத்தை சிலையாக வடித்து வைத்ததால் அது அகற்றப்பட்டது என்று படித்தேன்....  அவ்வளவு  சிற்ப சாஸ்திர  மேதாவிகள்  இப்போது.)

ப்ரஹாரத்தில்  பைரவர்,  நவக்கிரஹங்கள் .ஷண்முகம் இங்கே விசேஷம்.  ஸ்தல விருக்ஷம்  வில்வம். பிரம்மஹத்தி தோஷம் நீங்க  வழிபட்ட க்ஷேத்திரம்.  சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு  ஏராளமாக வந்து தங்கி  நீராடி வழிபடுவதை  கவனித்தேன்.   இதேபோல் குணசீலத்திலும் பார்த்த ஞாபகம் வந்தது.

இது தான்   சுந்தரர் பாடிய  பாடல்: 

''கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.7.49.1

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளு மிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

''வில்லையும்   வேல் போன்ற  ஆயுதங்களையும்  காட்டி விரட்டி மிரட்டி  காட்டில் வாழும் வேடர்கள் இங்கே  என்னை சூழ்ந்து  என் பொருள்களை சூறையாடினபோது இந்த எல்லையில் காப்பானாக முருகன் பூண்டியில் எதுவும் செய்யாமல் நீ எதற்காக இந்த ஊரில் நீ இருக்கிறாய் சொல் பரமேஸ்வரா?   உதவி செய்யாமல் நீ  என்னாய்யா பண்றே  இங்கே..???  த்வனியில்  அமைந்துள்ளது.

அவன் திருக்குமரன் முருகனே? என்று உரிமையோடு சாடுகிறார் சுந்தரர். பத்து பாடல்களும் அருமையானவை.

பாடிய பிறகு, குறையை அறிவித்த பிறகு, சுந்தரர் மனசு லேசாகிறது. வெளியே வந்தவர் ஆலய வாசலில் அவரிடமிருந்து வேடுவர்கள் கவர்ந்து சென்ற அத்தனை பொருள்களும் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருப்பதை காண்கிறார்.

'' ஓஹோ இது சிவன் வேலை தானோ. அவனே என்னிடமிருந்து சிவகணங்களை வேடுவர்களாக்கி என் பொருள்களை கவர்ந்து என்னை இங்கே வரவழைத்து பாடவைத்து, தானே அதை தனது கையால் தருகிறானோ''. அப்போது அவருக்கு சிவன் எதற்
காக அங்கே திருமுருகன் பூண்டியில் இருக்கிறான் என்று சமாதானம்  ஆகி, பின்  ஆனந்தமயமாகிறது.

அருணகிரிநாதரும் அற்புதமாக பாடி இருக்கிறார்:

அவசியமும் வேண்டிப் பலகாலும்
அறிவினணர்ந்தாண்டுக் கொருநாளில்
தவசெபமும் தீண்டிக் கனிவாகிச்
சரணமதும்பூண்டற் கருள்வாயே
சவதமொடுந் தாண்டித் தகரூர்வாய்
சடுசமயங் காண்டற் கரியானே
சிவகுமரன்பூண்டிற் பெயரானே
திருமுருகன் பூண்டிப் பெருமாளே.

திருமுருகன் பூண்டி 260வது தேவார பாடல் பெற்ற ஸ்தலம். கொங்குநாட்டில் ரெண்டாவது.  இன்னொன்று அவிநாசி. 

இந்த  அற்புத க்ஷேத்திரத்துக்கு பொய்யாமொழிப் புலவர் வந்து  முருகன் வேடனாக வந்து ''முட்டை'' மேல்   அவரைப் பாடச்சொன்னது. முட்டையைக் காட்டிலும் பெரிய  குஞ்சான  சிவன் மேலும்  பாடவைத்தது. அப்பா பிள்ளை இருவருமே  வேடர்களாக  வந்து அருள் புரிந்த க்ஷேத்ரம்.

 பொய்யாமொழிப் புலவர் காளையார் கோயில் சென்று மிகவும் பிரசித்தி பெற்றார். பின்பு அங்கிருந்து புறப்பட்டார். தஞ்சைவாணன் கோவை பாடிப் பெரும் புகழ் பெற்றார். பின் மதுரை சென்று சில அற்புதங்களை நிகழ்த்தினார். பின் சீனக்கன் என்ற வள்ளலுடன் நட்பு பூண்டு அவருடன் இருந்தார். அவன் இறந்தபோது தானும்  அவன் உடலோடு  உடன்கட்டையேறி  மாண்டார் என்று கதை.

பாடல் இதோ:-
முட்டையென் பேர் சுரம் போக்கா வொரு பா மொழியெனக் கேட்
டிட்ட முறுபொய் யாமொழி பொன்போ லெனவுரைக்கச்
சுட்டழகில்லை யீ தென்று விழுந்த துளியென்றுநன்
மட்டவிழ் தார் முருகோன்சொன்ன துங்கொங்கு மண்டலமே

'ஹே  புலவா,  முட்டை என்று எனக்கு பெயர். சுரம் போக்காக ஒரு பாடல் பாடு. பொய்யா மொழிப் புலவர்  வயிரபுர மாகாளிதான்.சீனக்கன் என்னும் வள்ளல் ஒருவரின்  தயவில் வாழ்ந்தவர்.அவருடன் மிக நெருங்கிய நட்புக் கொண்டவர்.அவ்வள்ளல்  இறந்த  சமயத்தில் பொய்யா மொழியும் உடன்கட்டை ஏறினார்.  

இந்த  பொய்யாமொழிப்புலவரை  ''சிவகவி''   என்று   1943 ஆம் ஆண்டு  படமாக்கினார்கள்.  இளங்கோவன் வசனம் . பக்ஷிராஜா பிலிம்ஸ்   எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு  தயாரிப்பு.  படம் சக்கை போடு போட காரணம். சிவபக்தி, சிவசோதனையை மாயாஜாலக் காட்சிகளில் காட்டியது.  மூல காரணம்.  எம். கே. தியாகராஜ பாகவதர்,   பல வருஷங்கள் ஓடிய  இந்த படத்தை  நான் ஐந்து ஆறு  வயதில் பார்க்க நேரும்போது படமோ, பாட்டோ  புரியாத வயசு.  தியேட்டரில் விஷமம் செய்து  கொண்டிருந்தேன்.   பின்னர்  ரசித்தேன் மகிழ்ந்தேன். 
மொத்தம் 29 பாடல்கள்.. பாபநாசம் சிவன் பாடல்கள் . அற்புத  கிருதிகள். இன்னும் நினைவில் இருந்து நான் பாடும் பாடல்கள் :

வதனமே சந்த்ர பிம்பமோ (ராகம்: சிந்து பைரவி, தாளம்: திஸ்ரம், பாகவதர்)
அம்பா மனங்கனிந்துனது கடைக்கண்பார்  (ராகம்: பந்துவராளி, தாளம்: ஆதி, பாகவதர்)
வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ (ராகம்: செஞ்சுருட்டி, தாளம்: ஆதி, பாகவதர்)
ஸ்வப்பன வாழ்வில் மகிழ்ந்து (பாகவதர் )


ஒரு விஷயம்.  தெருவில்  எவரும்  தலைமுடியை பின் கழுத்து மறைய  ஜில்பா. நெற்றியில்  பெரிய பொட்டு , வாய் நிறைய  MKT  பாட்டு பாடிக்கொண்டு திரிந்த காலம் .  கோடம்பாக்கம் ஸ்டேஷனிலிருந்து  வடபழனி
  வீட்டுக்கு செல்லும்போது  கை  ரிக்ஷா காரர்  வழிமுழுதும்   ''சொப்பன வாழ்வில் '' பாடிக்கொண்டே  என்னை இழுத்து சென்றது ஞாபகம் இருக்கிறது.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...