Thursday, July 15, 2021

SRIMADH BAGAVATHAM

 ஸ்ரீமத் பாகவதம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN  --

11வது காண்டம். 17வது அத்யாயம்
52 ஸ்லோகங்கள்


17.  தொழில் முறையாக  கடமைகள்,  வழக்கங்கள். 


ஸ்ரீ கிருஷ்ணா,  தாமரைக்கண்ணா,   ஒவ்வொரு  ஜீவனும் அதனதன் கடமையை செய்து கொண்டே உன்னை வழிபட முடியும், அதன் மூலம் உன்னை அடையமுடியும் என்று சொன்னாயே, அதை கொஞ்சம்  விவரமாக எனக்கு சொல்கிறாயா? எப்படி அவரவர் கர்மாவை, ஸ்வதர்மத்தை நிறைவேற்று உன்னை அடைய முடியும்?
நீ ஒரு முறை  ஹம்சமாக  வடிவம் கொண்டு பிரமனுக்கு  பக்தி வழிகளை பின்பற்றுவதன் மூலம்  பரமானந்தம் அடைய முடியும் என்கிறாயே  அது எப்படி சாதாரணமாக ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும்?
காலம்  ஓடிவிட்டது.  ஒருகாலத்தில் நீ சொன்னது இன்னமுமா  பின்பற்ற இயலும்?   

அச்சுதா, தர்ம ஸ்தாபனம் செய்தவனாகவும், அதை  எடுத்துச் சொல்பவனாகவும், ரக்ஷிக்கிறவனாகவும் உள்ள நீ ஒருவனே இதை விளக்க முடியும்.  பூமியில்  நீ  இனி இல்லாதபோது  எவரால் இதைச்சொல்ல முடியும்.?

''கிருஷ்ணா, நீ  சகல தர்மமும் அறிந்தவன்.  பக்தியால் செய்யப்படும்   ஒவ்வொருவரின்  கடமைகளை யும்  யாருக்கு பின்பற்ற  மன வலிமை இருக்கும்?உன்னை அன்போடு  வணங்கும்  வழிமுறைகளை எடுத்துச் சொல்?''

''உத்தவா,  தர்மத்தை அனுஷ்டிக்கிறவன் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயத்தைப்  பற்றி நீ கேள்வி கேட்டாய்? நீ  பாக்கியசாலி. நல்ல பண்புகளை பின்பற்றி  சமூகத்தில் அவரவர் புரியும் செயல் தான்  தொழில் முறையாக  பகுக்கப்பட்ட  மனுஷ கடமைகள். 

சத்யயுகத்தில் எல்லோரும் ஒரே  வகையில்  குணாதிசயங்களைக் கொண்டு  ஒரே வித தர்மமாக செயல்பட்டார்கள்.  அவர்கள்  ஹம்சர்கள்  என்று  அறியப்பட்டவர்கள்.  செய்யவேண்டிய கடமைகளை  பிறந்ததுமுதல் பின்பற்றியவர்கள்.  அந்த காலமே  அதனால் தான் க்ரித  யுகம் என்று அடையாளம் கொண்டது. க்ரித    கடமைகளை புரிந்த  என்று பொருள்.  அக்காலத்தில் நான் ஒருவனே  அறியப்பட்டேன்.  வேதம் மூலமாக என்னை அறிந்தார்கள். ஹம்சநாதன் என்று என்னை வழிபட்டார்கள். 

த்ரேதா யுகத்தில்  ஒன்றான வேதமாக இருந்த நான் மூன்றாக பிரித்து  என்னை  வெளிப்படுத்திக் கொண்டேன்.   ரிக் சாம  யஜுர்  வேதங்களாக  மூன்று வடிவங்களாக்கி கொண்டேன். மூன்று வித வழிபாட்டுமுறைகள் தோன்றின.  த்ரேதா  என்றால் மூன்றாக என்று அர்த்தம். ஆகவே அந்த யுகம் அந்த பெயரைப் பெற்றது.  சர்வ வேத ஞானிகளிலிருந்து, மக்கள் மற்றவர்களாகவும்,  அதாவது,   ராஜாக்கள்,  வியாபாரிகள்  தொழிலாளர்கள் என வெவ்வேறு  செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.  

ஞானம் பெறுவது, கற்பிப்பது என்ற பிரிவில்  ஈடுபட்டவர்களுக்கு  தாராள குணம்,  சுய கட்டுப்பாடு,  எளிமை,  திருப்தி, கருணை, நேர்மை, என்னிடத்தில் தடையில்லாத பக்தி போன்ற குணங்கள் மட்டுமே  பெரிதும் காணலாம்.  அப்படிப் பட்டவர்கள்  மற்றவர்களுக்கு ஆசிரியராக சமூகத்தில்  தம்மை  அர்ப்பணித்து  உதவினார்கள். இவர்கள்  பிராமணர்கள் என்ற  தொழில் முறையில் தமது மேற்சொன்ன கடமைகளை,  அனுஷ்டித்தவர்கள். 

 வீராவேசம்,  தீவிர  உணர்ச்சி,  தேகபலம், மன உறுதி,  பொறுமை,  ஈகை,  லட்சிய நோக்கு,   கொண்டவர்கள்  மற்றவர்களின், நாட்டின்  பாதுகாப்புக்கு தம்மை  அர்ப்பணித்தார்கள்.  அவர்கள் க்ஷத்ரியர்கள். மற்றவர்களை ரக்ஷித்து  பாதுகாக்கும் இரும்பு மனம் படைத்தவர்கள். இவர்களை க்ஷத்ரியர் என்று அடையாளம் காணலாம்.

அடுத்த பிரிவினர். தான தர்மத்தில் சிறந்தவர்கள். நேர்மையானவர்கள், உழைத்தது முன்னேறுபவர்கள். இதரர்களை மதித்து உதவுபவர்கள்.  வியாபாரம், பண்டம் பொருள் சேமிப்பாளர்கள். வைசியர்கள் என்ற வகுப்பினர்.  கடவுள் நம்பிக்கை, பக்தி உள்ளவர்கள்.  உண்மைக்கு புறம்பாக எதுவும் செய்யாதவர்கள்.

இதரர்களை தொழிலாளர்களாக  சமூகத்துக்கு சேவைக்கே தம்மை அர்ப்பணித்த  எல்லா வகுப்பினருக்கும்  நல்லவராக வாழ்ந்த உதவியாளர்கள். 

மொத்தத்தில் எல்லா வகுப்பினருமே  அஹிம்சையை கடைப்  பிடிக்கவேண்டும்.   நேர்மையாக, உண்மையாக நடந்து கொள்ளவேண்டும்.  பேராசை, கோபம், இன்றி  எல்லோரும்  இன்புற்று வாழ  ஒத்துழைக்க வேண்டும்.
பிராமணர்கள் வேதங்களை கற்று, மற்றோருக்கு கற்பித்து  பக்தியை வளர்ப்பார்கள்.  சாஸ்திரங்கள்,வேதம் சொல்லும்  யாகங்கள், ஹோமங்கள் வளர்த்து லோக க்ஷேமத்துக்கு  வேண்டிக்கொள்வார்கள். 

என்னருமை உத்தவா,  பொதுவாக  சுத்தம் சோறுபோடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். என்னை தியானிப்பவன் உள்ளும் புறமும் சுத்தமாக இருந்தால் தான் என்னை உணரமுடியும். மனம் வாக்கு காயம்  மூன்றினாலும் தூய்மையோடு என்னை தொழுபவன் என்னை உணர்வான். 

நிறைய விஷயங்கள் இந்த அத்தியாயத்தில் காலத்துக்கு ஒவ்வாததாக  காணப்படுவதால் அவற்றுக்குள் செல்லவில்லை. 


ஸ்ரீ கிருஷ்ணன் உத்தவனுக்கு உபதேசம் செய்தது  ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதிருந்த வாழ்க்கை முறை வேறு  கலிகாலத்தில் இப்போது  உள்ள முறை வேறு என்பதை மனதில் கொண்டு அவற்றை விவரிக்க வில்லை 

தொடரும். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...