என்ன பதில்? -- நங்கநல்லூர் J K SIVAN
கிருஷ்ணா உன் மேலே ரொம்ப வருத்தம் எனக்கு.
ஏன்னு கேக்கறியா.
சொல்றேன் கேளு.
இதுக்கு பதில் சொல்லு.
இப்போ எல்லாம் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுகிறது. அணில் கடிச்சுடுத்து என்கிறான். அணில் எங்க வீட்டு மா மரத்திலே ஒவ்வொரு பழத்திலேயும் ஒரு வாய் தான் கடிக்கிறது. எதுக்கு எலக்ட்ரிக் வயரை கடிக்கணும். ஏன் மனுஷனை மாதிரி அதுக்கு புத்தி கெட்டுபோய்டுத்து?
வீட்டிலே ஒரு புகைச்சல். அடுப்பு எரியாததாலே இல்லை. அடுப்பே இல்லையே இப்போ. புகை எப்படி வரும்?
பாதி சமையல் பண்ணும்போது, மிக்சி நின்னுடுத்து. வாஷிங் மெஷினில் அம்பாரம் துணி சுத்தும்போது ஸ்டாப். போர் தண்ணி மேலே ஏறும்போதும் சரி, பாதி சோப் போடு கண்ணை மூடிண்டு குளிக்கும்போதும் ஸ்ரீ எப்போ வேணுமானாலும் கரண்ட் கட் .
சே. எப்போது இந்த சனி வரும் போகும்னே தெரியல. இதுதான் வழக்கமாக எல்லா வீடுகளிலும் இப்போதெல்லாம் கம்பளைண்ட் .
எப்படி நமது வாழ்க்கை மாறி விட்டது? என்று யோசிக்கிறேன்.
SSLC படிக்கிற வரையில் கரண்ட் னா என்னன்னு தெரியாது. ஹரிக்கேன் லைட் மாதிரி பிரகாசமா சூரியன் மாதிரி வேறே வெளிச்சம் வேறே தெரியாது. கல்யாணத்திலே சுவாமி ஊர்வலத்திலே புஸ்ஸ்ஸ்ன்னு சத்தம் பண்ணிண்டு காஸ் லைட் என்போமே அந்த பெட்ரோமாக்ஸ் விளக்கு தலையிலே சும்மாடு கட்டி அது மேலே நிக்கவைச்சு தூக்கிண்டு வரும்போது நிழலிலே விளையாடுவோம். பேன் FAN இல்லை. ரேடியோ, டிவி , பிரிஜ் இல்லை, GAS அடுப்பு இல்லை, ஆனா வாழ்க்கைலே எந்த இன்பமும் குறையல.
சாப்பாடு பக்ஷணம் தோசை, சட்னி, வடை, அடை எதுவுமே குறைவில்லாம கிடைச்சுது. ரெடிமேட் டிரஸ் தெரியாது. துணி கஜத்திலே வாங்கி சத்தார் தைச்சுக்கொடுக்கிற நிஜார், சட்டை தான். வருஷத்துக்கு ஒன்னு. தீவுளிக்கு தீவுளி. மின்சாரத்தை எதிர்பார்க்கலே. இப்படியே வருஷக்கணக்காக வாழ்ந்தவன் இப்போ ஒரு நிமிஷம் கரண்ட் இல்லமே இருக்க முடியலே.
வாழ்க்கை எதனாலே இப்படி மாறிடுத்து?
மாற்றம் மனசிலே தான் இருக்கு. இப்படி மாறி மாறி போயிண்டே இருக்கும்போது எது முடிவு? யாருக்குமே தெரியாது.
ஆத்தங் கரையிலே கட்டை அடுக்கி சிதை வைச்சு விரட்டி அடுக்கி எரிச்ச உடம்பு இப்போ முன் கூட்டி ரிஜிஸ்டர் பண்ணி வரிசையிலே சொன்ன நேரத்திலே தான் மின்சாரத்தில் எரிக்க காத்திருக்கிறோம். ஒரு மணி நேரத்திலே அப்பா அம்மாவை, தாத்தா பாட்டியை சாம்பலா கையிலே டப்பாலே எடுத்துண்டு வரலாம். மறுநாள் காலையில் கையிலே எலும்பு குத்தாமல் பால் தெளிச்சு, மணிக்கட்டில் கண்டங்கத்திரிக்கா கட்டிண்டு மந்திரம் சொல்லிண்டு , கொஞ்சம் பெரிய எலும்பா நாலு அஞ்சு பொறுக்கி கடலில் கரைச்ச சஞ்சயனம் இப்போ வேறே லெவல்.
வாசல்லே ஹெர்குலஸ், ராலி, பிலிப்ஸ் சைக்கிள் நிக்கும். மணி அடிச்சுண்டு ரோடுலே
மிதிச்சுண்டு போனவன். திருவல்லிக்கேணியிலேருந்து கூடுவாஞ்சேரி வரை மிதிச்சுண்டு போய்ட்டு வந்திருக்கிறேன். மணி கடையிலே வாடகைக்கு 40 பேஜ் நாட்டிலே பென்சில்லே பேர் எழுதி டைம் போட்டு வாடகை சைக்கிள் கொடுப்பான். ஒரு மணிக்கு ஒரு அணா .
இப்போ சைக்கிள்லே ஏற பயமா இருக்கு. கீழே விழுந்துடுவோமோன்னு ஒரு பயம். குறுக்கே BAR வச்ச சைக்கிளிலேயே மூணு நாலு பேருடன் போனவன் நான் தானே. இப்போ லேடிஸ் சைக்கிள்லே ஏறவே பயம்.
உதைச்சு ஸ்டார்ட் பண்ற மோட்டார் சைக்கிளை விட உதைக்காம வலது கட்டை விரல் பிரெஸ் பண்ணினாலே டுர்ர்ர் என்று ஓடும் கியர்லெஸ் ஸ்கூட்டர், ஸ்கூட்டி, ரொம்ப சௌகர்யமாக ஆயிடுத்து. ஆளில்லாமே தூக்கிண்டு போற பல்லக்கு. என்னை மாதிரி கிழடுக்கு கம்பு ஊன்றிண்டு நடக்க வேண்டாமே.
வெயில் காலத்திலே ஈரத்துணி பிழிந்து மேலேபோட்டுக்கொண்டு பனை ஓலை விசிறி யில் சில்லுனு கிடைச்ச சந்தோஷத்தை விட கூடவே இப்போ ஒய்ங் னு ஒரு மெல்லிய ஷட்ஜம சப்தத்தில் கதவெல்லாம் சாத்திண்டு AC குடுக்கிற சுகம் வேறே தினுசு. அதுக்கு காசு வேண்டாம். இதுக்கு ரொம்பவே ஜாஸ்தி.
இப்ப இன்னும் ஒரு படி ஜாஸ்தி மேலே போயாச்சு. வீட்டிலே மிக்சி கிரைண்டர், காஸ், ஓவன், பிரிஜ் எல்லாம் இருந்தும் போன் பண்ணினா சாப்பாடு வீட்டுக்கு வந்துடுறது. காசு ஜாஸ்தி தான். யாரைப் பாத்தாலும் ஐந்து லக்கத்திலே சம்பளம் என்கிறான். மூணு லக்கத்தில் சம்பளம் வாங்கின நான் தான் ராஜா அப்போ.. அந்த சுகம் இப்போ இல்லையே?
எல்லா வசதியும் கொடுத்த கிருஷ்ணா, ஏண்டா நிம்மதியை , மன நிறைவை, போதும் என்கிற மனசை மட்டும் புடுங்கி எடுத்துண்டு போயிட்டே?
No comments:
Post a Comment