ஸ்ரீமத் பாகவதம் - நங்கநல்லூர் J K SIVAN ---11வது காண்டம் -
16வது அத்யாயம் -43 ஸ்லோகங்கள்
16. நான் யார் தெரியுமா?
உத்தவனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் செய்யும் உபதேசங்கள் தொடர்கிறது. உத்தவன் கேட்கிறான்:
'கிருஷ்ணா, நீ பரமாத்மா. ஜனனம் மரணத்துக்கு அப்பாற்பட்டவன். ஆக்கல் , காத்தல், அழித்தல் அனைத்துக்குமே பொறுப்பானவன். பிரபஞ்ச ரக்ஷகன். எல்லா உயிர்களும் உன்னில் உள்ளது போல் எல்லா உயிர்களிலும் நீ உறைபவன். சத்தியத்தின் உருவம் நீ. ரிஷிகள் உன்னை வெவ்வேறு உருவங்களில் வணங்குகிறார்கள். அந்த உருவங்களை பற்றி சொல்லவேண்டும். சூக்ஷ்மமாக உயிர்களில் இயங்கும் உன்னை உருவமாக எப்படி அறிகிறார்கள்? கண்ணால் காணமுடியாதவன் அல்லவா நீ? உன்னுடைய சக்தி என்ன, எப்படி சகல லோகங்களிலும் எல்லாமாக நீ புலப்படுகிறாய்?
''உத்தவா நீ ரொம்ப நல்ல கேள்வியை கேட்டு விட்டாய்? உன்னை மாதிரி இப்படி என்னை குருக்ஷேத்ரத்தில் கேள்விகள் கேட்ட அர்ஜுனனை நினைவூட்டுகிறாய்..
'' ஐயோ என் எல்லா உறவுகளையும் கொன்ற கொலைகாரனாக மாறவேண்டுமா நான் ?என்று அங்கலாய்த்தான்.' அப்போது அவனுக்கு மாயை எது, உண்மை எது என்று விவரமாக சொல்ல நேர்ந்தது''.
என் அருமை உத்தவா, நான் எல்லா உயிர்களிலும் உள்ள ஆத்மா. பரமாத்மா. அவைகளிலிருந்து அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் சக்தி. நல்லதே நினைப்பவன். அவர்களோடு நான் வேறுபட்டவன் அல்லன் . உழைப்பவர்களுக்கு நான் லக்ஷியம். கட்டுப்பாட்டிற்குள் இருப்பவர்களுக்கு கால தேவன். இயற்கையில் எவற்றையும் சரி சமமாக இயங்க வைப்பவன். குணங்களை இணைக்கும் கயிறு. நான் தான் இயற்கையாக எங்கும் இருப்பவன், காண்பவைகளின் ஆதாரம். சூக்ஷ்மமாக இயக்குபவன். வெல்லமுடியாத மனம் நான் தான்.
நான் தான் வேதங்கள் சொல்லும் ஹிரண்யகர்பன், பிரம்மன். மந்திரங்களில் ஓம்காரம். அக்ஷரங்களில் முதல் எழுத்து ''அ ''. மந்திரங்களில் காயத்ரி.தேவர்களில் முதன்மையான இந்திரன். வசுக்களில் அக்னி. அதிதி புத்ரர்களில் வாமனன். ருத்ரர்களில் நீல லோஹிதன்.ரிஷிகளில் ப்ருகு . ராஜாக்களின் மனு. முனிவர்களில் நாரதன். பசுக்களில் காமதேனு. யோகிகளில் கபிலன். பக்ஷிகளில் கருடன். பித்ருக்களின் அர்யமான். தைத்ரியர்களில் பிரஹலாதன். விண்மீன்களில் சந்திரன். செல்வத்தில் குபேரன். யானைகளில் ஐராவதம், ஜலத்திற்கு வருணன். ஒளிர்பவைகளில் சூரியன். மனிதர்களில் ராஜா. குதிரைகளில் உச்சைஸ்ரவஸ். உலோகங்களில் தங்கம். சர்ப்பங்களில் வாசுகி. படமெடுத்தாடும் னங்களில் அனந்ததேவன். மிருகங்களில் சிங்கம். நான்கு ஆசிரமங்களை சேர்ந்தவர்களில் சந்நியாசி. நதிகளில் கங்கை. நீண்ட நீர் பரப்பில் சமுத்திரம். நானே சிவன். திரிபுரத்தை எரித்தவன். மலைகளில் மேரு. உயரத்தில் ஹிமாச்சலம். வாசஸ்தலங்களில் சுமேரு பர்வதம். ஆச்சார்யர்களில் வசிஷ்டன். வேதத்தில் பிரஹஸ்பதி. படைத்தலைவர்களில் நான் கார்த்திகேயன். ஸ்கந்தன். விரதங்களில் அஹிம்ஸா . அஷ்டாங்க யோகத்தில் சமாதி நிலை. பெண்களில் சதரூபி (மனுவின் மனைவி). மனிதர்களில் ஸ்வயம்பு மனு. ரிஷிகளில் நர நாராயணன். ப்ரம்மச்சாரிகளில் ஸனத்குமாரன். மத கோட்பாடுகளில் நான் தியாகம். மனஸாக்ஷி . மௌனம். ப்ரம்மம். சூரியமண்டலம். காலங்களில் வசந்தம். மாதங்களில் மார்கழி. 27 நக்ஷத்ர வாசங்களில் அபிஜித். யுகங்களில் சத்யயுகம். அமைதியான தேவர்களில் தேவலா ,அசிதர் . வேத கர்த்தாக்களில் க்ரிஷ்ண த்வைபாயனர். ஆச்சார்யர்களில் சுக்ராச்சா ரியார்.பகவான் என்று வணங்குப வர்களில் வாசுதேவன். பக்தர்களில் நீ, உத்தவன். வானரங்களில் ஹனுமான்.வித்யாதரர்களில் சுதர்சனன். நவரத்தினங்களில் மாணிக்கம். புல்லில் குச தர்ப்பை. யாகப்பொருள்களில் பசு நெய் . அழகில் தாமரை. வியாபாரத்தில் செல்வம். ஏமாற்றுபவர்களில் சூதாட்டம். பொறுமையில் மன்னிப்பு. உழைப்பவர்களுக்கு அதிர்ஷ்டம். பலசாலிகளில் உள்ள உடல் பலம். நவமூர்த்திகளில் வாசுதேவன். கந்தர்வர்களில் விஸ்வாவஸு. அப்சரஸ்களில் பூர்வசிதி. உறுதியில் மலை. வாசனைகளில் மண்வாசனை. ராசிகளில் நீர். ஒளியில் சூர்யன். பிரகாசத்தில் சந்திரன். மன்னர்களில் மஹாபலி . வீரர்களில் அர்ஜுனன். பஞ்சேந்திரியங்களின் ஞானேந்திரியகங்களின் உள்ளியங்கும் சக்தி. மொத்தத்தில் எல்லாமே நான்.
''உத்தவா, நீ கேட்டதால் உனக்கு நான் யார் என்று விளக்கி சொன்னேன். மனம் வாக்கு காயம் உணர்வுகள் எல்லாமே நான் தான். ஆகவே உன் மனதை ஒடுக்கி என்னை அறிவாய். வாக்கில் கவனம் கொள் . உலக ஈர்ப்புகளில் மாயையில் மயங்கி மூழ்கி விடாதே.
No comments:
Post a Comment