Wednesday, July 7, 2021

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்   J K SIVAN


50. திருப்புகழ் மணி 

பகவான்  எப்படி எல்லாம் தனது  சிறந்த பக்தர்களை தேர்வு செயகிறான் பாருங்கள்.   மைலாப்பூரில் ஒரு பிரபல  நீதிபதி வாழ்ந்தார். அவர் ஒரு கர்மயோகி. தனது உத்தியோகத்தை அப்பழுக்கு இல்லாமல் நேர்மை யுடன் இரவும் பகலும் அதிலேயே கவனமாக இருப்பவர்.
ஒரு நாள் ஒரு நண்பர்  அவரை சந்திக்கிறார்.

''சுவாமி, உங்கள் வீட்டில் ஒருநாள் திருப்புகழ் பாராயணம் வைத்துக்கொள்ளலாமா?''
அந்த நண்பர்  ஒரு முருக பக்தர்.  அப்போது ஸ்ரீ வள்ளிமலை சச்சிதானந்த  ஸ்வாமிகள் சென்னையில் இருந்தார். சென்னையில்  பல இடங்களுக்கு சென்று திருப்புகழ் பாடி  திருப்புகழ் அலை எங்கும்  ப்ரவாஹமாக  நிரம்பிக்கொண்டிருந்தது 

''திருப்புகழா?  அதைப் பற்றி  எனக்கு அதிகம் தெரியாதே. இருந்தாலும்  நீங்கள் என் வீட்டில் திருப்புகழ் பாராயணம் வைத்துக்கொள்வதில் எந்த ஆக்ஷேபணையும் எனக்கில்லை.

வள்ளிமலை ஸ்வாமிகள் வீட்டில் காலடி எடுத்து வைத்தார். அவ்வளவு தான்.   முருக பக்தி அலை எங்கும் எதிரொலித்தது.

''நீங்களும் என்னோடு சேர்ந்து பாடுங்கோ. இந்தாங்கோ புஸ்தகம்''   வள்ளிமலை ஸ்வாமிகள்  ஜட்ஜ் கையில் திருப்புகழ் புத்தகத்தை திணித்தார். நமக்கு அந்தக் கணம் முதல்  திருப்புகழ் மணி ஜட்ஜ் T M  கிருஷ்ணஸ்வாமி ஐயர் கிடைத்துவிட்டார்.  

இந்த சம்பவம் நடந்த பிறகு  திருப்புகழுக்கு முதலிடம்.. நீதிபதி உத்யோகத்துக்கு ரெண்டாம் இடம். வள்ளிமலை ஸ்வாமிகள் எடுத்துக் கொடுத்த முதல் பாட்டுக்கு பிறகு  கோவில்கள், மண்டபங்கள், வீடுகள், மன்றங்கள், தெருக்கள் எங்கும்  திருப்புகழ் மணி ஐயர்  பஜனைகள் ஒலித்தது. எல்லோருக்கும் ஜட்ஜ்  TM  கிருஷ்ணஸ்வாமி ஐயர் என்கிற பேர் மறந்தே போய்விட்டது.

சிருங்கேரி ஆச்சார்யாள்,  திருவண்ணாமலை ரமண  மஹரிஷி ஆகியோரை அடிக்கடி சென்று தரிசிப்பார். அவர்கள் எதிரே திருப்புகழ் பஜனை நடக்கும். பஞ்சம் தலை விரித்தாடிய ஒரு பகுதிக்கு சென்று திருப்புகழ் பஜனை நடந்தது கொட்டோ கொட்டு என்று மழை.

1927ல்   பாலக்காடு சென்றார்.  அங்கே   காஞ்சி காமகோடி மடாதிபதி  ஜகத்  குரு தங்கியிருப்பதை அறிந்தார்.
''எங்கே இருக்கிறார் பெரியவா?
''இங்கே தான் பக்கத்தில்  பல்லவூர் என்கிற கிராமத்தில்.  திருப்புகழ் மணி அங்கே பஜனை கோஷ்டியோடு ஓடினார்.  மஹா பெரியவாளை தரிசித்தார்.  நமஸ்கரித்தார். 

''ரொம்ப சந்தோஷம் நீங்க வந்தது திருப்புகழ் பாடுங்கோ சந்தோஷமா  கேக்கறேன்''
ஆனந்தமாக  சில மணிநேரங்கள்  திருப்புகழ் பஜனை ஒலித்தது.  மஹா பெரியவா அவருக்கு  ஒரு காஷ்மீர் சால்வை அணிவித்து  கொடுத்த பட்டம் தான் ''திருப்புகழ் மணி''.

அப்போது  கோயம்பத்தூரில்  சிருங்கேரி மஹா ஸந்நிதானம்  முகாம் இட்டிருந்தார். அவரைச் சென்று தரிசித்த திருப்புகழ் மணி ஐயர் , காஞ்சி பெரியவா தந்த விருது பற்றி சொன்னார்.

''அவரோடு சேர்ந்து நானும்  ''திருப்புகழ் மணி''  விருது  தந்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்றார்  மஹா சன்னிதானம்.

மஹா பெரியவாளுக்கு  திருப்புகழ் மணி அய்யரை ரொம்ப பிடிக்கும். அடிக்கடி அவரை அழைத்து பாடச்  சொல்வார்.  

பின்னால் ஒரு காலத்தில் நடந்த சம்பவத்தை இங்கே குறிப்பிட்டு இதை நிறைவு செயகிறேன்:


மணி ஐயர் மனைவி காசநோயால் அவதிப்பட்டு  மதனப்பள்ளி ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த சமயம்   பெரியவா  மதன பள்ளிக்கு  விஜயம் செய்திருந்தார். 

''ஹர ஹர சங்கர  ஜயஜய சங்கர''  முழக்கத்துடன் பாதசாரிகளாக  பெரியவாளும் மற்றவர்களும் மதன பள்ளி வந்துள்ளதை  அறிந்த  திருப்புகழ் மணி ஐயர் மனைவிக்கு   ரொம்ப மனதில் வருத்தம். கண்களில் ஆறாக கண்ணீர். 

'' பகவானே , நம்மால் பெரியவாளைப் போய் தரிசனம் செய்ய முடியவில்லையே. ஆஸ்பத்திரியில்  இருப்பதால்  நகரவே   சந்தர்ப்பம்  இல்லையே. 
என்னோட கடைசி மூச்சு, இந்த படுக்கைலதான். பெரியவாளை மனசாலே  வேண்டிக்கிறேன்/   காலன் வரதுக்குள்ள, என் சங்கரனை [கால காலனை] பாத்துட்டேன்னா, அது  ஓண்ணே  போறும். எவ்வளவோ ஆறுதலா இருக்கும்….பாழும் உடம்பு, படுக்கையில் புரளக்கூட முடியாம இருக்கு. நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான்” என்று அழுதாள்.


மதன பள்ளியில்   மஹா  பெரியவாளைச்  சுற்றி  ஏகப்பட்ட  பக்தர்கள் கூட்டம் சூழ்ந்தது.  மதனப்பள்ளி பூரா  பெரியவா பற்றிய பேச்சு தான்.

அதிசயங்கள் எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடப்பவை தானே.
முன்னாலேயே ஏற்பாடு பண்ணி, சொல்லி வைத்துவிட்டு நடந்தால் அதன் பெயர் அதிசயம் இல்லையே ?

யாரோ ஒரு பக்தர் மஹா  பெரியவாளை தரிசனம் பண்ணும்போது, ஒரு வார்த்தையை பெரியவா காதில் போட்டுவைத்தார்.

“பெரியவாகிட்ட ஒரு விண்ணப்பம்….திருப்புகழ் மணி ஐயரோட ஸம்ஸாரம் இங்க ஒரு ஆஸ்பத்ரில ரொம்ப ஸீரியஸ்ஸா இருக்கா…..TB….ரொம்ப அட்வான்ஸ் ஸ்டேஜ்  என்று சொல்றா.. 

மஹா பெரியவா கையை சைகை  காட்டி  நிறுத்தினார் ......

அருகிலே நின்ற ஒரு  பாரிஷதரை  ஜாடையாகக்  கூப்பிட்டு, ” மணியோட பத்னி எந்த ஆஸ்பத்ரில இருக்கான்னு விஜாரி.. நான் பல்லாக்குலே  ஆஸ்பத்திரி உள்ளே போயி அவளைப் பாக்கலாமா…ன்னு கேளு”

மடத்து பெரியவா  எங்கும் எப்போதும் மருத்துவமனைக்கு எல்லாம்  சென்று நோயாளிகளை பார்க்கும் ஸம்ப்ரதாயம் ஸ்ரீ மடத்தில் இல்லை. ஆனால் இது  ஒரு  அசாதாரண விஷயமாச்சே.! 

திருப்புகழைத்   தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெல்லாம்  பரப்பிய முருக பக்தரின் தர்ம பத்னி, உயிருக்கு மன்றாடு கிறாளே. !

மடத்து அதிகாரி  ஹாஸ்பிடல் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று  மணி ஐயர்  மனைவி படுத்திருந்த கட்டில் வரை, பல்லக்கிலேயே சென்று தர்ஶனம் கொடுத்தார் பெரியவா!!

இதுவரை எப்போதும் நடக்காத ஒரு அதிசய சம்பவம் இது.  யாருக்குமே கிடைக்காத மஹா பெரிய பாக்யம்! பெரியவா தர்ஶனம் கிடைத்ததில் மணி ஐயர்  மனைவிக்கு  தான் காண்பது கனவா நனவா என்று புரியவே இல்லை. புளகாங்கிதம். அளவற்ற சந்தோஷம். 

“நான் கனவுல கூட இதை நெனச்சு பாக்கல….பெரியவாளே வந்தாளே! இந்த ஜன்மத்தை கரையேத்தி விட்டுட்டாளே! இனிமே நேக்கு எந்த பயமோ, கவலையோ இல்ல….ஶங்கரா….ஶங்கரா” என்று ஈனஸ்வரத்தில் சொல்லி சொல்லி கண்ணீர் வடித்தாள். தர்ஶனத்துக்கு முன் வரை மனம் சோர்ந்திருந்தவள், பின்னர் எப்போதும் மனத்தில்  பூரண  தெம்போடு இருந்தாள்..

சில நாட்களில்   கைலாசத்திலிருந்து  சிவ கணங்கள் மரியாதையோடு  அவளை  அழைத்து கைலாச பதவி அடைய செய்தார்கள். 

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...