அடிக்கடி கிருஷ்ணனை நினை... - நங்கநல்லூர் J K SIVAN
17ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் ஆட்சி. வெள்ளைக்காரனுக்கும் நமது தேசம் தெரிந்துவிட்டது.இன்னும் கால்
வேரூன்றவில்லை.
ஹிந்து சனாதன தர்மத்துக்கு எங்கும் எதிர்ப்பு இருந்த போதிலும் ஆங்காங்கே சில மஹான்கள் அவ்வப்போது தோன்றி அதை போஷித்து புனருத்தாரணம் செய்துகொண்டு வந்தார்கள்.
அப்படி ஒருவர் தான் சதாசிவ பிரம்மேந்திரர் எனும் தெலுங்கு பிராமணர். அவதூதர். அதாவது உலகை சிறுவயதிலேயே துறந்து முற்றிலும் அதோடு தொடர்பில்லாமல் காற்றைப்போல் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் கடலோரத்தில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தவர். உடலோ அதன் மேல் ஆடையோ , தான், தனது, எதுவுமே நினைவின்றி மனதை ப்ரம்மத்தோடு இணைத்துக் கொண்ட சித்தர். ப்ரம்மஞானி. சர்வம் ப்ரம்மமயம்.
அவருக்கு குரு பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் . அளவு கடந்த பக்தி அவர் மேல். அவருக்கு காணிக்கையாக எழுதிய பாடல்கள், நூல்கள் எத்தனையோ, எல்லாம் காற்றில், மணலில். .கண்டவர் எடுத்து அளித்த அற்புதங்கள் நமக்கு இப்போது கிடைத்துள்ள விருந்து.
சிவராமகிருஷ்ணன் என்ற இந்த ஞானிக்கு 17வயதில் கல்யாணம். திருவிசநல்லூர் ஐயாவாள், காஞ்சிமடாதிபதி ஆத்ம போதேந்திராள் , கோவிந்தபுரம் பகவன் நாம போதேந்திராள் அவருக்கு சம காலத்தவர்கள்.
கும்பகோணத்தில் மஹாதானபுரம் காவேரிக் கரையில் சிறுவர்களோடு சிறுவராக விளையாட்டு
. ''எங்களுக்கு மதுரைக்கு போகணும்''
சிறுவர்கள் 100 மைலுக்கு அப்பாலிருக்கும் மதுரையை கேட்கிறார்கள்.''
''கண்ணை மூடிக்கோங்கோ''
கண்ணைத் திறந்து பார்த்த சிறுவர்கள் மதுரையில் இருக்கிறார்கள்.
சங்கீத சாகரம். நிறைய வேதாந்த நூல்களின் ஸ்ருஷ்டி கர்த்தா. இவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன்.ஆனாலும் இன்னும் நிறையவே இருக்கிறது.இன்று அவர் பாடிய ஒரு பாட்டுடன் நிறுத்துகிறேன்.
''ஸ்மரவாரம் வாரம் சேதக ஸ்மர நந்தகுமாரம் கோப குடீர பயோக்ருத சோரம்,கோகுல பிருந்தாவன சஞ்சாரம், ( ஸ்மர)
வேணுரவாம்ருத பான கிஷோரம் ஸ்ருஷ்டி ஸ்திதி லய ஹேது விசாரம், (ஸ்மர)
பரமஹம்ச ஹ்ருத் பஞ்ஜரகீரம் பதுதர தேனுக பக சம்ஹாரம் (ஸ்மர)''
அர்த்தம்: ''கிருஷ்ணனை மறக்க முடியுமா? எவரால் முடியும்? அடிக்கடி நினையுங்கள்.அந்த சிறு பயல் நந்தகோபன் குமாரனாக தன்னை காட்டிக்கொண்டாலும் அந்த வசுதேவர் புத்ரனை மறக்கமுடியுமா? அவன் பால்ய லீலைகள் கொஞ்சமா நஞ்சமா? நினைக்க நினைக்க இன்பமூட்டுபவை அல்லவா?ஆயர்பாடி, பிருந்தாவன கோபியர்கள் வீட்டில் காணாமல் போன வெண்ணைக்கு காரணம் அவன் தானே. மற்றவர்களோடு பகிர்ந்து உண்பதில் தான் எத்தனை சந்தோஷம். பிருந்தாவன மூலை முடுக்குகளில் கூட அவனை எப்போதும் பார்க்கலாமே.இடுப்பில் ஒரு சிறு மூங்கில் புல்லாங்குழல், அதை எடுத்து அடிக்கடி வாசிப்பானே . சங்கீத சாரத்தை பிழிந்து காற்றில் கலந்து பரவ விடும் சுகம் அப்பப்பா சொல்ல முடியுமா?
பரம ஹம்ச என்று ஒரு க்ரிதியில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்தால் அது சதாசிவ பிரம்மேந்திரர் பாடல். க்ருதி. அவர் குரு ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு குரு காணிக்கையாக அளித்த பாடல்கள்.
கிருஷ்ணன் நமது மனமெனும் கூட்டில் வாசம் செய்யும் கிளி. அவனை நினைத்துக் கொண்டிருந்தால் தேனுகன் பகன் போன்ற ராக்ஷஸர்கள் நம்மை நெருங்க முடியாது.
இதனுள்ளர்த்தம் அத்வைத பரமாக விளக்க முற்பட்டால் நீண்டு விடும் என்பதால் நிறுத்துகிறேன்.
அதற்கு முன் இதை அற்புதமாக பாடிய ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணாவை அடிக்கடி கேட்டு நானும் பாட முயலும் பழக்கமும் எனக்குண்டு. மூன்று நாளுக்கு முன்பு ஒரு இரவில் இந்த முயற்சி.
https://youtu.be/QGFvCDlGpoM
https://youtu.be/QGFvCDlGpoM
No comments:
Post a Comment