பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
54, திருவேடக விஜயம்.
எத்தனை ஊர்கள், எத்தனை பக்தர்கள், எத்தனை ஆச்சர்யமான மறக்கமுடியாத சம்பவங்கள் நிகழ்ந்த நீண்ட விஜய யாத்திரை இது. வருஷக்கணக்காக தொடர்ந்த இது போல் எவர் இதற்கு முன் பக்தர்களை சந்தித்து தரிசனம் அருளி இருக்கிறார்? நினைவில் எவரும் இல்லையே.
திருக்குற்றால தரிசனத்திற்குபின் மஹா பெரியவா தனது பரிவாரங்களோடு திருநெல்வேலி நோக்கி பயணமாகிறார். வழியில் எத்தனையோ சிற்றூர்கள். க்ஷேத்ரங்கள். யாருமே அதைப் பற்றி எழுதி வைக்காமல் போய்விட்டார்களே. மஹா பெரியவா வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் தெய்வீக பொன்னாள் ஆயிற்றே.
திருநெல்வேலியை செழிப்பாக்குபவள் தாமிரபரணி. அவள் உற்பத்தியாகும் இடம் பாண தீர்த்தம் எனப்படும். 1928 ஜூன் 9ம் தேதி அங்கே சென்று ஸ்னானம் செய்தார் மஹா பெரியவா. அங்கிருந்து அடுத்ததாகச் சென்றது நாகர் கோயில் வழியாக கன்யாகுமரி.
ஜூன் 17ம் நீதி அன்று நீலத்திரை கடல் ஓரத்தில் நித்தம் தவம் செய்யும் குமரி அன்னையை தரிசனம் செய்தார். ரெண்டு நாள் அங்கே வாசம். மூன்று சமுத்ரங்களும் சங்கமமாகும் அந்த புண்ய ஸ்தலத்தில் ஸ்னானம்.
அங்கிருந்து நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில் பட்டி, சாத்தூர், விருதுநகர், திருவேடகம் பயணம் துவங்கியது.
திருவேடகம் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு செய்தி. மதுரையிலிருந்து சோழவந்தான் போகும் வழியில் உள்ள க்ஷேத்ரம். சிவன் பெயர் ஏடகநாதர். அம்பாள் ஏலவார் குழலி, மாதேவி யம்பிகை. பழம் பெரும் ஆலயம். ஞான சம்பந்தர் பாடல் பெற்ற வைகை நதிக்கரை சிவாலயம். நான் இதை உங்களுக்கு ஞாபகப்படுத்த காரணம் இந்த ஊரின் பெயர் பின்னால் உள்ள அற்புத விஷயம். பாண்டிய தேசத்தில் சமணர்கள் கை ஓங்கி இருந்த காலம்.
ஞானசம்பந்தரோடு வாதம் செய்து சமணர்கள் தங்கள் ஓலைச்சுவடிகளை வைகையில் வீசினர்.
''உங்கள் பதிகத்தையும் வைகையில் எறியுங்கள். எது மேலே எதிர்த்து வருகிறதோ அந்த சுவடியை எழுதியவர் வென்றவர் ஆவார்'' என்று போட்டி. அப்போது சம்பந்தர் எழுதிய முதலாவது பதிகம் தான்
''வன்னியு மத்தமு மதிபொதி சடையினன்
பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட வடியவர்
இன்னிசை பாடல ரேடகத் தொருவனே.
ஏடு மிதந்து வந்தது. சமணர்களை சம்பந்தர் வென்றார். ஏடு எதிர்த்து மிதந்து வந்ததால் ''ஏடகம்'' என்று ஊருக்குப் பெயர். சிவனுக்கு பெயர் ஏடகநாதர்.
அப்போது பாடிய சிறப்பு பாடல்
'' வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே''
வைகையில் ஏடு மிதந்தபோது குதிரையின் மேல் அதை தொடர்ந்து சென்றவர் குலச்சிறையார் எனும் மந்திரி. அவரும் ஒரு சிவனடியார். அறுபத்து மூவரில் ஒருவர். கோவிலுக்கு பின்னால் வைகை தெற்கு நோக்கி ஓடுகிறாள்.
மஹா பெரியவாளுக்கு இந்த மரங்கள் சூழ்ந்த அமைதியான ஆலயம் தியானத்துக்கு ஏற்றதென்று தோன்றியதால் இங்கேயே ரெண்டு மாசம் சாதுர்மாஸ்ய விரதம் அந்த வருஷம் ( விபவ வருஷம், 1928) நிறைவேறியது.
மஹா பெரியவா சௌகர்யமாக விரதம் இருக்க சகல வசதிகளையும் செய்து கொடுத்தவர் மட்டப்பாறை வெங்கட்ராம ஐயர். உண்மையான காங்கிரஸ் தியாகி. அவர் வம்சத்தினருக்கு அநேக நமஸ்காரம். சோழவந்தான் அக்ரஹார வாசிகளும் அண்டை அசல் ஊர்க்காரர்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. இந்த இடத்தில் இருக்கும்போது தான் மைசூர் மஹாராஜா ஒரு பெண் யானையை மடத்திற்கு பரிசளித்தார். மஹா பெரியவா இருக்கும் இடத்தில் சங்கீதம் சாஸ்த்ரம் சகல ஞானமும் இருக்குமே. சங்கீத வித்வான் மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர் சங்கீதம் எங்கும் எதிரொலித்தது. பாகவதர் படம் இணைத்தி ருக்கிறேன். அவரது வம்சா வழிக்கு பெருமையாக இருக்கலாம்.
மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர் சிவகங்கைமாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள மழவரா யனேந்தல் கிராமத்தவர். (1888) தாய்வழிப் பாட்டனார் சிதம்பர பாகவதர் சிறந்த சங்கீத ஞானி .கட்டையான சாரீரம். கடும் பயிற்சி மூலம் அதை பண்படுத்திக் கொண்டார். தமிழிலும் கீர்த்தனைகள் தேவை என உணர்ந்து தமிழில் கீர்த்தனைகளையும் பதங்களையும் புனைந்தார். ராமநாதபுரம், மைசூர் , திருவனந்தபுரம் சமஸ்தானங்களில் பாடி பரிசுகள் பெற்றவர்.
மஹா பெரியவா திருவேடகத்தில் இருந்தவரை அடிக்கடி வந்து மஹா பெரியவா எதிரில் அமர்ந்து கீர்த்தனைகளை பாடியவர். மஹா பெரியவா அவரது ஞானத்தைப் போற்றி, பீதாம்பர சால்வை அணிவித்து பரிசுகள் அளித்தார்.
சாதுர் மாஸ்ய விரதம் முடிந்து மதுரைக்கு சென்று அங்கே மஹாபெரியவா ஒரு வார காலம் வாசம் செய்தார். மதுரையில் அப்போது பிரபல காங்கிரஸ் தலைவர் தேஜ் பகதூர் சப்ரு மதுரையில் இருந்த தால் மஹா பெரியவாளை தரிசனம் செய்தார். வெள்ளையர் அரசாங்கம் காங்கிரஸ் தலைவர்களை எங்கும் சிறையில் அடைத்த காலம். மஹா பெரியவாளிடம் தன்னுடைய திட்டங்கள் சேவைகள் எல்லாம் விளக்கினார். மஹா பெரியவா ''எங்கும் அமைதி நிலவ வேண்டும் மக்கள் சுகமாக இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை'' என்று ஆசிர்வதித்தார்.
மதுரையிலிருந்து வத்தலகுண்டு, பெரியகுளம், தேனீ, சின்னமனுர்,வழியாக அம்மைய நாயக்கனுர் வந்து அங்கே நவராத்ரி விழா ஏற்பாடாகியது.
அம்மையநாயக்கனுர் ஜமீன்தார் அப்போது ஸ்ரீ ராமஸ்வாமி நாயக்கர். அவர் மஹா பெரியவா பக்தர். பெரியவாளை அழைத்து உபசரித்தார். 15 நாட்கள் அங்கே முகாம்.
தொடரும்
No comments:
Post a Comment