பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
48. மேட்டூர் அணை விஜயம்.
இந்த உலகம் என்ன எதிர்பார்க்கிறது? இதில் வாழும் மனிதர்கள் எத்தகையவர்கள்? என்று யோசித்தோ மானால், உலகம் மாயையால் சூழப்பட்டு மக்களை விளக்கு , விட்டில் பூச்சியை கவர்வது போல் காந்த சக்தி கொண்டு மாயையில் விழுங்குகிறது புரியும். மனிதர்கள் தங்களுக்கு என்ன தேவை, எது சுகம் அளிக்கும், எதெல்லாம் தனக்கே உரிமையாகும் என்ற நிழலைப் பிடிக்கும் போட்டா போட்டியில் ஒருவரை ஒருவர் மிஞ்சி சுயநலத்தில் வாழ்கிறார்கள் என்பதும் புரியும்.
இவர்களுக்கு இடையிலே, தனக்கு, தான் என்ற எண்ணமே இல்லாமல், பிறர்க்கெனவே நன்மை செய்ய, சுகம் அளிக்க, சந்தோஷம் தர ஒரு ஜீவனை பரமாத்மா அவ்வப்போது அனுப்புகிறான். எப்போவாவது இந்த உலக மக்கள் மாறுவார்களா என்று சோதிக்க. அப்படிப் பிறப்பவர்கள் தங்கள் வாழ்க்கை முழுதும் உலக நன்மைக்கு உலகோர் வாழ அர்ப்பணிப்பவர்கள். இப்படி ஒருநாள் சில வருஷங்கள் அல்ல, நூறு வருஷங்கள் வாழ்ந்து தனது வாழ்க்கையையே 13 வயது பாலகனாக இருந்த போதிலிருந்து தியாகம் செய்த ஆத்ம ஞானி நமது மஹா பெரியவா. அதனால் தான் அவர் சரித்திரம் அறிந்து கொள்ள, படிப்பதற்கு, கேட்பதற்கு, எல்லோருக்கும் இனிக்கிறது. இப்படி ஒருவரா நம்மிடையே, என்று திகைக்க வைக்கிறது.
என்ன ஞானம், தவ வலிமை. நிதானம், மௌனம், கருணை, தீர்க்க தரிசனம். பரோபகாரம், அருள்!!
அந்த பேசும் தெய்வம் சென்ற இடமெல்லாம் அதனால் தான் திரள் திரளாக மக்கள் தரிசனம் ஒருமுறையாவது பெறுவோம் என்று காத்திருந்தனர். பயன் பெற்றனர்.
1927ம் வருஷம் மார்ச் 31ம் தேதி, பாண்டிச்சேரியில் ஒரு வார காலம் விஜயம் செயத மஹா பெரியவா அடுத்து அங்கிருந்து கடலூர், விருத்தா சலம், கள்ளக்குறிச்சி,சின்ன சேலம், ஆத்தூர், வழியாக சேலம் வந்தார்.
வழக்கம் போல சேலம் பக்தர்களுக்கும் படு குஷி. தடபுடலாக வரவேற்பு. பெரியவா அங்கிருந்து ஈரோடு சென்றார்
ஈரோட்டில் மடத்தில் முகாம் இட்டிருந்தபோது ஒருநாள் மாலை ரெண்டு மணிக்கு, மட நிர்வாகிகள் பெரியவாளிடம் வந்தனர்.
''பெரியவா, யாரோ ஒரு முஸ்லீம், ரொம்ப படிச்சவராக இருக்கிறார், பெரியவாளை தரிசிக்க ஆவலோடு காத்திருக்கிறார்'' என்றார்கள் .
''கூட்டம் இல்லாத நேரமா நாலு மணிக்கு சாயந்திரம் அவரை தனியா நான் இருக்கும்போது என்கிட்டே அழைச்சுண்டு வாங்கோ''
ஆச்சர்யமாக, அந்த முஸ்லீம் அவர் எதிரில் வந்தபோது சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செயது பவ்யமாக வாய் பொத்தி,
''பெரியவா மேலே சமஸ்க்ரிதத்திலே சில ஸ்லோகங்கள் எழுதி இருக்கேன். சமஸ்க்ரித அக்ஷரங்களை வச்சு சிவலிங்கம் உருவங்கள் வரைந்திருக்கிறேன். பெரியவா சமூகத்தில் என் ஸ்லோகங்களை வாசிக்கணும், அந்த அக்ஷர லிங்கங்களை சமர்ப்பிக்கணும் என்று ஒரு அபிலாஷை''
அற்புதமாக பேசினார் அந்த முஸ்லீம். பெரியவா புன்னகையோடு '' ஆஹா தாராளமாக வாசியுங்கோ நான் கேக்கறேன்'' என்றார்.
முஸ்லீம் கணீரென்று தான் இயற்றிய ஸ்லோகங்களை பிழையின்றி சமஸ்க்ரிதத்தில் வாசித்தார். அதன் அர்த்தத்தையும் விளக்கினார். எல்லோரும் ஆச்சர்யத்தில் திறந்த வாய் மூடாமல் நின்று கொண்டிருந் தார்கள்.
''எப்போது , எப்படி, ஸ்லோகம் எழுதும் அளவுக்கு ஸம்ஸ்க்ரித ஞானம் பெற்றீர்கள்?''
''பெரியவாளுக்கு நமஸ்காரம். என்னுடைய முன்னோர்கள் ஸமஸ்க்ரிதத்தில் பாண்டித்யம் கொண்டவர்கள் என் அப்பா மூலம் நான் சமஸ்க்ரிதம் கற்றுக் கொண்டேன். ''
அவருக்கு தன்னுடைய சமஸ்க்ரித ஞானத்தை பெரியவாளுக்கும் மற்றவர்களுக்கும் வெளிப்படுத்திக் காட்டவேண்டும் என்ற வெகுநாளைய ஆசை அன்று நிறைவேறியது. அவரது தந்தைக்கோ, முன்னோர் களுக்கோ கூட கிடைக்காத பாக்கியம் அது. அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர். பெரியவா எதிரில் அமைதியாக கை கட்டி நின்றார்.
'பாய், இது தான் என் வாழ்வில் நான் முதலாக ஒரு முஸ்லிமை சமஸ்க்ரிதத்தில் பண்டிதனாக பார்ப்பது, பேசுவது, சந்தித்தது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எனது மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள். நீங்கள் இன்னும் நிறைய சமஸ்க்ரிதம் படித்து மேன் மேலும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். எல்லோருக்கும் இந்த அதிர்ஷ்டம் கிடைக்காது. மஹா பெரியவா, அவருக்கு பரிசுகள் கொடுத்து வாழ்த்தி அனுப்பினார். முஸ்லீம் பரம திருப்தியோடு முக மலர்ச்சியோடு சென்றார்.
மஹா பெரியவா ஈரோடிலிருந்து பவானி, நெருஞ்சி, வழியாக மேட்டூர் சென்றார். அப்போது தான் மேட்டூர் அணைக்கட்டு அடிக்கல் நாட்டியிருந்தார்கள். மலைகள் இணைக்கப்பட்டு அணைக்கட்டு ஆரம்பிக்கவில்லை. காட்டாறு மாதிரி காவிரி தடம் புரண்டு ஓடிக்கொண்டிருந்தாள் .
மேட்டூர் அணைக்கட்டு ஸ்தலத்துக்கு விஜயம் செய் த பெரியவா அங்கிருந்த பொறியியல் வல்லுனர்களுடன் பேசி, அவர்கள் அணைக்கட்டும் வழிமுறையும், திட்டத்தையும், அதனால் விளையும் நன்மைகளையும் கூர்ந்து கேட்டு திருப்தியடைந்தார்.
அந்த இன்ஜினியர்கள், வேலை செய்யும் அதிகாரிகள், மற்றவர்கள் அனைவரும் பெரியவாளுக்கு பாத பூஜை செய்தார்கள். பிக்ஷா வந்தனம் அளித்தார்கள்.
''எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? காவேரி நதி மைசூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் இடம் எது என்று பார்க்கவேண்டும்.''
''சுவாமி அது நெருஞ்சிப்பேட்டையிலிருந்து 15 மைல் தூரம். ஒரு மலையை கடந்து அந்த பக்கம் போக வேண்டும். உங்களால் வர முடியுமானால் உடனே ஏற்பாடு செயகிறோம்.அது எங்கள் பாக்யம்''
''நாளை காலை சூர்யோதயத்துக்கு முன் என்னோடு 20 பேரை மட்டும் அழைத்துக்கொண்டு வருகிறேன். என்னால் மலையை தாண்டி அந்தப்பக்கம் செல்ல முடியும்'' என்றார் மகா பெரியவா. 33 வயது அப்போது அவருக்கு.
சொன்னபடியே மறுநாள் காலை தயாராக இருந்தார்கள். அந்த இடத்தை அடைந்து தரிசித்து திரும்பி வரும்போது கொளுத்தும் வெயிலில் காலை பத்தரை மணி. கூட வந்தவர்களில் பலருக்கு தலை சுற்றல், மயக்கம். மஹா பெரியவா களைப்பாக தான் இருந்தார். இளநீர், எலுமிச்சை ரசம், சர்க்கரை கட்டிகள், மோர் கொண்டுவர சொன்னார். அவர்களுக்கு அதை கொடுத்ததும் களைப்பும் மயக்கமும் தீர்ந்தது. மற்றவர்களுக்கும் அதை சாப்பிட்டு உற்சாகம் பெறுங்கள் என்கிறார்.
மாலை மூன்று மணி வாக்கில் மேட்டூர் அணைக்கட்டு உருவாகும் மலையிலிருந்து இறங்கி கிராமத்துக்கு வந்தார்கள். ஏராளமானோர் அதற்குள் செய்தி அறிந்து மஹா பெரியவா தரிசனத்துக்கு காத்திருந்தார்கள்.
ஒரு பஜனைக்கு குழு ஆனந்தமாக பஜனைகள் பாடிக்கொண்டிருந்ததைக் கண்டு மஹா பெரியவா மகிழ்ந்தார்.
அவர்களுக்கு ஆசி அளித்து வாழ்த்தி விட்டு சூளூருக்கு விஜய யாத்திரை நகர்ந்தது.
தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரிய அணைக்கட்டு மேட்டூர் டாம் . நீரை சேமிப்பதுடன் மின் உற்பத்தியும் செயகிறார்கள். தமிழகத்துக்கு பல இடங்களுக்கு நீர் வரத்து, மேட்டூரணைக்கட்டு வழியாக தான்.ஜூன் ஜூலையில் தான் அணைக்கட்டு திரண்டு விடுவார்கள். ஆடிப்பெருக்கு அது தான். காவேரி டெல்ட்டாவின் வழமைக்கு சான்று மேட்டூர் அணை, 1934ல் கட்ட ஆரம்பித்து 9 வருஷங்கள் ஆயிற்று கட்டி முடிக்க.
214 அடி உயரம், 171 அடி அகலம். நீர் தேக்கம் 120 அடி உயரம். மைசூரில் காபினி அணையிலிருந்தும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் வரும் காவிரி நீர் மேட்டூரில் தேக்கப்படுகிறது.
மேட்டூர் அணை கட்டிய வெள்ளைக்காரர் எல்லிஸ் படம் இணைத்திருக்கிறேன்.
மேட்டூர் அணைக்கட்டு பற்றி எழுதும்போது என் சுயசரிதையும் நினைவுக்கு வருகிறது. திருமணமாகி எனது மாமனார் வீட்டுக்கு மேட்டூர் டாம் பலமுறை சென்று சில நாட்கள் அங்கே ஆனந்தமாக கழித்தது நினைவுக்கு வருகிறது. அவர் மேட்டூர் அணைக்கட்டு வாட்டர் ஒர்க்ஸ் இன்ஜினீயர். அணைக்கட்டு நீரை சேலம் கிராமங்களுக்கு பிரித்து அன்றாட ம் வழங்குபவர். அவர் வசித்த இடம் மேட்டூர் அணை வாட்டர் பூஸ்டர் நிலையம் இருந்த கருமலைக் கூடல் கிராமம். மலைப்பகுதி. நான் சென்ற காலத்தில் கருமலைக் கூடல், மேச்சேரி, அந்தியூர், பக்கம் கொள்ளைக்காரன் மம்புட்டியான், வீரப்பன் நடமாட்டம் அடிக்கடி உண்டு என்று எல்லோரும் பயந்து அந்த பக்கமே சாயங்காலத்திலிருந்து மறுநாள் காலை வரை வெளியே வரமாட்டார்கள். மேட்டூர் மில், CHEMPLAST, மதராஸ் அலுமினியம் MALCO தொழிற்சாலைகள் நான் வசித்த இடம் அருகே இருந்தது. அங்கெல்லாம் சென்று பலரைத் தெரிந்து கொண்டேன். பக்தியோடு வாழ்ந்தவர்கள் பலரைப் பார்த்தேன். ரயிலைக் காட்டிலும் பஸ் வசதியை மட்டும் நம்பி வாழ்ந்தவர்கள். நான் சொல்வது எல்லாம் சுத்தமாக கிட்டத்தட்ட 60 வருஷங்கள் முன்பு.
தொடரும்
No comments:
Post a Comment