ஸ்ரீமத் பாகவதம் - நங்கநல்லூர் J K SIVAN
11வது காண்டம்.
13வது அத்யாயம் 42 ஸ்லோகங்கள்.
13. ஹம்ஸ கீதை.
உத்தவா, நான் மீண்டும் உனக்கு தெரிந் ததையே நினைவூட்டுகிறேன் கேள்.
ஜீவனைச் செயல் படுத்துவதற்கு தான் மூன்று குணங்கள். சத்வ, ரஜோ, தமோ குணங்கள். அவனுள் இருக்கும் ஆத்மாவுக்கு அல்ல. சத்வ குணம் மேலோங்கி இருக்கும்போது ஜீவன் என்னை நினைக்க, சேவை செய்ய, நாட விருப்பம் கொள்வான். சத்வ குணம் தொடர்ந்து நிலைக்க அதை வளர்க்கும் காரியங்களில் கர்மங்களில் ஈடுபட வேண்டியது அவசியம். அதற்கு தான் சத்சங்கம் தேவை.ஸ்திர புத்தி அவசியம். அஹங்காரம் அகல வேண்டும்.
உத்தவா, மூங்கில் மரக்காடுகளில் உலர்ந்த மரங்கள் ஒன்றோடொன்று காற்றில் ஆடி உராய்ந்து கொண்டு அடிக்கடி தீப்பற்றிக் கொள்ளுமே பார்த்திருக்கிறாயா? அந்த மரங்களே தீயை உண்டாக்கி அதில் தாங்களே அந்த தீ மேலும் எரிய உலர்ந்த மரமாக ஆகி பற்றி எரிய அதுவே காரணமாகிறது. எந்த காற்று உரச வைத்து தீ மூட்டியதோ அதுவே மழை யைக் கொண்டுவந்து தீயை அணைக்க வும் உதவுகிறது. உடலும் உள்ளமும் இணைந்து செயல் பட்டு , புலன் வழி செல்லாமல், உலக மாயா ஈர்ப்புகளில் பிடிபடாமல் இருந்தால் ஞானம் பெருகும். ஆன்மா புரியும்.
கிருஷ்ணா, உலக வாழ்க்கையின் ஈர்ப்பு துன்பத்தை தான் தருகிறது என்று தெரிந்தும், ஏன் மனிதன் அதன் அடிமையாகிறான்?. ஆடு, நாய், கழுதை மாதிரி நடந்துகொள்கிறான்?
''உத்தவா, இதற்கு காரணம் எது தெரியுமா , அவனது புத்தியும் அஞ்ஞானமுமே . தேகத்தை ஆத்மா என்று தவறாக எண்ணுகிறான். ஆசா பாசங்களை தொடர்ந்து ஓடுகிறான், தேடு கிறான். புதை குழி போல் மேலும் மேலும் அது அவனை ஆழத்துக்கு இழுத்துக் கொண்டே போகிறது. மனது உணர்வுகளின் பிடியில் அகப்பட்டுக் கொள்ளும்போது நிலை தடுமாறி உலக வாதனைகளின் துன்பங்களில் அவஸ் தை ப்படுகிறது.
புலன்களின் விருப்பத்தைக் கட்டுப்படுத் துபவன் அவற்றால் விளையும் கஷ்டங்களை, துன்பங்களை அடைவதில்லை. கொஞ்சம் தடுமாறினாலும் புத்தியுள்ளவன் சுதாரித்துக் கொண்டு மீண்டும் மனதை விருப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் பாதுகாத்துக் கொள்கிறான்.
தியானமும், பிராணாயாமமும் மனதை ஓடாமல் பிடித்துக் கட்டிப்போடும் சக்தி உள்ளவை. ஓடும் மனதை நிறுத்தி, தடுத்து, என் மேல் திருப்பு பவன் சுகமடைகிறான். யோகப்பயிற்சிகள் இதற்கு பெரிதும் உதவும். விடிகாலை, உச்சி வேளை , அஸ்தமன சமயம் இதற்கு ஏற்ற நேரங்கள்.இது தான் ஸந்த்யா வந்தன நேரங்களும் ஆகும்.
என் பக்தர்கள் இதை பின்பற்றுகிறார்கள். சனககுமாரர் அவர்களில் முதன்மையானவர்'' என்கிறார் கிருஷ்ணன்..
''கிருஷ்ணா, நீ எப்போது, எப்படி, சனகருக் கும் அவர் சகோதரர்களுக்கும் யோக வித்யை கற்பித்தாய். எனக்கு அதை தெரிந்து கொள்ள விருப்பமாயிருக்கிறது. சொல்லேன் ?
'' உத்தவா, ஒருமுறை ப்ரம்மாவின் சங்கல் பத்தில் உதித்த குமாரர் சனகர் மற்ற ரிஷிகளுடன் சேர்ந்து பிரம்மாவிடம் '' தந்தையே, எங்களுக்கு யோகத்தை அடைவதில் உள்ள கடினம் எது. மக்கள் மனம் எப்போதும் உலக இன்பங்களை சுகங்களை நாடும் தன்மை கொண்டதாயிற்றே. . புலன்கள் மூலம் பெறும் இன்பத்தைத் தேடுவது அவற்றின் பழக்கமாயிற்றே. மோக்ஷத்தை நாடும் ஒருவன் இப்படிப்பட்ட ஈர்ப்புகளை விடுவித்துக் கொண்டு ஆசாபாசங்களைத் தாண்டி, புலனின்பங்களுக்கும் மனதுக்கும் உண்டான உறவை எவ்வாறு துண்டிக்க முடிகிறது? என்று விளக்கம் கேட்டார்கள்.
பிரம்மனே உலகில் தோன்றியவன். உலக சிருஷ்டியில் சதா ஈடுபடுபவன். ஆகவே இந்த வினாவுக்கு விடை பெற, என்னை மனதால் தியானித்தான். அப்போது ஹம்ஸ ரூபத்தில் நான் ப்ரம்மாவின் முன் தோன்றினேன்.
என்னைக் கண்ட ரிஷிகள் ப்ரம்மா உட்பட அனைவரும் என் பாதங்களை வணங்கினர்
.''ஹம்சமே நீங்கள் யார்?"" என வினவினார் கள்.
''ரிஷிகளே , உங்களைப் போல் நானும் ஒரு ஜீவாத்மா, ஆகவே நமக்குள் எந்த வித்யாசமும் கிடையாது, எல்லா ஆத்மாக்களும் சமமான ஒன்றே'' என்று நீங்கள் கருதினால் உங்கள் கேள்விக்கு அர்த்தமென்ன? முடிவில் உங்களுக்கும் எனக்கும் அடைக்கலம் எது?
என் தேகத்தை பார்த்து நீ யார் என்று கேள்வி எழுப்பினீர்கள் என்றால், நீங்கள் எல்லா தேகங்களும் உண்டாக காரணமான பஞ்ச பூதங்களை தான் எண்ணத்தில் கொண்டீர்கள் இல்லையா? அப்படியென்றால் நீ யார் என்று கேட்பதற்கு பதிலாக நீங்கள் ஐவர் யார் ? என்றல்லவோ கேட்டிருக்கவேண்டும்?
எல்லா ஜீவாத்மாக்களும் ஒன்றே என்று கருதினால், அப்போதும் உங்கள் கேள்விக்கு அர்த்தமே இல்லை, ஏனென்றால் எல்லாமே ஒன்று என்ற பக்ஷத்தில், கேள்வி கேட்டது, பதில் சொல்வது எல்லாமே ஒன்று தானே. உங்கள் கேள்விக்கு அர்த்தமே இல்லையே? கேள்வி கேட்டவர் தான் பாதி சொல்பவரும்.
இந்த உலகில் மனம், வாக்கு, கண், மற்ற புலன்கள் எல்லாமே உணர்வது என்னைத்தான், வேறெதுவுமில்லையே . நீங்கள் இதை யோசிக்க வேண்டும்
என் அருமைக் குமாரர்களே, மனதுக்கு எப்போதுமே, இயற்கையாகவே, புலன்கள் விஷயத்தில் அடையும் சுகத்தை நாடும் தன்மை உண்டு. அப்படியே அந்த உணரும் பொருள்களும் தாராளமாக மனதில் புகுபவை .இந்த உணர்வினால் பெறுகின்ற பொருள்கள் தரும் இன்பமோ, மனமோ அதை பெறும் மனமோ, நானே தான், அவை என்னில் ஒரு பாகம் என்று அறிந்து கொள்ளுங்கள். .
இப்படி புலனடக்கம் பெற்றவன் என்னை அடைந்தவன், அவன் வேறு நான் வேறு அல்ல என அறிந்தவன். உலக வாழ்க்கை, பொருள் இன்பம், ஆகியவை எளிதில் மனதை வசப்ப டுத்துபவை என்றும், அதனுள் அடக்கம் எனவும் தெரிந்தவன். ஆகவே பொருள் மனத்தையும் புலன் தரும் பொருளின்பத்தையும் விலக்கி யவன். மனதை இந்த ஈர்ப்பிலிருந்து திருப்பி என் மேல் செலுத்தியவன்.
விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம், ஆகியவை மனதின் அறிவின் செயல்கள் உலக மாயையில் நிகழ்பவை. ஆத்மா இப்படிப்பட்ட கட்டுண்ட தேகத்தின் உள்ளே இருந்தாலும் இந்த மூன்று நிலையிலிருந்து வேறுபட்டு ஒரு ஸாஸ்வத சாக்ஷியாக இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஜீவன் இந்த மூன்றில் கட்டுண்டு கிடக்கிறது. நான் இந்த மூன்று நிலையும் கடந்த நான்காவது நிலை. துரீயம்.
இதைப் புரிந்துகொண்டு பொய்யான இவற்றை, அகங்காரத்தை விடுத்து மனதை என் மேல் நிலையாக செலுத்தி சரணடைவது அவனுக்கு பயனளிக்கும். தூக்கத்தில் கனவில் கண்டவை விழிப்பு நிலையில் மறைவது போல் இந்த மாயை அவனை விட்டு விலகும்.
உலக சுகத்தை நிஜமென நம்பி, உணர்வுகள் தரும் பொருள் இன்பத்தை தேடுவது எல்லாம் நிழலைப் பிடிக்கும் வேலை.
வேத நூல்கள், ரிஷிகள் வாக்கு, இவை புத்தியை கூர்மையாக்கி, மாயையை அறுத்து வெளிவர உதவுபவை. வழி காட்டுபவை. அவற்றை பின்பற்றினால் என்னை அடைவது சுலபம்.
உலக ஈர்ப்புகள் சோப்பு நுரை காட்டும் வர்ண ஜாலங்கள். அழகாக இருக்கும் . ஆனால் நிலை யானதல்ல. கனவில் ராஜாவாகிவிடுவது. ராஜகுமாரியை கல்யாணம் செய்து கொள்வது போல. சாகும் வரை ஒருவனுக்கு இது எப்போதும் நினைவில் இருந்தால் அவன் பாக்கியசாலி.
குடிகாரன், பைத்தியக்காரன் ஆகியோருக்கு தான் சட்டை போட்டுக்கொண்டிருக்கிறோமா, இடுப்பில் வேஷ்டி இருக்கிறதா என்று தெரியாதது போல் மனதை என்மேல் முழுதும் செலுத்திய வனுக்கு இந்த தேகம் உட்கார்ந்து இருக்கிறதா, நிற்கிறதா, தூங்குகிறதா என்று கூட தெரியாது. இந்த தேஹம் விலகி இன்னொரு தேகத்தை அவன் பெற்ற போதும் இதே நிலை தான்.
ரிஷிகளே , உங்களுக்கு நான் சொல்வது தெளிவாக புரிந்திருக்கும். இந்த உயர்ந்த விஷயத்தை போதிக்கவே நான் உங்கள் முன் ஒரு ஹம்சமாக வந்து நின்றேன். நான் நீங்கள் அறிந்த நாராயணன் எனும் விஷ்ணு. நீங்கள் பின்பற்றும் யோகமார்கத்தின் முடிவே நான் தான். ''
''உத்தவா, இவ்வாறு தான் சனகாதி ரிஷிக ளின் சந்தேகங்கள் நிவர்த்தியாயிற்று. என்னை வணங்கி போற்றி பாடினார்கள் . நான் வைகுண் டத்திற்கு சென்றுவிட்டேன். ப்ரம்மா இதெல்லாம் அறிவார்''.
ஸ்ரீமத் பாகவத 11வது ஸ்கந்தத்தில் 13வது அத்யாயம் 42 ஸ்லோகங்கள் கொண்டது. கொஞ்சம் புரிந்துகொள்வது கஷ்டம் தான். கிருஷ்ணன் வாக்கு என்றால் சும்மாவா. நாம் பேசுவது போலவா? இருந்தாலும் மெதுவாக படித்து புரிந்துகொண்டால் பயனளிக்கும். எத்தனையோ பக்தர்கள் பயனடைந் திருக்கி றார்களே.
No comments:
Post a Comment