ஸ்ரீமத் பாகவதம் -- நங்கநல்லூர் J K SIVAN -
11வது காண்டம்
14வது அத்யாயம் 45 ஸ்லோகங்கள்
14. கிருஷ்ணா உன்னை எப்படி த்யானம் செய்வது?
ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் வைகுந்தம் திரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை. கலி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. கிருஷ்ணன் தனது கடமைகளை துவாபர யுகத்தில் முடித்தாகி விட்டது. அவரைக் கடைசியாக சந்திப்ப து அவரது நண்பன், சிஷ்யன், உறவினனான ரிஷி உத்தவர். அவருக்கு கிருஷ்ணன் உபதேசங்கள் செய்வதைத் தான் உத்தவ கீதை என்கிறோம்.
''என்னருமை கிருஷ்ணா, வேதமறிந்த ரிஷிகள் மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு அவன் பின் பற்ற பல வழிகள் சொல்கிறார்கள். அவை எல்லாமே முக்கியமானதா, அல்லது அவற்றில் ஒரு சில மட்டும் அத்யாவசியமானதா? நீ சொல்வதைப் புரிந்துகொண்டால் பக்தி யோக மார்க்கம் அவற்றில் எல்லாம் சிறந்தது. உன் மேல் மனதை நிலை நிறுத்தினால் ஆசா பாசங்கள் பந்தங்கள் எல்லாம் அறுந்து விடும் என்று சொன்னாய். ஒரு பக்தன் பூரண பக்தியோடு உன்னை தொழு பவன், உலகத்தின் மாயா பாசங்களிலிருந்து மனதை விடுவித்து உன்மேல் மனம் சாஸ்வ தமாக நிலை நாட்டமுடியும் என்று சொல்கிறாயா?'
''ஆமாம், உத்தவா, வேத தர்ம ஸ்தாபனம் அது. பிரளயத்தின் போது மறைந்து மீண்டும் புதிதாக ஸ்ருஷ்டி தோன்றும்போது என்னிலி ருந்து உருவாகும் என்று பிரம்மனிடம் சொல்லி இருக்கிறேனே''. அப்படி தோன்றும் வேதமே நான் தான்.'' ப்ரம்மா இதை ஸ்வயம்பு மனுவுக்கு அறிவித்து, ப்ருகு முதலான சப்த ரிஷிகளுக்கும் தெரிந்தது.
ஸ்ரிஷ்டியிலும் எண்ணற்ற ஜீவன்கள் தோன்றி ன. ராக்ஷஸ, கந்தர்வ, கின்னர, நாக, வித்யாதர, கிம்புருஷ, மானுட வர்க்கங்கள் வித்யாசமான குணங்களோடு உருவாகியது.உருவத்தைப் போலவே, விருப்பங்கள், ஜீவன்களின் தேடல்கள் மாறுபட்டன . வாழ்க்கை முறை, பழக்கங்கள், வேத முறைகள், நம்பிக்கைகள் வேறு பட்டன. மொத்தத்தில் மாயையின் பலவித பரிமாணங் கள். மாயையில் மயங்கி ஒவ்வொருவரும் தனக்கு தோன்றிய வழியில் மக்களுக்கு எது நல்லது கேட்டது என்ற நம்பிக்கையில் வேறு படுகி றார்கள். இப்படித்தான் யம நியமங்கள் ஒவ்வொன்றும் பலவாக மாறுகிறது. அவர்கள் பின்பற்றும் ஒவ்வொரு வழியும் வெவ்வேறு பாதைகள். உலக வாழ்வில் கிடைக்கும் அநித்ய சுகத்தில், பலனில் திருப்தி அடைபவர்கள்.
இதில் ஒரு சிலர்மட்டும், என் மீது பற்று கொண்டு, சரணடைந்து உலக வாழ்வியலின் இன்ப துன்பங்களில் இருந்து விடுபட்டவர்கள். ஆத்ம ஞானத்தில் உண்மை பொய்யிலிருந்து வேறுபடுத்தி உணர்ந்தவர்கள்.
உத்தவா, என்னைப் பற்றிக்கொண்டு புலன்வழி ஆசா பாச ஈர்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் ஈடுபடும் பக்தர்கள் பெறும் இன்பத்தை மாயையில் மயங்கியவர்கள் பெற இயலாது. என்னில் லயித்த ஜீவன் வேறெதிலும் விருப்பம் கொள்ளாது. வள்ளுவர் எழுதிய சின்ன குறள் ''பற்றுக பற்றற்றான் பற்றினை பற்றுக அப்பற்றை பற்றுக பற்று விடற்கு '' இதற்கு மேல் என்ன அர்த்தம் தேவை?
சகல லோகங்களும் என்னுள்ளே உள்ளவை. என் பக்தர்களை நான் விடாமல் அவர்கள் காலடியை த் தொடர்ந்து பின் செல்கிறேன். அவர்கள் அமைதி உருவானவர்கள், பற்றற்றவர்கள். உணர்ச்சிகள், உணர்வுகளுக்கு அப்பாற்பட் டவர்கள். அவர்கள் தயை, இரக்கம், கருணை உள்ளம் படைத்தவர்கள், லோக க்ஷேமத் தில் உண்மையில் அக்கறை கொண்டவர்கள். என்னிலிருந்து பிரிக்க முடியாதவர்கள்.
உத்தவா, கொழுந்து விட்டு எரியும் உலர்ந்த மரம் சாம்பலாவது போல, என்னை சரணடைந்த பக்தனின் ஆசா பாசங்கள், உலக ஈர்ப்புகள், மாயையின் பிடிப்பு எல்லாம் சாம்பலாகி விடும்.எனக்கு என்மீது பூரண பரிசுத்த பக்தி கொண்ட உள்ளம் போதும், வேத ஞானம், விரதம், உபவாசம் படிப்புக்கு அங்கே அவசியமில்லை. இப்படிப்பட்ட பக்தர்கள் தான் என்னைக் கட்டுப் படுத்துகிறார்கள். என் மேல் பக்தியற்றவனின் எந்த தர்மமும், தானமும், அறிவும், ஞானமும், ஆத்ம ஞானத்தை, என்னை அவனுக்கு தெரிவிக் காது தெளிவிக்காது .
உத்தவா, பக்தி மேலீட்டால், மயிர்க் கூச்செரி யாதவன் மனம் எப்படி உருகும்? உள்ளம் உருகுதையா என்று பாடுகிறோம், உள்ளம் உருகா மல் கண்ணில் எப்படி ஆனந்தக் கண்ணீர் வரும்? ஆத்ம சந்தோஷத்தில் அழாதவன் எப்படி எனக்கு சேவை புரிய முடியும்? என்னை நினைத்து பக்தி உணர்வில் குரல் எழும்பாமல் மனம் உருகாமல், மாலை மாலையாக ஆனந்தக் கண்ணீர் பெருகாமல் தனை மறந்து உலகை மறந்து சிரிக்காமல், பாடாமல், ஆடாமல், பக்தி எப்படி பரிமளிக்கும்?
வெளியுலக ஈர்ப்புகளில் அடையும் சந்தோஷத் தில் மயங்கும் ஒருவனின் சுகம், தூக்கத்தில் கனவில் காணும் சுகம். விழிப்பு நிலை அடைந் தது எல்லாம் மறைந்து போகும், பறந்து போகும். அது போல் சுகம் அல்ல என் மேல் பற்றுக் கொண்டவன் பெறும் சுகம். நிலையானது.
''கிருஷ்ணா, உன்னை எப்படி எந்த வழியில் தியானம் செய்வது? தியானம் எப்படி இருக்க வேண்டும். எதன் மேல் மனம் பொருந்தி இருக்க வேண்டும் தியானத்தின் போது ?அதைக் கொஞ்சம் சொல்?''
''உத்தவா, ரொம்ப சுலப வழி சொல்கிறேன் கேள்.
சமமான தரையில் உயரமில்லாத ஒரு ஆசனத்தில், மடியில் உள்ளங்கையை விரித்து வைத்து, நேர்க்கோடு போல் நிமிர்ந்து உட்கார் ந்து, மூக்கு நுனி மேல் பார்வையை விடாமல் செலுத்து. உள்மூச்சு, ப்ராணனை நிதானமாக படிப்படியாக உள்ளே இழுத்து, உள்ளே சற்று நிறுத்தி, மெதுவாக வெளியேற்று. இது தான் பிராணாயாம, பூரகம், கும்பகம், ரேசகம். மூலாதார சக்கரத்திலிருந்து பிராணன் மேலெழும்பும். தாமரைத் தண்டை சுற்றும் மெல்லிய கொடிபோல் ஹ்ருதயத்தை அடையும், ''ஓம்''என்ற த்யான சப்தம் கணீரென்று ஆலய மணி போல் உள்ளே கேட்கும். சூரிய உதயத்துக்கு முன், சூரியன் உச்சியில் இருக்கும்போது, சூரிய அஸ்தமன காலத்தில் இப்படி மூன்று முறை தினமும் தியானத்தில் பிராணாயாமத்தில் ஈடுபடவேண்டும். ஒரே மாச காலத்தில் பிராணன் வசப்பட்டு விடும்.
கண்கள் பாதி மூடிய நிலையில், முகத்தை உயர்த்தி, ஹ்ருதயத்தில் உள்ள தாமரை மேல் கவனம் செலுத்தவேண்டும். ஹ்ருதய கமலம் அது தான். தாமரை மலர் எட்டு இதழ்கள் அஷ்டதளம், விரிந்து மேலே கொடியோடு சுழன்று எழும்பும். இந்த இதழ்களில் மனம் செலுத்தினால் சூரிய சந்திரன், அக்னி காணப்படும். அந்த அக்னி ஜ்வாலைக்குள் என் உருவம் தோன்றும். தியானம் அதன் மேல் ஆணி அடித்தது போல் செலுத்தவேண்டும். நான் மகரகுண்டலதாரியாக , சதுர்புஜங்கள், சங்கு சக்ர கதாபாணியாக புன்னகை நிரம்ப காட்சி தருவேன். என் பீதாம்பர வஸ்திரத்தின் மேல் தியானம் செய்யலாம். என் மார்பில் உறையும் லக்ஷ்மியோ, சங்கு சக்ர, கதாயுதமோ, வன மாலையோ எதன் மீது வேண்டுமானாலும் மனம் நிலைக்கட்டும். .
இவற்றிலிருந்து எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு மனம் கடைசியில் என் முகத்தில், ஸ்ரீமன் நாராயணனின் முகமண்டலத்தின் மேல் உறையட்டும் . பிறகு ஆகாசத்தில் மேல் கவனம் செலுத்தவேண்டும். அங்கும் எங்கும் நான் தெரி வேன். அந்த நிலையில் தியானம் தேவையில்லை. இவ்வாறு தன்னுள் என்னை அறிபவன் தான் ஞானி,யோகி.அவன் வேறு நான் வேறு அல்ல.
உத்தவா, இப்படிப்பட்ட பக்தன், ஞானி தான் சூரியனின் கதிர்களில் நாம் சூரியனைக் காண்பது போல் எல்லா உயிர்களிலும் என்னைக் காண்பவன்.
இது ஸ்ரீமத் பாகவத, 11வது ஸ்கந்த 14வது அத்யாய 45 ஸ்லோகங்களின் ஸாராம்சம் , ஸ்ரீ கிருஷ்ணர், உத்தவருக்கு உபதேசித்த உத்தவ கீதை.
தொடரும்
No comments:
Post a Comment