Sunday, July 18, 2021

JAYADEVAR

 ஜெயதேவர் நங்கநல்லூர் J K SIVAN

கீத கோவிந்தம்

ஜெயதேவர்  அற்புதமான  ஸம்ஸ்க்ரித விற்பன்னர்.   இணையற்ற  கிருஷ்ண பக்தர். அவர் பாடல்களுக்கு பூரி ஜெகன்னாதனே ஒரு விசிறி.  அவர்  கீத கோவிந்தத்தில் 19வது அஷ்டபதியை   எழுதும்போது  அதில் சில வரிகளை வேண்டாம் என்று நீக்கியபோது   ஜெகந்நாதன்  என்ன செய்தான்?  ஜெயதேவராக அவனே உருவெடுத்து அவர் வீட்டுக்கு சென்று அவர் எழுதிய பாடல் தாங்கிய பனை ஓலையை கேட்டு வாங்கி அதில் அவர் நீக்கிய வரிகளை மீண்டும் எழுதியவன். இதை ஏற்கனவே பதிவிட்டிருந்தேனே.

ஜெயதேவர் என்கிற பெயரை விட அஷ்டபதி அதிக பிரபலமானது. ராதா கல்யாண பஜனையில்  அது உயிர்நாடி.  பல  வித்வான்கள் பல வித ராகங்களில் கற்பனையுடன் செவிக்கு விருந்தாக ராதா கல்யாண மஹோத்சவங்களிலும்  சங்கீத  நிகழ்ச்சிகளிலும்  ஜனரஞ்சக மாக பாடுகிறார் கள்.  அதில் பக்தி பாவம் இருந்தால் தான்  இசை ரசிக்கும்.    சினிமாக்களும் தமது பங்குக்கு சில அஷ்டபதிகளை நல்ல மெட்டுக்களில் அமைத்து நடுவே சேர்த்துக் கொள்கிறது. காசு பார்க்கிறது.

ஜெயதேவர் வாழ்வில் மூச்சாக விட்டது ராதா கிருஷ்ணன் பெயர்களை தான். ராதை, கிருஷ்ணன், ராதையின் ஒரு தோழி, (சகி,) அப்புறம் மறைவாக ஜெயதேவர்  இது நிரம்பியது தான்  பிருந்தாவனத்தில் உருவான  கீத  கோவிந்தம்..பிருந்தாவனத்தில் நடந்ததை அப்படியே ஒவ்வொரு ஓவராக கிரிக்கெட் விளையாட்டு ரன்னிங் கமென்டரி மாதிரி ஜெயதேவர் ராதா கிருஷ்ணன் சகி ,  சந்திப்பு, பேச்சு, அவர்களது உணர்வுகள் ஆகியவற்றை கீத கோவிந்தம் (அஷ்டபதி) பாடல்களில் கண்ணெதிரே கொண்டுவருகிறார்

கண்ணனை, ராதையைப் பார்க்காதவர்கள், அறியாதவர்கள், உணராதவர்கள், ஜெயதேவரின் கீத் கோவிந்தம் அஷ்டபதி பாடல்களை படிக்கலாம், கேட்கலாம், ரசிக்கலாம் உணரலாம். கீத கோவிந்தத்தை அப்படி ரசிக்கும்போது நான் சென்னையில் வெயிலில் உட்கார்ந்திருந்தாலும், அமெரிக்காவில் இருந்தாலும், குளிர்ந்த பிருந்தாவன சோலைகளுக்குள் கிருஷ்ணனோடு நாமும் இருப்பது நிச்சயம். காரண்டீ. ஒரே ஒரு எச்சரிக்கை. கண்டிஷன். ராதா-- கிருஷ்ணன் ப்ரேமையை மனிதனின் காதலாக, மிருக இச்சையாக நினைத்து ருசிக்க வேண்டாம். அது கீழ்த்தர மனித உணர்வு. தெய்வங்களுக்கு தெரியாதது.

மூடிய  கண் இமைக்குள்  கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பதை செவி குளிர கேட்டவர் ஜெயதேவர்.  அவனது  ஆனந்த  நேரம்  ப்ருந்தாவனத்தில்  ராதையோடு  ஓடி ஆடி விளையாடும்போது.  இதை நேரில் ஞானக்கண்ணால் கண்டு ரசித்தவர்  ஜெயதேவர்.  அவர் கண்ட காட்சிகளைப்பாட  அவர் மனைவி பத்மாவதி  நாட்யராணி  ஆட,   பிறந்தது கீதகோவிந்தம். 24 பாடல்கள்  ஒவ்வொன்றும்    எட்டு அடிகள்.   அடி  என்றால் பாதம்.  பதம். எப்படி வேண்டுமானாலும் சொல்கிறோம்.   ஒவ்வொரு பாடலும்  எட்டு பாதங்களை கொண்டது  அஷ்டபதி.    பகவானுக்கு செய்யும்  ஷோடச  உப சாரத்தில்   நாட்யம் 
 கீதமும் உண்டே.  பிருந்தாவனம் கிருஷ்ணனின் அந்தரங்கமான  ஆநந்த  பீடம்.  பிரேம  தத்துவம் நிறைந்தது. 
 பகவான் நாத வடிவினன். நாதம் காற்றுடன் கலப்பதே நாட்டியக் கலை.

நாத வடிவம் பரமாத்மா. ஒலிக்கு அனுகூலமான காற்று வடிவமானவள் பராசக்தி. இந்த தத்துவமே ராதாகிருஷ்ண ஸ்வரூபமாகத் தோன்றி பக்தரின் உள்ளம் பக்குவமாவதற்காகப் பல லீலைகளக் செய்தது. லீலைகள் பொதுவாக எல்லோர் உள்ளத்தையும் கவரும். அதனுள் பதிந்து கிடக்கும் பரதத்வம் உத்தம பக்தரான ஒரு சிலர் உள்ளத்தையே கவரும். அத்தகையவரே  பரமஏகாங்கி , ஜீவன் முக்தர்.   உதாரணம்  வேதவ்யாஸர். அவர் 18 புராணங்களின் மூலமாகப் பற்பல அரிய பெரிய தத்துவங்களை  நமக்கு அளித்தவர். 

அவைகளில் பத்தாவது  ப்ரம்ம வைவர்த்தம்.    அதில்  ஸ்ரீராதா கிருஷ்ண சரித்ரம்  சொல்கிறார். . அதன்  வியாக்கியானம் எனும் விரிவுரை  கர்க்க ஸம்ஹிதை.   மஹா பாரத  பாகவதத்தில் இது ம் ரஸமாகவும் தத்வார்த்தத்துடனும் விளக்கப்பட்டுள்ளது.  இவ்விரு நூல்களையும் ப்ரமாணமாகக் கொண்டே ஜெயதேவரின்   கீத கோவிந்த  அஷ்டபதிகள்  அமைந்துள்ளது. 

கோலோகத்தில்   கிருஷ்ணன் விரஜா என்ற மனைவியுடன் ரமித்துக் கொண்டிருந்தார். அதையறிந்த ராதை   ரொம்ப  கோபத்துடன் வந்தாள். க்ருஷ்ணன் விரஜையை நதியாக மாறும்படி கூறி தானும் மறைந்துவிட்டார்.      இந்த   பிடிக்கிற விளையாட்டில்   ராதா ஏமாந்து வருத்தத்தோடு வீடு செல்கிறாள்.   வழியில்   ராதையை தேடி அலைபவர் போல்  நடிக்கும் கிருஷ்ணன்  ’ராதே ராதே’ எனக்கூறி எதிரே வந்தார் அவர். ராதை கோபங்கொண்டு பேசாமல் போக, கிருஷ்ணன் அவளைச் சமாதானப்படுத்தினார். அவள் கடுங்கோபத்துடன் செல்ல, ’ராதே, கோபம் வேண்டாம். உன்னைப் பணிகிறேன். இனி உன்னை விட்டு அன்னியரிடம் பேசக்கூட மாட்டேன் என்று  வாக்களித்தும்  ராதை  திரும்பிப் பார்க்கவே இல்லை. 

இதை ஒரு கிருஷ்ண பக்தர் ஸுதாமா  பார்த்தபோது  என்ன  என் கிருஷ்ணனையா  நீ உதாசீனப்படுத்துகிறாய்?  என்று ராதை மேல்  கோபம்  கொண்டார். கிரு
ஷ்ணன் மறுபடியும் விரஜையோடு   விளையாடச் சென்றபோது  கிருஷ்ணன்  பிரிவை ஸஹிக்காமல் ஒரு தோழியை அனுப்பித் தன்னை மன்னித்து தன்னிருப்பிடம் வரும்படி சொல்லி அனுப்பினாள் ராதை. 

கிருஷ்ணன் ராதையின்   பிரிவால்  எழுந்து நடக்க சக்தி இல்லாமல் தவிப்பதாகவும் உடனே ராதையையே  அங்கு அழைத்து வரும்படியும் அவளிடமே சேதி  கூறினார். வேறு வழியில்லாமல் பகவானிருப்பிடம் வந்தாள் ராதை.

முன்பு அவளிடமே கோபங்கொண்ட ஸுதாமா  இப்போது ராதாவை பார்த்ததும் சும்மா இருப்பாரா?   நீ கிருஷ்ணனை சந்திக்க விடமாட்டேன்  என  உள்ளே விடாமல் தடுத்தார். 


ராதை சுதாமாவை  ''நீ ஒரு ராக்ஷசனாக கடவது'' என  சபித்தாள்.  

''என்னையா சபிக்கிறாய்?  . இனிமேல் நீ  கிருஷ்ணனை பார்க்கவே முடியாமல் போகட்டும் ''.  பதில் சாபம் கொடுத்தார் ஸுதாமா .

விளையாட்டு விபரீதமாகி விடவே, கிருஷ்ணன் வெளியே வந்து  இருவரையும் சமாதானப் படுத்தினார். ஸுதாமாவை சங்கசூடனாக பிறந்து சிவனால் கொல்லப்பட்டு கோலோகம் வரும்படி கூறினார். ராதையை  பூலோகத்தில்  வ்ருஷபானு என்பவரின் பெண்ணாகப் பிறந்து, அங்கிருக்கும் படியும் தாம் வஸுதேவனிடம் பிறந்து நந்தன் வீட்டில் வளரும் போது ராதையை மணந்து சிலகாலம் அவனியில் தங்கி பிறகு இருவரும் கோலோகம் செல்லலாம் என்றும் கூறினார்.

இந்த பின்னணியில் தான்  கீத கோவிந்தம். பலகாலம்  கிருஷ்ணனை பிரிந்த ராதையின் தேடல்..அதேபோல் ராதையைப் பிரிந்த கிருஷ்ணனின் ஏக்கம். 24 அஷ்டபதிக்குள் இந்த உணர்வுகள் ஒளிந்துள்ளதை அறியவேண்டும். வெறும் காமப்பாடல்களாக  அணுகக்கூடாது.

பூலோகத்தில் பிருந்தாவனத்தை கோலோகமாக்கி  நடந்த விஷயம்.  வேதமாதா காயத்ரீ எனும் மந்த்ரம்  இருபத்துநான்கு அக்ஷரமுள்ளது. ஒரு எழுத்திற்கு ஆயிரம் ச்லோகமாக வால்மீகி ஸ்ரீராமசரிதத்தை    24 X 1000   :   24000   ஸ்லோக ஸ்ரீராமாயணமாக இயற்றினார். ஸ்ரீத்யாகராஜஸ்வாமிகள் 24  X 1000 : 24000  கீர்த்தனமாக எழுதினார்.  ஜெயதேவர்  24 X 8 அடிகள் கொண்ட  24 அஷ்டபதிகளாக  தருகிறார். கோவிந்தனைப் பற்றிய கீதமானதால் கீத கோவிந்தம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...