பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
49. பரசுராம க்ஷேத்ர விஜயம்
நாம் இப்போது 1927ம் வருஷத்தில் இருக்கிறோம். --84 வருஷங்களுக்கு முன்பு, -- ஏப்ரல் மாதம் 26ம் தேதி பின்னோக்கி செள்கிறோம். இதோ அங்கே யார் போகிறார் தெரிகிறதா?
மேட்டூர் அணைக்கட்டு கட்ட ஆரம்பிக்கும் முன் காடும், மலையுமான அந்த பிரதேசத்தை பார்த்துவிட்டு மைசூரிலிருந்து தமிழகத்திற்குள் புகும் காவிரியின் முகத்வாரத்தை
தரிசித்துவிட்டு மலைகள் பள்ளத்தாக்குகளைக் கடந்து மஹா பெரியவா திரும்பி வந்து அனைவருக்கும் அருளாசி வழங்கிவிட்டு சூளூர் வழியாக கோயம்பத்தூர் வந்துவிட்டார்.
அங்கே இருக்கும் சிருங்கேரி சங்கர மடத்தில் அவர் தங்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.
உள்ளூர் பிரமுகர்கள், வெள்ளைகார அரசாங்க அதிகாரிகள், வக்கீல்கள், ஜட்ஜ்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அனைத்து பக்தர்களும் ஆவலோடு தரிசனத்துக்கு காத்திருக்கிறார்கள்.
காலையில் 7 மணிக்கு ஆரம்பித்த சிறப்பு நகர் ஊர்வலம் மதியம் வரை நீடித்தது. மஹா பெரியவா சந்த்ரமௌளீஸ்வரர் பூஜை அபிஷேகம் எல்லாம் முடித்து அனைவருக்கும் பிரசாதம், தீர்த்தம் வழங்கினார்.
மஹா பெரியவா பேசுவதைக் கேட்க அனைவருக்கும் ஆர்வம். அவருக்கென்று ஒரு தனி பாணி உண்டு. அற்புதமாக ஆழ்ந்த கருத்துக்களை சொல்வார். சுருக்கமாக தெளிவாக பேசுவார். தேனொழுகும். மணிக்கணக்காக அன்று ''சிவ விஷ்ணு அபேதம் ', ''தமக்குள் வித்யாசமற்ற சிவனும் விஷ்ணுவும்'' என்ற தலைப்பு. ப்ரவாஹமாக ஒரு நீண்ட பிரசங்கம்.
ஆறுமாதமாக கோயம்பத்தூரில் அப்போது மழையைக் காணோம். என்ன ஆச்சர்யம், மஹா பெரியவா வந்து தங்கியிருந்த நான்கு நாட்களும் வருணன் கண்ணைத் திறந்து வர்ஷித்தான். கோயம்பத்தூர் பூமி மக்கள் உள்ளத்தைப்போல் குளிர்ந்திருந்தது.
கோயம்பத்தூரிலிருந்து பாலக்காடு கொஞ்ச தூரம் தான். 1927ம் வருஷம் மே மாதம் 2ம் தேதி பாலக்காடு வந்துவிட்ட மஹா பெரியவா அங்கே உள்ள 18 அக்ரஹாரங்களுக்கும் சென்றார். அங்கே ஒரு மாத காலம் தங்கினார்.
பாலக்காடு அக்ரஹாரங்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டு மேலே நகர்வோம்.
பொதுவாக எங்கும் ஆல அரசமரங்கள் நிறைந்தது. வரிசையான சின்ன சின்ன ஓட்டுவீடுகள். ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் தெரு முனையில் ரெண்டு பக்கமும் ஒவ்வொரு கோவில், சிவனுக்கு ஒன்று பெருமாளுக்கு ஒன்று, நடுவில் பிள்ளையார். விடிகாலையில் எழுந்து விடும் மக்கள். குளித்து நெற்றிக்கிட்டுக் கொண்டு சட்டையில்லாமல் கோவில் செல்லும் பழக்கம் உள்ளவர்கள். தண்ணீர் தெளித்து ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பெரிய மாக்கோலங்கள். விடிகாலையில் கோவில்களி லிருந்து நாதஸ்வர தவில் ஓசை கேட்கும். அமைதியான காலை வேளையில் குளிர்ந்த காற்றோடு இந்த பக்தி கீதம் மனதை மயக்கும்.
இது எல்லா அக்ராஹாரங்களிலும் பொதுவான ஒரு அம்சம். கல்பாத்தி, ராமநாதபுரம் லக்ஷ்மிநாராயண புறம், குமாரபுரம், சேகரிபுரம், அம்பிகாபுரம், சொக்கநாதபுரம், நூரணி, தரக்காடு என்று பல அக்ராஹாரங்கள். பெரும்பாலும் ப்ராமணர்கள் நிரம்பிய காலனிகள். ''அகரோ ஹாரஸ்ச ஹரிஸ்சா '' அதாவது ரெண்டு பக்கமும் கோவில் கொண்ட ஒரு ஹாரம் மாதிரி அமைப்பு என்ற பொருளில் தான் அக்ராஹாரம் என்று பெயர் வந்தது. வீடுகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி யானவை. திண்ணை உள்ளவை. பெரிய தாழ்ப்பாள்கள். கனமான மர வாசல்படிகள். பாலக்காட்டில் ஒரு காலத்தில் சின்னதும் பெரிதுமாக நூறு அக்ரஹாரங்கள் இருந்தன. பாலக்காடு தமிழ் கேட்க இனிமையாக இருக்கும்.
இங்கு ஓடும் பாரதப் புழா எனும் நதி கங்கைக்கு சமமானது. ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் கோவில் தேர் இருந்தது.
பிரபல சங்கீத வித்வான்கள் சிலர் பாலக்காடு பிராமணர்கள். பாலக்காடு மணி ஐயர் , M D ராமநாதன், கல்பாத்தி ராமநாதன், செம்பை வைத்யநாத பாகவதர், பாலக்காடு ரகு, சுப்பையர், ராம பாகவதர் போன்றவர்கள் ஒரு உதாரணம். அக்ரஹாரங்களில் சாஸ்திரங்கள் , சம்பிரதா யங்கள் விடாமல் பின்பற்றப்பட்டு வந்தது ஒரு காலம். மொத்தத்தில் இன்றும் பக்தி மிக்கவர்கள். விழாக்கள் திருநாட்களை விமரிசையாக கொண்டாடுபவர்கள்.
இத்தகைய பக்தி மிக்க அக்ரஹார மக்களுக்கு தரிசனம் ஆசி தந்தபின் மஹா பெரியவா அருகே இருந்த மலையாள கிராமங்களுக்கு சென்றார்.
பாலக்காட்டு அக்ரஹாரங்கள் விஜயத்தின் போது மஹா பெரியவா, அவரோடு வந்த மடத்து பணியாளர்கள், தொண்டர்கள், பக்தர்கள் அனைவருக்கும் தேவையான சகல வசதிகளை யும் திருப்தியாக செய்து தந்தவர் டாக்டர் சங்கரநாராயண ஐயர்.
கோழங்கோடு ராஜா மஹா பெரியவாளை அவருடைய சமஸ்தானத்துக்கு வருகை தர அழைப்பு விடுத்திருந்தார். அங்கே மஹா பெரியவா மூன்று நாட்கள் தங்கினார் . எங்கு மஹா பெரியவா காலடி பட்டாலும் அங்கே கோலாகலமாக கல்யாண கோலம் தான். தோரணம், மலர்மாலைகள், பந்தல்கள், வாத்யகோஷம், வேத கோஷம், அடேயப்பா அந்த ஊர் மக்களுக்கு தான் எவ்வளவு சந்தோஷம். மஹாபெரியவா மலையாளம் பேசுவார் என்று அவர்களுக்குத் தெரியாது.
நம்மைப் போல் இவரும் ஒரு மலையாளியோ என்று எண்ண வைத்துவிட்டார்.
அந்த வருஷம் வியாசபூஜை, கஞ்சிக்கோடு என்கிற ஊரில் பாலக்காடு அருகில், நடைபெற்றது. மஹா பெரியவா ரெண்டு மாச காலம் அங்கே இருந்தார். கேரளாவில் பரலி என்று ஒரு வழிபாட்டு ஸ்தலம் உள்ளது. அந்த ஊர் மக்களுக்கு கேரள க்ஷேத்ரம் தோன்றிய அற்புதத்தை, ஸ்தல புராண மாக எடுத்துரைத்தார்.
மலையாள தேசம் பரசுராம க்ஷேத்திரம் என்று பெயர் பெற்றது. விஷ்ணு அவதாரம் பரசுராமரால் உண்டாக்கப்பட்டது. அவர் சாபம் பெற்றது. ராமர் வனவாசத்தின்போது சீதையை தேடி இலங்கை செல்லு முன் இந்த கேரள எல்லைக்குள் வருகிறார்.
அங்கே வாளையாறு என்கிற ஏரிக்கு செல்லும் ஒரு சிறு நதி ஜிலுஜிலுவென்று ஓடுவதைப் பார்த்ததும் நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பைப் போக்க ராமர் நதியில் இறங்கி ஸ்னானம் செய்கிறார். அவருக்கு ஏனோ பரசுராமர் இட்ட சாபம் பற்றி கவனம் இல்லை போல இருக்கிறது. ஆகவே நதியைக் கடந்து சென்றார். லக்ஷ்மணன் தயங்கினான்.
என்ன லக்ஷ்மணா என்ன தயக்கம் உனக்கு ? எப்போதும் என் நிழல் மாதிரி வருபவன் நீ . என்று கேட்ட ராமருக்கு
''அண்ணா , பரசுராமர் இட்ட சாபம் நினைவில் லையா?'' என்றான் லக்ஷ்மணன்.
ராமருக்கு ஞாபகம் வந்தது. ராமர் க்ஷத்திரியன். பரசுராமன் க்ஷத்ரியர்களை பூண்டோடு அழிக்க சபைத்தமிட்டவர். ஆனால் தான் தான் பரசுராமர் என்று ராமராக வந்த நாராயணன் நினைவூட்டி அவரது ஆணவத்தை அடக்கினார். பரசுராமன் வில்லை முறித்து அனுப்பினார்.
கங்கையில் ஸ்னானம் செய்தால் இந்த சாபத்தின் விளைவு போகும் . கங்கைக்கு பதினாலு வருஷ வனவாசம் முடிந்த பின் தானே போகமுடியும்?
ராமன் ஒரு அம்பை எடுத்து மந்திரம் ஜபித்து பூமியில் அம்பை விடுவித்தான். பூமியைப் பிளந்து சென்றது அம்பு. அங்கிருந்து பாதாள கங்கை மேலே எழும்பி ஓடிவந்தாள். அந்த புண்ய நீரில் ராம லக்ஷ்மணர்கள் ஸ்நானம் செய்தார்கள்.
மஹா பெரியவாளுக்கு இந்த சம்பவம் ஞாபகத்தில் இருந்ததால், அந்த சிறு நீரோடையில் ஸ்நானம் செய்தார்.
அதென்ன பரசுராமன் சாபம்? தெரிந்து கொள்ளவேண்டாமா?
கன்னியாகுமரியிலிருந்து கோபமாக பரசுராமன் தனது கோடாலியை வீசி கடலில் எறிந்தான். ஒரு பசுமை நிறைந்த வளமான நிலப்பரப்பு கடலிலிருந்து மேலே வந்து பரசுராமன் நின்றிருந்த இடம் வரை வளர்ந்தது. அது தான் கேரளம் எனும் பரசுராம க்ஷேத்ரம்.
மஹாபலி சக்கரவர்த்தி மூவுலகும் ஆண்ட காலம். க்ஷத்ரியர்களை பூண்டோடு அழிக்க சபதமிட்ட பரசுராமன் தென்னோக்கி வந்தான். பரசுராமன் தாய் தந்தையரை இழந்தபின் இங்கே வந்தவன் 12 வருஷங்கள் தவமிருந்தான். யாக யஞம் பண்ண பிராமணர்கள் இல்லையே என்று எங்கிருந்தோவெல்லாம் இங்கே குடி பெயரவைத்தான். கடலில் பிறந்த மேலே சொன்ன புது நிலப்பரப்பை பிராமணர்களுக்கு தானமாக அளித்தான். கேரள பிராமணர்களில் நம்பூதிரிகள் பரசுராமனை பின் தொடர்ந்தவர் களின் வம்சம் என்று பார்கவ ஸ்ம்ரிதி நூல் சொல்கிறது. இதை சுருக்கி சங்கர ஸ்ம்ரிதி என்று ஆதி சங்கரர் எழுதியுள்ளார் என்று அறிகிறோம். சங்கரர் நம்பூதிரி வகுப்பினர்.
திரிஸ்ஸுர் வடக்குநாத சுவாமி சிவன்கோவிலில் ஒரு மூலையில் பரசுராமர் அமர்ந்திருக் கிறார். பரசுராம எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக திருவனந்தபுரத்திலிருந்து மங்களூர் வரை இன்றும் ஓடுகிறது என்பதிலிருந்து கேரளம் பரசுராமனை இன்னும் மறக்கவில்லை என்று தெரிகிறது.
மஹா பெரியவா இந்த பரசுராம க்ஷேத்ரத்து க்கு விஜயம் செய்தது பலருக்கு தெரிந்து அவரை தரிசிக்க பலர் பல பாகங்களிலிருந்து கேரளா வுக்கு வந்தார்கள்.
தொடரும்
No comments:
Post a Comment