Tuesday, December 29, 2020

THIRUVEMBAVAI

 


திருவெம்பாவை  J K  SIVAN  





        14.  அருமை மணிவாசகரும் ஆவுடையாரும் 

14.   காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

திருவண்ணாமலையில் இன்று  கோலாகலம்.  அண்ணாமலையானை  தரிசிக்க திரள் திரளான பக்தர் கூட்டம்.  முதலில்  கூட்டத்தில் நிற்பவர்  மணி வாசகர்.  அவர் கண்களில் என்ன காட்சி தென்படுகிறது.  ஒரு சில  இளம்பெண்கள்  ஒன்று சேர்ந்து மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துக்கொண்டு  தூங்குபவர்களை எழுப்பி  ஒன்றாக  அண்ணாமலையான்  தரிசனத்துக்கு வருகிறார்கள்.

அவர்கள் பேசுவது அங்கு நடப்பது எல்லாம்  அவருக்கு ஸ்பஷ்டமாக  கேட்கிறது தெரிகிறது. அவர்மூலம் நாமும்  எத்தனையோ  நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததை இன்று  இப்போது நடப்பது போல்  அனுபவிக்கிறோம்.

எல்லா பெண்களும் அழகிய  பொன்னாலான தோடுகளை, குழைகளை  காதுகளில் அணிந்து பளிச் பளிச்சென்று  மினுக்க ஆடுகிறார்கள்.  பாடுகிறார்கள்.  தோடு அவனுக்கு  பிடிக்கும்.  அவன்  தோடுடைய செவியன் அல்லவா. பூமாலை அந்த பெண்கள்  கூந்தலில் இருந்து அசையவும் மாலையில் உள்ள  பூக்களின் தேனுக்காக  சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து அந்த பெண்கள்  பாடுவதை கேட்க எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.   வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு மனதில் குடிபுகும்  வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் போற்றுகிறார்கள்.  அவன் எப்படிப்பட்டவன்  நினைவிருக்கிறதா. 

 ''நான்  அசந்தால் அசையும்  அகிலமெல்லாமே''  ஞாபகம் வருகிறதா. ஞான மயன்,  ஜோதி மயன்,  கொன்றை மலர்  சூடியவன்.  கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் முன் தோன்றிய மூத்தவன்.  அசையாது  மோனத்தில்  தியானிக்கும்  தியாகச் செல்வனும் அவனே.  மானாட  மழுவாட,  சிவகாமியாட எல்லா அசைவுகளுக்கும்  காரணனும்  அவனே. அந்தச் சிவனே.  அவனை ஊக்குவிக்கும்  சக்தியை,  ஆட்டுவிக்கும்  அர்த்தநாரியை, ஓம்   என  ஒலிக்கும்  வளையலை  உடைய உமாதேவியின் திருவடியின் மேன்மையை, பெண்களே   பாடுங்கள். ஆடுங்கள்''.

ஆண்டவனுடைய மலர்ப்பாதம் தேவர்களால் துதிப்பதற்கு அடங்காமல் அவர்களுடைய வாயைக் கூசச் செய்கிறது. நாமாக முயன்று அந்தப் பாதத்தைப் பற்றிவிட முடியாது.   அவனருளால் தான்  அவன் தாளை வணங்க முடியும். அவன்  தேவதேவன்.  தெய்விக தேஜஸ் உடையவன். ஒளிச் சுடர். சிவலோக நாதன். அடியார்க்கு அடியான்.  சிதம்பரேசன்.  

மாணிக்க வாசகர் அநேக சிவாலயங்கள் சென்று பாடல்கள் பாடியவர். இருப்பினும் முக்கியமாக அவரோடு சம்பந்தப்பட்ட இரு ஆலயங்கள் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவிலும் சிதம்பரமும் என்று சொல்லலாம். இன்று ஆவுடையார் பற்றி சொல்கிறேன்.

ஆவுடையார் ஆலயத்தில் சிவன் பெயர் ஆத்ம நாதர். அம்பாள் யோகேஸ்வரி.  யோகாம்பாள். மூர்த்தி மாணிக்கவாசகர். இங்கு, சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம் போன்றவையாகும். காமதேனு வழிபட்ட மகிழமரம் தலவிருட்சம் .

மற்ற சிவாலயங்களில் இருப்பதை போல் இங்கே இராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம், நந்தி, கொடிமரம்  என்று  எதுவும்   கிடையாது. நாதசுரம், மேளம், பேரிகை, சுத்தமத்தளம் முதலிய வாத்தியங்கள் வாசிப்பதில்லை. இங்கு ஒலிப்பது திருச்சின்னம், சங்கு, மணி முதலியவற்றின் ஒலிகள் மட்டுமே..

ஆத்மநாதர் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர வடிவிலும், (தலவிருட்சமாக) உருவமாக மாணிக்க வாசகராகவும் காட்சி தரும்  க்ஷேத்ரம்.   குருந்தமரம்  தான்  இங்கே சிவன்.  மரத்தின் முன்பாக நூற்றியெட்டு சங்காபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறார். இதன்மீது ஒரு குவளை சார்த்தப்பட்டிருக்கிறது. குவளை உடலாகவும், குவளையினுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதால் “ஆத்மநாதர்” என்ற பெயர்.

ஆறு கால பூஜையின்போதும், இவருக்கு நூற்றியெட்டு மூலிகைகள் கலந்த தைல முழுக்கு நடப்பது மிகச் சிறப்பு. தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, இப்பதியில் பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அம்பாள் சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரகத் தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. சூரிய, சந்திர கிரகணங்களின்போது எல்லாக் கோயில்களிலும் பூஜை செய்யமாட்டர்கள். ஆனால், இந்த ஆவுடையார் கோயிலில் கிரகண நாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது.

ஆவுடையார் கோவிலில்தான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார். இங்குள்ள தேர் தமிழகத் திலுள்ள பெரிய தேர்ககளுள் ஒன்றாகும். திருவில்லிப்புத்தூர்,  திருநெல்வேலி, திருவாரூர் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் பெரிய தேர்கள்.  ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் ஐயாயிரம் பேர் கூடினால்தான் இழுக்க முடியும்,தேர்  திருவிழாவுக்கு  இதற்கென்றே  எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் கூட்டம்  திரண்டுவிடும் .

இங்கே உள்ள சிற்ப அதிசயங்கள்: டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், கற்சங்கிலிகள், சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள். ஆயிரத்தெட்டு சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள். பலநாட்டுக் குதிரையின் சிற்பங்கள். அனைத்து நட்சத்திர உருவச் சிற்பங்கள். நடனக்கலை முத்திரை பேதங்கள்.

சப்தஸ்வரக் கற்தூண்கள். கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுபவை.

 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...