ஒரு குட்டிக்கதை. J K SIVAN
எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு புயல். அரசியல் புயலைச் சொல்லவில்லை. நிஜ புயலை சொல்கிறேன்.
வருஷாவருஷம் நவம்பர் டிசம்பரில் ஒரு ஜலகண்டம். வெள்ளக்காட்டில் வெளியே செ ல்லமுடியாமல் கொரோனா ராக்ஷஸன் பிடியிலிருந்து வேறு தப்ப, வீடோடு கிடக்கும்போது குளிருக்கு சூடான பஜ்ஜி பக்கோடா போல் தான் விறுவிறுப்பான கதைகளும் பெரிதும் உதவி சுகத்தை அளிக்கும். பஜ்ஜி தரமுடியாததால் கதை மட்டும் விறுவிறுப்பாக தருகிறேன்.
ஒரு ராஜா தனது ஒரே ஆசை மகளுக்கு விலையுயர்ந்த நவரத்ன நெக்லஸ் தந்து அது திருடு போய்விட்டது. மகள் அழுகிறாள். '' திருடனைக் கண்டுபிடி, காக்காய் குருவி தூக்கிப்போயிருந்தாலும் பிடி. பரிசு ஐம்ப தாயிரம் பொற்காசு'' அறைகூவுகிறான் ராஜா.
குப்பன் ஒரு கூவம் ஆறு போல் சேறும் குப்பை, கூளம் , சகதியும், மனித கழிவும் நிரம்பிய நாற்றமெடுக்கும் நீர்நிலையில் பளபளவென்று ஏதோ மின்னுவதைக் கண்டான். ராஜா விளம்பரம் செய்த நெக்லஸ் தானோ. நாம் அதிர்ஷ்டசாலி. கஷ்டப்பட்டு நாற்றத்தை பொருத்துக்கொண்டு அதை தேடினான். கண்ணில் பட்டது கையில் கிடைக்கவில்லை. தண்ணீரில் இறங்கினான். பல முறை முழுதும் அந்த துர்கந்த சாக்கடையில் மூழ்கியும் அலசியும் எடுக்க முடியவில்லை. தோற்றுப்போய் வெளியே வருவான். சற்று நேரம் கழித்து ஆற்றில் அந்த நெக்லஸ் அவன் கண்ணுக்கு தெரியும். அவனை காந்த சக்தியாய் இழுக்கும். மீண்டும் அதை பார்த்துக்கொண்டே நீரில் இறங்கி தேடுவான். மறைந்து விடும். மனது நெக்லஸ் மீதே இருந்ததால் மீண்டும் சாக்கடைக்கு வந்தான். கஷ்டப்பட்டு நாற்றத்தை பொறுத்துக்கொண்டு பல மணி நேரம் அதில் மீண்டும் மூழ்கினான். நெக்லஸ் தெரிந்தது மறைந்தது. கையில் கிடைக்க வில்லை. வெளியே வந்தான். தலைமுதல் கால் வரை நாற்ற சாக்கடை. அழுதான்.
கதைகளில் வரும் ஒரு முனிவர் அந்தப்பக்கமாக வந்தார்.
''ஏனப்பா இதில் குளித்தாய். ஏன் அழுகிறாய்?''
குப்பனுக்கு தர்ம சங்கடம். சொன்னால் முனிவர் எடுத்துக்கொண்டு போய் ஐம்பதாயிரம் பரிசை ''லபக்கி''
விட்டால்?
திரும்ப திரும்ப அந்த முனிவர் கேட்டதால் கடைசியில் உண்மையை சொல்லிவிட்டான். முனிவர்
யோசித்தார். கடைசியில்
''அடேய் குப்பா, தண்ணீரில் பார்த்துக்கொண்டே தேடினாயே, மேலே பார்த்தாயா?
குப்பன் மேலே பார்த்தான். அந்த சாக்கடை ஆற்றுக்கு மேலே ஒரு மரக்கிளை. அதில் பளபளவென்று நெக்லஸ் தொங்கியது. அதன் நிழலைத்தான் குப்பன் சேரும் சகதியுமாக தண்ணீரில் தேடி இருக்கிறான்?
அப்புறம் எப்படி ராஜாவிடம் பரிசு பெற்றான்?, ராஜகுமாரியை மணந்தான்? ஐம்பதாயிரம் தான் பெற்றுக்கொண்டு ராஜகுமாரியை முனிவருக்கு தந்துவிட்டானா? அவ்வளவு கெட்டிக்காரனா? என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு கிடைக்காத பரிசு குப்பனுக்கோ முனிவனுக்கோ கிடைத்தால் எனக்கென்ன அக்கறை?
ஒரு உண்மை புலப்படுகிறது. உலக வாழ்க்கையின் இன்பங்கள் சுகங்கள் ஆன்மீக சுக பரவசத்தில் அன்பில் கிடைக்கும் நெக்லசின் பளபளப்பு போல் ஜிலுஜிலுத்தாலும் நாற்ற சாக்கடை துர்கந்தம் தான். அது வெறும் கானல் நீர், நிழல் தான். நிஜம் இன்பம் சுகம், யாருமறியாத மரக்கிளையில் தொங்கிய நெக்லஸ் போல் நமது உள்ளத்திலே இதயத்திலே இருக்கிறதே. குப்பன் மேலே பார்த்தது போல் நாம் உள்நோக்கி பார்ப்பது நல்ல பலன் அளிக்கும். ராஜகுமாரி வேண்டாம்.
No comments:
Post a Comment