Wednesday, December 9, 2020

BAGAVAN RAMANA

                                                                 

                             காலையில்  சற்று சிந்திக்க...   J K  SIVAN 

என்னமோ   இன்று  உங்களோட   ''அவனை''  பற்றி  பேச  ஒரு  எண்ணம்  வந்ததால்  இது  உங்கள்  கண்களில் இப்போது  படுகிறது.   உள்ளே   வெளியே  நடப்பது  தோன்றுவது எல்லாமே  அவன் செயல்,  அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மையென்றால்  இதுவும்   அவனுடைய திருவிளையாடல் என்றே  ஏற்றுக்  கொள்ளலாம்.

இது  ஏதோ  எனக்கு  ஏற்பட்ட  திடீர்  ஞானோதயம் இல்லை.  ஏற்கனவே  நிறைய   பேர்  சொல்லி,  படித்து,  கேட்ட  விஷயம்  தான்.  அதனால்  என்ன.  நாம்  தான்  அதன் படி நடப்பதே இல்லையே. எனவே  திரும்ப  திரும்ப  சொல்வதனால்  என்றாவது  ஒருநாள்  யாருக்காவது  ''உள்ளே'' போகாதா? ''உள்ளே   '  போகும்''   என்ற நம்பிக்கை நிச்சயம்  வீண் போகாது.
 
வாசலில்  ''துடப்பம் துடப்பம்''  என்று  படை படைக்கும்  வெயிலில்  இடுப்பில்  குழந்தையும்,  தலையில்  துடைப்ப கட்டும்,காலில்  செருப்பு இல்லாமல்  கத்திக்கொண்டே  போகிறாளே.   தினத்தந்தி படிக்கும் கண்கள் வாசலில் செல்லும் அவள் மேல் சென்றாலும்,  டிவி யில் எவனோ கத்துவதை ஒரு நிமிஷம் தவிர்த்து அவளை பார்த்தாலும்,   எல்லாருமா  அவள்  குரல் கேட்டு, நிலையைப் பார்த்து   உடனே ஒரு துடப்பம்
  வாங்குகிறார்கள்?.  யாருக்கு  துடப்பம்  தேவையோ  அவர்கள்  அவளை  நிறுத்தி  கூப்பிட்டு தேவையான  துடப்பம்  பொறுக்கி  எடுத்துக்கொண்டு,  எவ்வளவு   குறைந்த காசு  அவளுக்கு  கொடுக்க முடியுமோ  அதைக் கொடுத்து  பேரம்  பேசி  வாங்கிய  சந்தோஷம்  அடைகிறோம்.  பாவம்  ரெண்டு  ரூபாய்  அவளுக்கு  கேட்டதற்கு  மேல்  கொடுத்தால் தான் என்ன.?  சரவண பவனில்  ஒட்டிக்கு  ரெட்டியாக சந்தோஷத்தோடு  பில்  வைத்த  அட்டைக்குள்  கேட்டதற்கும்  மேலேயே  ரூபாய் நோட்டு வைப்பதில்லை ?  என்று  திருந்துவோம்?

உன்னுடைய  சுமை  எல்லாவற்றையும்  ஒட்டு மொத்தமாக  ''அவன்''  மேல்  போடு.   அனைத்தையும்  அவன்   தாங்குவான். உலகத்தையே சுமக்கும், ஏன்  பிரபஞ்சத்தையே   சுமக்கும்  அவனுக்கு  உண்டே.  .   

மதுரைக்கு   டிக்கெட் வாங்கி  மாடு சுமக்கும்  மூட்டையைக்  கொண்டு வந்துவிட்டாய்.  எப்படியோ  மூச்சைப் பிடித்து அதை வண்டிக்குள்ளும்  கொண்டு  தள்ளி விட்டாய்.  மதுரைக்கு  யார்  அதை  சுமந்தது.  நீயா.  ரயிலா?   அது போலவே உன்  சுமையை இறக்கிவிட்டால்  அவன்  தூக்கிக் கொண்டு வருவான்.

 ''இப்படிச் செய்ய வேண்டும், அதைச்செய்'' என்று  நீ  பிளான்  போட்டதெல்லாம்  நடப்பது  அவன்  முடிவு.  வண்டிக்குள் உட்கார்ந்தும்   ஏன்  தலையில்  பாரத்தை ஏற்றிக்கொள்கிறாய்?   உன்னையே  தூக்கிச்செல்லும்   அவன் உன்  பாரத்தையுமா  சுமக்க மாட்டான்?  

எல்லாம்  அவன்  செயல் என்று  நம்  முன்னோர் அதனால்  தான்  ''பாரத்தை அவன் மேல்  போடு''என்பார்கள்.
அப்படி,   எல்லாமே  நம்மால்  ஆவது ஒன்றுமே இல்லை. அவனன்றி ஓர்  அணுவும்  அசையாது  என்ற  பரிபூர்ண  நம்பிக்கை வந்துவிட்டால் தெளிவு  மனதில் பிறக்கும்.  உண்மை  விளங்கும்.   இது தான் சரணாகதி.
 
இப்படி சரணடைய ரெண்டுவிதமான  வழிகள் உண்டு.  ஒன்று,   ''நான்'' என்பது  தனியாக இயங்கும்  ஏதோ  ஒரு சக்தி இல்லை. அவனிடமிருந்தே வரும்  தூண்டுதல்,   அவனால் இயக்கப்படும் ஒரு வஸ்து  என்று புரிந்துகொண்டு கொஞ்சம்  கொஞ்சமாக  ''அன்பே சிவ'' மாக  இரண்டறக்கலந்துவிடுவது, மாறிவிடுவது. இது  எளிதல்ல.  எல்லார்க்கும்  முடிந்ததுமில்லை. மிகுந்த   பிரயாசை வேண்டும்.  மனம் பக்குவமடையவேண்டும்.  அது என்றோ?

மற்றொன்று,  சதா  சர்வகாலமும்  அவனால்  தானே  நானே  இயங்குகிறேன்.  என்னை  ஆட்டுவிப்பவன் அவனல்லவோ  என்று சிந்தையைத் தேக்கி  அவனைச்  சார்ந்திருப்பது.

அவனே   வழிகாட்டி.  என் முயற்சிகள்  அவன் அருளால்  வெற்றிபெறட்டும் என்ற  அசையாத  நம்பிக்கை.  இதால்  அகம்பாவம் அடங்கி  விரைவில் மறையும்.

 ரெண்டு வழியுமே  கொஞ்சம்  கரடு முரடான  பாதை தான்.  கட்டுப்பாடு தான் இதற்கு  முள்   குத்தாமல் இருக்கும்  பாத  ரக்ஷை.  

ரெண்டு வழியிலும் கடைசியில்  பலனாகப்  பெறுவதே   ஞானம்.   முக்தி எனப்படும்.   பெருபவன் ஞானி. முக்தி.   
 படிப்பு,  அந்தஸ்து, குலம் எல்லாம் இதில் சேர்க்கையில்லை. பக்தி வேறு  முக்தி வேறு  அல்ல.  

பக்தன் எப்போதும்   தான் வேறு,  பகவான்  வேறு என்ற  உணர்வுடையவன்.  
ஞானி  இறைவனை  வேறு நினைவின்றி   சிந்திப்பவன். அவனை நாடுபவன். தேடி  அடைபவன்.   மற்ற  எண்ணங்களை  இந்த  ஒரு எண்ணத்தால்  அழுத்தி   அமுக்கி  அழிப்பவன்.

ஞானம் என்பது  அந்த  இறைவன்  என்னுள்ளே  '' நான் ''  ஆனவன் என  பின்னர் அவனை உணரவைகிறது.   அவன்  எப்போதும்  என்னை கண்காணிக்கிறான், பாதுகாப்பவன்  என்ற  உணர்வு மேலிட்டு ஆனந்தம்  பெற  வைக்கிறது. 

 ''யாமிருக்க  பயமேன்?''  என்று  அபய  ஹஸ்தம் காட்டும் முருகன்  ஸாயி பாபா படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.   அந்த  வாசகத்தின்  உந்துதல் மனதில் இறங்கி விட்டால்  தைரியமாக  செயல் பட வைக்கும். ஏதோ ஒரு பெரிய  பாதுகாப்பு தன்னை சூழ்ந்திருக்கிறது என்று உணர வைக்கும்.  அப்புறம்  எதைக்கண்டும்  அஞ்சத் தேவையிருக்காது. இது தான் பக்தி.

 ஞானத்தின்   தாயே  பக்தி தான்.    உலகத்தில்  எதற்காக  இவ்வளவு  துக்கங்கள், சோகங்கள், துன்பங்கள் நம்மை பாதிக்கின்றன?   காரணத்தை  உன்னிப்பாக  பார்த்தால்,   நமது எண்ணங்கள்,   முடிவுகள்,செயல்கள்  இவை ஒன்றே தான்  அனைத்தின்  காரணமும்  என புரியும்.  மாயை  கண்ணை மூடுகிறது, மதியை  மயக்குகிறது.  இறைவன்  '' இந்தா,  உனக்கு எதைவேண்டுமானாலும்  எடுத்துக்கோ''   என்று  கொடுத்ததில்  நாம்   பார்த்து  எடுத்துக்கொண்டது  தான்  நம்மை  வாட்டுகிறது என்பது  புரியும்.   ஏன்  எவனையோ  நாம்  தேர்ந்தெடுத்து அவனது  ஈனச்செயல்களால், பின்னர் வருந்தி அரசாங்கத்தை குறைகூறவேண்டும்?  யார் நம்மை அப்படிப்பட்டவனை நம்மை  ஆளச்செய்தது. நாம்  தானே. அப்புறம் எதற்கு ''லபோ திபோ '' ? இது  யார் தவறு.?

 எதிர்பார்ப்பு,  விருப்பம், சுயநலம், தன்னிச்சை   இவையின்றி  எல்லாம்  அவனவன் அவன் விருப்பப்  படி நடக்காது.  ''அவன் ''  விருப்பப்படியே தான்  நடக்கும்.  சர்வ வல்லமை பொருந்திய  ஜகத்  ரக்ஷகன்  செயல்  தான் நம்மை  தூக்கி  நிலை  நாட்டுகிறது .

சுதந்திரமாக செயல் படும்  யாவும் அவன் பார்வையில்  தான்  நடக்கின்றன.  வீடு  பற்றியெரிகிறது.  தீயணைக்கும்  படை  அதை நாடினால்  தான்  தீ  அணைக்க  ஓடிவரும்.   செயல்படும்.  என்னால்   முடியுமே  என்ற  முடிவு  இறைவனை  வேறு படுத்துகிறது. அவனை நாடினால் உடனே  ஓடி வருவான். உன் முயற்சியும் அதுவரை வேண்டும். தீயணைக்கும் வண்டி வருவதற்குள்  பேசாமல் கை கட்டியா  நிற்கிறோம். அங்கிங்கே ஓடி தண்ணீரை தீயின் மேல் ஊற்றவில்லையா?

மனிதனின் செயல் பாடுகள்  எல்லாவற்றுக்கும்  பின்னால்  காரணமாக நிற்பவன்  அந்த  சூத்ரதாரி  என்ற  எண்ணம்,  உணர்வு  அவனை அருகே  கொணர்கிறது.   எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்று  திறம்பட  செயல்  நடக்கிறது.   பொறுப்பு  ''அவன''  தாகி விட்டதல்லவா?  முடிவு  நல்லதாகத்தானே இருக்கும்.
 
பகவான்  ரமண மகரிஷியிடம்   ஒரு பக்தை  '' பகவானே  எனக்கு  எல்லாமே  இருக்கிறது, எதெல்லாம்  தேவையோ  அவற்றை  அடைந்தேன்.   மன  நிம்மதி  மட்டும்  இல்லையே  சுவாமி!    ஏதோ ஒன்று  அதை  வர விடாமல்  தடுக்கிறதே  அது  என்  விதிதானே?  ''

'' நீ தான்  உனக்கு   எல்லாமே  இருக்கிறது என்கிறாயே அப்புறம்  என்ன பாக்கி  விருப்பம் ?விரும்பியதெல்லாம்  கிடைத்து விட்டது என்றாயே.''   

''  ஆமாம் சொன்னேன், நிம்மதி இல்லை,  இது என்  விதி என்று தோன்றுகிறது.   விதி என்றால்  என்ன சுவாமி? 

''அப்படி ஒன்று  தனியாக  இல்லையே.  அவனிடம்  சரணடைந்து  உன்னையே தந்துவிட்டால் வேறு என்ன இருக்கிறது உன்னிடம்? 
  எல்லாம்  அவனுடையது, அவன் செயல்  என்றபோது அவன் பார்த்துக் கொள்வான். உனக்கு  பளு  இருக்காதே.  விதி  அப்பறம்  எது, என்ன செய்யும்?''

''என்னால்  முழுதும்  அவனிடம் சரணடைய இயலவில்லையே?''

''முழுமையாக  முடியாவிட்டால்  என்ன.   சிறிது சிறிதாக  பழக்கப்படுத்திக்கொள்ளேன்.. போகப்போக  முழுமையும்  உன்னை இழந்து  அவனை  அடைவாய்.  திடீரென்று சைக்கிள் மீது ஏறி உட்கார்ந்து ஓட்ட முடியுமா,  கொஞ்சம் கொஞ்சமாக  கீழே  ,விழுந்து  பிறர் உதவியோடு தள்ளப்பட்டு  பிறகு  தான் நீயே  மிதித்து ஓடுகிறது. 

 ''அதுவரை  நிம்மதி இருக்காதே. மன  அமைதி இருக்காதே. கொஞ்சம் கொஞ்சமாக  சரணடைந்தால்  விதியை வெல்ல முடியுமா சுவாமி?'

''முடியுமே. அது போகப்போக   உனக்கே  தெரிய வருமே.

'' விதி  பூர்வ ஜன்ம  கர்ம பலனால்  தான்  வருகிறதா  சுவாமி'?''

''அவனை சரணடைந்தால்  விதியை  நிர்ணயிப்பது  அவன்  வேலையாகிவிடும். பிறர் பொருளைப் பற்றி உனக்கேன் கவலை ''

''அது அவர் பொறுப்பு, செயல்  என்று நினைக்கும்போது  விதி தலை  தூக்காது இல்லையா சுவாமி ?''

'' விதியும்  அவனிலேயே  அடக்கம் என்பதை புரிந்துகொள். எதுவும்  தலை தூக்காது .  பூனைக்குட்டியாக  இரு.  தாய்ப்  பூனைக்குத் தெரியும்  குட்டியை எப்படி  வலிக்காமல்  கவ்வ வேண்டும், எங்கெல்லாம் எப்போது  தூக்கிச்செல்ல வேண்டும் என்று.  நீ கண்ணை மூடிக்கொண்டு  அந்த குட்டியைப் போல்   தொங்கிக்கொண்டு இரு.  அது  போதும்''

இன்னொரு  பக்தர்  '' சுவாமி, எனக்கு  அடிக்கடி  சிவன்  தரிசனம்  கிடைக்க வேண்டும்"  என்றார்.

''ஆஹா  தாராளமாக  இறைவனை வேண்டி சரணடைந்து கேள்.  அப்படிச்  செய்வது  செய்யாததும்  அவன்  முடிவு.  புரிந்துகொள். இறைவனை சரணடைவது  அவனை அதிகாரம்  பண்ணுவதற்கல்ல . நீ  கேட்டதை  அவன்  கொடுக்க  அல்ல.  உனக்கு எது தேவை, எது உனக்கு வேண்டும்  என்பதை  உன்னைவிட  அவன்  தெளிவாக  அறிவான்.  அம்மா பூனை பார்த்து பார்த்து  செய்யவேண்டியதை செய்யும். குட்டிப்பூனை  பேசாமல்  பால்  குடித்துவிட்டு  தூங்கிக்கொண்டு நிம்மதியாக இருக்கும்.  நீ அவனை  பூரணமாக நம்பி, அவன் மேல் பாரத்தைப் போட்டு  உன்னாலானதை செய்.   சுகமாக  இரு.   இது தான்  பக்தி''.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...