அண்ணாமலையான் அவதாரம். J K SIVAN
எண்பத்தி ஒன்றை திருப்பி போட்டால் பதினெட்டு. 81-18. ஆகவே இந்த வயதில் என்னுடைய பதினெட்டாம் வயதை திரும்பி பார்க்கிறேன். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. என் அம்மா எப்போது வேண்டிக் கொண்டாள்? எதற்கு?
''இவனுக்கு, இந்த சிவனுக்கு உன் சந்நிதியில் வந்து காது குத்துகிறேன்'' . யாரிடம் வேண்டிக்கொண்டாள் ?
திருவாரூர் கமலாலயம் எனும் சமுத்திரம் போன்ற குளத்திற்கு கரையில் உள்ள ஒரு சித்தர் மடத்தில் ஜீவ சமாதி கொண்டிருக்கும் ஸ்ரீ குரு தக்ஷிணாமூர்த்தியிடம் . அந்த இடம் மடப்புரம் என அழைக்கப்படுகிறது.
ஆகவே எனக்கு பதினெட்டு வயதில் வேலை கிடைத்து அதில் லீவ் கிடைத்து ஒருநாள் பெற்றோருடன் நீண்ட நாள் பாக்கியை செலுத்த நாங்கள் திருவாரூர் சென்றோம். பதினெட்டு வயதில் முதலாவதாக காது குத்திக்கொண்ட, (அல்லது முதலில் ஒருவயதில் குத்தியதற்கு போனஸாக அது தூர்ந்து போனபின் ரெண்டாவதாக வா?) ஆள் நானாகத்தான் இருப்பேன். ஏன் எப்படி என்பதெல்லாம் எனக்கு என்ன தெரியும்?
பதினெட்டில் காது குத்தும்போது வலிக்கிறது என்று தெரியும். கம்பி ஒன்றை வளையமாக அணிந்துகொண்டு ஆபிசுக்கு போனவன் நான். ஒருவிதத்தில் சந்தோஷம் இந்த சித்தர் மடத்தோடு எனக்கு அப்போதே சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறதே என்று. என் வாழ்வில் அப்புறம் பல சித்தர்கள் வந்து போய்க் கொண்டிருக் கிறார்களே. இன்று திடீரென்று அந்த திருவாரூர் மௌனகுரு தக்ஷிணாமூர்த்தி சித்தர் மடம் ஞாபகம் வந்தது.
திருவாரூரில் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றங்கரையில் 1835ம் வருஷம் ஜீவசமாதி அடைந்த மஹான் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள். என் அம்மா ஜம்பாவதி அம்மாள் பள்ளிக்கூடமே பார்த்திராதவள் என்றாலும் அவளுக்குத் தெரிந்ததில் பத்தில் ஒன்று எனக்கு தெரிந்திருந்தால் நான் ஒரு மஹா பண்டிதன். அருணாசல கவிராயர் பாடல்கள் ஒப்பிப்பாள். நன்றாக பாடுவாள். பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதிகளின் ரெண்டாவது புத்ரி அல்லவா? அவளுக்கு எப்படி இந்த சித்தர் பழக்கம் ஆனார்.? நானும் கேட்டதில்லை, அவளும் சொன்னதில்லை. பதினெட்டு வயதில் இதெல்லாம் கேட்க தோன்றவில்லை. அப்புறமும் கூட.
நான் அறிந்த சேதி:
திருச்சி பக்கம் கீழாலத்தூர் என்ற கிராமத்தில் வசித்த கார் காத்த வேளாளர் வகுப்பை சேர்ந்த சிவ சிதம்பரம் பிள்ளைக்கு பேரில் தான் பிள்ளை இருந்தது. நிஜமான பிள்ளை பாக்யம் இல்லை. எல்லா கோவில்களுக்கும் சென்று தம்பதியர் வேண்டியதில் திருவண்ணாமலையான் கனவில் வந்து ''ஏண்டா அலையறே வீட்டுக்கு போ. நானே வந்து உனக்கு பிள்ளையாக பிறக்கிறேன்'' என்கிறார். மறுநாள் காலையில் பொழுது விடிந்து தம்பதியர் இருவரும் திருவண்ணாமலைக்கு ஓடுகிறார்கள். பிள்ளை பிறந்ததும் சதீஷ், ரிதேஷ் என்றா பேர் வைப்பார்கள்? அருணாசலம் என்ற பெயர் கொண்ட அவர்களது மகன் வித்யாசமானவன். ஐந்து வயதாகியும் பேசவில்லை.
சிவசிதம்பரம் பிள்ளை ஒருநாள் ஒரு யோகியை திடீரென்று சந்திக்கிறார். அவரிடம் சொல்லி அவரை வீட்டுக்கு அழைக்கிறார். அருணாச்சலத்தை அழைத்து வணங்கச் செயகிறார்.
''சுவாமி, எப்படியாவது இந்த ஊமைப்பிள்ளையை பேச வைக்கவேண்டும்'' என்று கெஞ்சுகிறார்.
சாமியார் அருணாச்சலத்தை சிரத்தில் தடவிக்கொடுத்தார். உற்றுப்பார்த்து சிரிக்கிறார். பிள்ளையிடம் சொல்கிறார்:
''அப்பனே, யார் சொன்னது உன் பிள்ளை ஊமை என்று ? இவன் உன் வம்சத்திற்கே பெருமை சேர்க்கும் மஹான். எண்ணற்ற பக்தர்களுக்கு அருள் வழங்கிடும் குரு. நீ அவனிடம் பேசு, உனக்கு பதில் கூறுவான்'' என்கிறார்.
தந்தை கண்ணை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மகனிடம்
' ஐயா ஏனப்பா கண்ணை மூடிக்கொண்டு பேசாமலேயே இருக்கிறாய். பேசப்பா?'' என்று கெஞ்சுகிறார்.
அருணாச்சலம் கண்ணைத்திறந்து பார்த்து '' நான் சும்மா இருக்கிறேன்'' என்கிறான்.
அருகே இருந்த சந்நியாசி '' சும்மா இருக்கும் தாங்கள் யார்?"' என்று கேட்கிறார்.
''நீ தான் நான், நான் தான் நீ''
''இது சத்யம் சத்யம் சத்யம்'' என்று கூறிய சந்நியாசியை அடுத்த நிமிஷம் எங்குமே காணோம்.
என்ன அர்த்தம்? அருணாச்சலேஸ்வரர் தானே அந்த சிவ சிதம்பரம் பிள்ளைக்கு மகனாக பிறந்து, அவரே தான் சன்யாசியாக அங்கே வந்ததும் புரிகிறது.
.
அதிசயமாக அன்றே பிள்ளையும் அவர் மனைவியும் காலமாகி விண்ணுலகெய்தினர். சில வருஷங்களில் அருணாச்சலம் எங்கெல்லாமோ ஊர் ஊராக சென்றபிறகு சென்னை அருகே திருவொற்றியூர் வருகிறார். குரு தக்ஷிணாமூர்த்தி சுவாமி என்று அறியப்பட்டார். சென்ற இடமெல்லாம் எத்தனையோ பேருக்கு அதிச
யங்கள் நிகழித்து அருளியிருக்கிறார். விவரங்கள் கிடைக்கவில்லை. பின்னர் திருவாரூர் செல்கிறார். திருவாரூர் சென்றடைந்த பிறகு எங்கும் யாத்திரை செல்லவில்லை.
சிதம்பரத்தில் சோமநாத முதலியார் என்று ஒரு சிவ பக்தர். தீராத வயிற்று வலி. எப்படியாவது மரணமடைந்தால் தேவலை என்று துடித்துக் கொண்டிருந்தார். தில்லை நடராஜா கனவில் வந்தார். ''உன் துன்பம் தீர திருவாரூர் போ. அங்கே தக்ஷிணாமூர்த்தி இருக்கிறார் அவரை வேண்டிக் கொள்'' என்று அருள்கிறார்.
முதலியார் திருவாரூரில் சிவன் கோவிலில் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் வேண்டிக்கொள்கிறார். வலி தீரவில்லையே. மறுபடியும் ஓரிரு நாட்களில் அவர் கனவில் நடராஜா தோன்றி ''நான் உன்னைப் போகச்சொன்ன தட்சிணாமூர்த்தியை ஏன் இன்னும் சென்று வேண்டிக்கொள்ளவில்லை? '' என்கிறார்.
''எனக்கு தெரியவில்லையே பகவானே''
''தக்ஷிணாமுர்த்தி ஒரு அவதூதர், சந்நியாசி, எப்போதும் தவமிருப்பவர் அவரைச்சென்று வேண்டிக்கொள்''
முதலியார் மடப்புரம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் மடத்திற்கு செல்கிறார்.
அங்கே தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் பக்தர்கள் பிரசாதம் உண்டுவிட்டு வெளியே எறிந்த எச்சில் இலைகளில் மீந்திருந்த பிரசாதத்தை உண்பதைப் பார்க்கிறார். அவர் அருகே சென்று சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறார். ஒன்றும் பேசாமல் தனது கையிலிருந்த எச்சில் பிரசாதத்தில் சிறிது எடுத்து முதலியார் வாயில் ஊட்டி விடுகிறார் ஸ்வாமிகள்.
''யார் நடராஜன் உன்னை அனுப்பினானா?'' என்று கேட்கிறார். முதலியாருக்கு அப்புறம் வலி எங்கே போயிற்று என்று தேடுவதற்கே நேரம் போதவில்லை.
திருவாரூரில் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றங்கரையில் 1835ம் வருஷம் ஜீவசமாதி அடைந்த மஹான் ஒரு மௌன குரு. மஹா நிர்வாண சமாதி அடையும் முன்பு அவர் உச்சரித்த வார்த்தை; '' முடிந்தது. முடிந்தது, முடிந்தது. எல்லாமே முற்றிலும் முடிந்துவிட்டது''
என் அம்மா ஜம்பாவதி அம்மாள் பள்ளிக்கூடமே பார்த்திராதவள் என்றாலும் அவளுக்குத் தெரிந்ததில் பத்தில் ஒன்று எனக்கு தெரிந்திருந்தால் நான் ஒரு மஹா பண்டிதன். அருணாச்சல கவிராயர் பாடல்கள் ஒப்பிப்பாள் . பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதிகளின் ரெண்டாவது புத்ரி அல்லவா? அவளுக்கு எப்படி இந்த சித்தர் பழக்கம்? நானே இப்போது தான் தெரிந்துகொண்டேன். திருவாரூர் போக நேர்ந்த போதெல்லாம் என்னை அறியாமல் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் மடம் செல்லும் பழக்கம் வந்துவிட்டது.
திருவாரூர் சென்றது தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் மடம் சென்றது. கமலாலயத்தில் குளித்தது. காது குத்திக்கொண்டது, பிரசாதம் வாங்கியது எல்லாம் நினைவிருக்கிறது. ஏதோ மனதில் ஒரு இனம்புரியாத திருப்தி அப்போதிலிருந்து இந்த சித்தரை நினைக்கும்போதெல்லாம் ஏற்படுகிறது. இதை எழுதும்போது கூட.
திருவாரூர் மடப்புரம் குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தின் தொடர்புக்கு: (0091) 04366–222732 மற்றும் (0091) 94434 36393
No comments:
Post a Comment