Friday, December 18, 2020

thiruvembavai

 திருவெம்பாவை     J K  SIVAN 

             
            3.    தாள் திறவாய் முத்தழகி

ஆண்டாளின் திவ்ய திருப்பாவையும் மணி வாசகரின் திருவெம்பாவையும் ஹரியையும் ஹரனையும் இரு செவிகளிலும் நிரப்பி மனதை அதன் மூலம் பரிசுத்தப் படுத்திக்கொள்ள  நமக்கு கிடைத்த  அரிய ,  அதிசய வாய்ப்பு.

திருவெம்பாவை எனும் வார்த்தையை பிரித்தால் ''திரு எம் பாவை'' ஆகிறது. எமது பாவையே, நீ விரதம் இரு. பரமேஸ்வரன் திருவருள் பெறுவாய்'' என்று மணி வாசகர் தானே ஒரு பெண்ணாக மாறி பக்தி பூர்வ உணர்ச்சிகளை கொட்டும் பாடல்கள். திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வரர் மீதும் சிதம்பர நடராஜர் மீதும் பாடப்பட்டவை.

உத்தராயணம் தை முதல் ஆறுமாதம் ஆனி வரை தொடரும். அத்தனையும் ஒரு பகல் வேளை --தேவர்களுக்கு! தக்ஷிணாயனம் மற்ற ஆறுமாதம். ஆடி முதல் மார்கழி வரை... அது தேவர்களின் ஒரு இரவு வேளை-- அதாவது நமது ஒரு வருஷம் அவர்களுக்கு ஒரு நாள்!

ப்ரம்ம முஹூர்த்தம் போது நேரமே பார்க்க தேவையில்லை. விடிகாலை 4லி லிருந்து காலை 6 வரை. சூரியன் தலை தூக்கும் முன்பு.அதுவும் மார்கழியில் இது உசத்தி.

கல்வி வேறு. அருள் வேறு. முதலாவதை வைத்து இறைவனை தேட வேண்டும். இரண்டாவது இறைவனால் பெறப்படும் பரிசு. இப்படி அருள் பெற்றவர்களில் முதன்மையானவர் சைவ சமயத்தில் மணிவாசகர். திருவாதவூரர் . அருள் பொதிந்த வார்த்தைகள் மணி மணியாக  அவரால்  கோர்க்கப்பட்டு  அவருடைய வாசகம் அதனால் திரு வாசகம் என்று பெயர் தாங்கி அவரை மணிவாசகராக்கியது. கடல் மடையென்ன அவர் பாடல்களில் சிவபெருமானையே தலைவனாகக் கொண்டு பக்திப் பாடல்களை   ஏராளமாக  நமக்கருளியவர். நெஞ்சை உருக்கும் பக்தி கொண்ட வார்த்தைகள். ஆகவே தான் திருவாசகம் என்ற பக்தி பாடல்களை பற்றி ''திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'' என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
.
திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிலுமே மார்கழி மாதம் விடியலில் எழுவதும், நீராடுவதும், திருக் கோயில் சென்று வழிபடுவதும் முக்கியமாக சொல்லப்படுகிறது.

மணமாகாத கன்னிப்பெண்கள் காத்யாயினி விரதம் இருந்து , அதிகாலையில் ஒருவரை ஒருவர எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடும் வணங்கும் நிகழ்வு. .

மாணிக்க வாசகர் திருவெம்பாவையில் இலக்கிய ரசத்தை பிழிந்து பக்திரசத்தோடு சேர்த்து சுவை கூட்டி அளிக்கிறார். சிவபெருமான் மீது எல்லையற்ற பக்தி ஒருபுறம். அவனது அருள் அதனால் .விளைவது மறுபுறம். இன்று மூன்றாவது திருவெம்பாவை பாடல்:

வெற்றிலை பாக்கு புகையிலை அதிகம் உபயோகிப்பவர்களை தவிர மற்றவர்கள் பற்கள் காவி நிறத்திலோ, கறுப்பாகவோ பழுப்பாகவோ இருக்க வாய்ப்பில்லை. பற்கள் என்றால் வெண்மை நிறமே கவனத்துக்கு வரும். அதுவும் அழகிய பெண்களின் பற்களை முத்து கோர்த்தது போல் இருக்கிறது என்கிறார் மணி வாசகர். அவர் பாண்டிய நாட்டுக்காரர். முத்து குளித்து வாரி வழங்கிய நாடு. அப்படிப்பட்ட பற்களை உடைய ஒரு பெண் விடிகாலை எல்லோருக்கும் முன்பாக எழுந்து சிவ பிரான் நினைவாக வாய் மணக்க நெஞ்சினிக்க என் அப்பனே, என் ஆனந்தமே, என் அமிர்தமே, என் இனிப்பே, என்று அவனைப் பலவாறாக புகழ்ந்து பாடினால் எப்படி இருக்கும்? அவளது வார்த்தைகள் இனிமையோடு இனிப்பை அல்லவோ எங்கும் காற்றில் பரவச் செய்யும். பரவசமாக்கும்?,.

3. முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.''

''அழகிய பெண்ணே, எல்லோருக்கும் முன்பாக   நீ  எழுந்திருந்து,   உன் முத்துப்போன்ற வெண்மையான பற்கள் ஒளிவீச, வாய் திறந்து  பேசுபவள். உனது இனியகுரலில் நீ பேசுவது எப்போதும் என் மனத்தை கொள்ளை கொள்கிறதடி. என் முன்னே, நீ எல்லார்க்கும் எதிராக, வந்து, ஆஹா அந்த பரமேஸ்வரனைப் பற்றி எவ்வளவு அழகாய் போற்றுபவளாச்சே. நானும் நீ சொல்வதை கொஞ்சம் திரும்பிச் சொல்கிறேன்:

"என் அத்தன், ஆனந்தன், அமுதன், ''என் அப்பன், என் தந்தை, ஆனந்த ஸ்வரூபன்'' - நினைத்தாலே அமிர்தமாக இனிப்பவன்,உமாமகேஸ்வரன்''. ஆஹா, இதை விட இனிய சொல்லொன்று வாயினின்று வெளிவர முடியுமா? " என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுபவள் ! இன்னும் ஏன் இன்று கதவைத் திறக்காமல் உறங்குகிறாய்.'

இப்படி எல்லாம் சொல்பவள் இன்று ஏன் இன்னும் உறக்கம் உனக்கு? வாசலில் நாங்கள் வந்து நிற்பது தெரியவில்லையா, எழுந்திரு உன் வீட்டு கதவை திற. இந்த பெண்கள் எல்லோருமே ஈசனின் இணை பிரியாதவர்கள். அர்த்தநாரியின் அடிமைகள். குண சீலர்கள். ஒழுக்கம் தவறாதவர்கள். சிவ பக்தர்கள். ஆஹா, நீங்கள் என்ன புதியவர்களா. அந்த பழமனாதி யின் பக்தைகள் அல்லவோ. நான் சிறிது காலமாகத்தான் உங்களை அறிந்தவள். இருந்தாலும் நானும் உங்களில் ஒருவள் அல்லவா? தயவு செயது என்னை ஆராயாதீர்கள். நிறைய குற்றம் தென்படும். பேசாமல் என்னை உங்கள் போன்றோரோடு இணைத்துக் கொள்ளுங்கள்.  அதனால்  என் குறைகள் நீங்கி, என் கீழ்மை குணம் என்னை விட்டு நீங்கும். .ஆகவே   நீங்களே வந்து என் கதவை த்தட்டி அந்த சிவனைப் போலவே என்னையும் தடுத்தாட்கொள்ள வந்துள்ளீர்கள்'' இதனால் ஏதாவது கெடுதல் விளையுமா என்ற ஐயம் துளியும் வேண்டாம். எல்லாம் நல்லது தான். அதற்குப் பெயர் தான் சுருக்கமாக ''சத் சங்கம்'' என்கிறாள் அந்த வீட்டில் தூங்கி எழுந்த பெண். ரொம்ப  விவரமான பெண்ணாக இருக்கிறாளே!

''அப்படி இல்லை அம்மா, உன் மனம் நாங்கள் அறியாதவர்களா. சித்தத்தை சிவன் பால் வைத்துள்ள உன் தூய அன்பு எங்களுக்குத் தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட்டு   உள்ளவர்கள் நம் மகாதேவனை மனமாரப் பாடாமலா இருப்பார்கள்.

ஆஹா நீ அழகி மட்டுமல்ல,  பெண்ணே,  நீ  அருமையான வளும் கூட, உன் அன்பு அந்த சிவனின்
பேரன்பை நினைவூட்டுகிறதம்மா. எங்களுக்கு உன்னைப் பற்றி நன்றாகவே தெரியும். மனத்தூய்மை கொண்டவர்களால் அல்லவோ இப்படி சித்தத்தைச் சிவன் பால் வைத்து நா மணக்க பாடமுடியும். வா நீ தான் சரியான ஜோடி எங்களுக்கு. வெளியே வா எங்களுடன் சேர்ந்து கொள். நாம் அனைவருமே ஆதி சிவன் நாமங்களை இந்த மார்கழி நன்னாளில் சேர்ந்தே பாடுவோம்.'' என்கிறார்கள்  தோழிகள்.

மணி வாசகரின் பாடலில் கவிநயம், கற்பனையோடு கங்காதர பக்தியும் கலந்திருந்தது கற்கண்டாய் இனிக்கிறது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...