Wednesday, December 16, 2020

THIRUVEMBAVAI

 

திருவெம்பாவை. J K SIVAN



                                                                 1 குனித்த புருவன்


அதெப்படி என் மனதில் இருப்பதை சில நண்பர்கள் வெளிப்படுத்துகிறார்கள்?  இது தான் ஆத்மாவின் எதிரொலியா?

'திருப்பாவை எழுதுகிறீர்கள், நன்றாக இருக்கிறதே, அதே போல் திருவெம்பாவையும் வேண்டாமா? ''

''யார் எழுத மாட்டேன் என்று சொன்னது? என்னவோ கிருஷ்ணன் மனதில் குடிகொண்டு திருப்பாவையில் மனதையும் கையையும் இணைத்து செயல் படுத்தினான். பாவையும் பரமனும் புத்தகம் வடித்தேன். இப்போது பரமசிவன், '' அடே சிவா, என் பேரை கொண்டு பிறந்த  நீ  சிவ பரமாக திருவாசகத்தையும் தான் தொடுகிறவனாச்சே,  எங்கே என் மணி வாசகனின்  திருவெம்பாவையை மீண்டும் படித்து விட்டு'' எழுது என்று என்னுள் ஒரு வேகத்தை கிளப்பி விட்டிருக்கிறான். மொத்தம் 20 பாடல்கள். ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றாக எழுதினால் என்ன?   இது  மார்கழி புனித புண்ய மாசம்.   இறைவனின் மகோன்னத காலம். இதில் ஹரியும் ஹரனும் சேர்ந்தே வழிபடுவோமே!  எல்லோர் மனமும் குளிரவேண்டாமா?

மனம் தான் மனிதன். மனம் பூரா திருவெம்பாவையில் ஈடுபட்டால் கை தானாக எண்ணத்தை வடிகட்டுகிறது. சர்க்கரை பண்டம் எதுவுமே இனிக்காதா? இதற்கு நான் என்ன சிறந்த எழுத்தாளனாகவா இருக்கவேண்டும்?. சிவன் சிந்தையில் புகுந்தால் எதுவுமே சிறப்பாக தானே அமையும். இது என் சொந்த அனுபவமும் கூட. எனக்கு தான் தூக்கமே கிடையாதே. தூங்குபவர்களையெல்லாமாவது   எழுப்ப வேண்டாமா? திருப்பாவையும் திருவெம்பாவையும் துயில் எழுப்பும் தெய்வீக பாடல்கள் அல்லவா? மார்கழிக்கென்றே  அமைந்த  சமய சஞ்சீவிகள்.

மணி வாசகரைப் படித்தால்   யாராலும் நிச்சயம் எதுவும் எழுத முடியாது.  கண்ணே  தெரியாது.  கண்களை குளம்போல் கண்ணீர் மல்கி மூடிவிடுகிறதே. என்ன பக்தி பரவசம்.   ''திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாச கத்துக்கும் உருகார்'' என்று சொல்லே இருக்கிறதே.

திருவெம்பாவையும்   ஏறக்குறைய திருப்பாவை தான். அங்கே கண்ணன். இங்கே முக்கண்ணன். அங்கேயும் பெண்கள் இங்கேயும் பெண்கள். இவர்களும் துயில் எழுப்புபவர்கள் . அங்கே ஆய்ப்பாடி. இங்கே அண்ணா மலையாகிவிட்டது.   அங்கே ஆழி மழைக் கண்ணன். இங்கே ஆதி அந்தம் இல்லா அருட் பெருஞ் சோதி. ஆயர்பாடியும் அண்ணாமலையும் அவரவர் நெஞ்சிலே தான் உள்ளது.  தனியாக  எங்கோ  இல்லை.

மார்கழி பனியில் மாலோலனை  இதயத்தில் கொள்வோரும், என்றும் பனிமலையில் மோனத்தவம் இருக்கும் மகா தேவனை மனதில் கொள்வோரும் ஒன்றே.  இனிப்பை எந்த பெயரில் ருசித்தாலும் இனிக்குமே .
உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு பற்றுவதால் நாம் பெறும் இன்பத்தை அண்டை அயலவர் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம்,    "எம்பிரான் மூலப்  பண்டாரம் வழங்கு கின்றான்; வந்து முந்துமினே !" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும் என்பதே மணிவாசகர் நோக்கம். 

தூங்குபவரை எழுப்புவது என்பதே அறியாமையில், அஞ்ஞானத்தில் மூழ்கியவரை கைதூக்கி விட்டு ஞான மார்க்கத்தில் அழைத்து செல்வது தானே.

திருவெம்பாவையில் முதல் பாடல்:

1.ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1


'ஹே, தூங்கு மூஞ்சி தோழியே, இன்னுமா தூக்கம், உன் காதில் அண்ணாமலையானை பக்தர்கள் அழைக்கும் ''அண்ணாமலைக்கு அரோஹரா'' சப்தம் ஒலிப்பது விழவில்லையா. கூர் வாள் போன்ற கண்ணுடையவளே, அதை அழகாக மூடி உறங்குகிறாயே'' என்று பெண்கள் சொல்லி இதற்கு முன் ஒரு பெண் இவ்வாறு தூங்கியவள் அவர்களது இன்னிசை பக்தி பூர்வமாக நெஞ்சில் பாய, உடனே துயில் எழுந்து தான் செய்த தவறுக்கு வருந்தி விம்மி விம்மி அழுதாளே .'' துவக்கம்,  இறுதி, ஆதி அந்தம் , இல்லாத அரிய பெரிய சோதியை நாங்கள் பாடுகின்றோமே. காதில் விழ முடியாதபடி உன் காது டமாரமா? மெய்ம்மறந்த அந்த பெண்ணுக்கு மலர் நிறைந்த படுக்கையிலேயே பக்தி அவளை சிவன் பால் ஈர்த்தது. என்ன ஒரு பாக்கியசாலி அவள் ? அவளைப்பற்றிய சேதி கேட்டதுமே உன்னையும் பரமேஸ்வரன் மேல் உண்டான பரவசம் ஈர்க்கட்டும் எம்முடைய தோழியே !. தூக்கம் கண்களை மறைப்பது போல் சம்சார பந்தம் திரும்ப திரும்ப நம்மை இறைவனை நாட முடியாமல் உலக மாயையில் கட்டிப் போடுகிறது. விடுபடுவோம், விஸ்வேஸ்வரன் வழிகாட்டுவான்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...