Thursday, December 3, 2020

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் J K SIVAN

அமரகோசம் -2

ஸரஸ்வதி கடாக்ஷம்
இது மஹா பெரியவா அமரகோசத்தை எழுதிய அமரசிம்மனைப் பற்றி சொன்ன விஷயம் .
''ஊரெல்லாம் பேச்சு. யாரோ ஒரு இளைய சன்யாசி தெற்கே இருந்து வந்திருக்கார். பார்க்கவே அப்டி யே அக்னி ஜோதி ஸ்வரூபமாக இருக்கார். நெற்றியிலே பட்டை பட்டையாக வெள்ளை வெளேரென்று
விபூதி. கழுத்தில் பஞ்சமுக ருத்ராக்ஷம். வெள்ளை வெளேரென்று பூணல். இடுப்பில் காவி வேஷ்டியா நீண்ட கௌபீனமா என்று புரியாமல் ஒரு காவித் துண்டு. முழங்காலைத் தாண்டவில்லை. கையில் ஒரு தண்டம்... ''
''என்ன பெயராம் அந்த இளம் சந்நியாசிக்கு? எங்கே இருந்து வந்த ஆண்டி?''
''தெற்கே எங்கோ காலடி ன்னு ஒரு மலையாள தேசமாம் .ரொம்ப மாசம் நடந்தா அந்த ஊர் வருமாம். அவருக்கு சங்கரன் என்று பெயராம். எல்லா வேதங்களும் சாஸ்திரங்களும் சின்ன வயசிலேயே மனப் பாடமாகி இருக்கு என்கிறார்கள்? ''
''இங்கே எதற்காக இவ்வளவு கூட்டம் என்ன விசேஷம் இந்த மடத்தில்.?
''நமது மஹா பண்டிதர் அமரசிம்மன், இந்த சங்கரன் வந்திருப்பதை அறிந்து அவரை தர்க்கத்துக்கு அழைத்திருக்கிறாராம். தோற்றால் கடுமையான தண்டனை இருக்குமாம். பாவம் சின்ன வயசிலேயே இந்த சந்யாசி என்ன பாடு படப்போகிறாரோ. பரிதாபமாக இருக்கிறது ''
இந்த பேச்செல்லாம் ஸமஸ்க்ரிதத்தில் தான். ஊரெங்கும், நாடெங்கும் ஸமஸ்க்ரிதம் பொது வழக்கு
மொழியாக இருந்த அற்புத காலம்.
மஹா பெரியவா சொல்வதை கேட்போம்:
அமரசிம்மன் சங்கரரை அழைத்து தர்க்கத்துக்கு இணைய வைத்தான். பிறகு என்ன தோன்றியதோ தெரியவில்லை.
''இளம் சந்யாசியே, நான் உன்னோடு நேரில் வாதம் செய்யப்போவதில்லை. ஒரு திரைக்குப் பின்னாலி ருந்துதான் உனது கேள்விகளுக்குப் பதில் சொல்வேன்" '
எதற்காக அமரசிம்மன் திரை மறைவில்??? ஆச்சார்யாள் கவலைப்படவோ, யோசிக்கவோ இல்லை. ''சரி'' என்கிறார். முதலில் சங்கரர் கேள்விகள் கேட்பார். அதற்கு அமரசிம்மன் பதிலளித்த பின் அவனது கேள்விக
ளுக்கு சங்கரர் பதிலளிக்கவேண்டும். இதில் ஒருவர் கேள்விகளுக்கு மற்றவர் பதிலளிக்க முடியவில்லை
என்றால் தோல்வியடைந்ததாக முடிவாகும். .
அமரசிம்மன் ஒரு திரையைக் கட்டிக் கொண்டு அதற்கு உள்ளேயிருக்கிறான். ஆச்சாரியாள் வெளியே இருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.
சங்கரர் கேள்விகளுக்கு பளிச் பளிச்சென்று அமரசிம்மன் பதில் சொல்லவே எப்படி இவ்வளவு கடினமான கேள்விகளுக்கு கூட உடனேயே பிரதிவசனம் கொடுக்கிறான்? சங்கரர் ஆச்சர்யத்தோடு ஒரு க்ஷணம் கண்மூடி த்யானம் செய்தார். பரமேஸ்வர அவதாரம் இல்லையா? திரை மறைவு ரகசியம் புரிந்துவிட்டது. அமரசிம்மன் ஸரஸ்வதி தேவி பக்தன். சங்கரர் கேள்விகளுக்கு விடைஅளிப்பது வாக் தேவி சரஸ்வதி. அது தெரியாமல் இருக்க தான் திரை நடுவே போட்டிருக்கிறான். அமரசிம்மன் சமணன். ஜைனமதம். ஆனாலும் . ஹிந்து தேவியை உபாசித்து அனுக்கிரஹம் பெற்றவன். அவனது ஜைன மதத்தை ஆதரித்து வாதம் செய் கையில் ஹிந்து கடவுள் துணையா? தப்பல்லவா?
நமது ஊரில் பரம நாஸ்திக வாதிகள் கூட ஹிந்து கோவில்களை சம்ரக்ஷணை ரகசியமாக செய்பவர்கள். ஹிந்து நம்பிக்கையை பின்பற்றி மஞ்சள், சிகப்பு, காவி, துண்டுகள் அணிபவர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள். இவர்கள் உறவு கலவாமை வேண்டும் என்று ராமலிங்க வள்ளலார் அதனால்
தான் பாடி இருக்கிறாரோ? என்னடா இது இப்படி பண்ணுகிறாய் என்று கேட்டால், ''வீட்டில் இப்படி அபிப் பிராயம்; சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை; அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி (feeling) க்கு மதிப்பு(respect) கொடுத்தேன்" என்று ஜம்பமாகச் சொல்லி தப்பித்துக் கொள்பவர்கள்.
அந்த காலத்திலேயே ஹிந்து மதத்தைக் கண்டனம் பண்ணும் கிரந்தங்களை எழுதிய அமரசிம்மன், அவை நன்றாக அமைய வேண்டும் என்று, ஹிந்து மதத்தின் வாக் தேவதை ஸரஸ்வதியை உபாஸித்தான். பூரண நம்பிக்கை, சிரத்தை, பக்தியோடு வேண்டியதால், அதற்கான பலனை ஸரஸ்வதி தேவி தரமாட்டாளா?.
திரைக்கு பின்னால் ஸரஸ்வதி தேவியை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவிட்டு அமரசிம்மன் அமர்ந்து அவள் கூறும் பதிலை அளிக்கிறான். அமரசிம்மன் சங்கரரைப் பற்றி கேள்விப்பட்டதால் அவரை தான் ஜெயிக்க முடியாது என்று உள்ளூர பயம். அதனால் தான் வாக் தேவி உதவி நாடினான். சங்கரருக்கு ஞானத்தால் நடப்பது என்ன என்று தெரிந்துவிட்டது.
சங்கரர் அடுத்து, "அம்மா, ஸரஸ்வதி தேவி உன் காரியமா இது? நீ இப்படிச் செய்யலாமா? உன்னையும் மற்ற அத்தனை தெய்வங்களையும் ஆராதிக்கிற பழக்கத்தையே தொலைத்து விட வேண்டும் என்று கிரந்தம் செய்கிறவனுக்கே இப்படி அநுக்கிரகம் செய்யலாமா?அவனுடைய உபாஸனா பலத்துக்காகச் செய்தாய் என்றாலும், இத்தனை புஸ்தகங்கள் அவன் எழுதியுமா உன் அனுக்கிரஹம் முடிவுக்கு வரவில்லை.? அதோடு, இத்தனை நேரம் என்னோடு தாக்குப் பிடித்து வாக்குவாதம் செய்ததிலும் எத்தனையோ அநுக்கிரகத்தைச் செய்துவிட்டாயே! அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு மேல் அதிகமாகச் செய்வது நியாயமா?" என்று ஸரஸ்வதியைக் கேட்டார். ஸரஸ்வதிக்கு புரிந்துவிட்டது. அமரசிம்மன் பக்திக்கு, பிரார்த்தனைக்கு வேண்டிய பலன் தந்து உதவியா யிற்று. இனி உபரியாக உதவ வேண்டிய அவசியம் இல்லை. ஸரஸ்வதி உடனே கடத்திலிருந்து அந்தர்த்தானமாகி விட்டாள். திரை அறுந்து விழுந்தது. அப்புறம் அமரசிம்மனால் ஆசாரியாளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டான். ''ஸரஸ்'' என்றால் நீர் நிலை. அங்கே இருக்கிறவள் ஸரஸ்வதி. அறிவு , புத்தி, தான் அந்த நீர் நிலை. அது கலங்காமல் தெளிந்திருந்தால்தான் அதில் ஸரஸ்வதி இருப்பாள். சங்கரர் அவதரித்தகாலத்தில் நாடெங்கும் ஏகப்பட்ட மதங்கள் - எழுபத்திரண்டு இருந்தது. விதண்டாவாதங்களைச் சொல்லிக் கொண்டு அறிவையே கலக்கினதால், ஞான ஸரஸானது ஒரே சேற்றுக் குட்டை மாதிரிஆகிவிட்டது. அத்வைத உபதேசத்தால், ஆசாரியாள்தான் அந்தச் சேற்றை எல்லாம் அடியோடு வாரி அகற்றி, ஸரஸைத்
தெளிய வைத்து, ஸரஸ்வதியை நிஜ ஸரஸ்வதியாக்கினார். இப்படி ஒருசுலோகம் உண்டு. ('வக்தாரம் ஆஸாத்ய' என்று ஆரம்பிக்கும்) .
இம்மாதிரி ஸரஸ்வதியை ஸரஸ்வதியாக்குவதற்கே இப்போது அவர் ஸரஸ்வதியை அமரசிம்மனிடமிருந்து அகற்றும் படியாகியது. ஸரஸ்வதியின் அநுக்கிரகத்தைப் பெற்ற அமரசிம்மனுக்கு தாமும் அநுக்கிரகத்தைச் செய்தார். அதைச் சொன்னால் அதுவே 'அமரகோச'த்தின் கதையும் ஆகும். ஆசாரியாளிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்ட அமரசிம்மன் தான் எழுதிய புத்தகங்கள் இனி உலகில் இருக்கவேண்டாம் என்று நினைத்தான். ஜைன மத சம்பந்தமாக நிறைய புத்தகங்கள் எழுதியிருந்தான். ஜைன சித்தாந்தம் இப்போது சங்கரரின் அத்வைதம் முன் நிற்கவில்லை, தோற்றது என்றபோது எதற்கு தன்னுடைய புத்தகங்கள்?.
இப்படித்தான் திருஞான சம்பந்தரோடு மதுரையில் வாதம் செய்த சமணர்கள் தோற்றால் ''கழுவேறிச் சாவோம்" என்றனர் . அப்புறம் கனல் வாதம், புனல் வாதம் இவற்றிலும் சம்பந்தரிடம் தோற்றனர். சம்பந்தர் கருணைவடிவம் அல்லவா? ''நீங்கள் கழுவேறி இறக்க வேண்டாம் நான் அப்படி கேட்கவில்லை என்றாலும் கொடுத்த வாக்கை நேர்மையோடு நிறைவேற்றுபவர்கள் சமணர்கள் என்பதால் பிடிவாதமாக தாமாகவே எல்லோரும் கழுவேறினார்கள். கொடுத்த வாக்குக்காகப் பிராணத்தியாகம் செய்தது ஜைனர்களுடைய பெருமையை காட்டுகிறது.
எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், அடிப்படையான சீலங்களில் எந்த மதஸ்தருக்கும் நிரம்பப் பற்று இருக்கலாம். தன்னுடைய சித்தாந்தம் தவறு, அதனால் தோற்றது என்று நிரூபணமான பின் அமர
சிம்மன் பெரிதாக நெருப்பை மூட்டி, தான் எழுதியிருந்த சுவடிகளை ஒவ்வொன்றாக அதிலே போட்டுப் பஸ்மமாக்கினான். சரஸ்வதியின் அநுக்கிரகம் பெற்று,எத்தனையோ காலம் பரிசிரமப்பட்டு எழுதியதையெல்லாம், இப்போது ஒரு கொள்கைக்காகத் தன் கைகளாலேயே அக்னியில் போட்டு எரித்தான். இதை ஆசாரியாள் கேள்விப்பட்டார். ஆனால் துளிக்கூட சந்தோஷப்படவில்லை. மாறாக மிகுந்த துக்கமே கொண்டார். அவர் அமரசிம்மனிடம் ஓடோடி வந்தார்.
'அமரசிம்மா , என்ன காரியம் செய்கிறீர். லோகம் என்று இருந்தால் நாலாவிதமான, தினுசான அபிப்பிராயங்கள் இருக்கத்தான் செய்யும். பல அபிப்பிராயங்கள் இருந்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பார்த்துச் சர்ச்சை பண்ணுவதுதான் பல நிலைகளில் இருக்கிற ஜைனர்களுக்கு அறிவைத் தெளிவுபடுத்தும். எதிர்க்கட்சி இருந்தால்தான் நம் கட்சியில் உள்ள நல்லது பொல்லாததுகளை நாமே அலசிப் பார்த்துக் கொள்ள முடியும். நீ எந்த மதஸ்தனாக ்வேண்டுமானாலும் இரு. நீ மகா புத்திமான் என்று நான் உன்னை கௌரவிக்கிறேன். உன் கொள்கைகளை புத்தி விசேஷத்தால் எத்தனை நன்றாக எடுத்து சொல்ல முடியுமோ அத்தனை நன்றாக செய்து புஸ்தகங்கள்எழுதியிருக்கிறாய். உண்மையில் பரம தத்வம் இதற்கு மாறாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; உன் புத்தியளவில் நீ இந்த சித்தாந்தங்களுக்கு எப்படி ஆதரவு காட்டியிருக்கிராயோ அதிலேயே ஒரு அழகு,புத்தியின் பிரகாசம் இருந்தது. இதை எல்லாம் லோகத்துக்கு இல்லாமல் செய்யலாமா?" என்று ஆசார்யாள் அவனிடம்சொல்லி, அவன் கையைப் பிடித்தார்.
அமரசிம்மன் ஏற்கனவே தனது எல்லா புத்தகங்களையும் தீக்கிரையாக்கி விட்டான். கடைசியாக அக்னியில் போட இருந்த புஸ்தகம் தான் ''அமரகோசம்''. ஆசாரியாள் தடுத்திருக்காவிட்டால் அதுவும் "ஸ்வாஹா" வாகியிருக்கும். ஆச்சாரியாளின் கருணையால் பிழைத்தது. 'அமரம்' என்ற பெயருக்கேற்றபடி அமரகோசம் மட்டும் இன்னும் இருக்கிறது. அமரசிம்மன் ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்மையான உள்ளர்த்தம் பாரபக்ஷம் இன்றி எழுதி இருந்தான். இன்றும் சகல ஸம்ஸ்கிருத மாணவர்களும் நெட்டுருப் போடுகிற மாதிரி, பொது நோக்கோடு எழுதியிருக்கிறான்.
'அகராதியை யாராவது நெட்டுரு போடுவதா? அது என்ன காவியமா? ஸ்தோத்திரமா? அதை எப்படி எதற்கு நெட்ருப் போடுவது?' என்று தோன்றும். ஆனால், அமரகோசம் அழகான சுலபமான ஸ்லோகங்களாக, காவியம் மாதிரி, ஸ்தோத்திரம்மாதிரி, அப்படியே நெட்டுருப்போட வசதியாகத்தான் இருக்கிறது. அதை மனப்பாடம் செய்வது வழக்கமாக விட்டிருக்கிறது.
அந்தக் காலத்தில் எல்லா சாஸ்திரங்களும் - வேதாந்தம், வைத்தியம், சங்கீதம், டிக்ஷனரிகூட சமஸ்க்ரித ஸ்லோகம் தான். காரணம் என்ன? அப்போது அச்சு போட்டுப் புஸ்தகம் கிடையாது. எங்கும் கிடைக்காது. எல்லா மாணவர்களும் திரும்ப திரும்ப சொல்லி மனதில் மனப்பாடம் ( memorise) பண்ண வைத்தார்கள்.
பேச்சு நடையில் இருந்தால் மறந்து போகும், வார்த்தைகள் ஆளுக்கு ஆள் மாறும். ஸ்லோகமாக ஒரு சந்தம், எதுகை, மோனை முதலானவைகளோடு சேர்ந்து செய்யுளாக (poetry) வந்து விட்டால்மனப்பாடம் செய்து மனஸில் மறக்காமல் பதித்துக் கொள்ளலாம். இதனால் மாறாது. பெரும் பத்தர்கள் இது மாதிரி நிறைய விஷயங்கள் மனதில் நெட்ரு போட்டு கற்றவர்கள். ஞாபக சக்தியிலிருந்தே சகல சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தவர்கள். புஸ்தகங்கள் அச்சேறி வந்தபின் எதையும் நெட்ரு போட வேண்டிய அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும் பக்கத்தைப் புரட்டலாம்.
ஆகவே புஸ்தகமில்லாத அக்காலத்தில் எல்லோருமே ''வாக்கிங் லைப்ரரி'களாக (நடமாடும் வாசக சாலைகளாக) இருந்தது மனப்பாடம் பழக்கத்தால். நெட்டுருப் பண்ணுவதாலேயே புத்திக்கு ஒருபலம் ஐகாக்ரியம் ( concentration) ஒழுக்கம் (mental decipline) ஆகியவை மாணவர்களிடம் இருந்தது. மனப்பாடம் பண்ண நிறைய நேரம் தேவைப்பட்டதால், புத்தியை கன்னாபின்னா என்று பல விஷயங்களில் போகாமல் கட்டிப் போட்டுப படிப்பிலேயே வைக்க மனப்பாடம் பண்ணுவது ரொம்ப சகாயம் செய்தது. இதற்கு வசதியாக சகல சாஸ்திரங்களையும் ஸ்யன்ஸ்களையும் ''பத்ய''மாக (poetry) எழுதி வைத்தார்கள். கத்யம், பத்யம் என்று இரண்டு - கத்யம் 'ப்ரோஸ்'; பத்யம் - 'பொயட்ரி'.
சுலோக ரூபத்தில் வெகு அழகாக 'அமர கோச'த்தை அமரசிம்மன் எழுதினான். அதிலே ஹிந்துமத தெயவங்களின் பெயர்கள் வருகிறபோது, ஒவ்வொரு தெய்வத்துக்கும் வேறு என்னென்ன முக்கியமான பெயர்கள் உண்டோ அத்தனையையும், கொஞ்சம்கூட மதபேத புத்தியில்லாமல், அடுக்கிக் கொண்டு போவான். அதைக் கேட்டாலே, அகராதியாக DICTIONARY தோன்றாது; அர்ச்சனை போல - நாமாவளி போல - தோன்றும். உதாரணத்திற்குஇதோ, 'சம்பு' என்ற வார்த்தைக்கு அர்த்தமாக, பிரதிபதங்களாக, 'அமர கோசம் சொல்வதை கேளுங்கள்; சம்பு : ஈச: பசுபதி : சிவ: சூலீ மஹேஸ்வர : | ஈசுவர: சர்வ ஈசான: சங்கர: சந்த்ரசேகர : || பூதேச: கண்டபரசு: கிரீசோ கிரிசோ ம்ருட : | ம்ருத்யுஞ்ஜய: க்ருதிவாஸா: பினாகீ ப்ரமதாதிப: || அமரசிம்மன் பகவன் நாமாக்களை ரொம்பவும் ஆசையோடு சொல்லிக்கொண்டு போகிற மாதிரி இருக்கிறது. ஆரம்ப மாணவர்களும் நினைவு வைத்துக் கொள்கிற மாதிரி சுலபமாக லலிதமாகப் பதங்களைப்போட்டிருக்கிறான். 'இந்திரா' என்ற வார்த்தைக்கு மகாலக்ஷ்மி என்று அர்த்தம். எப்படி விளக்கி இருக்கிறான் பாருங்கள்: கேட்கவே லக்ஷ்மிகரமாக இருக்கும். ''இந்திரா; லோகமாதா; மா; க்ஷீரோததனயா; ரமா; பார்கவீ; லோகஜனனீ; க்ஷீரஸாகரகன்யகா லக்ஷிமீ : பத்மாலயா; பத்மா; கமலா ஸ்ரீ : ஹரிப்ரியா'' --- இது டிக்ஷனரி மாதிரியா இருக்கு. ஸ்தோத்திரம் அல்லவா?
இப்படிப் பக்ஷபாதமில்லாமல் அர்த்தம் சொன்ன அமர சிம்மனுக்கும், ஒரு விஷயத்தில் பக்ஷபாதம் இருந்தது. து. . 'பௌத்த மதம்' என்று வந்தால் மட்டும் அதைக் கொஞ்சம் மட்டம் தட்ட வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு. நியாயமாகப் பார்த்தால் பௌத்தத்தை விட ஹிந்து மதத்திடம்தான் அவனுக்கு விரோதம் ஜாஸ்தி. ஏனென்றால், கடவுளைப்பற்றிச் சொல்லாம லிருப்பது , ஹிம்ஸை இருப்பதால் யக்ஞம் கூடச் செய்யக்கூடாது என்பது ஆகிய கொள்கைகளில் ஜைனம், பௌத்தம் இரண்டுமே ஹிந்து மதத்திற்கு விரோதமானவை. அடுத்த ஊரிலோ, அடுத்த தெருவிலோ நம் பரம விரோதி ஒருவன் இருந்தால் அதிகப் போட்டி நமக்கும் அவனுக்கும் இருக்காது. அதிக வயிற்றெரிச்சல் இல்லை. ஆனால் பக்கத்து வீட்டில் அல்லது எதிர் வீட்டில் நமக்குக் கிட்டத்தில் கண்ணுக்கு நேரே இருக்கிறானே, இவனுக்கு நம்மிடத்தில் அத்தனை விரோதம் இல்லாவிட்டால்கூட, இவனைப் பார்த்துத்தான் நமக்கு அசூயை, ஆத்திரம் ஜாஸ்தியாக இருக்கும். இவனை எப்படி மட்டம் தட்டலாம் என்று காத்துக் கொண்டிருப்போம். இதே மாதிரி தன் மதத்துக்கு ரொம்ப வித்தியாசமாக இருக்கிற ஹிந்து வைதிக மதத்தைவிட, சமணத்துக்கு ரொம்ப ஒற்றுமை உள்ள பௌத்தத்தை மட்டம் தட்டுவதிலேயே அமரசிம்மனுக்கு ஒருசந்தோஷம் !!
அமரகோசத்தில் ''புத்தர் '= அர்த்தம் சொல்லும்போது அவர் மற்ற பெயர்களான "ததாகதர்"; (லக்ஷியத்திலேயே செல்கிறவர்) போன்ற பெயர்களை சொல்லவேயில்லை. சாதாரண பெயர்கள் சிலதை சொல்லிவிட்டு, "இதைப் படிக்கிற எந்த மதஸ்தர் வேண்டுமானாலும் தன் ஸ்வாமி என்று நினைக்கும்படியிருக்கட்டும்" என சொல்கிறான். இது மட்டுமா? 'ததாகதர், சாக்யமுனி' எனும் பெயர்கள் மஹாவீர ஜைனருடையவை என்கிறான். புத்தர் 'பாடி-கார்ட்' BODYGUARD போல் இருந்த ''ஸுகதர்'' என்ற பெயருக்கு அர்த்தம் : இது '' மஹாவீரரின் இன்னொரு பெயர்'' என்கிறான். ஹிந்து மதத்திடம் இப்படி மனக்கோணல் ( prejudice) எதுவும் காட்டவில்லை. ஈஸ்வரன் பெயர்களைச் சொன்ன மாதிரி
, மகாவிஷ்ணுவின் நாமாக்களை அர்த்தம் சொல்கிறான். முக்யமாக அமர கோசத்தில் வேறெந்த தெய்வத்துக்கும் "ஸ்வாமி" என்ற பெயரை சொல்லாதவன் ஸுப்ரம்மண்யரையே "ஸ்வாமி" என்கிறான். பலே அமரசிம்மா. '' சுப்ரமண்யன் = தேவஸேனாபதி: சூர: ஸ்வாமீ, கஜமுகாநுஜ.'' என்கிறானே .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...