Sunday, December 20, 2020

THIRUPPUGHAZH


 

ஒரே  ஒரு திருப்புகழ்...  J K . SIVAN 

பாடல்கள்  பல வகைப்படும். நமக்கு அதிகமாக  தெரிந்தது   வா மச்சான்  வா  வாழைக்கா  தோப்பு லே ..... எவண்டி உன்னை பெத்தான்,   கையிலே கிடச்சா  செத்தான்...  போன்ற  அற்புத பாடல்கள்.  நான் ஒரு முட்டாளுங்க என்று  தமிழகம் முழுதும்  பல  வருஷங்களுக்கு  முன்பு,   தெருவிலும்,   ஏன்  ஆபிஸ்லே கூட  தனக்குத்தானே  பாடிக் கொண் டும்   மகிழ்ந்தவர்கள்  நாம். 

இன்னொரு ரகம்  இருக்கிறது.  அவற்றை நமது முன்னோர்கள் பாடினார்கள். ரசித்தார்கள். பயன்பெற்றார்கள்.   நாம்  மறந்து விட்டோம்.  

பாட்டு பாடுவது, பாடல் இயற்றுவது என்பதெல்
லாம்   ஏதோ ஒரு சக்தியால்  நமக்கு விளைவது.   அதற்கு  அனுபூதி என்று பெயர்.  இறைவன் அருள் இருந்தால் தான் அப்படி  திடீரென்று காளிதாசன், காளமேகம், அருணகிரி போல் பாட வரும். 

 உள்ளே  தெய்வம் இருந்து  ராமலிங்க  வள்ளல்  பொருள் அருள் கவிகள்  இயற்றமுடியும்.   பட்டினத்தாரைப் போல  தத்துவ வேதாந்தம் 
 பாடவைக்கும், அல்லது இறைவனே  உருவெ
டுத்து  ஆதி சங்கரரைப் போல  கடல்மடை யென  ஸ்தோத்திரங்கள்  இயற்ற வைக்கும்.  

அருணகிரிக்கு  திருவண்ணாமலை  கம்பத்தி
ளையவன்  கந்தன்  அருளிய  திருப்புகழ் அத்தகையது.  அதில் ஒரே ஒரு பாடல் பற்றி சொல்கிறேன். ஆயிரக்கணக்கில்  அற்புத சுரங்கமாக அது இருக்கிறது. எதைச் சொல்வது, எதை விடுவது. ஏதோ  ஒன்று  இன்று மனதில் பட்டது.  

பாதி மதிநதி போது மணிசடை
      நாத ரருளிய                        குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
       பாதம் வருடிய                மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
      மாய னரிதிரு                  மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
      காலில் வழிபட             அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
      காளும் வகையுறு           சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
      சூழ வரவரு                மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
      வாமி மலைதனி             லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
      வேலை விடவல      பெருமாளே.

என்ன  ஒரு  அற்புதமான  சந்தம்.  தமிழ்  ஓட்டம்,   ஓசை, இசை கலந்து  இதைக்   கேட்கும் போது  அதில்  பக்தியையும்  சேர்த்து  செவிக்கு விருந்தாக அனுபவிக்கும்போது எதிரே  மயில் மீது முருகன்  கண்முன் நிற்பது நிச்சயம்.   

அப்படி தான்  அருணகிரி நாதர் கண் திறந்து எதிரே பார்க்கிறார். நிற்பது யார்?

 சிரத்தில்  சடை முடி,  அதில்   உச்சியில் அழகான  பிறைச்சந்திரன்,  அவனோடு இணைந்து  அதிசய மாக  வளைந்து   கீழிறங்கும்  கங்கை , இவ்விரண்டையும் சுற்றி ஆனந்தமாக  வளைந்து ஓடும்  அரவம்,  மீதி இடத்தில் கொன்றை மலர்,    இதெல்லாம் சிரத்தில்  அணிந்த   பரமேஸ்வரன்  இளையமகன் சுப்பிரமணியன் அல்லவா?. 

சர்க்கரை, பழம் போல்  இனிக்கும் மொழியை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியின் பாதங்களை வருடிய மணவாளன் அல்லவோ  இந்த குமரன்?   

இனிக்கும்  சர்க்கரையை விட , தித்திப்பான  பழத்தை விட  இனிமை யான குரலில் கருணை மொழி பேசும்  குறமகள் வள்ளி நாயகியின்  பாதம்  வருடும்  மணவாளன் முருகன் அல்லவா?

இவன்,  ஒரு சமயம் வனவாசத்தின் போது  அருகில் இருந்த சீதாதேவிக்கு துன்பமூட்டிய  காகாஸுரன்  என்பவன்  மீது கருணைகொண்டு கொல்லாமல்  ஒரே ஒரு கண்ணை மட்டும்  குருடாக்கிய  ஸ்ரீ ராமனின் மருமகன் அல்லவா?

சூர பத்மனை  சம்ஹாரம் செய்து,  அவன்  சிறைப் படுத்திய  பிரமனையும்  தேவர்களையும்   சிறை மீட்டு  மீண்டும்  விண்ணுலகத்தை ஆளும்படி   செய்த    ஆடும் மயிலின் மேல் ஏறி வரும் இளையவன்   தேவசேனாபதி அல்லவா  இவன்?

 மஹா விருக்ஷங்கள்  அடர்ந்து  வளர்ந்த, சோலைகள்  சூழ்ந்த  சுவாமிமலையில்  ப்ரணவத்துக்கு  பொருள் சொன்ன,   தந்தைக் கு உபதேசித்த  தனயன் அல்லவா  இவன்?

சூரனை வதைத்து,  கடல் வற்றிப் போக   சக்தி வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாள்  அல்லவா  இவன். ஆஹா  என் முருகா,  தெய்வமே, பெருமாளே,  காலன்  எனை அணுகாமல் காப்பாற்று முருகா.   மறலியை  உதைத்து  மார்க்கண்டேயனைக்  காத்த  மகேஸ்வரன் புத்ரா,  உன்னால் முடியும்டா முருகா, காப்பாற்று.


இந்த  திருப்புகழ் பள்ளிக்கூடங்களில்  நாங்கள்  தினமும் கடவுள் வாழ்த்தில் கூட பாடி இருக் கிறோம். அது 75 வருஷங்களுக்கு முன்பு... இப்போது???  மறந்து விட்ட ஒரு மகத்தான ஸ்தோத்ரம்..  குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நீங்களும் மனப்பாடம் செய்யுங்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...