கதைகள் என்றால் என்ன? நிஜம் என்றால் என்ன? ரெண்டுமே ஒன்று தான் ஸார் . நிஜமா தன்னுடையுஞ் வாழ்க்கையில அல்லது வேறெவருடைய வாழ்க்கையில நடந்த சம்பவத்தை அப்படியேயோ, அல்லது கொஞ்சம் கண் காது மூக்கு வைத்து வேறே பேர் ஊர் கொடுத்து சொல்வது, எழுதுவது தான் கதை.
கற்பனை என்று நாம் சொல்வது நிஜத்தின் வர்ணனை அல்லது நடந்த ஏதோ ஒரு நிகழ்வின் வண்ண, கருப்பு வெளுப்பு வெளிப்பாடு அவ்வளவோ தான்.
ஒரு கதையின் முடிவை நாம் எப்படி வேணுமானாலும் கொண்டுபோகலாம், மாற்றி அமைக்கலாம், ஆனால் அப்படி தீர்மானித்த முடிவும் எங்கோ எப்போவோ எவர் வாழ்விலோ நடந்த ஞாபகத்தில் மறு பக்கம்.
இது உண்மையிலேயே நடந்ததென்று படித்தேன். பேர் ஊர் சம்பாஷணை எல்லாம் என் கற்பனை. நான் தான் சொன்னேனே கண் மூக்கு காது... அதுகள்.
நாகமூர்த்தி ராவ் சுயமாக உழைத்து நல்ல கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலையிலிருக்கிறான். ஊரில் கிராமத்தில் அப்பா அம்மா விவசாயம். எப்படியோ படித்து ஏதோ மார்க் வாங்கி எங்கேயோ வேலை கிடைத்து சென்னையில் நிறைய சம்பளம் வாங்கி ஊருக்கு அனுப்புவான். முடிந்தபோதெல்லாம் ஊருக்கு போவான்.
செலவு சிக்கனமாக வாழ்ந்து சம்பாத்தியத்தில் காசு மிச்சப்படுத்தி சேமித்து வைத்திருப்பவன்.
செங்கல்பட்டுக்கு அருகே ஒரு முதியோர் இல்லம். அதில் சில கம்ப்யூட்டர் ரிப்பேர் வேலை செய்யவேண்டும். முதியோர் இல்லம் என்பதால் கையில் நிறைய பிஸ்கட் பாக்கெட்கள் கொண்டு போனான்.
அதை அவர்களுக்கு கொடுக்க எண்ணம்.
அந்த முதியோர் இல்லத்தின் வாசலில் ஒரு வயதானவள் முகத்தில் நிறைய எதிர்பார்ப்புகளுடன் உற்சாகமாக பக்கத்தில் ஒரு பெரிய பையுடன் உட்கார்ந்திருந்தாள்.
ஓஹோ தனது பிள்ளையோ பெண்ணோ யாரோ வந்து அழைத்துப்போக காத்திருக்கிறாளோ? அது தான் முகத்தில் முழு நிலவோ?
உள்ளே அந்த முதியோர் இல்ல அலுவலகத்தில் சில வேலைகள் அவனை இழுத்தடிக்க ஒருவாறு எல்லாம் முடித்துக்கொண்டு காலை ஒன்பது மணிக்கு உள்ளே சென்றவன் மாலை மூன்றரை மணிக்கு வெளியே வந்தான்.
காலையில் பார்த்த அதே கிழவி, வாசல் அருகே பையோடு. முகத்தில் மலர்ச்சியோடு.
ஐயோ பாவம் காலையிலிருந்து மாலை மூன்று மணிவரையா ஒருவள் காத்திருக்கிறாள்? நாம் வேண்டு மானால் அவளை எங்கே போகவேண்டுமோ அங்கே ஸ்கூட்டரில் உட்காரவைத்து கொண்டுவிடுவோமா?
அருகில் இருந்த செக்யூரிட்டி ஆபிஸ் மேனேஜரிடம் கேட்டான்:
''ஏன் சார் அந்த அம்மாள் காலையில் நான் ஒன்பது மணிக்கு பார்த்தபோதிலிருந்து இதுவரை வாசலையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறாங்க? யாருக்காக காத்திருங்காங்க? யாரும் இன்னும் வரலையா?
''அந்த அம்மா பத்தியா கேக்கறீங்க? பாவம் அதுக்கு புள்ளே குட்டி நாப்பது வருஷம் வரை இல்லைங்க. எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டு ஒரு புள்ள பிறந்தான் . ஒரே பையன், லேட்டா பிறந்தவன். செல்லமா வளத்தாங்க. படிச்சு பெரிய ஆளா யிட்டான். அப்பா செத்துட்டார். பையனுக்கு அம்மாவை பத்தி கவலை இல்லே. எப்படியாவது அமேரிக்கா போவணும்னு ஒத்தக்கால் லே நின்னு வேலை கிடைச்சுடுது. அம்மாவை எங்கே கூப்பிட்டு போறது?
இந்த முதியோர் இல்லத்தை பத்தி எங்கேயோ கேள்விப்பட்டு இங்கே வந்தான்.எங்கிட்டே தான் பேசினான்.
' சார் எனக்கு வெளியூர் அர்ஜென்ட்டா போவணும். வீட்டிலே என்னை தவிர வேறு யாருமில்லை. எங்கம்மாவை ஒரு கார்லே அனுப்பறேன். இங்கே வருவாங்க. வந்தா இங்கே சேர்த்துக்குங்க, முடிஞ்சா நானே கொண்டுவந்து விடறேன்.
ஒரு வருஷம் பணம் கட்டிடறேன். நடுவிலே நான் வரமுடியாது. எனக்காக காத்திருக் கவேண்டாம். பேப்பர்ல என் கையெழுத்து எங்கே வேணுமோ அங்கெல்லாம் வாங்கிக்கிங்க இப்போவே'' என்று பணம் கட்டிட்டான் . நாங்களும் ஒத்துக்கிட்டோம்.
''அம்மா எப்போ வருவாங்க?''
'
'ரெண்டு மூணு மணி நேரத்திலே அனுப்பறேன்'' னான்.
சொன்னபடியே அம்மாவோடு அவனே வந்தான். என் எதிரே அம்மாகிட்டே என்ன சொன்னான் தெரியுமா?
''இது என்ன இடம் டா நாகு?''
'
'இது ஒரு கோவில் மாதிரி மா, இதுலே உன்னை மாதிரி நெறைய பேரு சந்தோஷமா இருக்காங்க மா. நீ உள்ளெல்லாம் போய் பாரும்மா. இந்தா இந்த கூடையில் நிறைய பழம் வாங்கி வைச்சிருக்கேன். அதெல்லாம் எல்லாத்துக்கும் கொடுத்துட்டு அவங்க கூட பேசிக்கிட்டு இரும்மா . நான் அர்ஜண்டா வேலையா வெளியே போவணும். வேலை முடிஞ்சதும் அப்புறமா வரேன்.''
அந்த அம்மா சந்தோசமா உள்ளே வந்தாங்க. இங்கே இருக்கிறவங்க கிட்டெல்லாம் பழம் கொடுத்தாங்க. அவங்களும் சந்தோஷமா வாங்கிக்கிட்டாங்க. அவங்கள யார் என்னன்னு எல்லாம் கேட்டாங்க பேசினாங்க. அழுதாங்க.
அப்புறமா அவங்களை ஒரு ரூம் கிட்டே அழைச்சிட்டு போனேன். அதுலே ஒரு படுக்கை. ஒரு ஜன்னல். மேலே மின்விசிறி. ஒரு லயிட்.
''எதுக்குங்க இந்த ரூமை காட்டறீங்க, இங்கே யாரும் இல்லையே?''
''இது தாங்கம்மா உங்க ரூம். அது தான் உங்க படுக்கை''
''எனக்கு எதுக்குப்பா இங்கே படுக்கை?''
''உங்க பையன் உங்களை இங்கே சேர்த்துட்டாரும்மா''
அதிர்ச்சியிலே அந்த அம்மா கீழே விழுந்துட்டாங்க. அழுதாங்க. ராத்திரி பூரா தூங்கலே . அப்புறமா களைச்சு போய் தூங்கிட்டாங்க.''
மறுநாள்லே இருந்து தினமும் வீட்டுக்கு போக கையிலே இருந்த பை, மூட்டையோடு வாசலே வந்து உட்கார்ந்துக்குவாங்க. சாயந்திரம் வரை காத்திருப்பாங்க. அப்புறம் ரூமுக்கு அனுப்புவோம், கத்தி அழுது, தன்னை தானே அடிச்சுக்குவாங்க. களைச்சு தூங்கிடுவாங்க. மென்டலா யிட்டாங்க ஸார்''
அந்த பையனைக் கூப்பிட்டு விஷயம் சொல்லலாம்னு நான் எவ்வளவோ அவன் கொடுத்த போன் நம்பர், வீட்டு அட்ரஸ் எல்லாம் தேடி அலைஞ்சும் அவன் கிராதகன் தப்பு அட்ரஸ், ராங் போன் நம்பர் கொடுத்திட்டு போயிருக்கான். யாருன்னு தெரியலே.
நானே இந்த அம்மாவை என் சொந்த பொறுப்பிலே வளக்கறேன் ஸார்
அந்த அம்மா விஷயம் கேட்டு யாராவது அந்த அம்மா பிள்ளையை திட்டியோ, தப்பாவோ பேசிட்டா அவ்வளவு தான் .
சிங்கம் மாதிரி பாஞ்சு அடிச்சுடுவாங்க. அவன் நல்ல பையன் வருவான் னு தினமும் காத்திருக்காங்க பாவம்.''
ஒண்ணரை வருஷம் ஆயிடுச்சி சார். அந்த அம்மாவுக்கும் அவனைப் பத்தி ஒன்னும் சொல்ல தெரியலே இப்போ.
ஸார், என்னுடைய ரிக்வெஸ்ட். உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்டே எல்லாம் சொல்லுங்க ஸார் .
அம்மா அப்பாவை கைவிட்டுட்டு கை நிறைய சம்பளம் வேண்டாம் ஸார் . அவர்களோடு கூழோ கஞ்சியோ காச்ச்சி குடிச்சுட்டு சந்தோஷமா ஒண்ணா இருக்கறதுக்கு எதுவும் ஈடாகாது சார். நம்ம மேலே அவங்க வச்சிருக்கிற அன்புக்கு பாசத்துக்கு எவ்வளவு பணமும் ஈடாகாது ஸார் ..
நான் அதை இங்கே வரவங்க கிட்டே அல்லாம் சொல்றேன். இங்க சேர்த்தா சீக்கிரம் வீட்டுக்கு கூப்பிட்டு போயிடுங்கன்னு.....
இந்த அம்மாவை என் அம்மா மாதிரி பாத்துக்கறேன் சார். எனக்கு சின்ன வயசிலேயே அம்மா போய்ட்டாங்க ஸார் .
No comments:
Post a Comment