அம்மா அம்மாதான்.....J K .SIVAN
நாணாவுக்கு அப்பா இல்லை. அம்மா தான் பாட்டியோடு வீட்டில் அவனை சிறுவயதிலிருந்து பொத்தி பொத்தி வளர்த்தாள் . அவளுக்கு படிப்பு ரொம்ப கிடையாது. ஏழாவதுடன் பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விட்டதால் தானே எழுத படிக்க தெரிந்துகொண்டாள் . ரொம்ப கெட்டிக்காரி. திடீரென்று கணவன் நிர்கதியாக விட்டுவிட்டு போய்விட்டான். உட்கார்ந்து சாப்பிட வசதியில்லை. உழைத்து தான் அடுத்தவேளை வயிற்றை நிரப்ப வேண்டும். இருக்கும் நகை பணம் எல்லாம் அவன் மருத்துவ செலவுக்கும் ஈமச்சடங்குக்கும் தான் பயன் பட்டது. அதுவும் போதாமல் மற்றவர்கள் கொடுத்த பணமும் ஒருவழியாக அவற்றை நிறைவேற்ற தேவையாக இருந்தது.
நாணாவுக்கு அப்பா இல்லை. அம்மா தான் பாட்டியோடு வீட்டில் அவனை சிறுவயதிலிருந்து பொத்தி பொத்தி வளர்த்தாள் . அவளுக்கு படிப்பு ரொம்ப கிடையாது. ஏழாவதுடன் பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விட்டதால் தானே எழுத படிக்க தெரிந்துகொண்டாள் . ரொம்ப கெட்டிக்காரி. திடீரென்று கணவன் நிர்கதியாக விட்டுவிட்டு போய்விட்டான். உட்கார்ந்து சாப்பிட வசதியில்லை. உழைத்து தான் அடுத்தவேளை வயிற்றை நிரப்ப வேண்டும். இருக்கும் நகை பணம் எல்லாம் அவன் மருத்துவ செலவுக்கும் ஈமச்சடங்குக்கும் தான் பயன் பட்டது. அதுவும் போதாமல் மற்றவர்கள் கொடுத்த பணமும் ஒருவழியாக அவற்றை நிறைவேற்ற தேவையாக இருந்தது.
இனி இந்த பையனை நாணாவை எப்படியாக படிக்க வைத்து பெரியவனாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் அவளை தியாகியாக்கியது. இரவும் பகலும் உழைத்தாள் . எப்படி? அண்டை அசல், தெரிந்தவர்கள் வீட்டில் சமையல் செய்வது, குழந்தையை பார்த்துக் கொள்வது, சாமான்கள் தேய்த்து துணி துவைத்து..... இப்படி தான். வேறெப்படி?
நானாவும் நன்றாக படித்தான். வளர்ந்தான். ஒரு பெரிய கம்பனியில் உத்யோகம். வெளியூருக்கு உள்ளூருமாக சுற்றுவான் . பாட்டியும் உலகில் இருந்து விடைபெற்றாள் . மூன்று வருஷம் முன்பு, பெரிய இடத்துப் பெண் குடும்பம் அவனை மாப்பிள்ளையாக்கி கொண்டது. அவர்கள் உள்ளூரிலேயே ஒரு பங்களாவில்
வாழ்ந்தார்கள்.
அம்மா?? வயதான அம்மாவை ஒரு முதியோர் இல்லத்தில் வாழ வழி ஏற்படுத்திவிட்டு வீட்டு மாப்பிள்ளை யாக அவர்களோடு சென்றான். ஊருக்கு கடைசியில் எங்கோ ஒரு கிராமத்தில் 70 கி.மீ. தூரத்தில் இருந்த அந்த தனிமையான முதியோர் இல்லத்திற்கு பணம் அனுப்பிவிட்டு அம்மாவுக்கும் ஏதாவது பணம் அவர்கள் மூலமாக தர ஏற்பாடு செய்தான். அவன் மனைவிக்கும் குழந்தைக்கும் அவளைப் போய் பார்க்க ஒருநாளும் நேரமே கிடைக்காமல் இதோ மூணு வருஷங்கள் ஓடிப்போய்விட்டது.
விசேஷ நாட்களில் அவன் மட்டும் முதியோர் இல்லத்தை கூப்பிட்டு அம்மாவிடம் பேசுவான். ஓடோடி வருவாள். குரலில் வெள்ளமாக பாசம் இழையும்.
''வாயேண்டா ஒருநாள் உன்னைப்பார்க்கவேண்டும் போல இருக்கு''
''இதோ வரேன்மா ''. இதுவரை ஏனோ அந்த ''இதோ'' ரெண்டுவருஷமாக வரவில்லை.
அம்மாவுக்கு மார்கழி முதல் தேதி பிறந்த நாள்ஆச்சே என்று நினைத்துக்கொண்டே காரில் போய்க் கொண்டிருந்தான் நாணா. ஒரு மலர்கள் செண்டுகள் விற்கும் இடத்தில் அவனை அறியாமல் கார் நின்றது. உள்ளே போய் அம்மாவுக்கு பிடித்த ரோஜா மலர்களில் பெரியதாக நாலு செலக்ட் பண்ணி முதியோர் இல்லம் அட்ரஸ் கொடுத்து அம்மாவுக்கு அனுப்ப பணம் கொடுத்து விட்டு வாசலில் திரும்பும்போது ஒரு சிறிய எட்டு பத்து வயது பெண் கண்களில் நீரோடு கடை வாசலில் நிற்பதைக் கண்டான். மனது என்னவோ பண்ணியது. அம்மாவின் மீது இருந்த பாசத்தின் மீதியோ??
''என்ன பாப்பா நிற்கிறே இங்கே. என்ன வேண்டும்?''
''எங்க அம்மாவுக்கு பூ கொடுக்கணும். ஒரு பெரிய பூ வாங்கணும். பதினஞ்சு ரூபாயாம் என்கிட்டே சேர்த்து வச்சது நாலு ரூபா தான் இருக்கு ''
''பரவாயில்லை வா உனக்கு நான் வாங்கி தரேன்''
.
அவள் ஆசைப்பட்ட பூவை வாங்கி கொடுத்துவிட்டு திரும்பினான். அந்த பெண் நொண்டி நொண்டி நடப்பதைப் பார்த்ததும் மனதில் மறுபடியும் அம்மா பாசமோ? காரை அவள் பக்கம் நிறுத்தி
''ஏறிக்கோ உன் வீட்டில் அம்மா கிட்டே கொண்டு விட்டுட்டு போகிறேன். எங்கே போகணும் வழி சொல் ''
''அதோ அப்படி, இங்கே திரும்பணும் இன்னு கொஞ்ச தூரம் அந்த மூலையிலே தான்...... பெண் வழிகாட்டின இடம் ஒரு மயான பூமி வாசல்...
''என்ன பாப்பா இது சுடுகாடு. உனக்கு வீடு எங்கே இருக்குன்னு வழி தெரியலேயா. அட்ரஸ் சொல்லு நான் உன்னை அங்கே கொண்டு விடுகிறேன்.
''அம்மா உள்ளே இருக்கா''
''ஓஹோ இங்கே வேலை செயகிறாளோ?''
உள்ளே போனார்கள்.
அந்த பெண்ணின் அம்மாவைப் புதைத்திருந்த குழியின் மேல் புதிதாக ஒரு மண் மேடு. சமீபத்தில் தான் புதைக்கப் பட்டிருக்கிறாள். அதன் மேல் அந்த சிறுமி பூவை வைத்தாள் . மண் மேட்டை ஆசையாக கட்டிக் கொண்டு முத்தமிட்டாள்...
நாணா திடுக்கிட்டான். அவனை என்னவோ உணர்ச்சிகள் தின்றன. சிறுவயது ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவன் வாழ்க்கை, வளர்ந்த விதம், அவன் மீதான அம்மாவின் அக்கறை எல்லாம் பளிச்சிட்டது.
காரைத் திருப்பினான் நாணா. பூக்கடைக்கு சென்றவன் அம்மாவுக்கு அனுப்ப இருந்த பூச்செண்டுகளை அனுப்பவேண்டாம் என்று கையில் வாங்கிக் கொண்டான். கார் பறந்தது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு முதியோர் இல்லத்தில் அம்மாவுக்கு நாணாவைப் பார்த்ததில் பரம சந்தோஷம். கண் சரியாக தெரிய வில்லை. அவனை அருகே அணைத்து தலையைத் தடவி கொடுத்தாள் வழுக்கை மண்டை உச்சியை முகர்ந்தாள்.
''ரொம்ப சந்தோஷம்டா நாணாப்பயலே ரெண்டு மூணு வருஷமாச்சு உன்னை பார்த்து. ஊரிலே இல்லையோ?''.
''ஆமாம் அம்மா மூன்று வருஷமாக நியூஜிலாந்திலே இருந்தேன். திரும்பி வந்து ரெண்டு நாள் ஆறது.''
கூசாமல் பொய் சொன்னான். அது அம்மாவுக்கு திருப்தி அளிக்கும் பக்ஷத்தில் உண்மை தானே. உள்ளூரில் இருந்துகொண்டு பார்க்க வரவில்லை என்றால் எப்படி வருந்துவாள்''
'' ஸரஸ்வதி குழந்தையெலாம் சவுக்கியமா அப்பா?''
''அவா எனக்கு முன்னாலேயே மூணு வருஷமா லண்டன் போய்ட்டாம்மா. அவ அங்கே டாக்டர். நானே போய் பார்த்து ஒரு வருஷமாகிறது...இந்தியா வரணும் உன்னை பாக்கணும்னு அடிக்கடி போனிலே சொல்றா.....
இது தான் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பது. தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
அம்மாவிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே கூட இருந்து அவள் ஊட்டி விட்டதை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினான். இனி ரெண்டு நாளைக்கு ஒருமுறை என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டான். திரும்பி பங்களா செல்லும் வழியில் அந்த சிறுமியின் முகம் மீண்டும் கண்ணீரோடு தெரிந்தது. தனது கண்ணீரைத்
துடைத்துக் கொண்டான்.
''பாப்பா நீ இறந்தவளை இருப்பவளாக கண்டாய். நான் இருப்பவளை இறந்தவளாக்கியவன் மா ''
No comments:
Post a Comment