Thursday, December 31, 2020

newyear

 

        இன்னொரு  நம்பர்  2021.....  .J K SIVAN


'' அட,  திரும்பி பார்க்கறதுக்குள்ளே இன்னொரு வருஷமா?   இந்த வருஷம்  திரும்பி பார்க்கிறது கூட  வீட்டுக்குள்ளேயே தான்...    முக்கா வருஷத்துக்கு மேலே ஆயிட்டுது  வெளி உலகம் பார்த்து.. இன்னும் தான் இந்த  பெயில் இல்லாத ஜெயில்..  எங்கே  வெளியே போறது. கை  கொடுக்கிறது  எல்லாம்.  இனிமே  என் கை  யாருக்கும் கிடைக்காது...

.. நாளையிலிருந்து  ஒரு  புது வருஷம்........ அப்படின்னா  என்ன அர்த்தம்?   ஒரு நம்பர் கூட  2020+1  =  2021  அவ்வளவு தானே. ஒரு இன்கிரிமெண்ட் increment   எல்லோருக்கும் இலவசம்.  free . ஒரு  வயசு கூட என்று சொல்லிக்   கொள்ள வேண்டியது தான்..  இப்படி  புதுசுன்னு சொல்லிக்கிறதாலே  இனிமே கீழே சொன்னதெல்லாம்  நடக்கபோகிறதா?

எந்த கவர்மெண்ட்  ஆபிஸ்லேயும், ரிஜிஸ்டர் ஆபீஸ்லேயும்   காசு வாங்காம  காரியம் நடக்குமா? 
கொடுத்த காசுக்கெல்லாம்  ரஸீதா  கொடுக்கப்போகிறார்கள்?
ஓட்டுக்கு  காசு  உண்டா? கொடுக்கறது மட்டும் தான் தப்பா, வாங்கறது இல்லையா?
இனிமேல்  தங்கத்திலேருந்து தக்காளி  வரை  விலை  பாதிக்குமேல்  குறையப்போறதா?
அக்டொபர்  நவம்பர்லே  பெஞ்ச மழை  இனிமேல் மாசாமாசம்  பெய்யுமா?
ட்ரம்ப் ஸ்டம்ப்  ஆகலே, அவரு தான்  தல  ன்னு  அமேரிக்கா சொல்லுமா?
சுப்பிரமணியனை பிடிச்சு  செபாஸ்டியனா  மாத்தப்போறதில்லையா?
பேப்பர்லே  கொலை கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம்  கோர்ட் கேஸ் எங்கேயும் நடக்காதா? அதனாலே   செயதிகள் சுட சுட  எதுவுமே வராதா, விநாயகர் அகவல்,  கந்த ஷஷ்டி கவசம் படங்களோடு  மட்டும்  தானா?
மாநில மத்திய  சட்ட சபைகளில்  முழு நேரமும் சண்டையே இல்லாமல் எல்லோரும் சமாதானமாக மரியாதையோடுஒத்துமையா  நாட்டுக்கு  சேவை செயது நல்ல பேர் எடுக்க போறாங்களோ?  அன்பா   பேசப்போகிறார்களா?
எல்லோரும் எதற்காக, ஏன்,   நம்மை  ஆளவேண்டும்  என்று  இப்படி  துடித்துக்கொண்டு   போட்டி போடுகிறார்கள்.  ஒருவேளை போட்டி போட்டுக்கொண்டு நமக்கு நல்லது செய்ய வா?  எல்லாருக்குமே  பொதுநல சேவை, உபகாரம் மட்டும் தான் குறிக்கோளா?  சுயநலமே இல்லாத இத்தனை பேரா நமது நாட்டில்???.  பரவாயில்லையே. இந்த வருஷம்  நிச்சயம் புது வருஷம் தான்.  
ஊழல் என்பதே யாரும்  இனிமேல்  செய்யப்போவதில்லையா?  அந்த வார்த்தையே  வழக்கில் இருக்காதோ? நமக்கு  ஊழலில் வழக்கில் மாட்டிக்கொண்டவர்களைத் தானே தெரியும்?
கோவில்கள் இனிமேல்  திறக்குமா? திறந்தால்  ஸ்பெஷல் டிக்கெட்டுகள் இருக்காதாமா ?
அக்ஷய திதி அன்று எல்லோரும் தகரத்தில் நகை செயது போட்டுக் கொள்வார்களோ?
எந்த காய்கறியும் கிலோ 20-30 ரூபாயாக குறையப்போகிறதா?
போர் வெல் எனும் குழாய் கிணறுகள் இனிமேல் மூடியே  இருந்து  குழந்தைகளை விழுங்காதா?
பெண்கள் தனியாக எங்கும் எப்போதும்  போய் வர முடியுமோ?


ஏன்  இப்படி என்னவெல்லாமோ கேட்க  ஏன்  தோணுகிறது?  
எதிர்பார்ப்பா? இதுவரை  இத்தனை வருஷங்களில்  எதிர்பார்த்தது  என்ன நடந்தது?.  எதிர்பாராதது  சினிமா தான் நன்றாக ஓடியது.
அப்புறம் என்ன புது வருஷம்.?  
என்ன புதுசா கிழிக்கப்போறோம்?  
வழக்கமா கிழிக்கிற காலண்டர் காகிதம் இனிமேல்  புது அட்டையில் கிழிக்கப்போறோம்.

அடப்பாவி,  என் சின்ன வயசிலே  எத்தனை வருஷங்கள்  வீணாக்கி இருக்கிறேன்? புது  வருஷம்  வரப்போகிறது  என்று  அக்டோபர்  நவம்பரில் இருந்தே   யார் யாரையோ அடிக்கடி தொந்தரவு பண்ணி கடை கடை யாக ஏறி காலண்டர் கேட்பேன்,  கட்டம்போட்டது, பன்னிரெண்டு காதிகம், ஆறு காகிதம்,  ஒரே காகிதம்,  சின்னது பெரிசு, அட்டை,   எது கொடுத்தாலும்  வேண்டாம் என்று சொன்னதேயில்லை. அதெல்லாம் என்ன ஆயிற்று?
எழுதாத போதே டயரி  பிச்சை எடுத்திருக்கிறேன்.   அதைக்  கொடுக்காமல் எத்தனைபேர் எனக்கு டிமிக்கி கொடுத்தார்கள். பிகு பண்ணி  அலைய விட்டார்கள்.  நான்  மட்டுமா  என்னைப்போல் பலர்......அந்த முகமெல்லாம்   இப்போது  என்னை விட்டு  எங்கே  போய்விட்டது?. 

செய்ததையே திரும்ப செய்யப்போகிறோம். இது பலகாலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதில் எதற்கு புது வருஷ  பாசாங்கு?

இதில் வேடிக்கை என்னவென்றால், ஏதோ நாம் கை கொடுத்து குலுக்கி ''ஹாப்பி நியூ இயர்'' சொன்னால் மேலே சொன்ன தெல்லாம் நடந்துவிட்டது போல ஓரு கனவு சந்தோஷம்.!

அடே , வெள்ளைக்காரா? போகும்போது உன் பாஷை, பழக்கம் வழக்கம் இந்த குருட்டு சப்ரதாயம் எல்லாம் ஏன் எடுத்துக்கொண்டு போக மறந்துவிட்டாய்? ஒரு வேளை இது எல்லாம்   பகுத்தறிவு இல்லையோ?  

ஐயா, தெரியாதைய்யா, புது வருஷம் என்றால் ஏதோ தீர்மானம் செய்து கொள்ளவேண்டும் என்று சிலர் நினைத்தால், சிலர் , என்ன பலரும் இதை கொஞ்சம் நினைக்கலாம். வித்தியாசமாக இருக்குமே.

''மனசு பகவானின் இடம். அதைக் குப்பைத் தொட்டியாக்கி இருக்கிறோம். அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அமர வைத்து, நாமும் அமைதியாக அமர்ந்து விட வேண்டும். தினமும் ஒரு ஐந்து நிமிடங் களாவது தியானம் செய்யவேண்டும். லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது. ஏனெனில் லோகம் மூழ்கும்போது நமக்குக் கை கொடுப்பது இதுதான்.
பணத்தைக் கொண்டு பகவானுக் காகவும் ஏழைகளுக்காகவும் பலவிதங்களில் தர்மம்செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும்
.பாபத்துக்கு இரண்டு சக்திகள்.
ஒன்று இன்று, இப்போது, நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது.
இரண்டாவது, நாளைக்கும் நாம் இதே தவற்றைச் திரும்பச் செய்ய தூண்டுவது. 
இதுதான் பழக்க வாசனை என்பது. இந்த வாசனையை மங்க வைத்து, புண்ணியங் களைச் செய்து  புண்ணிய வாசனை யை ஏற்றவேண்டும். வாசனை தான் மீண்டும் மீண்டும் பாவத்தில் நம்மை இழுக்கிறது. அதற்காக பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கள் நம்மை விடவே  மோசமாணவர்கள்  கூட பக்தர்களாகவும் ,ஞானிகளாகவும் ஆகியிருக்கிறார்கள்.பாபிகளை ரட்சிக்கா விட்டால்   பகவானுக்குத்தான் என்ன பெருமை? .
நாம் பாவியாக இருப்பதாலே தான் அவனுக்குப் பதித பாவனன் என்ற பெயர். அவனுக்கு அந்த பெருமையை நாம் தான் கொடுக்கிறோம்.
“என்னை மட்டும் சரணடைந்துவிடு. நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். '' ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச''. பயப்படாதே” என்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
நாம் தைரியமாக இருப்போம். எத்தனை சுற்றுச் சுற்றினாலும் அத்தனையையும் திருப்பிச் சுற்றினால் தான் கட்டு கழளும். பாப வாசனை அவ்வளவும் தீர அத்தனை அளவு புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். அப்படிச் செய்தால் சுற்று முடிச்சு அவிழ்ந்து விடும். 
பொறுமை
யாக பகவானை நம்பி நம்தர்மத்தைச் செய்தால் நிச்சயம் கை கொடுப்பான்.

நாம்  இனிமேல்  யாருக்கும்  கை  கொடுக்கப்போவதில்லை.  வணக்கம், நமஸ்காரம், நமஸ்தே தான்.  மூன்றடி தள்ளி நின்று.....  முகத்தில் இனி மாஸ்க்  ஒரு  ஆபரணமாகப்போகிறது நிதர்சனம். 
கூடுமானவரை  கூட்டங்களை தவிர்ப்போம், வெளியே  சாப்பிடுவதை குறைப்போம்,  வெளியிலிருந்து வந்தால் குளிப்போம், கைகால்களை நன்றாக கழுவுவோம்.  வெந்நீர் குடிப்போம்.

கொரோனா  ஒரு சில நல்ல மறந்து போன  பழக்கங்களையே  திரும்ப கொடுத்ததற்கு நன்றி. அதற்காக அது மீண்டும் வரவேண்டாம். வரவேற்க யாரும்  தயாரில்லை.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...