ஒரு மழைக்கால நினைவு. J K SIVAN
''ஒரே ஒரு ஊரிலே ஒரு ராஜா......'' இது தான் மந்திர வார்த்தை...
எந்த ஊர், எந்த ராஜா, எவ்வளவு காலமாக? இதெல்லாம் அவர்களுக்கு முக்கியமில்லை.... அப்புறம் என்னாச்சு.? ... அது தான் அவசரமாக தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்.
இப்போதெல்லாம் இந்த கூட்டத்தை காணமுடியாது. எந்த ராஜா, எந்தவூர் எதற்கு அவனைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று அறிந்தபின் தான் கிட்டே வருகிறார்கள். அவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பதில் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
அறுபது வருஷங்களுக்கு முன்பு ''அவன் பேர் மார்த்தாண்டன்'' என்று சொன்னதும் அந்த மார்த்தாண்டன் குழந்தைகளின் மனதில் ஏதோ இனம் புரியாத உற்சாகத்தை அளித்தான். அவன் சாதாரணமானவன் அல்ல. மஹா வீரன், ஆழமாக கடலில் நீந்துவான். யானை சிங்கத்தோடு சண்டை போட்டு ஜெயிப்பான். மரத்துக்கு மரம் கயிறில் ராணியை ஒரு கையில் தூக்கிக்கொண்டு தாவி தாவி தப்பித்துக் கொள்பவன்.
உயரமாக தாண்டுவான், பறப்பான், குதிரையில் வேகமாக போவான். கையில் கத்தி இருந்து கொண்டே இருக்கும். தூங்கும் போது கூட....
எழுபது எழுபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு பாட்டி அத்தை பெரியம்மா, என்று யாரோ ஒருவளைச் சுற்றி நான் மற்றவர்களுடன் அமர்ந்தபோதும் இதே அனுபவம் பெற்றிருக்கிறேன். கதையைத் தவிர வேறு பொழுதுபோக்கு சாதனம் அப்போது வேறு தெரியாது. ஏனென்றால் வேறு கிடையாது. டிவி ரேடியோ கதை புத்தகம் எல்லாம் இல்லை. பகல் பொழுதாக இருந்தால் சுதந்திரமாக செருப்பில்லாமல் வீட்டுக்கு வெளியே மண்ணில் மரத்தடியில் தெருவில், (அப்போது வாகனங்கள் தெருவில் கிடையாது) ஓடுவோம், ஆடுவோம், முழங்காலில், முழங்கை முட்டியில் கீழே விழுந்து, சிராய்த்து, காயத்தில் ரத்தம் சொட்டும்.
சாயந்திரம் பொழுது சாய்ந்து விட்டால், இருள் சூழ ஆரம்பித்து விடும். மின் விளக்குகள் கிடையாது. மரங்கள் பேயாக பிசாசாக மாறி பயமுறுத்தும்.. ஆகவே வீட்டில் கூட்டமாக அத்தை, பாட்டி தான் எங்கள் மனதில் சந்தோஷம் விளைவிக்கும் கடவுள். வீட்டில் எங்கோ ஒரு இடத்தில் ஸ்டூல் மேல், அல்லது மேலே கொக்கியில் தொங்கும், , துடைத்து கேரோஸீன் மண்ணெண்ணெய், ஊற்றி, திரியை நிமிண்டி விட்டு மிதமாக எரிய விட்டு வெளிச்சம் தரும் ஹரிக்கேன் விளக்கு எங்களுக்கு போதுமானது.
வாசலில் மழை பெய்து ஓட்டின் வழியே தொர தொர வென்று ஒழுகும்போது அது ஒரு வேடிக்கை. கீழே தேங்கி நதியாக ஓடும் மழை நீரில் நாங்கள் செய்து மிதக்க விட்ட காகித கப்பல்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று ஜெயிக்கும். சில நீர் குடித்து முழுகும். கைகளை நீட்டி மழைநீரில் அளைவது பிடித்த காரியம்.
பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் மழை நீர் மேலே கூரையில், தகர கொட்டகையில் இருந்து சொட்டும்போது தரையெல்லாம் நீர் தேங்கி உட்கார முடியாததால் பள்ளி விடுமுறை. '' எல்லோரும் வீட்டுக்கு போங்கள்'' என்று சுப்ர மணிய அய்யர் சொல்லும்போது பரம சந்தோஷம்.
நங்கநல்லூரில் வீடு கட்டிக்கொண்டு வந்தபோது கொஞ்சம் மழை பெய்தாலும் மின்சாரம் இருக்காது. எங்கும் இருள். தவளைகளுக்கு எப்படித்தான் தெரியுமோ எல்லாம் ஒன்றாக ஒரே ஸ்வரத்தில் விடாமல் கத்துவது வேத மந்த்ரங்கள் கோவிலில் பலபேரால் உரக்க சொல்லப்படுவது போல் ஒலிக்கும். வேட்டியை மடித்து டப்பா கட்டு கட்டிக் கொண்டு ரப்பர் செருப்பை கையில் எடுத்துக் கொண்டு நடந்திருக்கிறேன். செருப்பு காலில் இருந்தால் பின்புறம் முதுகு வரை வேஷ்டி யில் சந்தனம் பூசிவிடும். காலைத்தூக்கி வைக்கக்கூடாது. தரையில் தேய்த்துக்கொண்டே தான் நகரவேண்டும். அப்போது தான் எங்கே பள்ளம் இருக்கிறது என்று தெரியும். முழங்கால் வரை தண்ணீர் தெருவில் எங்கும். வெள்ளக்காடு என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாங்கள் அதில் வாழ்ந்தவர்கள். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிவாக மழைநீர் ஓடும். மேடவாக்கம் தெருவை ஒட்டி ஒரு கால்வாய் மடிப்பாக்கத்திலிருந்து மற்றநாட்களில் சாதுவாக நீரின்றி இருக்கும். இப்போது அதை நோக்கி மழைநீர் ஓடி அது சிறிய கடல் போல் உருவெடுக்கும். இப்போதும் அந்த கால்வாய் இருக்கிறது. அளவில் ஒடுங்கி விட்டதற்கு காரணம் ஆக்கிரமிப்பு. அப்போதெல்லாம் மழைக்காலத்தில் அடிக்கடி நங்கநல்லூர் தீவாக இப்படி மாறிவிடும். மீனம்பாக்கம் அல்லது பரங்கிமலை ரயில் நிலையம் செல்வது பெரிய வீரச் செயல். அப்புறம் தான் அங்கிருந்து வெளியுலகம்.
சைக்கிளில் மழைநாளில் செல்வது ஆபத்தானது. கீழே விழாதவர்கள் கிடையாது. கிட்ட இருக்கும் ஆஸ்பத்திரி தாம்பரத்திலோ கிண்டியிலோ.........
மழை விட்டபிறகு பிரயாணம் தொடங்கும். அதுவரை மரத்தடியில், அல்லது ஏதாவது ஒரு கடை, வீட்டின் முன்புறம் மேலே வானத்தை ப்பார்த்துக்கொண்டு மழை நிற்குமா என்று யோசனையில் நிற்போம். குடை கொண்டு போவதில் ரெண்டு ஆபத்து, ஒன்று குடையை மறந்து ரயிலில், ஆபிசில், கடையில் எங்காவது வைத்து விட்டு காணாமல் போகும். ரெண்டாவது மாறி யாருடையதாவது வீட்டுக்கு வந்து திட்டு வாங்கும். ஏன் திட்டு? போகும்போது புதிதாக கிழியாமல் இருந்த குடை, வீட்டுக்கு வந்த பிறகு கம்பிகள் குடையோடு ஒட்டாமல் தனியாக நீட்டிக்கொண்டு , மான் மார்க் இளமையோடு போய், பல்லில்லாத கிழவன் போல் அந்திம கால சிரிப்போடு வந்தால் யாருக்கு பிடிக்கும்? கல்யாண வீடுகளில் செருப்பாகட்டும், மழைக்காலத்த்தில் குடையாகட்டும் ஏன் இப்படி உருமாறி நம்மை அடைகிறது ? இன்னும் புரியாத புதிர்.
No comments:
Post a Comment