Sunday, December 27, 2020

THIRUVEMBAVAI

 

திருவெம்பாவை  J K  SIVAN 


            12 .  காத்து, படைத்து, கரந்து விளையாடுபவன் 

இன்று மணிவாசகரின் திருவெம்பாவையில்  12வது பாடலை ரசிப்போம். மொத்தம் 20 தான். இன்னும் எட்டும்  சீக்கிரமே முடிந்துவிடும்.

12 ''ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்

தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். ''

நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.

திருவெம்பாவையின்  நாயகர்கள்    சிதம்பரேசனும்  அருணாச்சலேஸ்வரனும்.  ஒருவன்  ஆகாச தத்வன் மற்றவன் அக்னீஸ்வரன் பஞ்சபூதேஸ்வரர்கள்.  இதில்  சம்பவம் நிகழும் ஸ்தலமாக மணிவாசகர் குறிப்பிடுவது  அருணாச்சலேஸ்வரம் எனும் திருவண்ணாமலை.  அதைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தாலும் மீண்டும் ஒரு முறை சுருக்கமாக சில உண்மைகள் சொல்கிறேன். கவனத்தில் வைப்போம்.


அருணன் =   உதயகால இளஞ்சிவப்பு சூரியன்;  அசலம்=   அசையாத  மலை. ரெண்டையும் சேர்த்தால் சிவப்பு மலை, முக்திஸ்தலம்,  மற்ற பெயர்கள் அருணகிரி, திருவருணை, அருணை, சுத்த நகரம், சோணா சலம், அனற்கிரி, தென் கயிலாயம், ஞான நகரம், அண்ணா நாடு, சிவலோகம், அண்ணாத்தூர், கௌரி நகரம், தேசு நகரம், முக்தி நகரம், ஞான நகரம், சோணாத்ரி, அருணாத்ரி தலேச்சுரம், சோணகிரி ஆகிய பெயர்களும்  மற்றும் நானறியாத என்னென்னவோ கூட  இருக்கலாம். 

கிருத யுகத்தில் அக்னி மலை,  திரேதா யுகத்தில் மாணிக்க மலை, கிருஷ்ணன் கால  துவாபர யுகத்தில் தங்க மலை, நமது  கலி யுகத்தில் ஞானிகளின் பார்வைக்கு மரகத மலை, நம் கண்களுக்கு வெறும் கருப்பு கல் மலை...

அருணாச்சலத்தை எத்தனையோ கணக்கற்ற ரிஷிகள், முனிவர்கள்,  யோகிகள், ஞானிகள்  தரிசித்து வாழ்ந்து அனுபவித்திருக்கிறார்கள்.   இந்த பழம்பெரும் ஸ்தலத்தில் பல  கல்வெட்டுகள், சாசனங்கள், தமிழ், வடமொழி, கன்னடம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.  இந்த  க்ஷேத்ரம் பற்றி  52 புராதன நூல்கள் புராணங்கள் உண்டு. கூடவே  கூட இருக்கலாம்.

இந்த ஆலயத்தை  அவ்வப்போது கட்டி  செப்பனிட்டவர்கள்  871-1505 வரை பல  அரசர்கள், 
அதாவது  பல்லவர்கள்   சோழர்கள்,  பாண்டியர்கள்  நாயக்கர்கள்  கடைசியில் இப்போது   நமது அறநிலையத்துறை..!!!  விதி யாரை விட்டது.?

மற்ற விவரங்கள் அடுத்த  திருவெம்பாவையோடு வரும்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...