Tuesday, December 22, 2020

THIRUVEMBAVAI

 

திருவெம்பாவை. 




         J.K. SIVAN
 

    7.  மணி வாசகரும்   மழநாட்டு ஸாமவேதீஸ்வரரும் 
 
எல்லோராலும்  கூசாமல் பொய் சொல்வது என்பது ஒரு முடியாத காரியம்.  அது ஒரு  அரிய கலை.   நடக்காத ஒன்றை நடந்தது போல் கால நேரத்தோடு சொல்வது முடியாது. மணிவாசகர் ஒரு தூங்கும் பெண்ணை மற்ற பெண்கள் எழுப்பியதை நேற்று கண்டார். அப்போது அந்த தூங்குகின்ற பெண் ''இன்று உடம்பு அசதி அதனால் சற்று அதிக நேரம் படுக்கையில் புரண்டு விட்டேன். நாளை பாருங்கள் நீங்கள் எழுவதற்கு முன்பே நானே உங்களை உங்கள் வீட்டில் வந்து எழுப்புவேன் என்று சொன்னபோது. அப்படி ஒன்றும் அவளுக்கு எண்ணமே இல்லை. இதோ இன்று காலையும் அவள் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு தான் இருக்கிறாள்.  மற்ற பெண்கள் அவள் சொன்னதை நினைவு படுத்துகிறார்கள்  என்று  ஒரு  திருவெம்பாவையில் அழகான ஒரு காட்சியை அளித்தார்.

இன்று   திருவெம்பாவை  7வது  பாடல்:

7.''அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.''


 ஆண்டாளைப் போலவே மணிவாசகரும், தூங்குகின்ற பெண்ணை துயில் எழுப்புபவர் .'''
அம்மா  தாயே,  நான்  உன்னை  நன்றாக கவனித்ததால்  கேட்கிறேன். 
இன்னுமா உனக்கு தூக்கம். உனக்கு இருக்கும் எத்தனையோ குணங்களில்  இதுவும் சேர்ந்திருக்கிறதோ.

இந்த சிவனைத்தெரியாதா உனக்கு. எத்தனையோ தேவர்கள், முப்பத்து முக்கோடி பேர் என்று எண்ணி வைத்திருக்கிறார்களே, அவர்கள் எல்லோருக்கும் தெரிந்த, எவராலும் அறிய வொண்ணா, விசித்ரன், ஈடிணையற்ற பரமேஸ்வரன், ஆதி அந்தமில்லாத, மூன்று லோகங்களும் புகழும் கங்காதரனை விருப்பத்தோடு எழுப்பும் சங்கு டமருகம், மேளம் எல்லாம் ஒலிக்கிறதே, ஓம் நமசிவாய என்று நீயும் வாய் மணக்க அவனைப் பாட வேண்டாமா.எழுந்திருக்க வேண்டாமா? தென்னாடுடைய சிவனே போற்றி எங்கும் எதிரொலிக்க வேண்டாமா. அவன் பேர் கேட்டாலே, நெஞ்சம் உருக வேண்டாமா. எப்படி. நெருப்பிடம் நெருங்கும் மெழுகு போல. அவனை எவ்வளவு பெருமையாக என் தலைவன், என் துணைவன்,என் அரசன், ஆரமுதன், இன்னமுதன் என எல்லோரும் வாயார பாடுகிறோம். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டு சும்மாவா படுத்திருப்பது. எழுந்து வா பெண்ணே. இந்த தூக்கம் எவ்வளவு பொல்லாதது. அப்படியே ஆளை விழுங்கிவிடுகிறதே.

மறுபடியும் சொல்கிறேன்:   சங்க நாதம் முழங்க, சிவசிவ என்றும் ஓம் நமசிவாய என்றும் சொல்லியவாறே வாயைத் திற. அலகிலா விளையாட்டுடை எம்பெருமானே தென்னாடுடைய சிவனே என  வாய் மணக்கச்  சொல். சொல்லும்போது பக்தியில் அனலிடை பட் ட மெழுகாக உருகு.

என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமுதன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோமே . உன் காதில் விழுந்ததா பெண்ணே?  . நீயும் கேள்.   எங்களோடு சேர்ந்து சொல். அதை விட்டு இன்னமும் உறங்குகிறாயே? தாமச குணமுடைய அறிவிலார் போல, சும்மா வெறுமனே படுத்திருக்கின்றாயே! அடாடா, உன் தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது!  

இந்த  திருவாசக  திருவெம்பாவைப் பாடலை  ரசித்து எழுதும்போது  திடீரென்று ஒரு சிவன் கோவில் ஞாபகத்துக்கு வந்தது.  இதே  மார்கழி மாடத்தில் தான்  நான் அந்த கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு ஒரு தனி யோகம் உண்டு. யாராவது  என்னிடம் வந்து என்னை அருமையான சில கோவில்களுக்கு அழைத்துச் செல்வார்கள். அது ஒரு முன் ஜென்ம புண்யமாக இருக்கலாம். திருச்சி  வாளாடிக்கு  அழைத்தார்கள் அங்கே ஸ்ரீ தத்தாத்ரேயன் வீட்டில் ஆனந்தமாக மூன்று நாள் தங்கினேன். அவர் பல ஆலயங்களுக்கு என்னை அழைத்துச்சென்று தரிசனம் செய்வித்தார். அதில் ஒன்று இது.  என் பழைய டயரி குறிப்பு கண்ணில் பட்டதால் அதைப் பற்றி எழுதுகிறேன்.

16.12.2018 அன்று ஒரு அற்புத சிவனை நான் வாளாடி யாத்திரையின் போது பார்த்ததை சொல்லட்டுமா?
 

திருச்சியிலிருந்து லால்குடி வழியாக திருமங்கலம் என்று ஒரு ஊர். வாளாடியிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரம் முதுகு வலிக்க பிரயாணம் செய்ய தேவை யில்லாத அற்புத சாம வேதிகள் வாழ்ந்த, வாழும் ஊர். சிவனுக்கு சாமவேதீஸ்வரர் என்று பெயர். அம்பாள்  பெயர்  லோகநாயகி.

இது  காவேரிக்கு வடக்கே இன்றும் செழிப்பான ஊர். எனக்கு முன்பே இங்கு சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் எல்லோருமே பஸ், கார் எதுவும் இல்லாமலே தத்தாத்ரேயன் உதவி தேவைப்படாமல் தானாகவே   நடந்து வந்திருக்கிறார்கள். பச்சை பசேலென்ற வயல், செடிகொடிகள், நிறைய ஆறுகள் ஓடும் சோலைவனத்தில் நடக்க கொடுத்து வைத்திருக் கிறார்கள்.

சுருக்கமாக திருமங்கல சாமவேதீஸ்வரர் ஆலய அதிசயங்கள் பற்றி  சொல்கிறேன் :

இந்த சாமவேதீஸ்வரர் தான் ஜைமினி ரஷியை சாமவேதத்தை 1000 சாகைகளாக பிரித்து இங்கேயே எழுத வைத்தவர்.   அந்த கிராமத்தின் பெயர் திருமங்கலம்,  பெயர்.   இந்த பகுதியெல்லாம்  மழ நாடு  என்பார்கள்.  ப்ரஹசரணம் வகுப்புக்காரர்கள் விசேஷம்.  

சிவன் பெயர்  சாமவேதீஸ்வரர். எண்ணற்ற பக்தர்கள் மஹான்கள் தரிசித்த ஆலயம். ரிஷி ஜைமினி சாமவேதத்தை விளக்கி பதம் உரைத்த ஊர். கோவிலில் உள்ள கல்வெட்டில் பரசுராமேஸ்வரம் என்று இதற்கு பெயர் என்று தெரிகிறது. பரசுராமனின் பாவங்கள் விலகிய இடம். லக்ஷ்மி சிவனை உபாசித்த ஸ்தலம். பலாமரம் ஸ்தல விருக்ஷம். சிற்றாறுகள் பொழில்கள் சூழ்ந்த இயற்கை வளம் மிக்க அமைதியான கிராமம். மூன்று பிராஹாரங்கள். வசந்த வாகன மண்டபங்கள். 200 ஏக்கரா நிலம் கொண்ட ஆலயம். மரத்தேர் செப்பம் செய்தாகிவிட்டதா?  ராஜகோபுரம்  பெரிதாக தலை தூக்கி விட்டதா?

அப்பர் சேக்கிழார் ஆகியோர் தரிசித்த சிவன். இனிமேல் தான் விஷயத்துக்கு வருகிறேன். இது சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக கோவிலாக இருக்க இன்னொரு முக்கிய காரணம் இந்த ஊரில் தான் 63 நாயன்மாரில் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்தார். அவரைப் பற்றி எழுதி இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை இங்கே தருகிறேன்:யாதவ குலத்தவர்.  'அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்''  என்கிறார்  சுந்தரர்.

பலவிஷயங்களில் ஆனாயர் கிருஷ்ணனை போலவே இருக்கிறார். யாதவர். பசுக்களை மேய்ப்பவர். புல்லாங்குழலில் இனிய மதுர கானம் புரிந்தவர். அசையும் அசையா சகல ஜீவன்களையும் ஜீவநாதத்தால் கவர்ந்த கலியுக கிருஷ்ணன். பட்டை பட்டையாக திருநீறணிந்து ருத்ராக்ஷமாலைகளோடு காணும் சிவ பக்தர்.

விடிகாலை விடிந்தவுடனேயே பசுக்கள், கன்றுகள் ரெடியாக நாயனாருக்கு காத்திருக்கும். அவருடன் மேய்ச்சல் காடுகளுக்கு சென்று பொழுதுசாய்ந்து அஸ்தமன நேரத்தில் அவற்றோடு திரும்புவார். அதுவரை அவரது நேரம் சிவனை நினைந்து பாடுவதிலேயே கழிந்து விடும்.

வழக்கமான ஒரு கொன்றை மரம் அவரிடம் ஒரு புல்லாங்குழல் இணைபிரியாமல் இடுப்பிலே இருக்கும். அதில் கான வெள்ளம் காட்டை நிரப்பும். காந்தத்தால் கவரப்பட்ட இரும்பு துகள்களைப் போல பக்ஷிகள், மிருகங்கள், சகல ஜீவராசிகளும் மயங்கி அவரருகில் வந்து மெய்ம்மறந்து நிற்கும். இசையின்பத்தில் மூழ்கும்.

இப்படியே நாட்கள் நகர்ந்தது. இசையும் தொடர்ந்தது. ஒரு நாள் பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுதது மந்திரத்தை அழகாக சிவநாம சுகத்தில் புல்லாங்குழல் ஒலித்தது. சகல ஜீவராசிகளும் மயங்கி சுகானுபவம் பெற்றன. நீர் குடிக்க மறந்த, உண்ண மறந்து நின்றன. எதிரி என்ற நினைப்பே இல்லாமல் அருகருகே புலியும் மானும் தலையசைத்து ரசித்தன.பயமே இல்லாமல் பாம்பின் நடனத்துக்கு தவளை தாளம் போட்டது. நேரம் வந்துவிட்டது ஆனாயருக்கு, என்பதால், சிவனே உமாசகிதம் அவரை அணுகி அணைத்து கைலாசம் கூட்டி சென்றான்.

இந்த நாயனாரை வேணுகோபாலன் மாதிரி சிலை வடித்து கோயிலில் வழிபடுகிறார்கள் சிவபக்தர்கள் என்பதால் இவரை ஆனந்த கிருஷ்ணனா ஆனாயநாயனாரா என்று சட்டென்று அடையாளம் காணமுடியாது. தூய பக்திக்கு, இறைஅன்பை நாதோபாஸனை மூலம் பெற்றவர் ஆனாய நாயனார்.''

 எங்கும் சின் முத்திரை காட்டும் தக்ஷிணாமூர்த்தி இங்கே அபய ஹஸ்தம் காட்டி அருள்வது விசேஷம். சுப்ரமணியரும் தேவசேனாவும் நிற்க வள்ளி மயில் மீது அற்புதமாக இங்கு அமர்ந்திருக்கிறாள்.  

ஆறுமுகத்திற்கு இங்கு நான்கு கரங்கள் மட்டுமே!  அதற்கு என்ன காரணம் என்று விசாரித்து அறிந்து கொள்ளவேண்டும்.  கோவிலில் ஒருவரைக்கேட்ட போது   நைஸாக  இந்த வருஷ  மழை பற்றி பேச்சை மாற்றிவிட்டார்.

விஷ்ணு துர்க்கை மகிஷாசுரனை விட்டு சிம்ம வாஹினியாக இருக்கிறாள்.  .சனீஸ்வர பகவானின் காக வாஹனம் வழக்கத்திற்கு மாறாக வடக்கு நோக்கி பார்க்கிறது. இந்த ஆலயத்தில் மட்டும் தான் பைரவரும் காலபைரவரும் அருகருகே நின்று அருள்பாலிக்கிறார்கள்.

 குட்டி குட்டியாக கோவில் கோஷ்டத்தில் தரையிலிருந்து ஒன்றிரண்டு அடி உயரத்தில் இடுப்பு வரை வரிசையாக இராமாயண காட்சிகளை சிற்பங்களாக வடித்த சிற்பிக்கு நமது அனைத்து ஹிந்துக்களின் வணக்கத்தை உங்கள் சார்பாக செலுத்துகிறேன். சில சிற்பங்களை மட்டும் குனிந்து உட்கார்ந்து படமெடுக்க முடிந்தது. இன்னும் எத்தனையோ இருக்கிறது. நீங்களே நேரில் சென்று பார்த்து எனக்கும் போட்டோ அனுப்புங்கள்.

''சாம வேதம் என்றால் என்ன என்று எடுத்துரைத்த ஸ்தலம், ஆலயமாக  இந்த  ஊர்  அமைந்து விட்டது.  அரசாங்கமோ, மற்றும் தனவான்களோ கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன. நாமே ஒன்று சேர்ந்து எழுப்புவோம் என்று சில பக்தர்களின் முயற்சியால் அந்த ஆலயம் உருவானதா, உருவாகிறதா?. இப்படி தேனீ போல் உழைத்து கோவிலை வளரச்செய்யும் இரு நபர்கள் பெயர்கள் :

ஸ்ரீ R. Chandrasekar, 37/2, Third Main Road, Gandhinagar, Adyar, Chennai-600020. (Ph: 24416336) and Kittu Josyar, Thirumangalam, Lalgudi-621703. (Ph: 2541020).

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...