Wednesday, December 2, 2020

PESUM DEIVAM


   "ஸ்வாமி" என்றால் குமாரஸ்வாமியே... !  J K  SIVAN 


கார்த்திகை தீபம். இந்த வருஷம்  மழை கொட்டோ கொட்டு என்று எங்கும்  ஜலமயம்.  அந்தகாரம், காரிருள். என்பது தான் நமது அஞ்ஞானம். இருளை நீக்குவது  ஒளி.  ஒளி தருவது தீபம்.  நமது  அஞ்ஞானம் நீங்கி  ஞான ஒளி நம்முள் புகவேண்டும்.  ''தமஸோமாம் ஜ்யோதிர் கமய'' கார்த்திகை குமரனுக்கு, ஷண்முகனுக்கு, சுப்ரமண்யனுக்கு உகந்த மாதம்.  அவன் ஞானம் தருபவன். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்.  ''ஞான பண்டித சுவாமி நமோ நம:'' என்கிறார்  அருணகிரி ஸ்வாமிகள்.  அவன் ஸ்வாமிநாதன்.  

"ஸ்வாமி" என்றால் பகவான், கடவுள்.  நமக்கு எத்தனையோ ஸ்வாமிகள்.  சிவன், பெருமாள், பிள்ளை
யார்,ஏனைய மற்றவர்கள். பெரிய லிஸ்ட்.  இப்படி  உருவமாக  கண்ணுக்குத்  தெரியும் விக் ரஹங்களைத்
தவிர  கண்ணுக்கே தெரியாத  உருவமற்ற  பரமாத்மாவும்  நமக்கு ''சுவாமி'' ,  ''சாமி'' தான்.  சுப்ரமண்ய சுவாமி  (ஐயோ இந்த பெயர் கொண்ட அரசியல் வாதியை நான் சொல்லவில்லை)  நான் சொல்லும் ''சுப்ரமணிய சுவாமி''  ''கந்த சாமி,'' குமார சாமி''   அந்த   அரசியல் சுவாமி பெயர்  எண்ணத்தில் கலந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது  நிஜமான சுவாமி. முருகன்.   முருகனின் மறுபெயர் அழகு.

மஹா பெரியவா சுப்ரமணிய ஸ்வாமி பற்றி எவ்வளவு  அற்புதமாக சொல்கிறார்: :

 ''இவர் தான் ஸ்வாமி என்று  எது?  எதனால்?  எப்படி? சொல்வது.   'அமரகோசம்'' அப்படி சொல்கிறது.  தமிழிலே  அகராதி, நிகண்டு   மாதிரி  ஸம்ஸ்க்ரிதத்தில்  பிரசித்தமான அகராதி 'அமரகோசம்.   அமரம் என்றால் : அழியாத என்று ஒரு அர்த்தம்.  அமரர்கள் : தேவர்கள், அவர்கள்   பேசும் பாஷை : தேவ பாஷை.   அமரபாஷை. சமஸ்க்ரிதம்.     
கோசம் என்றால்   பொக்கிஷம்.  சப்தக் கூட்டங்கள், சொற்களின் சமூகம் , பொக்கிஷமாக இருக்கிற புஸ்தகம்   ' அமர கோசம்' என்று பெயர் பெற்றதா?  

இந்த அற்புத  அமர பாஷை என்று உலகமே  மூக்கில் கை வைத்து அதிசயிக்கும்  ஸம்ஸ்கிருதத்தை  அதை அறியாத நம்மில் சிலர்  ''செத்த மொழி (dead language)" என்கிறார்கள்.    ஸாஸ்வதமான  அந்த மொழியை  எப்படியாவது  சாக அடிக்க எத்தனையோ யத்தனம் செய்தாலும், அது இன்றும்,  இதை  நான் எழுதும் வரை  சாகாமல் வளர்ந்து கொண்டு ''அமர''  மாக இருந்து  வருகிறது,    அமரகோசம் எழுதியவன் அமரசிம்மன்.  அவன் பெயரால் ''அமர கோசம்''!  போதுமா?  

அமரசிம்மன்  ஒரு சமணன்.  சமண மதம் புகழ் எங்கும் பரவி இருந்த காலம்.  நம்  ஆதி சங்கர பகவத்பாதாள்  தோன்றிய சமயம்    பௌத்த சமண மதங்கள்  நாடெங்கும்  செழித்தோங்கி இருந்தது.  

அமரசிம்மன் மகாபுத்திமான்.  அறிவில் அவனுக்கு ஈடு இணை  யாருமில்லை என பிரமிக்கும்படி,   எல்லா விஷயத்தையும்  தெரிந்து கொண்டு அர்த்தம் சொல்பவன்.    பொதுவாகவே  சமணர்களில்  பலர் சிறந்த படிப்பாளிகள், கல்விமான்கள், பண்டிதர்கள்.  இலக்கியத்தில்  விசேஷ  இடம்  பிடித்தவர்கள்.   தமிழில் ஐம்பெரும் காப்பியங்களிலே சமண சம்பந்தம் அதிகம். காவியரசம் நிரம்பிய  உயர்ந்த நூல்களான   சிந்தாமணி, வளையாபதி எல்லாம் சமண நூல்கள்.    ஸம்ஸ்கிருதத்தில், 'பஞ்ச காவியங்கள்' என்று பொதுவாக   உண்டு.   எனினும்  சமணர்கள், தனியாக தங்கள் மத சம்பந்தமாக ஒரு பஞ்ச காவியம்  வைத்திருக்கிறார்கள். அமரசிம்மனும் அநேக ஜைனமத புஸ்தகங்கள் எழுதினான். ஆனால் இன்று மிஞ்சியிருப்பது  அவனது  அமர கோசம்  ஒன்றுதான். இந்த ஒன்றாவது  மிஞ்சியதற்குக் காரணம் ஜைனர்கள் பரம விரோதியாக நினைத்த நம் ஆதிசங்கரர்தான்.

ஆதிசங்கரர் பாரததேசம் முழுவதும் சஞ்சாரம் பண்ணி,  பல மதவாதிகளை  வாதத்தில் வென்று, கண்டனம் செய்து, வைதிக மதத்தை ஸ்தாபித்த போது  ஒரு  சமயம்  அமர சிம்மனையும் சந்திக்கிறார்.  சங்கர   பகவத் பாதரின்  அத்வைத சித்தாந்தம் என்னவென்றால்   'இருப்பது  ஒரே ஒரு சத்தியம். அதுவே பலவிதமாகத் தெரிகிறது. நாம்  அந்த ஒன்றிலேயே கரைந்து அதுவாகவே ஆகிவிட வேண்டும்' என்பது.  

இதற்கு நேர் மாறாக, பௌத்தர்கள் பொதுவாக எல்லாமே சூனியம், மாயை என்பார்கள். ஆதி ஆசார்யாளும் 'மாயையால்தான் ஒரே பரம்பொருள் பலவாகத் தெரிகிறது. இந்தப் பார்வை போனால் இது அத்தனையும் போய்விடும்', என்று சூனிய நிலையையே சொல்கிற மாதிரி தோன்றினாலும் ,அவர் முக்கியமாகச் சொன்னது 'இல்லாத (சூனிய) மாயையை அல்ல; 'இது போனபின் எப்போதும் நிலைத்து இருக்கிற, அழிவே இல்லாத பூரணமாக ஒரே சத்தியம்  பற்றி.   பௌத்தம்  சூன்யத்தோடு நிற்கிறது.    பூரணமாக ஒன்று இருக்கிறது''அஸ்தி'' என்பது ஆசாரியாளுக்கு முக்கியம். ஒன்றும் இல்லை  ''நாஸ்தி''  என்பது புத்தருக்கு முக்கியம்.  (அஸ்தி நாஸ்தி) என்பது ஜைன மத ஸ்தாபகரான ஜினருக்கு (மகாவீரர்க்கு) முக்கியம்.

இந்த நிலையில்  ஆதி சங்கரருக்கு அமர சிம்மனுக்கும் வாதம் ஒன்று நிகழ்ந்தது.  மிக  சுவாரஸ்யமான அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...