Sunday, December 6, 2020

THIRUPALLANDU

 



    எல்லோரும்  வாழ்க பல்லாண்டு....J  K  SIVAN 


ஒவ்வொரு நாளும்  இன்பகரமான  நாளாக கழிய வேண்டும் என்ற  நல்லமனதுடன் தான் '' குட் மார்னிங்''  சொல்வது.   ஏதோ  பார்த்து  தொலைத்து விட்டோமே  என்று  அரைக்கம்பத்தில் கையைத் தூக்குவதில்லை.


பிறந்த நாளில்  மணநாளில், மற்ற விழாக்களில்  நூறு ஆண்டு காலம் நீ வாழவேண்டும் என்று  ஆசிர்வதிப்பது, வாழ்த்துவது நமது பண்பாடு.   உண்மையில் எத்தனைபேருக்கு இந்த எண்ணத்தோடு  வாழ்த்த  ஆசிர்வதிக்க மனம் இருந்தது, இருக்கிறது.  ஏதோ எல்லோரும் சொல்கிறார்கள், நாமும் சொல்லவேண்டும்  என்று ஆகிவிட்டதல்லவா? .  தினமும்  முகநூலில்,  வாட்சப்பில்  எனக்கு குட் மோர்னிங், ஈவினிங், நைட்,   வாழ்த்துக்கள் நிறைய வருவதை நான் அவர்கள் உள்ளன்போடு என்னை நினைத்து தானே  அனுப்புகிறார்கள் என்று மகிழ்ந்து,  என்று இரு கை  கூப்பி வணங்கி ''கிருஷ்ணா,   என் நண்பர்களை நன்றாக வையடா''   என்று வேண்டுகிறேன்.

இப்படி  நாம்  மனிதர்கள் ஒருவரை வாழ்த்துவது இருக்கட்டும்.  பகவானையே வாழ்த்த எண்ணம் எத்தனை பேருக்கு உண்டு?  வைணவர்களின் ஒரு பெரியாழ்வார் நீ பல ஆண்டுகள், பல கோடி நூறு  ஆயிரம்  ஆண்டுகள் வாழவேண்டும் என்று நெஞ்சார வாழ்த்தினார். அவரது திருப்பல்லாண்டு ஒவ்வொருநாளும் பெருமாள் முன்னிலையில் பாடப்படுகிறதே. அதனால் தான் பெருமாள் என்றும் நமக்கு அருள் புரிய  இருக்கிறான் என்று நம்புகிறேன்.  மனதார வாழ்த்தி  ஆசிர்வதிப்பதற்கு  நிறைய  சக்தி உண்டு. நமது ஆத்மாவில் உள்ள பரமேஸ்வரன் ஆசியும்  வாழ்த்தும் அது.

சைவர்களில்  ஒருவரும்  இவ்வாறு  சிவனுக்கு  பல்லாண்டு பாடியவர். அவர் பெயர் சேந்தனார்.  அவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த கட்டுரையை அர்ப்பணிக்கிறேன்.

இன்று வெள்ளக்காடாக இருக்கும்  சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தில் அக்காலத்தில்  வாழ்ந்த சாது சிவபக்தர்  ஒருவர் பெயர் சேந்தனார்.  யாராவது ஒருவருக்காகவாவது தினமும் உணவளிக்காமல் சாப்பிடாதவர்.  விறகு வெட்டி விற்று ஜீவனோபாயம் செய்தவர்.

இப்போது போல் அப்போதும்  ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாகிவிட்டது.  யார்  ஈர விறகு வாங்குவார்கள்? புகையை யார்  ஊதுவது ? விறகு விற்காததால்  கையில் காசில்லை.  எப்படி அரிசி வாங்குவது?  வீட்டில்  தேடியதில்  கேழ்வரகு கொஞ்சம் இருந்தது. களி  ரெடியாகியது. சாப்பிட  அதிதி வேண்டுமே?  கொட்டும் மழையில் களி சாப்பிட  ஒரு சிவனடியாரும் கண்ணில் படவில்லை. கண்ணீர் பெருகியது சேந்தனுக்கு.

பரமேஸ்வரன் நடராஜனுக்கு இது தெரியாமல் போய்விடுமா?  சிவனடியார் ஒருவர்  மழையில் நனைந்து  கொண்டு   சேந்தன் வீட்டுக்கு திரும்பும் வழியில் கிடைத்ததில் சேந்தனுக்கு பிரம்மானந்தம்.   சந்தோஷமாக அவரை உபசரித்து  தனது உலர்ந்த வஸ்திரம் கொடுத்து சூடான களியை  பரிமாறினார்.  மீதி இருந்த கொஞ்சம் களியை  சேந்தன் அன்றைய  ஆகாரமாக  சாப்பிட்டிருப்பார்.  ஆனால் நடந்தது வேறு. 

''சேந்தனாரே, இன்னும் களி  இருக்கிறதா?இவ்வளவு அற்புத களி நான் சாப்பிட்டதே இல்லையே?  சட்டியை அணுகி எட்டிப்பார்த்தார்  சிவனடியார்.  ஒருவர் சாப்பிடும் அளவு  எஞ்சியிருந்ததைக்கண்டு சந்தோஷம். 

'சேந்தனாரே , இன்று  எனக்கு ஒரு புது எண்ணம்.  இந்த மீதி களியையும்  எனக்கு ஒரு பொட்டலம் கட்டி கொடுங்கள். அடுத்த வேளையும்  ஆனந்தமாக சாப்பிடப்போகிறேன்''.  ஆஹா இது என் பாக்யம்  என்று  சேந்தன் சந்தோஷமாக  சட்டியை சுரண்டி  மீதி களியை எல்லாம் மூட்டை கட்டி கொடுத்தார்.

அடுத்தநாள் திருவாதிரை.  சிதம்பரத்தில் வெகு விசேஷமான நாள்.  ஜேஜே என்று எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் கூடும் நாள். காலை  சிதம்பரம் நடராஜன் கோவிலை தீக்ஷிதர் வழக்கம்போல் திறந்தார்.  தில்லை வாழ்  அந்தணர்களுக்கு  ஆச்சர்யமா அதிர்ச்சியா?  

'என்னது  இது?   நடராஜர் விக்ரஹம் முகத்தில்,  அவரைச்  சுற்றி  இப்படி ஏதோ பிசு பிசுவென்று களி , கோந்து  மாதிரி ஒட்டிக்கொண்டு  பரவி இருக்கிறதே? எப்படி இது இங்கே வந்தது. நானல்லவோ பூட்டி சாவி எடுத்துக்கொண்டு போனேன் நேற்று இரவு.?  அதற்குள்  ராஜா  பரிவாரத்தோடு அங்கே  வந்துவிட்டான்.  ராஜாவின்  கனவில் நடராஜா விஷயம் எல்லாம் சொல்லி இருந்தாரே.

யார்  இந்த  சேந்தனார், அவரைத் தேடி கண்டுபிடித்து இங்கே அழைத்து வாருங்கள் என்று கட்டளை யிட்டிருந்தான்  ராஜா. அன்று  சிதம்பாரம் நடராஜா தேர் திருவிழா. கோலாகலமாக நடந்தது.   அந்த நேரத்தில் சேந்தனாரைக் கண்டுபிடித்து  அழைத்து வந்தார்கள். ஆடலரசன்  தேர்த்திருவிழா பார்க்க அவருக்கும் பரமானந்தம்.   அலங்காரம், அர்ச்சனை,  நைவேத்தியம் எல்லாம் முடிந்து நடராஜா  தேர்த்தட்டில்   ஆரோகணித்தார்.  கற்பூர ஹாரத்தி காட்டியாயிற்று.   இனி தேர் நகரவேண்டியது தான். வடக்கயிற்றை பல நூறு கைகள் பிடித்தாலும் முதலில் ராஜா இழுக்கவேண்டும் என்பது முறை.  விடாது பெய்த மழையில் மண் தரை சேறாக இருந்தது. தேர் சக்கரங்கள் சேற்றில் அமிழ்ந்து நகர மறுத்தன. எல்லோரும் இழுத்தார்கள். அசையவே இல்லை.  எல்லோருக்கும் ஏமாற்றம், மனவருத்தம் என்ன செய்வது?  எங்கிருந்தோ ஒரு குரல் மேலே இருந்து எல்லோருக்கும் பளிச்சென்று  கேட்டது.

 "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்றது.   எல்லோரும்  யார் சேந்தனார்  என்று பார்த்தபோது  சேந்தனார்  ''எனக்கு  பல்லாண்டு எல்லாம் பாடாத தெரியாதே  எப்படி பாடுவேன்''  என்று நடராஜனை வேண்டினார்

யாரோ நெஞ்சிலே  அடியெடுத்துக் கொடுத்தபோல் தோன்றி அதை உரக்க பாடினார்.   

''மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
    வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
    புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
    யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
    பல்லாண்டு கூறுதுமே ''

மொத்தம்  பதிமூன்று  பாடல்கள். இதில் ஒரு ஆச்சர்யம் பார்த்தீர்களா.  என்னை வாழ்த்திப் பாடு  என்று கேட்டு வாங்கி  பல்லாண்டு வாழ்த்து பெறுகிறான் பரமேஸ்வரன்..பரமாத்மா  விஷ்ணுவுக்கு  பெரியாழ்வாரால் தானாகவே கிடைத்தது.   பன்னிரு திருமுறையில் நாம்  பாடும் திருப்பல்லாண்டு  கட கடவென்று  பிரவாகமாக  சேந்தனார் பாடல்களாக  வெளிவந்தன.  கடகடவென்று  தேரும்  நகர்ந்தது.  

 அடுத்த மாதம் மார்கழி, தெய்வீகமாதம். திருவாதிரை அன்று  ஆருத்ரா தரிசனம் சிதம்பரத்தில். ஒவ்வொரு வீட்டிலும்  களி .  களி என்றால்  மகிழ்ச்சி அல்லவா.  அன்று  பன்னிரு திருமுறை திருப்பல்லாண்டு 13 பாடல் படிப்போம், சேந்தனாரை நினைப்போம். 

தேர் நகர்ந்ததும்  சேந்தனார் கால்களை   அன்று   அரசன் மற்ற எல்லோரின் தலைகளும் மறைத்து ஆசி வேண்டினார்கள்   என்பதோடு இப்போதைக்கு இதை  முடிக்கிறேன். அப்புறம் நிறைய  திருமுறை, சேந்தன் பற்றி அறிவோம். 




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...