Monday, December 28, 2020

THEVITTADHA VITTALA

 

  பட்டு வேஷ்டி   J K  SIVAN 

எனது  ஆன்மீக  கதை கட்டுரை நாயகர்கள் பெரும்பாலும்  பொன்  பொருள் பட்டாடை,  பந்தி போஜனம் எதிலும் அதிக நாட்டம் இல்லாதவர்கள். அவர்கள் மனம் இதிலெல்லாம் லயிக்காமல் பரமனையே  சுற்றி சுற்றி வந்ததால்  மேற் சொன்னவைகளைப்பற்றி நினைக்கக்கூட  நேரமில்லை.


 இந்தக்  கதையில் வருபவரும்  அப்படி  ஒரு வினோத ஆசாமி.  விசித்ரமானவர்.  பாண்டு ரங்கனின்  மீது கொள்ளை பிரேமை  கொண்டவர்.   அவர்  பெயர்  யோகி  ப்ரேமானந்தர்.

அவர் தன்னுடைய  அன்றாட  வழக்கமான  வேலையாக  எவைகளை  வைத்துக்கொண்டிருந்தார் தெரியுமா? 

 விடிகாலை  எழுந்ததும்  நதிக்கு  செல்வது.  நீராடுவது.  விட்டலனுக்கு  பிரார்த்தனை.  பிறகு  ஷோடசோபசாரம் செய்து   700  நமஸ்காரம் பண்ணுவது. நம்மால்  நினைத்துப் பார்க்கவாவது முடியுமா?.  ஒரு முறை குனிந்து கீழே விழுந்த பேனாவை எடுக்க  முட்டியை கெஞ்சவேண்டி இருக்கிறதே!. 

அதற்கப்புறம்  பகவத்  கீதை  பாராயணம்.  மறுபடியும்  நமஸ்காரம்.  பிறகு தான்  இலையில்  சோறு .   என்ன  பக்தி பார்த்தீர்களா?.   இப்படி  பகவானுக்கு  பிரார்த்தனை  பண்ணாமல்  சாப்பிட உட்காருவது  நாய்  சோற்றைக்கண்டதும்   பறந்து தாவி உண்பது போல  என்பார்.  ஆனால் பூச்சி,,  பறவை இனம்  மிருகங்களுக்கு  இந்த மனிதர்களின்  சாஸ்திரம் கட்டுப்பாடு   பொருந்தாது  என்றும்  தலை  ஆட்டுவார். எப்போது  கிடைப்பதற்கு  அறிய  மனிதப்பிறவி  எடுத்துவிட்டோமோ  அதற்கேற்ப அதை,  இதுவரை  பல  ஜன்மங்களில்  செய்த   பாபங்களைப்போக்க,  நல்ல  விதமாக  உபயோகிக்க வேண்டாமா?  

மனம்  நல்லவைகளைச்  செய்து ,  நல்ல எண்ணம் ,  சாது  ஜன  சத் சங்கம் இவைகளை அடைவதால்,   பாபம்  கூடுதலாக சேர வழியில்லை,  அதே சமயம்  செய்த பழைய பாபத்தின்  பலன் கொஞ்சம் குறைய  வழி உண்டே '' என்று சொல்வார்.   

 ஒரு சுருக்கு  வழி  இருக்கிறது.  எங்கெங்கோ  புண்ய  நதி, ஸ்தலம், கோவில்  குளம் என்று  தேடி  ஓட வேண்டாம்.  உட்கார்ந்த  இடத்திலேயே  ஸ்ரீ  கிருஷ்ணனை,  பாண்டுரங்கனை,  ராமனை, சிவனை   நினைத்தாலே  போதும்.  அதன் பயனாக  சகல  புண்யமும்  கிட்டும்.  நாம  ஜபம்  தான்  கலியுகத்தில்  கண் கண்ட  மருந்து.   இது  ரகசியம்  இல்லை.  யாவரும்  அறிந்தது.  பின்  ஏன்  மனம்  அதில் செல்லவில்லை?   அந்த அனுபவமோ,  அதன்  சொல்லொணா   இன்பமோ, ஆனந்தமோ  ஏன் புரியவில்லை?  

எங்கோ இருக்கும் பக்தர்கள்  தேடிவரும்  திருப்பதி கோவிந்தனை,  ஸ்ரீரங்கம்  அரங்கனைத்தேடி வரும்போது  அந்த க்ஷேத்ரங்களியலே  பல  காலம் வசிப்பவன்  கோவிந்தனையோ, அரங்கனையோ தினமும் சென்று  வணங்குவதில்லை... இது ஒரு விசித்திர பழக்கம் நமக்கு.
என்றோ  ஒரு  நாள்  தான் மற்றவர்களைப்  போல்  உள்ளே தலையைக் காட்டுவான்.

அவனுக்கு  தக்க  நேரமும் காலமும்  குரு  உபதேசமும்  கிட்டினால்  புரிந்துகொள்வான்.  அது வரை  அவஸ்தைப் படுவதற்கு  அவன்  தயாராக இருக்கும்போது நாம்  என்ன  சொல்ல முடியும். செய்ய முடியும்?.   காசி விஸ்வநாதன்  கோபுரம் மீது அடிக்கடி சுற்றினாலும் காக்கைக்கு கவனம்  கீழே எங்கோ நாற்றமெடுத்து கிடக்கும்  செத்த எலி மீது தானே!

நாம்   யோகி   ப்ரேமானந்தர்  பற்றி  மேலே  பேசுவோம்.  அவர் மனத்தில்  பாண்டுரங்கன் சதா சர்வகாலமும் இருந்தான்.  இன்பம்  தந்தான்.  

ஒருநாள்  பண்டரிபுரத்திற்கு  ஒரு  பட்டுத்துணி  வியாபாரி  வந்தான். விட்டலன் கோவிலுக்கு  தரிசனம் செய்ய  சென்றான்.  அந்த  நேரம்  பார்த்து  திடீரென்று  விடாத  இடி இடித்து  பெரிய மழை.  வானம் பொத்துக்கொண்டது.  சள  சள  வென்று  பெய்த  மழையில்  தரை மண்ணெல்லாம்  சேரும் சகதியுமாகியது.  வியாபாரியின்  பார்வை  தூரத்தில்  இதெல்லாம்  சற்றும்  லக்ஷியம்  செய்யாத  ஒரு  சாமியார்  மேல்  சென்றது.  அவர் நமது ப்ரேமானந்தர்   தான்.  பாண்டுரங்கனை  நோக்கி  கோவில்  வாசலில்  நமஸ்காரம் செய்துகொண்டிருந்தார்.  ஒன்றா இரண்டா.  வழக்கமான  700  ஆச்சே.  

''அடடா  என்ன  பக்தி  இவருக்கு.  மழை,  சேறு, சகதி  எதையுமே  லட்சியம் செய்யவில்லையே.  சந்தோஷத்தோடு  அல்லவா  நமஸ்காரங்கள்  விடாமல்  பண்ணிக்கொண்டிருக்கிறார். ''   மழை  விட்டது.  கையில்   வைத்திருந்த மூட்டையிலிருந்து  ஒரு   நல்ல   விலையுயர்ந்த வட்டு  வேஷ்டியை  எடுத்தான்  வியாபாரி. அதை  யோகியிடம்  கொடுத்தான்.

'' சுவாமி, தாங்கள்  இதை  உடுத்திக்கொள்ளுங்கள் '' என்றான்.  நமஸ்காரம்  பண்ணினான்.    அவர்  பார்த்தார்.   தலையை வேண்டாமென்று ஆட்டினார்.  

'' எனக்கெதற்கு  இதெல்லாம்.  கிழிசல்  துணி  ஏதாவது  இருந்தால்  கொடு. அது  போதுமே.  நான்  அன்றாடம்  பிக்ஷை எடுத்து அதில்  கிடைப்பதை  உண்பவன்.  அதுதான்   தொந்தரவு இல்லாமல்  என்னுடைய  வேலையை  செய்ய  உதவும். இந்த பட்டு  பீதாம்பரம் எல்லாம் உதவாது ''  

''இல்லை  சுவாமி,  இது நீங்கள்  உடுத்திக்கொள்ள  வேண்டும்  என்று எனக்கு  ஆசை''
'
'தப்பு அப்பனே,  இதை  பாண்டுரங்கனுக்கு  சாற்றினால்  அவனை  கண்ணாரப் பார்க்கலாம்..  அவன்   உனக்கு சர்வ  மங்களமும்  தருவான்''   

வியாபாரி காதில் இது  ஏறவில்லை.  பக்தி மிகுதியால்  அவன் விடுவிடுவென்று   தானே  அவர்  இடுப்பில்  அந்த  பட்டு  வேஷ்டியை  கட்டிவிட்டான்.  அவனுக்குத்   தெரியவில்லை,  பறவைக்கு  நீரும்,  பசுவுக்கு  புல்லும்  தான்  தேவை  என்று.   வேருக்கு  நீர்  வார்த்தால்  புஷ்பங்களும்  காய் கனிகளும்  கிடைக்கும்.   வியாபாரி  போய்விட்டான்.  பட்டு வேஷ்டி உடுத்திக் கொண்ட  யோகி திரு திருவென்று விழித்தார்.  அந்த  பள பள   துணியை  எடுத்து இடுப்பில்  சொருகிக்கொண்டார்.  தரையில் விழுந்து  நமஸ்காரம் பண்ணும்போது  மண் பட்டு  அழுக்காகாமல் பார்த்துகொள்வது  கஷ்டமாக  இருந்தது. வழக்கமாக  சுலபமாக  சந்தோஷத்தோடு  பண்ணும்  நமஸ்காரம்  இப்போது தடை பட்டது. வெயில்  ஏறியது.  வியர்த்துக் கொட்டியது.  பசியை  அடக்கிக்கொண்டு  பண்ணவேண்டிய  நமஸ்காரங்களை  பண்ணினார்.  முடியவில்லை. எண்ணம்  பட்டு  வேஷ்டி மீது சென்றது  இடைஞ்சலாக  இருந்தது.  நமஸ்காரம்  முடியாமல்  சாப்பாடு  கிடையாதே. என்ன செய்வது?   வியர்த்து  களைத்தார் .

''எனக்கு இன்று  ஏன் இப்படி ஒரு  தண்டனை?''  புரியவில்லையே?  அடேடே  எப்படிப்பட்ட  சர்வ  முட்டாள்  நான். இந்த  பட்டு வேஷ்டிஅல்லவோ  என்னை  நிலை குலைய  வைத்துவிட்டது.  காரியம் கெட்டு குட்டிச் சுவராகி விட்டதே.   பூரண  சந்திரனை  ராகு  பிடித்து  கவ்வியது போல்  இந்த  வேஷ்டி  என்னை  விழுங்கிவிட்டதே.  எனக்கும்  விஷ்ணுவுக்கும்  இடையே  ஒரு  வேஷ்டியா எதிரியானது?''

இந்த  வேஷ்டிக்கு  இடம் கொடுத்த  இந்த   உடம்புக்கு ஒரு சரியான  தண்டனை உடனே  கொடுத்தாக வேண்டுமே  என்ன  செய்யலாம்?  என்று யோசிக்கும்போது  '' சரி  காட்டுக்கு செல்வோம்.  நிறைய  காய்ந்த  கட்டைகளை  தீமூட்டி  தீக்குளித்தால்  தான்  சரியாகும்.   இல்லை  பேசாமல்  ஏதாவது  புண்ய நதியில்  மூழ்கி இந்த  உடலை விடலாமா? விட்டலன்  அப்போது  தான்  மன்னிப்பான்.  கோவில் வாசலில்  அமர்ந்து  எதைச் செய்யலாம்  என்று  யோசித்தார்.  

அந்தப் பக்கமாக  ஒரு  ரெட்டை  மாட்டு வண்டிக்காரன்  வந்தான்.  அவனை நிறுத்தினார்.  

''உனக்கு  ஒரு  விலை உயர்ந்த  இந்த  பட்டு  வேஷ்டி தரேன்.  உன்  ரெட்டை  மாட்டையும் அவற்றை பிணைத்திருக்கும்  கழுத்தில்  இருக்கிற  கட்டையோடு  தருகிறாயா ?''

தனது  தொத்தல்  மாட்டால்  இவ்வளவு  பெரிய  வருமானம் கிடைக்கும்  என்று அவன்  எதிர்பார்க்கவில்லை.  ஆச்சர்யத்தோடு  ஒப்புக்கொண்டான்.

''என்  கால்   இரண்டையும்  இந்த  கட்டையில்  கட்டு''. 

அவன் யோசிக்க,  '' சொன்னதைச் செய்''   என்றார்  யோகி.   கால்கள் ரண்டையும்  ரெண்டு மாட்டுக்கும்  இடையே  கட்டையில்  பிணைத்தான். 

''மாட்டை  விரட்டு'' .  

சுளீர்  என்று  சாட்டை யடி விழுந்ததும்  ரெண்டு மாடுகளும்  ஓடின.  இடையே கட்டையில்  யோகி  புரண்டுகொண்டு  தொடர்ந்தார்.  மாடுகள்  தலைதெறிக்க  ஓடின.  நிற்கவே இல்லை.  யோகியின்  உடல் கிழிந்தது.  ரத்தம்  ஆறாக  பெருக  சதை பிய்ந்துகொண்டே  வந்து  கடைசியில்  வெறும்  எலும்புகள்  மட்டும்  தேயும்  நிலை.  அவர்   உயிர் கொஞ்சம்  இன்னும்  ஊசலாடிக் கொண்டிருந் தது.  மனம்   பூரா  ''விட்டலா'' என்றே  நினைவில்  ஆழ்ந்தது.  மாட்டுக்காரன்  ஓடி வந்தான்.  அவன் கண்களில்  நீர்  ஆறாக  வழிந்தது.  என்ன  காரியம்  செய்தீர்கள்.  இதை  ஏன்  என்னைச் செய்யச்  சொன்னீர்கள் ஸ்வாமீ ?''   என்றான். 

யோகி   கடைசி  நிமிஷ  நினைவில்  இருந்தார்.  மாட்டுக்காரன் முகம் லேசாக  தெரிந்தது.  பேச்சு  வரவில்லை.  மூச்சு  கொஞ்சம்  கொஞ்சமாக  அடங்க  முயன்றது.  காலை கட்டையில்  இருந்து அவிழ்த்தான்  மாட்டுக்காரன்.  அவரை விடுவித்து  மடியில் போட்டு  புண்களையும்  ரணங்களையும்  அந்த பட்டு வேஷ்டியாலேயே துடைத்தான்.  

''ஏன்  இப்படிச் செய்தீர்கள்?''  என்று  மீண்டும்  அவன்  அவரைப் பார்த்து  கேட்டபோது  அவன் கண்களில்  கண்ணீர் ஆறாக இன்னும்  ஓடிக்கொண்டிருந்தது.  யோகி  அவனைப் பார்த்தார்.  அவன் முகம்  அவர் அடிக்கடி  பார்க்கும் முகமாக  இருக்கிறதே!!!!!''அவன்....  அவன் ... 

''விட்டலா   .. நீயா  நீயா''  

பண்டரிபுர நாதன் விட்டலன்  யோகியை  வாரி அணைத்துக்கொண்டான்.  
''என்னுடன்  வாருங்கள்''  என்று  அழைத்த  அவனோடு  வைகுண்டம்  ஏகினார்  யோகி.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...