லேபாக்ஷி நாகலிங்கம். J K SIVAN
ஹிந்து மதத்திற்கு பெரும் தீங்கு விளைவித்தது யார் என்று கேட்டால் சரித்திர புத்தகத்தை புரட்டிக் காட்டி ஒளரங்க ஸீப் என்று சொல்லலாம். பாவம் அவனை நான் மன்னித்து விடுவேன். அவன் தனக்காக இந்து கோவில்களை உடைக்கவில்லை, விக்ரஹங்களை பின்னமாக்கியதில்லை, ஹிந்துக்களை கொன்று, பெண்களை முஸ்லிம்களாக்கி, குழந்தைகளை கொன்று, ஹிந்து வம்சங்களை அழித்தவன் இல்லை. இதெல்லாம் அவன் தவறுதலாக அறிந்துகொண்ட அவன் மதப்புத்தகத்தால் த னது மதத்துக்காக மற்ற மதங்களை நிர்மூல மாக்கச்செய்த அதிகார அக்கிரமம். அவன் அரை நூற்றாண்டு இந்தியா முழுதும் ஆண்டபோது எத்தனையோ கோவில்கள் கணக்கின்றி அழிந்தது பழங்கதை.
ஒளரங்கசீபை விட மிகவும் கொடிய அரக்கர்களை நாமே உண்டாக்கி நம்மை முட்டாளாக்கிக்கொண்டு விட்டோம். அவர்கள் நம் கண்ணெதிரேயே, நமது கலைகளைத் திருடி, விற்று, கோவில்களை அழித்து, தமது சுயநலத்துக்காக கொஞ்சம் கொஞ்சமாக சட்டத்தின் பிடியில் தப்பாமல் நிர்மூலமாக்கி , நிர்மூலமாக்கும் மன்னிக்க முடியாத ஆலய பராமரிப்பு சகோதர சகோதரிகள் தான். ஒவ்வொரு ஹிந்துவும் வேலியே பயிரை மேய்வதைக்கண்டு கண்ணீல் ரத்தம் சிந்தும் தருணம் இது. உடன் பிறந்தே கொல்லும் வியாதி புற்று நோய் போன்றவை. அவற்றை விட கொடிய விஷ நோய் இந்த ''நான் கோவில்களை பாதுகாக்கிறேன் , கோவில்களின் சொத்துகளை பராமரிக் கிறேன் பேர்வழி'' , என்று அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பது, அழிப்பது. விற்பது, கோவில் மனையை சொந்த நிலமாக்கிக் கொள்வது கோவில் வருமானத்தை கோவில்களை பராமரிக்காமல் மற்ற சொந்த சௌகர்யங்களுக்கு எடுத்துக் கொள்வது போன்ற செயல்களைப் புரிபவர்கள். பாவம் ஒளரங்கஸீப் பற்றி மட்டும் எல்லா புத்தகமும் சொல்கிறது. இவர்களைப்பற்றி அவர்கள் பக்கத்தில் நிற்கும் நமக்கே தெரியவில்லை. காற்றுக்கு கூட தெரியாத படி திட்டமிட்டு நம்மை சீரழிப்பவர்கள். ஏதோ நடக்கிறது இப்போது. இதைத் திருத்த. முடிகிறதா, முடியுமா என்று தெய்வமே தீர்மானிக்கட்டும்.
ஒரு கோவில் பாதி ஒளரங்கஸீபால் அழிக்கப்பட்டாலும் மீதி இன்னும் அற்புதமாக இருக்கிறது. இந்தியா ஒரு தேசம் அல்ல. நாடு அல்ல. ஒரு பண்பாடு, ஒரு உலக அதிசயம், அற்புதம் என்று தான் உண்மையான அர்த்தம்.
ஒரே ஒரு கோவிலைப் பற்றி மட்டும் சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.
ஆந்திராவில் அனந்தபூர் ஜில்லாவில், வீரபத்திரன் எனும் சிவனின் அவதாரத்துக்கு லேபக்ஷி எனும் கிராமத்தில் 16 ம் நூற்றாண்டில் ஆண்ட விஜயநகர அரசர்கள் கட்டிய அற்புத சிவாலயம். கட்டிட கலைக்கும், சிற்ப நுணுக்கங்களும், கை தேர்ந்த அழியாத வண்ண ஓவியங்களுக்கும் எடுத்துக்காட்டாக இன்னும் விளங்குகிற பிரம்மாண்ட மான பாதி அழிந்த ஆலயம். இருபது அடி உயர, முப்பது அடி நீள ஒரே கல்லில் ஆன பெரிய நந்தி. ஆமை வடிவ கூர்ம சைலம் மலையில் செதுக்கிய பாறைக்கோவில்.
பெங்களூரிலிருந்து 140 கி.மீ. தான். கட்டிய ராயர்கள் பேர் விரூபண்ணன், வீரண்ண நாயக்கர்கள். இவர்கள் நம்ம ஊர் பகுத்தறிவு நாயக்கர் டைப் இல்லை. தெய்வ பக்தி கொண்டவர்கள். ஸ்கந்த புராணம் லேபாக்ஷியை ஒரு சிவ திவ்ய க்ஷேத்ரம் என்கிறது. முகமண்டபம், அர்த்த மண்டபம், கர்பக்கிரஹம் என்று மூன்று பிரிவுகள் கொண்ட சிறந்த சிற்ப ஆலயம்.
படமெடுத்து குடையாக தலைவிரித்து நிற்கும் பெரிய நாகத்தின் சுற்றுக்களுக்கு இடையே மடியில் இருக்கிறார் சிவன். ஒரு பெரிய பாறையை குடைந்து ஒரு பக்கமாக இந்த படமெடுத்து நிற்கும் நாகம் வாயைப் பிளந்து அண்ணாந்து பார்க்கும்படி ப்ரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ளது. மீதி செதுக்கப்படாத பாறை பின்னால் தெரிகிறது. காலம் அனுமதித்திருந்தால் வேறென்னவாவது அற்புதம் அந்த மீதி பாறையில் நமக்கு கிடைத்திருக்கும்.
வடக்கு வாசல் தான் எல்லோரும் நுழைவது. மொத்தம் மூன்று வாசல்கள். எண்ணற்ற இணையற்ற வண்ண, புராண, இதிஹாச ஓவியங்கள், சிற்பங்கள். ஒவ்வொன்றையும் பற்றி எழுத ஆசை. பெரிய புத்தகமாகிவிடுமே? ஐந்நூறு வருஷமாகியும் அழியாத வண்ணம் தாவரம், உலோக பொடிகள் கலவையால் தீட்டப்பட்டதால். உயரே நம்மவர்கள் கைக்கு எட்டாததால் இன்னும் நாம் பார்த்து மகிழ முடிகிறது. மூல விக்ரஹம் வீரபத்ரர். கபால மாலை ஆயுதங்களோடு காணப்படுகிறார். குகை மாதிரி கர்ப்ப க்ரஹம்.
ஒரு தூண் அடியில் எந்த பிடிப்பும் இல்லை. மேலே கூரையிலிருந்து தொங்குகிறது. புவி ஈர்ப்பு சக்தியை எதிர்த்து கட்டப்பட்ட சிற்பக்கலை! இதை தொங்கும் தூண் என்கிறார்கள். ஆகாச ஸ்தம்பம் என்று பேர். இதைப் பார்க்கவே லக்ஷக்கணக்கான பக்தர்கள் யாத்ரீகர்கள் வருகிறார்கள். 70 தூண்கள் மண்டபத்தில் இருந்தாலும் இந்த ஒரு தூண் ப்ரஸித்தியானது. ஒரு வெள்ளைக்கார இன்ஜினீர் தலைகீழாக நின்று இதை கூரையிலிருந்து பிரிக்க முயன்று தோற்றானாம் .
ராவணனை எதிர்த்து சீதையை மீட்க துணிந்த ஜடாயு எனும் கருடன் ராவணனின் வாளால் வெட்டப்பட்டு கீழே விழுந்த இடம் என்பதால் லேபக்ஷி என்கிறார்கள். லேபாக்ஷி என்றால் வண்ணம் தீட்டிய கண், செயற்கைகண். என்றும் அர்த்தமாம். கண் குருடானவன் முன்பே கட்டிஇருக்கலாம். இதைக் கட்டிய நாயக்கன் அரசாங்க கஜானாவை காலி செய்து இந்த கோவிலை கட்டியதால் ராஜா அவன் கண்களை குருடாக்க ஆணையிட்டான். அந்த நாயக்கன் தானாகவே தன் கைகளால் கண்ணைக் குருடாக்கிக் கொண்டான் விழி இழந்ததால் லேப ஆக்ஷி. இது நடந்த இடமாகிய கல்யாண மண்டபத்தில் சுவற்றில் இன்னும் சிவப்பு ரத்தக் கரை இருக்கிறதாம்.
இது போன்று எண்ணற்ற அற்புத கோவில்கள் நமது காலத்தில் இன்றும் எங்கெங்கெல்லாமோ,
கவனிப்பாரற்று கிடப்பதால் அழிக்கப்பட்டு வருவதை நமது இளைய சகோதரர்கள் முன் வந்து சீரமைத்து, புனருத்தாரணம் செயது பாதுகாக்க வேண்டும் என்று முதியோர் சார்பில் ஒரு வேண்டுகோள். .
No comments:
Post a Comment