நவீன கபீர் தாசர் . J .K SIVAN
நான் ராமநாடகம், ராமாயணம் அவற்றால் வாழ்ந்த என் முன்னோர்களை பற்றி சொல்லும்போது ஒரு முக்கிய பெயர் விடுபடக்கூடாது. அற்புதமான ஒரு மனிதரை சொல்லாமல் விடக்கூடாது. அவர் ஹிந்து அல்லாத ஒரு ராம நேசர். மு.மு. இஸ்மாயில் 1921-2005, நீதியரசராக புகழ் பெற்றவர். சிறந்த
தமிழறிஞர்; எழுத்தாளர் மட்டுமல்ல. சென்னை கம்பன் கழகம் நிறுவியவர்
கம்பனைக் கரைத்துக் குடித்த கம்ப இராமா யண ஆராய்ச்சியாளர். அவரை நேரில் பார்த்து அவர் சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன். அருவி போல் இனிமையான குரலில் தன்னை மறந்து உற்சாகத்தோடு கம்ப ராமாயணம் விளக்குவார். தெளிவான அமைதிநிறம்பிய எப்போதும் மலர்ந்த முகம். பரங்கிப்பழம் போல் வெள்ளை வேட்டி , மேல்துண்டு, ஜிப்பாவில் சிவந்து காணப் பட்டார்.
சிறந்த ஆன்மீகவாதி. சைவ உணவை மட்டுமே உண்டவர். வைணவக் காப்பியமான கம்பராமாயணம் அவரது முழுமனதையும் கொள்ளை கொண்டது. கம்பன் கண்ட ராமன், கம்பன் கண்ட சமரசம், செவிநுகர் கனிகள், வள்ளலின் வள்ளல், மும்மடங்கு பொலிந்தன, பழைய மன்றாடி - என அடுத்தடுத்து இவரது பழந்தமிழ் ஆய்வு நூல்கள் எழுதியவர். வாலி வதம் பற்றிய இவரது "மூன்று வினாக்கள்' என்ற நூல், உலகப் புகழ்பெற்ற ஓர் ஆன்மிகப் பெரியவரைப் பெரிதும் கவர்ந்தது. அந்த நூலுக்காகவே இவருக்குப் பொன்னாடை அணியச் செய்து, பாராட்டி மகிழ்ந்த அந்தத் துறவி வேறு யாருமில்லை. கிட்டத்தட்ட நூறாண்டு வாழ்ந்த காஞ்சி மஹா பெரியவா.
இஸ்மாயிலுக்கும் பரமாச்சாரியார் மேல் மிகுந்த மரியாதை உண்டு. "ஒருவர் எந்த மதத்தில் பிறந்தாரோ, அந்த மதத்தின் ஆன்மிக நெறிகளை அனுசரித்து வாழ வேண்டும்' என்ற பரமாச் சாரியாரின் கருத்தை இஸ்மாயில் பெரிதும் போற்றியவர். இயல் செல்வம், சேவா ரத்தினம், இராம ரத்தினம் முதலிய பல பட்டங்கள் விருதுகள் இஸ்மாயி லுக்கு இயல்புக்குப் பொருத்தமாக வழங்கப் பட்டன. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்க ராச்சாரியாருக்கு இஸ்மாயில் மேல் அன்பும் மதிப்பும் உண்டு.
இவருக்குக் கடிதங்கள் எழுதும்போது, "உலகம் போற்றும் உத்தம' என்று தொடங்கித்தான் கடிதம் எழுதுவாராம் அண்ணங்க ராச் சாரியார்.
கம்பராமாயண மூல நூலை, மெல்லிய உறுதியான தாளில் முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாகப் பதிப்பித்தவர இஸ்மா யில். என்னிடமிருந்த அந்த நூலை வாங்கிச் சென்றவர் இன்னும் திருப்பித் தரவில்லை.
ஒருமுறை இஸ்மாயில் பெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார். பெரியவாளுக்கு இஸ்மா யிலின் ராமாயண ஈடுபாடு நன்றாக தெரியும். ஆகவே இருவரும் உரையாடினார்கள்.''
இஸ்மாயில், கம்பராமாயணத்தில் ஒரு இடத்தில் ‘மாலையில் தெரியும் பாம்பு போல’ன்னு வருதே, அப்போ ஸ்ரீ ராமர் உவமானம், என்றால், உவமே யப் பொருள் எது?”
இஸ்மாயில் யோசித்தார்.
''எனக்கு புலப்பட வில்லை, நீங்களே விளக்குங் கள்'' என்கிறார்.
பெரியவா அருகில் இருந்த அத்வைத சபா வெளியீட்டு புத்தகத்தை பிரிக்கிறார்.
''கம்பராமாயணத்தில் அத்வைதம்;; என்ற தலைப்பில் ஒரு கட்டுரை.
அதன் சாராம்சம் மாலையில் பிரதி பாசிக மாக தெரியும் பாம்பு போல ராமன் எனும் பாத்திரத் தில் உள் நின்று ஒளிர்வது ''ஸ்ரீமன் நாராயணன்'' என்று சொல்லியிருப்பதை பார்க்கிறார்.
''ஐயா நான் இதுவரை கம்பராமாயணத்தை நன்றாக அறிந்தவன் என்ற ஆணவம் என்னுள் தலை தூக்கி இருந்தது. உங்களைச் சந்தித்து உரையாடியபிறகு தான் என் கண் திறந்தது.'' என்கிறார் இஸ்மாயில்.
வெகு நேரம் உரையாடிய பின் இஸ்மாயில் உத்தரவு வாங்கிக் கொள்கிறார்.பெரியவா பிரசாதம் வரவழைக்கிறார். விபூதி குங்குமம் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரியவா அருகிலிருந்தவரிடம் ஏதோ சொல்கிறார். அவரும் உள்ளே சென்று ஏதோ கொண்டு வருகிறார்.
மஹா பெரியவா விபூதி குங்குமம் தந்தால் நிச்சயம் இஸ்மாயிலும் அதை ஏற்றுக் கொண்டி ருப்பார். கையை துடைத்துக் கொண்டு கீழே போட்டிருக்கமாட்டார். அவ்வளவு தார்மீக மனம் படைத்தவர் அவர். ஆனால் பெரியவா கையில் எடுத்தது சந்தனம்.
''இது நம் இருவருக்கும் ஏற்புடைய ஒன்று'' என்று சந்தனத்தை மஹா பெரியவா அளித்த தும் முக மலர்ச்சியோடு இஸ்மாயில் பெற்றுக் கொண்டார்.
முஸ்லிம்களும் சந்தனைத்தை அணிவார்கள். நாகூரில் சந்தனக்கூடு உற்சவம் வெகு விமரிசை யாக நடக்கும். நான் பார்த்திரு க்கிறேன்.
ஏராளமான ஹிந்துக்களும் சென்று வணங்கு வது நாகூர் தர்கா. முக்கியமாக குழந்தை களுக்கு ரக்ஷை அங்கே பெற்று அணிவிப் பார்கள்.
1977ல் மஹா பெரியவா பற்றி கல்கி யில் ஒரு அருமை யான கட்டுரையை இஸ்மாயில் எழுதினார். தனது பெரியவா அனுபவத்தில் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இன்னுமொரு விஷயம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?மஹா பெரியவா சமாதி அடைந்த அன்று முதலில் காஞ்சிமடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய வி.வி. ஐ. பி. க்களில் முதலில் வந்தவர் ஸ்ரீ மு.மு. இஸ்மாயில்.
''புகழ்வதற்கு அப்பாற்பட்டவர் பெரியவா. அவரோடு வாழ்ந்தது நமக்கு பொற்காலம். அளவிலாத பெருமை'' என்றவர் .
No comments:
Post a Comment