என் முன்னோர்கள். J K SIVAN
10. நூதன க்ரஹம்
முன்னூறு வருஷங்களுக்கு முன்பு தமிழகம் குறிப்பாக காவேரி டெல்டா பிரதேசம் எவ்வளவு செழிப்பாக இருந்து நம்மை உயிர் காத்தது, இன்னும் தனது கடமையில் தவறாது வாழ்வளிக்கிறது என்று உணரும்போது நாம் காவேரி யானையையும், அவள் கரையில் உள்ள அத்தனை விவசாயிகளையும் இரு கை கூப்பி வணங்குவோம்.
கிழக்கு பக்கம் திருவையாற்றிலிருந்து மேற்கே கல்லணை வரையில் காவிரிக்கரையில் உள்ள முக்கிய கிராமங்களை உங்களுக்குத் தெரியுமா? அதில் அற்புத க்ஷேத்ரங்கள் பல இருக்கிறதே. கண்டியூர், திருப்பூந்துருத்தி, திரு ஆலம்பொழில், நடு காவேரி, வைத்தினாம்பேட்டை, வரகூர், செந்தலை, கண்டமங்கலம், திருக்காட்டுப் பள்ளி, பூதலூர், ஓம்பது வேலி , முல்லக்குடி , பழமானேரி, நேமம், இளங்காடு, பூதூர், விஷ்ணும் பேட்டை, மகாராஜபுரம், தில்லைத்தானம், மரூர், இந்த கிராமங்களிலிருந்து பரசுராம பாரதிக்கு வீட்டில் விசேஷம் நடந்தபோதெல்லாம் ஸரஸ்வதி சம்பாவனை கொடுத்தார்கள். அது பல வருஷங்கள் தலைமுறையாக தொடர்ந்து வந்தது. என் தாத்தா வசிஷ்டபாரதிகள் காலத்திலும் தொடர்ந்து வந்து, வருஷத்துக்கு 150 - 200 ரூபாயாக வந்ததாய் பார்த்திருக்கிறார். பின்னால் வந்த தலைமுறைகள் அந்த ஊரை விட்டு வெளியேறி திருநெல்வேலி, மதுரை என்று பல ஊர்களுக்கு சென்று குடியேறியதில் இந்த சம்பாவனை பெறுவது நின்றுவிட்டது..
பரசுராம பாரதிக்கு ஐந்தாறு குழந்தைகள். மூத்தவர் ராமஸ்வாமி பாரதி. பரசுராம பாரதியின் வாழ்க்கை ராமாய தியானத்திலேயே கழிந்தது என்று சொன்னேனே ஞாபகம் இருக்கிறதா? பகலில் ஒழிந்த நேரத்தில், மாலை வேளைகளில் திண்ணையில் அமர்ந்த வாறு ராமாயண பிரசங்கம் பண்ணுவார். உள்ளூர் மக்கள் வந்து கேட்டு இன்புறுவார்கள்.
அவரிருந்த கூரை வீடு கடும் கோடை வெயிலில் ஒருநாள் தீப்பற்றி எறிந்துவிட்டது. இரவு நேரத்தில் நடந்தது. எங்கும் இருட்டு. பரசுராம பாரதி குடும்பத்தோடும் மாடு கன்றுகளோடும் வீட்டுக்கு வெளியே வந்து விட்டார்.
இடுப்பு வஸ்திரத்தோடு நின்றார். மற்றதெல்லாம் ''அக்னி பகவானுக்கு ஸ்வாஹா''. குழந்தை குட்டிகளோடு பெருமாள் கோவில் வாசலில் உட்கார்ந்துகொண்டார். சின்ன அக்ரஹாரம் என்பதால் தீப்பிடித்த விஷயம் ஊருக்கே தெரிந்து எல்லோரும் ஓடிவந்து நெருப்பின் மேல் தண்ணீர் எடுத்து ஊற்றினார்கள். கண்ணீரும் கம்பலையுமாக சாமி வீட்டில் இப்படி ஆகிவிட்டதே என்று அழுதார்கள். அனாதையாக ராமத்யானம் செய்தபடி உட்கார்ந்திருந்த பரசுராமபாரதியையும் குடும்பத்தையும் கண்டு ஆறுதல் சொன்னார்கள்.
வயதான காலாட்டி சோழகரின் ஆட்கள் ஒருவாறு தீக்கிரையான பரசுராம பாரதியின் குடிசைத்தீயை அணைத்தார்கள். முழுதுமே சாம்பலாகி விட்டது அந்த குடிசை.
ஆட்களோடு பாரதி அருகே வந்து ''சாமி, நீங்க எதுக்கும் கவலையே படக்கூடாது. பழைய வீடு வேகுது , புதுசா வீடு ஆகுது'' கங்காணி மற்றும் ஆட்களை கூப்பிட்டார் கட்டளைகள் பிறப்பித்தார்.
''இன்னிக்கே இஞ்சே புதுசா வீடு கட்டணும், புது சோறு சமைக்கணும். ஆண்டவனுக்கு படைக்கணும், சாமிக்கு படைச்சா விட்டு நாமோ அத்தினி பெரும் இஞ்சேயே சாப்பிடணும். கிடுகிடுன்னு வேலை ஆவட்டும்'' சூரியன் உச்சி ஏறதுக்குள்ளாற புது வீடு பாக்கணும். ஊர் வெட்டியான் எங்கே. ஆளுகளை சேர்த்துக்கிட்டு காட்டிலே மூங்கில் வெட்டியார சொல்லுங்க. யார் படுகையில், யார் மூங்கில் கொத்தாக இருந்தாலும் முத்துன மூங்கில் சிறிதும் பெரிதுமாக நிறைய இங்கே வரணும். ஆளுங்கயெல்லாம் இந்த நெருப்பு கரியெல்லாம் வாரிப்போடுங்க. சுத்தமாக இடிச்சு வறண்டி சம தரை பண்ணுங்க. புதுசா களிமண் கொண்டாந்து பழசு இருந்த இடத்திலே சுவர் கட்டணும். மேலே பெரிய மூங்கில் காம்புகளை கை கோர்த்து மோடு அழுத்தமா வரிச்சு கட்டணும். பேய்க்கரும்பு, தட்டை ஓலை விடுவாங்க ஒருபக்கம் சீக்கிரமாக முடைஞ்சு கீத்து, கூரை வேயணும். மண்ணு கெட்டியா பிசைஞ்சு சுவர் எழுப்பி மழமழன்னு மழுப்பணும் . திண்ணை, தரை எல்லாம் வழுவழுன்னு புழக்கடை வரை அமைக்கணும். கொல்லைப்பக்கம் சார்பு இறக்கி மாட்டுக்கு தொழுவம் கட்டிடுங்க. பேய்கள் பூதங்கள் பிசாசுகள் மாதிரி அசுரத்தனமாக வேலை செஞ்சு ஊர்மக்கள் அனைவரும் ஒரு ஜாமத்தில் சாமி புது வீடு ஒன்று நிர்மாணித்து விட்டார்கள். ''சாமியும் குடும்பமும் பட்டினியா இருக்காங்க. சீக்கிரம் சோலியை முடிங்க'' என்று சோழகர் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்.
எல்லோருக்கும் ஆச்சர்யம். முதலாம் ஜாமம் எரிந்த வீடு மூன்றாம் ஜாமத்தில் புதிதாக உருவாகிவிட்டது அதிசயம் இல்லையா. சோழகர் திறமை, ஆளுமை அப்படி. வாசலில் வாழைமரம் குழையோடு வெட்டி கட்டபட்டது. மாவிலை தோரணம். வாசலில் பெரிய பெரிய கோலங்கள். புது வீடு கல்யாண வீடு வாசல் போல் வரவேற்றது. அக்ராஹாரத்து மனிதர்கள், கணக்குப்பிள்ளை, மணியக்காரர், எல்லோரும் நூதன கிரஹப்பிரவேசத்துக்கு கூடிவிட்டார்கள். பரசுராம பாரதி கம்பர் என்றால் காலாட்டி சோழகர் சடையப்ப வள்ளல்! சோழகர் சோழ ராஜா போல் அல்லவா ஆதரிக்கிறார்.
பம்பரமாக சுழன்று வேலை செய்த ஊர்க்காரர்கள், பாரதியாருக்கு ஒரு ஜோடி சோமன், அவர் மனைவி சங்கரிக்கு புது புடவைகள், குழந்தைகளுக்கு புது வஸ்திரங்கள், பழம் பாக்கு, வெற்றிலை, வாழைத்தாறுகள் , பழக்கூடைகள், சந்தனம்,புஷ்ப மாலைகள், வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள், பால், தயிர், நெய் , எண்ணைவகைகள், புது பாத்திரங்கள், புது அடுப்பு, காய்கறிகள் சப் ஜாடா வந்திறங்கிவிட்டது.
பரசுராம பாரதி சோழகரோடு காவேரிக்கு சென்று ஸ்னானம், அனுஷ்டானம், எல்லாம் முடித்து மதகடி விக்னேஸ்வரருக்கு பூஜை பண்ணிவிட்டு பெருமாள் கோவில் சென்று வணங்கி ப்ரதக்ஷிணம் செயது நமஸ்கரித்து வேண்டிக்கொண்டு மேள தாளங்களோடு புது மனை புகுகுறார். மத்தியானம் ரெண்டு மணிக்கு மேல் சுப முகூர்த்தத்தில் கிரஹப்பிரவேசம். வாஸ்து சாந்தி, நவகிரஹ கணபதி ஹோமம் எல்லாம் நடந்தது. தன்னோடு எரியும் வீட்டிலிருந்து மறக்காமல் கொண்டுவந்த ராமாயண புஸ்தகத்தை பூஜையில் வைத்தார். வந்திருந்த அத்தனை பேருக்கும் சந்தனம் தாம்பூலம் பூஜை பிரசாதம் கொடுத்தார்.
சோழகர் என் தம்பி. ராமபிரானுக்கு தம்பி லக்ஷ்மணன் சித்ரகூட மலையில் பர்ணசாலை கட்டிக் கொடுத்தார் என்று படித்ததுண்டு. பார்த்ததில்லை. இன்று என் விஷயத்தில் ப்ரத்யக்ஷமாக அவர் அப்படி எரிந்த வீட்டை நூதனமாகப் புரிந்து விட்டதை கண்கூடாக பார்க்கிறோம் என்று சோழகரை உபசரித்து ஆசி வழங்கினார். அப்புறம் நடந்தது இன்னும் சுவாரஸ்யமான விஷயம். சொல்கிறேன்.
No comments:
Post a Comment