பேசும் தெய்வம் J K SIVAN
பெரியவா பக்தர் எம்பார்...
எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார் உபன்யாசங்கள் பிரசித்தமானவை. மிகவும் எளிமையாக என் போன்ற பாமரர்களுக்கும் புரியும்படியாக கதை சொல்லும் பாங்கு . சமஸ்க்ரிதத்தை அதிகம் திணித்தால் தெரியாதவர்கள் நெளிவார்கள் என்பதை புரிந்து கொண்ட மதியூகி. இசையை அதற்குப் பதில் தாராளமாக சேர்த்துக்கொள்ளும் வித்தை தெரிந்தவர்.
ஹாஸ்யமாக சொல்கிறேன் என்று நக்கல் அடிப்பது, தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும் அகம்பாவம் இல்லாத பிரசங்கி. வீட்டில் நாம் பேசிக்கொள்வதைப் போலவே அருமையான விஷயங்களை நமக்குள் செலுத்தும் பிரயோகம் தெரிந்தவர்.
82 வருஷங்கள் நம்மிடையே வாழ்ந்த (1909 -1991) தமிழின் சிறந்த ஹரிகதா காலக்ஷேப வித்வான். எம்பார் என்ற பேரின் முற்பகுதியிலிருந்தே இவர் ஸ்ரீ ராமானுஜரின் வம்சம் என்று புரியும். வைணவம் சைவம் என்ற வித்தியாசமின்றி ஜனரஞ்சகமாக சைவம் சாக்தம், கௌமாரம் ஆகிய பிற சமயக் கடவுளர் பற்றிய கதைகளையும் சொல்லியிருக்கிறார். கர் நாடக சங்கீத மும்மூர்த்திகள் தீக்ஷிதர், சாமா சாஸ்த்ரிகள்,தியாகராஜ ஸ்வாமிகள் , தவிர, ரமணர் காந்திமகான் போன்றவர்கள் பற்றியும் பல நிகழ்ச்சிகள் நடத்தியவர். நான் இவர் கதைகளை திருவல்லிக்கேணி மைலாப்பூரில் நிறைய கேட்டவன். எல்லாவற்றையும் விட முக்கிய விஷயம் எம்பார் ஒரு மஹா பெரியவா பக்தர். தன்னுடைய உபன்ன்யாசங்களில் இடையே மஹா பெரியவா பற்றி மறக்காமல் விஷயங்கள் சொல்பவர்கள். ஒருவிதத்தில் முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார மாதிர என்று தாராளமாக சொல்லலாம்.!
மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வருஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்? அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார்...........
"அய்யிரே, நீங்க அந்த காஞ்சிபுரம் சாமியார் மழையை பெய்ய வெச்சார்....ன்னு சொல்றீங்களே! அது நெஜம்னா.....இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?"
கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது.
பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப் பார்கள் ! உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே?
"ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரஹத்தால இன்னிக்கு நிச்சியமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!" .
அழுத்தந்திருத்தமாக, எம்பார் அடித்துச் சொல்லிவிட்டார். அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர "ஒரு வேளை மழை பெய்ய லேன்னா.?.......... பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா! அனாவஸ்யமா இப்பிடி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி விட்டிருக்க வேண்டாமோ. பெரியவா நீங்களே இதற்கு முடிவு கட்டணும்...." என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!
ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார்........ ....மழை வருகிறதா? என்று பார்க்க!
பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அங்கே காஞ்சிபுரத்தில் சங்கரமடத்தில் வழக்கத்திற்கு மாறாக அந்த நேரம் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்ததற்கு அங்கிருந்த பக்தர்களுக்கோ தொண்டர்களுக்கோ காரணம் தெரியாது. பகவான் ஒருவருக்கு தான் எங்கோ ஒரு பக்தன் தனக்காக வேண்டுகிறான் என்பது தெரியும் அல்லவா?
மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்............
"ஏண்டா?............இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?"
சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்!
''என்னது இது. எதுக்கு மஹா பெரியவா காஞ்சிபுரத்தில் ராத்திரி திடீர்னு மெட்ராஸ்லே மழை பெய்யறதான்னு கேட்கிறார்?
ஆம். மெட்றாஸ்லே முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!
அந்த விதண்டாவாதி, ஒன்று..........மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்! யார் கண்டது?
எம்பாரைக் கேட்காதவர்களுக்கு ஒரு சாம்பிள் சின்னதாக ஒரு சங்கீத உபன்யாசம்.
https://youtu.be/G6tCzPwYha8
https://youtu.be/G6tCzPwYha8
No comments:
Post a Comment