Sunday, December 27, 2020

MARGAZHI VIRUNDHU


 


மார்கழி விருந்து  J K  SIVAN 


             13  புள்ளின் வாய் கீண்டான்

திருப்பாவையின் சிறப்பு அதை எழுதியவள் ஒரு சிறு பெண். அமரத்துவம் பெற்ற  ஒரே  பெண் ஆழ்வார்.  இறைவனை விரும்பிய , இறைவனால் விரும்பப்பட்ட, இறைவனோடு கலந்தவள். காலத்தால் அழியாத ஒரு பெண் தெய்வம். ஆண்டாள் என்று  வைணவ ஆலய சந்நிதிகளில் அருள் பாலிப்பவள்.

படிக்காதவள் என்று சொல்வது தவறு. பீஸ் fees   கட்டி பள்ளியிலோ காலேஜிலோ முதுகில் பொதி சுமந்து பொருத்தமில்லாத ஒரு வர்ணத்தில் ஒரு உடையை யூனிபாரம் என்று அணிந்து விஷயமே தெரியாதவர்களிடம் தெரிந்து கொள்வது தான் படிப்பு என்று நாம் எண்ணினால் அது கிருஷ்ணனால் கூட மன்னிக்க முடியாத ஒரு தவறு.     நமது குழந்தைகளை  இந்த மா பெரும் தவறு செய்ய வைக்கிறோம், பணம் ஒன்றே லக்ஷியம் என்று மனதும் இருகிபோகும்போது  நல்லது கெட்டது எங்கே தெரியப்போகிறது?.  மந்தைகளாக  சேற்றில்  எல்லோரும்  விழுவதில் யாரை குறை சொல்வது?.

கல்வி நிச்சயம் புத்தகத்தில் மட்டும்  இல்லை. அனுபவத்தில் உள்ளது. அதை உணர்விப்பவர் பொறுப்போடு, விருப்போடு தனக்குத் தெரிந்ததை புரியும்படியாக பாலாடையில் புகட்டுவது போல் உள்ளே செலுத்தினால் தான் படிப்பு. முன்னோர்கள்   எந்த தேசத்திலும் அப்படித்தான் கற்றனர். ஆண்டாளின் திருப்பாவை தமிழ் யாப்பு இலக்கணத்தில் அளவான சீர் வரிசைகளோடு மிளிர்கிறது. ஆண்டாள் எங்கே  எந்த  தமிழ் வாத்தியாரிடம் இதைப்  பயின்றாள் ?.

பெரியாழ்வாரிடமிருந்து என்றால் அங்கே அவர் பாசுரங்களில் நெருடுகிறதே?. எளிதில் புரியும் படியாகவும் அமைய வேண்டும், அர்த்தம் பலமுள்ளதாகவும் இருக்கிறது.  ஆண்டாள் திருப்பாவை  பாசுரங்கள்  பெரிய அளவில் சிந்திக்க வைக்கும சிறு சங்கதிகள். பாடுவதற்கு எளியதானவை.
M L வசந்தகுமாரி , அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், அவர்களைத் தொடர்ந்து காலம் காலமாக எத்தனையோ பேர் இன்று சயந்திரம் வரை பாடுகிறார்களே, ஒருவராவது திருமுருகாற்றுப் படையை  இப்படி பாட முடிகிறதா? உபமானம் உபமேயம் எத்தனை அழகாய் எல்லோருக்கும தெரிந்ததாக கொடுத்திருக்கிறாள் ஆண்டாள். அதனால் தான் வருஷத்தில் குறைந்தது ஒரு மாதம் முழுதுமாகவாவது நம்மை குளிர்விக்கிறாள்.

விஷ்ணு சித்தர் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார். இது அந்த மாயன் ரங்கனின் அருள். தாயாரையே அவன் தன்னிடம் அனுப்பி தமிழில் விளையாட விட்டிருக்கிறான். என்னே அவன் கருணை!.

''இன்னிக்கி என்னம்மா பாடப்போறே.?''

அதி காலையிலேயே எழுந்து மெதுவாக வந்து   அவள் அருகில் அமர்ந்துகொண்டு விட்டார் விஷ்ணுசித்தர். அவர் கை அந்த புண்யவதி கோதையின் சிரத்தை தடவிக்கொடுத்தது.

''இதோ பாருங்கள் அப்பா. இந்த அகலமில்லாத சிறு ஓலையில் எழுத்தாணியால் தாராளமாக எழுத்துக்களை வடிவமைக்க இயலாதல்லவா?. உங்களால் படிக்க முடியாது. ரொம்பவுமே நெருக்கி நெருக்கி எழுதியிருக் கிறேன். நானே படிக்கிறேன். அப்பறமா அதை பாடுகிறேன்''. பாசுரத்தை வார்த்தை வார்த்தையாக கோதை வாசித்தாள்

'' புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.''

இந்த பாசுரம் விஷ்ணு சித்தரின் மனதில் ஆயர்பாடி நிகழ்ச்சியை, கண்கள் மூடியிருந்தும் தெளிவாக மனத்திரையில் பளிச்சிட்டது. அவள் பாடும்போது அவர் வைகுண்டத்தில் இருந்தாரா வில்லிப்புத்தூரிலேயே இருந்தாரா என்றால் ரெண்டிலுமே இல்லாமல் இரண்டும் கலந்த தெய்வீக ஆயர்பாடியில் ஆண்டாள் அருகே தான் இருந்தார். இடைச்சிறுமிகள் அங்கே ஆண்டாளுடன் பேசுவது காதில் விழுகிறதா?.

“இன்று என்ன கிழமை ஆண்டாள்? வெள்ளிக்கிழமைதானே?''
''தாமோதர கிழமை''
''அப்படி ஒரு கிழமை இருக்கா என்ன?''
“எல்லா நாளும் கிருஷ்ணன் நாள் தான் எனக்கு''   என்று சொல்லி மேலே பார்த்தாள் ஆண்டாள்.
''என்ன பார்க்கிறே?''
''அதோ மேலே பார். வெள்ளி முளைத்து விட்டது. அப்படியென்றால் வியாழன் முடிந்து விட்டது, மார்கழி 13வது நாள் என்று எடுத்து கொள்ளேன்? சரி சரி, வாருங்கள். இன்று வராதவள் யார்? அவள் வீட்டுக்கு போய் எழுப்பி கூப்பிட்டு கூட்டிச செல்வோம். நல்லவேளை, இந்த பெண்ணின் வீடு நாம் வழிபடும் யமுனை நதிக்கரை அருகிலேயே இருக்கிறதே. வெள்ளியை பற்றி சொன்னபோதே அந்த வெள்ளை நிற கொக்கு ராக்ஷசன் பகாசூரன் தான் ஞாபகத்துக்கு வருகிறான். அவன் கிருஷ்ணனை மோதி வாய் கிழிந்து வசமாக மாட்டிக்  கொண்டு வதமான தையே இன்று பாடுவோம்.

''தூங்கு மூஞ்சி பெண்ணே, சீக்கிரம் வெளியே வா, அற்புதமாக பறவைகளின் கானம் மரங்களில் கேட்க, குளிர் நீரில் சுகமாக முகம் கை கால் உடம்பு பூரா சில்லென்று புத்துணர்ச்சி அளிக்க எங்களுடன் சேர்ந்து வந்து நீராடு, நமது பாவை நோன்பு இன்று நன்றாக நடக்கட்டும் .

ஒரு சிறுமி மற்றோருவளிடம் சொல்கிறாள்:

“ஆனாலும் இந்த ஆண்டாள் ஒரு ராணி தானடீ. என்னமாய் நம் எல்லோரையும் கவர்ந்து நோன்பை  நடத்தச்  செய்கிறாள்."

மேலே சொன்ன காட்சி எளிதாக ஓடினாலும் பெரியாழ்வார் அந்த சிறிய எளிய பாசுரத்தின் உட்பொருளில் மூழ்கினார். உள்  அர்த்தம்  மனதில் ஆழ பதிந்தது.

ராமனும் கிருஷ்ணனும் ஒருவரே. ராவணனின் 10 தலைகளையும் நொடியில் கிள்ளி எறிந்தான் ராமன். பகன் என்னும் நாரை வடிவில் வந்த அசுரனையும் கிருஷ்ணன் அவ்வாறே எளிதில் வாயைக் கிழித்து கொன்றான். 

என்ன சொல்கிறாள் ஆண்டாள்?

 உலக ஆசா பாசங்கள் என்னும் அலைமோதும் உலகம் ஆகிய  சம்சார சாகரத்தில் மூழ்கி  நாம்  எல்லோரும் தத்தளிக்கிறோம் . இந்த கடலில் ஒவ்வொரு  சிறு தீவு நாம் எல்லோரும். ஆண்டாள் ஏன் ராமனை நினைக்கிறாள் தெரிகிறதா? இந்து மகா சமுத்ரத்தில் இலங்கை ஒரு துக்குணியூண்டு தீவு. அதற்கு சர்வாதிகாரி இராவணன் எனும் அரக்கன். உலக சமுத்ரத்தில் நாம் ஒரு கொசு தீவு. நம்மை ஆட்டுவிப்பவன் மனம் எனும் ராவணன். அந்த தீவில் சிக்குண்டு தவிக்கும் சீதை தான் நமது மனத்தின் தளைகளால் கட்டுண்டு தவிக்கும் ஜீவாத்மா. நிர்கதியான சீதைக்கு ஒரு ஹனுமான்.   நமக்கு வழிகாட்டுபவள் ஆண்டாள். இலங்கையை அடைந்து ராவணனைக் கொன்று சீதையை காப்பாற்றினவன் ராமன். சிக்குண்டு தவிக்கும் நமது ஆன்மாவுக்கு தெம்பு அளிப்பது கிருஷ்ணனின் மூல மந்த்ரம்.

'' ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே'

ராமன் வந்து ராவணனைக் கொன்று சீதையை மீட்டது போல் நாம் அவன் தாளையே சரணாகதி என்று அடைந்தால் நம்மை சம்சார சாகரத்திலிருந்து மீட்டு கண்ணன் மோக்ஷ பதவி பெற வைப்பவன்.

இந்த எண்ணம் பெரியாழ்வார் சிந்தனை மூலம் நமது மனத்திலும் இடம் பெற்று  வேலை செய்யட்டும்.   நாளை  சந்திப்போம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...