Monday, November 30, 2020

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம் J K SIVAN
நூறு வருஷம் காரண்டீ.
மஹா பெரியவாளின் அருகே இருந்து சேவை செய்யும் பாக்யம் படைத்த ராயவரம் பாலுவுக்கு ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் தெரிந்திருக்கும். அவை அத்தனையும் ஒரு சேர எங்கே படிக்க முடிகிறது. பெரியவா அனுபவங்களை காசு பண்ணாமல் எல்லோருக்கும் வாரி வழங்க ஆசை. கிடைத்ததை எல்லாம் என்னால் முடிந்தவரை தெளிவாக எடுத்துச் சொல்லி வருகிறேன். புத்தகமாக்கி இலவசமாக கொடுக்கிறேன். விலை போடப்படாத புத்தகங்கள் பேசும் தெய்வம் என்று ரெண்டு பாகங்கள். கிட்டத்தட்ட 200 பக்கங்கள் ஒவ்வொன்றிலும். மூன்றாம் பாகம் புத்தகமாக ரெடியாகி விட்டது. எழுத்தை புஸ்தகமாக்குவதில் தான் சிரமம். அச்சுக்கூலி, தட்டச்சுக் கூலி கொடுக்க வேண்டும். 1000 பிரதிகளுக்கு பல ஆயிரங்கள் ரூபாய் செலவாகிறது. எப்படியோ நன் கொடை கள் வங்கிக் கணக்கில் பெற்று அந்த செலவுகளை சந்தித்து புத்தகங்கள் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் வேண்டு வோருக்கு அவர்களது அன்பளிப்பாக வழங்கட்டும். நாங்களும் ஆஸ்பத்தரிகள், முதியோர் இல்லங்கள், பொது நூலகங்கள், பள்ளிக்கூட மாணவ மாணவி களுக்கு பரிசாக கொடுக்கிறோம். யார் கொடுத்தால் என்ன? நல்ல விஷயம் நாலு பேரைப் போய் சேரவேண்டும்.
இப்போது ஒரு அற்புத நிகழ்ச்சி சொல்கிறேன்.
மஹா பெரியவா ஒரு சமயம் கரூரில் நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு, தரிசனத் துக்காகச் சென்றிருந்தார்..
சதாசிவப் பிரும்மேந்திரரிடம், பெரியவா ளுக்கு இருந்த பக்திக்கும், மரியாதைக்கும் எல்லையே இல்லை.
பிரும்மேந்திரா பெயரைச் சொன்னாலும், கேட்டாலும், உருகிப் போய்விடுவார் பெரியவா. அதிஷ்டானத்திற்குள் சென்று ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார். அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவாக ப் போய் நின்று கொண்டார்கள். எங்கும் நிசப்தம். அமைதி. காற்று மட்டும் மெல்லிசாக வீசிக் கொண்டி ருந்தது. அதில் தெய்வீகம் முழுசாக கலந்தி ருந்தது. பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதை யோ யாரும் பார்க்கக்கூடாது என்பது, ஸ்ரீ மடத்து சம்பிரதாயம். மானுட எல்லைகளுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள், அவை. இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின் நலனை முன்னிட்டுத் தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நூறு வாட்ஸ் மின் விளக்கையே பார்த்துப் பழகிய கண்கள் எதிரில், லட்சம் வாட்ஸ் மின் ஒளியைப் பாய்ச்சினால், எப்படித் தாங்கமுடியும்? அந்தச் சமயம் பார்த்து வெகு அவசரமாக ஓடி வந்தார். ஓர் பக்தர். ரங்கசாமி என்று பெயர்.
“பெரியவாளை உடனே தரிசனம் பண்ணனும். பிரசாதம் வாங்கிக்கொண்டு உடனே புறப்படணும்”
''சத்தம் போடாதீங்கோ'' அப்புறம் வாங்கோ.
''எனக்கு அவரை உடனே பார்க்கணும்'
“சுவாமி, இதைக் கேளுங்கோ. மஹா பெரியவா , கதவை சார்த்திக்கொண்டு அதிஷ்டானத்துக்குள் ஜபம் பண்ணிண்டு இருக்கா. இப்போ நாம் யாருமே அவாளைத் தரிசிக்க முடியாது. தியானம் கலைந்து பெரியவா தானாகவே வெளியே வந்தவுடன் முதல் ஆளாக நீங்கள் தரிசனம் செய்து கொள்ளலாம்.”
வந்தவர், இலேசுபட்டவர் அல்லர்; ரொம்பவும் அமுக்கமான பேர்வழி!. தொண்டர்களின் பேச்சைக் கேட்டு சமாதானம் அடைந்துவிட்டாற்போல, பாவனை செய்து கொண்டிருந்தார். அமைதியையும் மீறி சில தொண்டர்களின் சுதந்திரமான வாய் வீச்சு, அடக்குவாரின்றி வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது. பேச்சு வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டி ருந்தார்கள் அவர்கள்.
அப்போது தான் ஒரு அதிசயம் நடந்தது. இதெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ரங்கசாமி, தொண்டர்கள் சற்று கவனக் குறைவாக இருக்கும் நிலையில் கண்ணி மைக்கும் நேரத்தில் குபீரென்று தாவிக் குதித்து ஓடி சாத்தியிருந்த அதிஷ்டானத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு, உள்ளே சென்றுவிட்டார்! இந்தத் தடாலடித் திட்டத்தை யாரும் எதிர் பார்க்காததால் எல்லோரும் குழம்பிப் போய் நின்றார்கள். பெரிய ஷாக் இது எல்லோருக்கும். யாரும் இப்படி பண்ணதில்லையே. அந்த நேரத்தில் அதிஷ்டானத்திலிருந்து பெரிய வாளின் குரல், அதுவரையில் சிஷ்யர் கள் கேட்டறியாத ஒரு கம்பீரத்வனியில் தெளிவாகக் கேட்டது. “நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் எதுவும் பண்ண வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான். திரும்பிப் போங்கோ'' -- பெரியவா குரல்.
அன்பர் ரங்கசாமி கதவை மூடிவிட்டு, சட்டென்று வெளியே வந்தார். அணுக்கத் தொண்டர்கள் அவரை மொய்த்துக் கொண்டு விட்டார்கள். ரங்கசாமி ஒரு கதையே சொன்னார். ''என்னுடைய ரொம்ப நெருங்கிய உறவின ருக்கு, திடீரென்று நெஞ்சுவலி. பரிசோதனை செய்த டாக்டர்கள், “நாற்பத்தெட்டு மணி நேரம் போனால்தான்,உறுதியாக சொல்ல முடியும்” என்று சொல்லி விட்டார்கள். ஜோசியரை் கேட்டோம்.
“உடனே ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்யுங்கோ'' ன்னு சொல்லிட்டார்.
அப்போதான் எங்க கூட இருந்த ஒருத்தர், இப்போ இந்த ஊரிலே தான் காஞ்சி மஹா ஸ்வாமிகள் தங்கி இருக்கார். சதாசிவ ப்ரம்மேந்த்ர அதிஷ்டானம் வந்திருக்கார். அவரைப் போய் பாருங்கோ. விஷயத்தைச் சொல்லி பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்தால் நல்லது நடக்கலாம்'' இதைச் சொன்னது குடும்பத்தில் எல்லோராலும் மதிக்கப்பட்ட ஒரு வயதான மூதாட்டி.
''கவலைப்படாதேங்கோ, பெரியவா, இதோ பக்கத்திலே, நெரூர்லே தானே இருக்கார். அவாகிட்ட சொல்லிவிடுங்கோ,அவா பார்த்துப்பா”
நாங்க எல்லோரும் பாட்டி சொன்னதை மனதார ஏற்றுக்கொண்டோம். அவசரம் என்கிறதாலே ஓடிவந்தேன். ''
ரங்கசாமி செய்த பூர்வ புண்யம் , அதிர்ஷ்டம், பேசும் தெய்வமே அவருக்கு அருள்வாக்குக் கூறிவிட்டது!
ரங்கசாமி வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த நோயாளி உறவினர், படுக்கையில் உட்கார்ந்து புன்முறு வலித்துக் கொண்டிருந்தார். ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!”

ARUPATHTHU MOOVAR


 அறுபத்து மூவர்  J K  SIVAN 

                                           
                                                                  திரு நாளைப் போவார் 

நந்தனார்   தென்னாட்டில் வாழ்ந்த  சிவ பக்தர்  கோபாலக்ரிஷ்ண பாரதியாரின் கற்பனை பாத்திரம் என்றாலும் மனதிலும்  வெளியில் கல் கோயிலிலும்  குடி  கொண்டு வணங்கப்படும்  சிவனடியாராக, அறுபத்துமூவரில் ஒன்றாக   திருநாளைப்போவாராக  ஆகிவிட்டார். 

மிழகத்தில்  காவிரி கொள்ளிட நதி செழிப்பான பூமியில் ஒரு சிற்றூர் ஆதனூர்.  அதில்   இருந்த  ஏழைகள் வாழும்  சேரியில் நந்தனார் என்று ஒருவர்.  சிறந்த சிவபக்தர்.   அந்த ஊருக்கு அருகே  இன்னொரு சின்ன  ஊர்.  திருப்புன்கூர். அங்கே  அருமையாக ஒரு சிவன், பெரிய நந்தி.  வெளியே இருந்து  தான் தரிசனம் செய்ய வேண்டிய  நிலைமை.  சிவனைப்பார்க்க  முடியாமல் பெரிய நந்தி மறைத்தது. 

''மலை போல் மாடு படுத்து மறைக்குதே'' என்று வருந்தி பாடுகிறார்.  ''சற்றே  விலகியிரும் பிள்ளாய்'' என்று சிவன் நந்திக்கு கட்டளையிட, நந்தி அழகாக விலகி நிற்கிறது. மூன்று  நான்கு முறை அந்த ஊருக்கு சென்று   சிவனையும், நந்தியையும், அங்கே  உள்ள நந்தனார் சந்நிதியிலும்  தரிசனம் செய்யும்  பாக்யம் கிடைத்தது.  
 வைத்தீஸ்வரன் கோவில் அருகே  2 கி.மீ. தூரம் தான். சிவன் பெயர்  சிவலோகநாதன். 

நந்தனார்  நமஸ்கரித்துவிட்டு  வீதிவலம் வரும்போது   ஒரு  பள்ளம்  கண்ணில் படுகிறது. இதை குளமாக்கலாமே என்று தோண்டி  சிவன் கோவில் குளமாக்கினார். நிறைய  கோவில்களுக்கு சென்று  திருப்பணிகள் செய்தவர். 

ஒருநாள் சிதம்பர நடராஜ தரிசனம் பெற  ஆசை.  எப்படிப்போவது. அன்றிரவு தூக்கமில்லை. விடிந்ததும் எப்படி  சிதம்பரம்  போகமுடியும்,  சிவதரிசனம்  செய்யமுடியும்,  பிறப்பு குறுக்கே நிற்கிறதே என்று வாடினார்.   ஆசையை அடக்கமுடியாமல்  '' நாளைக்கு போவேன்” என்று சொல்லிக்கொண்டு தனக்குத்தானே  சமாதானம் செய்தவராக காலம் போக்கினதால்  அவருக்கு  திரு   ''நாளைப்  போவார்''  என்று பெயர் ஒட்டிக்கொண்டது.  ஒருநாள்  தில்லை சென்றார்.  தூரத்தில்  எல்லையில்  நின்று வணங்கி நின்று அங்கு எழும்  யாக  யஞ  புகைமண்டலத்தையம்  வேத சப்தத்தையும்  ரசித்தார். 

‘மை வண்ணத் திரு மிடற்றார் மன்றில் நடங்கும்பிடுவது எவ்வண்ணம்? என்று எண்ணி ஏக்கத்துடன் துயில் . ‘இன்னல்தரும் இழிபிறப்பாகிய இது இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை வழிபடுவதற்குத் தடையாயுள்ளதே? என்று  ஏங்கினார்.  

சிதம்பரம் நடராஜானுக்கு தெரியாதா?  கனவில் வந்தார். 

“இப்பிறவி போய் நீங்க ஏரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்”  என்று  அருள்புரிந்தார். 
அதாவது  அக்னி மூட்டி அதில் தீக்குளித்து என்னை அடைவாய் என்று சொல்லியபடி  தில்லை வாழ்   மூவாயிரவர்  கனவிலும் நந்தனார் அக்னி  பிரவேசம் பண்ணி என்னை அடைய  அவரை ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்.

பொழுது விடிந்ததும்  தீட்சிதர்கள்  திருநாளைபோவார் எனும் நந்தனாரை சென்று சந்தித்து உமக்கு இறைவன் கட்டளைப்படி நாங்கள் அக்னிப்ரவேச ஏற்பாடுகள் செய்கிறோம் என்று சொல்கிறார்கள்.  

நடராஜன் ஆலயம் முன்பு  தீக்குழி  அமைத்து ஊர் மக்கள் பக்தர்கள் ஏராளமாக கூடி இருக்க  திருநாளைப்போவார் நடராஜனை மனதில் துதித்து  மும்முறை  தீக்குழியை வலம்  வந்து  தீயில் மூழ்குகிறார்.  அடுத்த கணமே  ஜெகஜோதியாக  பொன்வண்ண மேனியுடன்  ப்ரம்ம தேவன் போல் வெளி வருகிறார்   தில்லை வாழ் தீட்சிதர்கள் கைகூப்பி வணங்கி  அவரை உபசரித்து ஆலயப்பிரவேசம் செய்ய வேண்டுகிறார்கள்.

சிதம்பர ஆலய கோபுர  தரிசனம் செய்தபின்   ஆலயத்தில் பிரவேசித்து  நடராஜன் சந்நிதியில் தன்னை மறந்து  நந்தனார் தியானத்தில் ஆழ்கிறார். 

பல  வருஷங்களாக மனதில் மட்டுமே  உறைந்திருந்த நடராஜனை கண்ணார நேரே காண்கிற பாக்யம் கொடுத்ததற்காக அவனை மனதார போற்றுகிறார்.  போற்ற வார்த்தைகள் கிடைக்கவில்லை. பரமானந்தத்தில் திளைத்து மெளனமாக  வணங்குகிறார்.

எத்தனை நேரம் கற்சிலையாக  நந்தனார் நின்றார் என்று சொல்ல முடியாத வண்ணம்  அவர் உடலிலிருந்து ஒரு ஒளி தோன்றி நடராஜன் கருவறைக்குள் புகுந்து நடராஜனோடு ஐக்கியமானது.  இங்கே நின்றிருந்த நந்தனார் எங்கே என்று எல்லோரும் ஆச்சர்யமாக தேடினார்கள்.  இனி அவர் திருநாளை போவார் அல்ல. திருநாளில் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். நடராஜனோடு ஐக்கியமான பின் அவர் வேறு அவன் வேறு அல்லவே?  

சிவாலயங்கள் சென்றால் அறுபத்து மூவர் கற்சிலைகள், மூர்த்திகள் இருக்குமே. அதில் திருநாளைப் 
போவார்  என்று எழுதியிருக்கும்  மூர்த்திக்கு இதை நினைந்து தனியாக ஒரு நமஸ்காரம் செலுத்துவோம்.
                

Sunday, November 29, 2020

KRISHNA THE LEADER

                        பெருந்தலைவன் , வழிகாட்டி. J K  SIVAN 



நாம்  நேரில் பார்த்திராத,  குரல் கேட்காத, ஐந்தாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் ஏன் எனது மனதில் பசை போல் ஒட்டிக்கொண்டிருக்கிறான்?  அப்படி என்ன விசேஷமான சக்தி குணம், திறமை, சாதுர்யம்  அவனிடம்  என்று பார்த்தேன்.   அவன் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியது புலப்பட்டது. எப்படி?

ஹிந்து கடவுள்களில்  முதலிடம் பிடித்தவனாக இருக்கிறான். கடவுளாக  மட்டுமா இருந்தான் ?  சிறந்த  தலைவனாக,  அரசனாக,  ஞானியாக, பேச்சாளியாக, சமயோசித ராஜதந்திரியாக, பலவானாக, எல்லாமுமாக இருந்தான் என்ற  ஒரு  விசேஷம்  போதுமே. எந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை அவனிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்.

இப்போதெல்லாம்   யார் யாரையெல்லாமோ  ஒன்றுமில்லாததற்கே  புகழ்ந்து தள்ளுகிறோம். இவரைப்போல எவராவது உண்டா  என்கிறோம்.  பெரிய  கார்பொரேட் கம்பெனி, அதிபர்களை யெல்லாம்  மஹா கெட்டிக்காரர்கள், புத்திசாலிகள், தீர்க்க தரிசிகள் என்று புகழ்கிறோமே   ஒரு  நிமிஷம்  நமது கிருஷ்ணனை  நினைத்துப் பார்ப்போம். சற்று யோசித்தால்  நன்றாக புரியும். 

கிருஷ்ணனுக்கு  வெகு நன்றாக அறிந்தவன்.  கௌரவ சேனையின் சக்திக்கு  முன் பாண்டவ சேனை பலமற்றது. 11 அக்ரோணி  சேனை,  பீஷ்ம துரோணர்,  கிருபர் , அஸ்வத்தாமா, கர்ணன்  சல்லியன் போன்ற மஹா ரதர்கள். நிறைய பேர். நீளமான லிஸ்ட் எங்கே,    ஏழு அக்ரோணி பாண்டவர்கள் சேனை எங்கே?

தான் அர்ஜூனனுக்கும் பாண்டவர்களுக்கும் உதவப்போகிறோம்  அவர்கள் தான் வெல்லப் போகிறார்கள் என்று க்ரிஷ்ணனுக்கு யுத்தம் வரும் முன்பே தெரியும்.  எந்த சந்தர்ப்பத்திலும் அவன் அமைதியை இழக்கவில்லை. அர்ஜுனனை, மற்ற பாண்டவர்களை வழி நடத்தி  ஜெயிக்க வைத்த  திறமை  பிளானிங் ஒன்றே போதுமே அவன் திறமைக்கு  சாட்சி சொல்ல.   நிறைய  அழுத்தம் வரும்போது அமைதியை, நெஞ்சுறுதியை இழக்காதவன் தான்  திறமைசாலி.

கிருஷ்ணன் யார் பேசினாலும் அமைதியாகக்  கேட்பவன்.  அர்ஜுனன்  எதிர்பாராமல் திடீரென்று யுத்தகளத்தில்  ''நான் யுத்தம் புரிய போவதில்லை''  என்றபோதும்,  ''வெற்றி எமக்கே நாங்கள் தான் வெற்றி பெறப்போகிறோம்''    என்று துரியோதனன் முழங்கியபோதும் கிருஷ்ணன்  துளியும்  கலங்கவில்லை.  உணர்ச்சி வசப்படவில்லை.  அவன் மனதில் வெற்றி எங்கே இருக்கிறது, யார் பக்கம் என்று திட்டமிட்டாகிவிட்டது.  ஒரு சிறந்த  பெரிய  நிர்வாகத் திலும் தலைமைப்பதவியில்  இருப்பவன் இடையூறுகளை லக்ஷியம் பண்ணாமல், தீர ஆலோசித்து தனக்கு எது  சரியான முடிவாக தோன்றுகிறதோ, அதை  நடத்திக் காட்டவேண்டும். 

மற்றவர்களோடு எல்லாம் நான் சேர, இணைய மாட்டேன், பேசமாட்டேன் என்று உயர் அதிகாரிகள் போல்  கிருஷ்ணன்  இல்லை.  சாதாரண யாதவ சிறுவன் முதல்  பீஷ்மர்  நாரதர் வரை எல்லோருடனும்  இணைந்து  சரிசமமாக பழகி அனைவர் அன்பையும் சம்பாதித்தவன் கிருஷ்ணன்.  ஜாதி மதம், ஏழை பணக்காரன் எந்த வித்யாசமும் இல்லை.  இன்றும் நான் அவன்  குசேலன் என்ற பரம ஏழையை  எப்படி மனதார வரவேற்று உபசரித்து பழகினான் என்று அறிந்து மகிழ்கிறோம். 

தக்க நேரத்தில்  எது தர்மம், நீதி, நெறி, முறை என்று உணர்த்தி    சரியாக எடுத்துரைக்க வேண்டியது தலைவனின் கடமை. அதை அற்புதமாக செய்தவன் கிருஷ்ணன்.  ஒரு  வினாடி நேரத்தில்  திடீரென்று வில்லை கீழே போட்டுவிட்டு யுத்தம் புரியமாட்டேன் என்று தளர்ந்த அர்ஜுனனைத் தேற்றி, அவன் செய்ய வேண்டிய தர்மத்தை எடுத்துரைத்து  போர் புரிய வைத்து  யுத்தத்தில்  வெற்றியும் பெற  வைக்க,   கிருஷ்ணன்  படாத பாடு  எதுவும்  படவில்லை.  கண் இமைக்கும்  நேரத்தில் அவனை சரியானபாதையில் மீண்டும் செல்ல வைத்தான். 

 700-800 ஸ்லோகங்களை மூன்று நாளாக  யுத்தகளத்தில் சொல்லி விளக்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் புரிய வைத்தான். நமக்கு படிக்க சௌகர்யமாக இருக்கும் என்று  பெரிய புத்தகமாக  வியாசர்  எழுதி வைத்திருக்கிறார்.  யுத்தகளத்தில் இதற்கெல்லாம் நேரம்  எது?  மனதில் உள்ளதை சொன்னவனும் ஞானி,  அதை சொல்லாமலேயே  புரியவைத்தவன்  கிருஷ்ணன்  அர்ஜுனனை விடசிறந்த   பெரிய  ஒரு  ப்ரம்ம ஞானி. 

சொந்த,  நெருங்கிய,   உறவானாலும்  கடமை என்று வரும்போது  பாரபக்ஷம் பார்க்காத நிலையை  கற்றுக்கொடுத்தவன் கிருஷ்ணன் எனும்  ஜட்ஜ்.

ஒரு  யுத்தம், போர், பல பரிக்ஷை என்றால்  எதிராளியின் சக்தி, யுக்தி, உத்தி, எல்லாம்  கணக்கில்  கொள்ள வேண்டும். கணிக்கப்பட வேண்டும்.  அதை வெற்றி கொள்ள  என்ன  ஆயத்தம் மேற் கொள்ள வேண்டும். தக்க தருணம் எது என்று அறிந்து செயல்பட  திறமை, சமயோசிதம் வேண்டும். பலஹீனத்தையும் பலமாக  மாற்ற  திறமையோடு  முடித்தவன் கிருஷ்ணன்.   எவரை  எப்படி எதிர்கொள்ள, எவரைத்  தயார் செய்ய வேண்டும் என்று முன்பே  திட்டமிட்டு நிறைவேற்றியவன்.   ஒரு பெரிய  நிர்வாகத்தை நடத்துபவனுக்கு இந்த தந்திரம்  சாதுர்யம், சாமர்த்தியம், எல்லாம்  அவசியம்..

உணர்ச்சி வசப்படுவது  வெற்றி வாய்ப்புக்கு எப்போதும்  எதிரி.  செய்யும் தொழிலில் கடமை, பொறுப்புணர்ச்சி, நேர்மை, நியாயம்,  வலிமை, உறுதி,   சக்தியை வீணாக்காமல் பலத்தை  உபயோகிப்பது என்பது ஒரு பெரிய நிறுவனத்திற்கு மட்டும் தேவை மட்டுமல்ல, மாபெரும் யுத்த களத்திலும் அது தேவை என்று உணர்த்தி அர்ஜுனனை செயல்வீரன் ஆக்கியவன் கிருஷ்ணன்.

ஒரு சங்கடமான நிலை.   மிகவும் நெருக்கமாக  வேண்டிய  இருவரில் ஒருவரை ஆதரிக்க வேண்டுமென்றால் அடுத்தவரை எதிர்த்து தான் ஆகவேண்டும். மனதில் உறுதி இதற்கு வேண்டும்.   கிருஷ்ணன்  பாண்டவர்களுக்கு  பக்கத்துணையாக  ஆயுதமின்றி தனியாளாக இருக்க நிச்சயித்தான். எக்காரணத்தைக் கொண்டும்  அதில்  பிறழவில்லை.  ஒரு பெரிய நிறுவன  அதிகாரி  முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான். வருவதை எதிர்கொள்ள தயாராக  தன்னை பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்கிறான்.

ஒரு பெரிய பொறுப்புள்ள தலைவன்  அமைதி காக்க வேண்டும், எல்லோரையும் மதிக்க வேண்டும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப அடக்கமாக, பொறுமையாக  தன்னுடைய வலிமையான செயல்பாட்டை தொடரவேண்டும்.  அவன் முன்னுதாரணமாக இருந்தால் அவனை பின்பற்றுவோர் முழுமனதோடு அவனை பின்பற்றுவார்கள்.  மனத்தில் உள்ளே இருந்து கொண்டு  வழிநடத்தும் ஆத்மாவின் குரலை  புறக்கணிக்க கூடாது.  இப்படி  நடந்து காட்டியவன் கிருஷ்ணன். 
 
சிலர் எப்போதும் தமது குறைகளை, துயரங்களைச் சொல்லிக்கொண்டே  மகிழ்பவர்கள். பிறர் அனுதாபம் எப்போதும் தேடுபவர்கள். அவர்கள் தலைவர்களாக முடியாது.  கிருஷ்ணன்  பிறந்ததிலிருந்து ஒவ்வொருநாளும்  உயிருக்கு வந்த  பல  ஆபத்துகளை சந்தித்தாலும்  அவற்றைப் பற்றி எங்கும் மூச்சு விட்டதில்லை.  பாகவதத்தில் எங்கு தேடியும் கிடைக்காது. ஆனால் பிறர் துன்பம் தீர்ப்பதில் முன் நின்றவன்.முதல்வன்.

தனக்கு ஆதாயம் இல்லாமல் பிறர்க்கு உதவவே உழைப்பவன் பெருந்தலைவன் ..  மஹாபாரத த்தால் கிருஷ்ணன் என்ன ஆதாயம், சுய லாபம் பெற்றான்? உடம்பு முழுக்க  அம்புகளைத்தான் 18 நாட்கள் வாங்கினான், தாங்கினான்.  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சென்று அவன் முகத்தை பாருங்கள் தெரியும். தர்மம் வெல்லவேண்டும், தீமை அழியவேண்டும்  என்று தன்னை வருத்திக் கொண்டவன். 

தன்னை சுற்றி  ஏதாவது பிரபலம், புகழ்,  கைதட்டல்,  விளம்பரம்  எதுவும்  இல்லாமல்  தான் இருப்பது தெரியாமலேயே, தேவைப்படாமல்,  எந்த  காரியத்தையும்  கச்சிதமாக முடிப்பவன் தான் சிறந்த தலைவன்.  கிருஷ்ணன் அப்படித்தான் மஹா பாரதத்தில் பங்கேற்றவன். எந்த  ஆயுதமும் தாங்காமல்  தேர் மட்டும் ஒட்டியே , பாண்டவர்களை வெற்றி பெறச் செய்தவன்.  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதைத்தான்.  
 
ஒரு சிறந்த தலைவன் தனது கஷ்டங்களை, துன்பங்களை பொருட்படுத்தாமல், அவற்றை ஒரு பொருளாக்காமல், அவனது சேவைகளை சிறப்பாமல் செய்பவன். இதற்கு உதாரண புருஷன்.  கிருஷ்ணன்  தான்.   அவன் பிறந்ததே சிறைச்சாலையில், பெற்றோரை  பிரிந்தவன்.அவற்றை அவன் ஒரு போதும் மூச்சு கூட விட்டதில்லை. நாம் தான் தேடித்தேடி அவன் பட்ட  துயரை பட்டியலிடுகிறோம்.  

தன்னுடைய  ,கல்வி கேள்வி  ஞானம் எல்லாம்  பிறருக்கு  ப்ரயோஜனப்படும்படி  வழி நடத்து பவன் தான் தலைவன்.   கிருஷ்ணன் கீதை ஒன்றே போதுமே இதை தெளிவாக்க.

பிறரை  உழைக்கச்செயது பயன் பெற வழிநடத்துபவன் தலைவன்.  உழைக்காமல் தனது நிழலில் பலனை அனுபவிக்க செய்வது தவறான வழி.  கிருஷ்ணன் மனது வைத்திருந்தால்  ஒரு சில நிமிஷங்களிலேயே  மகாபாரத யுத்தத்தை  தானே  முடித்திருக்க முடித்தவன்.  18 நாள்  அர்ஜுனன், மற்ற பாண்டவர்கள் கடினமாக உழைத்து வெற்றியின் பலனை அனுபவிக்க உதவியவர்.  குழந்தை தானாகவே  நடக்கும் முன்பு பலமுறை விழுந்து எழுந்திருக்க வேண்டும். தூக்கிக்கொண்டே இருந்தால் எப்போது நடக்கும்? இதை தான் அவரவர் காலில் அவரவர் நிற்க அறிந்துகொள்வது.

சிறந்த  தலைவன்,  கடமை , பொறுப்பு மிக்கவன்   சொந்தம், பந்தம், நட்பு,  என்று பாரபக்ஷம் பார்க்காத  பொது நலம் ஒன்றே மனதில் கொண்டவனாக இருக்க வேண்டும். இப்போது அப்படி  ஒருவரைக்கூட  பார்க்கக் கூட முடியவில்லை என்று குறை பட்டுக்கொள்கிறோம்.  கிருஷ்ணன்  தனது சொந்த மாமன் என்று கூட  துளியும் லக்ஷியம் பண்ணாமல்  தீயவன் என்பதால் அவனைக் கொன்றான்.  

ஆஹா  எவ்வளவு சிறந்த சிந்தனையாளன், வாயைத் திறந்து பேசமாட்டானா என்று ஆவலோடு காத்திருக்கச்  செய்பவன் தலைவன். வார்த்தைகள் அவன் கைப்பாவை. அறிவுரைகள்பொருத்த
மாக தானே வெள்ளமாக வெளிவரும்.   கிருஷ்ணன்  அப்படித்தான் அறியப்பட்டவன் .


my first land purchase

நானும்  நில  சொந்தக்காரன்.. J K  SIVAN 

இப்போது நினைத்துப்பார்த்தாலும்  சிரிப்பாக இருக்கிறது. அப்போது  என்  பரிதாப  நிலையை பார்த்திருக்கவேண்டும்.   ஒருவர்  பாக்கி  இல்லாமல்  நான்  செய்த காரியத்துக்கு என்னை அர்ச்சனை செய்யாதவர்கள் உலகத்திலேயே  கிடையாது. 

''தலை கொழுப்பு.  நாலு காசு சம்பாதிக்கிறோம் என்கிற கர்வம்.  (நான்  என்ன பிர்லாவா, டாடாவா ?) .  கர்வம்,  தான்தோன்றி தனம் .  சொந்த புத்தியும்  கிடையாது. சொல் பேச்சும் கேட்கறதில்லை.'' இதெல்லாம் நான் பெற்ற  இலவச  பட்டங்கள், விருதுகள்.   நான் என்ன அப்படி செய்துவிட்டேன்?

''சிவா, நீ பண்ணது மடத்தனம். மனிஷன் இருப்பானா  அங்கே?''

நான் பதிலே சொல்லவில்லை. ஒருவேளை எல்லோரும் சொல்வது சரியோ. நான் உண்மை யில் கடைந்தெடுத்த மடையனோ?  அவசர குடுக்கையோ?''

''ஒரு வார்த்தை என்கிட்டே கேட்டிருந்தா நான் சொல்லியிருப்பேனோல்லியோ?   பஞ்சாபகேசன் ஆதுரமாக என் தலையைத்  தடவினார்.  ஈனஸ்வரத்தில் பதில் சொன்னேன். 

''இல்லே  என் பிரென்ட்  சொன்னான். நல்ல இடமா இருக்கு. வாங்கிடுன்னு. வாங்கிட்டேன். இன்னும் முழுசா பணம் கொடுக்கல் லியே.  மூன்று இன்ஸ்டால்மெண்ட் லே தறேன்னுதானே  சொல்லிருக்கேன்.  வேணா இந்த முதல் இன்ஸ்டால்மென்டுக்கு தலை முழுகிடுறேன்.

''மறுபடியும் அவசரப்படாதே.  வாங்கிறது தான் வாங்கினியே.  சரி  எங்கே இருக்குன்னு  அந்த  இடத்தை போய் பார்த்தியா. ?''

''எங்கிருக்குன்னே தெரியாதே''

''பின்னே  எப்படி செலக்ட் பண்ணே?''

''என் அத்திம்பேர் சொன்னார்.   அவர்  அங்கேயே  வீடு கட்டிண்டு போய்ட்டார்.  இங்கே எல்லாம் நல்ல இடம் இருக்கு. நிறைய பேர் வந்து பார்த்துட் டு போறா. விலை ஏறினாலும் ஏறும். நீ  வாங்கற தா இருந்தா சீக்கிரம் வாங்கிடு ''ன்னு  சொன்னது  எனக்கு  மனசிலே தச்சிடுத்து.''

''அப்புறம்?''

''என்  சொந்தக்காரன் ஒருத்தன் ஏற்கனவே வாங்கி இருக்கான். இன்னும் வீடு கட்டலே . அவனை அவன் ஆபிஸ்லே போய் பார்த்து கேட்டேன்.  

என்ன சொன்னான்.?''

''இப்போதைக்கு  அங்கே வந்து தங்கி ஆபிஸ் போறது உனக்கு கொஞ்சம்  சௌகரியமா  இல்லன்னு பார்த்தாலும்  எப்படியும   சாதாரண மா ரெண்டு  மணிநேரம் முன்னா லேயே கிளம்பினா பத்துமணிக்கு  ஆபிஸ் போய் சேரலாம். மழைக்காலத்துலே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.  என்ன பண்ணமுடியும்.  ஒரு சௌகர்யத்தை பார்த்தா இன்னொன்னு இருக்காது.  எங்கேயும் அப்படித்தானே''.  பீஷ்மர்  மாதிரி உபதேசம் பண்ணினார்.  எனக்கு அவர் சொல்றது வாஸ்தவம்  தானே  என்று பட்டது.  

''நீங்க எதுக்கு அங்கே போய்  வாங்கினேள் ?' என்று  நான்  ரொம்ப  சாமர்த்தியசாலி மாதிரி  அவரை கேட்டேன்.

''ஆபிஸ்லே  நாலைஞ்சு பேர் மொத்தமாக  விலை பேசி  வாங்கினா. ஒரு பிளாட் இருக்குன்னு என் பக்கத்து சீட் காரன் தொளை ச்சான்.  நான்   அவன் கிட்டே  ரெண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கி யிருந்தேன்.  அவன் பேச்சை தட்டமுடி யல்லே. கடனுக்கு தான்  மாசா மாசம் கட்றேன் ''

சரி எல்லோரும்  ஏன்  நிலத்தை பார்க்காமல் வாங்கினாய் என்று கேட்கிறார்களே தப்பு என்று  சொல்கிறார்களே என்பதால்   என் ''நிலத்தை '' பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டேன்.  நான்  அப்போது  மைலாப்பூர்  வாசி. 

 பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் இறங்கி தெற்கு நோக்கி நடந்தேன்.  வயல்கள் .  சோடா கடை துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரிய வில்லை. அவர் தான் எனக்கு விற்றவர்.  அவர் சொன்ன அட்ரஸ் தவிர மற்றதெல்லாம் கண்டு பிடிக்க முடிந்தது.  ரெண்டு மணி நேரத்திற்கு பிறகு,  பத்து பன்னிரண்டு பேர் தவறாக அடையாளம் காட்டிய இடம் எல்லாம் அலைந்து  துரைசாமியை  ரயில்வே கேட் அருகே சைக்கி ளில் நிற்கும்போது   பிடித்தேன். அவர் சைக்கிளில் பின்னால்  அமர்ந்தேன். மிதித்துக்கொண்டு வயல் வழியே எங்கெங்கெல்லாமோ வளைந்து வளைந்து சென்றார்.  கொஞ்சம் தெற்கே சென்றால் ஆப்பிரிக்கா வரும்போல் இருந்தது.  மனித சஞ்சாரமே  இல்லாத கண்ணுக்கெட்டிய  தூரம்  வரை  மரங்கள், தோப்புகள், பனை மரங்கள், குட்டைகள், வரப்புகள் , வயல்கள் இடையே  சைக்கிள் நின்றது.  

''இங்கேயா ?''

''இல்லே  சைக்கிள் பஞ்சர்.   கோபாலு வீட்டில் போய் ஒட்டிக்கொண்டு போகலாம்.  கோபாலு வீடு  உச்சி வெயில் வேளையில் கிடைத்து அவன் வந்து பஞ்சர் ஒட்டின  பிறகு  இருவரும் நடந்தே போனோம்.  என் செருப்புக்கு என்னை  பிடிக்க வில்லையா  நான் சென்ற இடம் பிடிக்க வில்லை யோ தெரியவில்லை.   அறுந்தது. அதை ஏற்கன வே ரெண்டு மூன்று தடவை தைத்தாகிவிட்டது. தலையை சுற்றி  ஏதோ ஒரு நிலத்தில் விசிறி எறிந்துவிட்டு வெறும் காலில் நடந்தால் எங்கு பார்த்தாலும்  நெருஞ்சி  முள் காலை பஞ்சர் செய்கிறது.  நிறைய நடந்தபிறகு   ஒரு இடத்தில் நின்றார்  துரைசாமி.  எதிரே  விச்ராந்தியாக ரெண்டு மூன்று எருமைகள் ஒரு குட்டையில்  சேற்றைக்குழம்பை சந்தனமாக  பூசிக்கொண்டு  அரைக்கண் மூடி  குளித்துக்ண்டிருந்தன.  

''சிவன் சார்,   அதோ தெரியுதா,   நான் அடையா ளம் சொன்ன அந்த ஒத்தை பனைமரம்?

'' எனக்கு  பல  பனைமரங்கள் தெரிந்தன  அதில் எதை தனியாக பார்ப்பது.  
''எந்த ஒத்தை பனைமரம்?. ?
'' கருவேல  முள் புதர் பக்கத்திலே குட்டி  ஈச்ச மரம் பின்னாலே  பாருங்க .''

கிட்டே போன போது  வெடுக்கென்று சட்டையை பிடித்து இழுத்தார்  துரைசாமி.   கீழே பாக்கமாட் டிங்களா ?''

ஒரு மஞ்சள் கட்டம் போட்ட தோலோடு  பளபள வென்று  ஒரு நீளமான   பாம்பு என்னை லக்ஷியம் செய்யாமல்  என்னை கடந்து சென்றதில் என் இதயம் நின்று விடும்போல் ஆகிவிட்டது.

சில வாத்து கூட்டங்கள் ஓட  ஒரு இடத்தை காட்டி னார் .  ரெண்டு கருங்கல் நட்டு இருந்தது. வேறு ஒன்றும் வித்யாசமாக இல்லை.  இதிலிருந்து  ரெண்டாவது பிளாட். நல்ல இடம். உங்களுக்கு  அதிர்ஷ்டம் சார்.  கார்னெர் பிளாட்டுக்கு அடுத்தது. பல சௌகர்யங்கள் அதாலே..''

''என்ன  அதிர்ஷ்டம் ?''   ஈனஸ்வரமாக புரியாமல்   கேட்டேன்.
பக்கத்திலே  கோவில் வருது.  அங்கே பார்க் வருது.''
எல்லாமே மரம் செடிகொடியாக  ''பார்க்காக'' வே  இருந்ததால்  தனியாக  ஒரு  பார்க்கில் எனக்கு நாட்டமில்லை.

தூரத்தில்  நங்கநல்லூர் பிள்ளையார் கோவில் சின்னதாக தெரிந்தது.  அது தான் அந்த ஊர் முதல் கோவில். ( சமீபத்தில் விமரிசையாக  ஒரு கும்பாபிஷேகம் நடந்ததே.)

நான் இருக்கும் இடத்தில் இருந்து  மூன்று  நாலு கி.மீ. தூரத்தில்  மீனம்பாக்கத்திலிருந்து வெள்ளை
யாக  மின்சார ரயில் பீச் நோக்கி ஓடியது.    பார்த்துக் கொண்டே இருக்கும்போதே எதிர் திசையில் தாம்பரம் நோக்கி ஒன்று  அதே வேகத்தில் ஓடியது. நடு நடுவே   நிறைய இடைவெளி விட்டு  அங்கங்கு  சில சிறிய  வீடுகளே  பல தினுசுகளில், அமைதி யாக  இருந்தன.

தெற்கே தூரத்தில்  பல்லாவரம்  திரிசூலம்  மலைப்பாறைகள் .  தெற்கே தலையை சுழட்டி பார்த்தேன்.  மலைகள்  மரங்களைத் தவிர  வேறு ஒன்றும் இல்லை. .

கிட்டத்தட்ட  ஐம்பது வருஷங்களுக்கு முன்  நங்கநல்லூரில் நான்  ஓர் பிளாட் ஓனர்.  
ஒண்ணரை க்ரௌண்ட்  ரெண்டாயிரம் ரூபாய்.. அடேயப்பா?  இவ்வளவு விலையா ?  எதுக்கு  இவ்வளவு ஜாஸ்தி? என்று நான் செய்த  மஹா பாதக செயலுக்கு தான் முதல் பாராவில் எனக்கு  அர்ச்சனை.   அந்த ரெண்டாயிரம் என் நண்பர்கள் உருவாக்களில் சிலர்  கொடுத்து உதவியது.  எல்லோர் கடனும் நான் அடைத்துவிட்டேன். நன்றிக்கடனை இன்றும் என்றும் அடைக்க முடியாது.

ஒரு சின்ன  இணைப்பு செயதி: 
அப்போது நான் முட்டாள்  என்று சொன்னவர்கள் ஒருவர் பாக்கியில்லாமல்  நாங்கள் தான் பா  முட்டாள்கள்  வாங்காமல் விட்டுவிட்டோம்.  நீ கொடுத்த ரெண்டாயிரத்துக்கு இப்போ ரெண்டு  கோடிக்கு மேல் கொடுக்க  எங்கே ப்பா போறது.? 

ஆமாம்  வாஸ்தவம்  நான்  அப்போது முட்டாளாக  இல்லாமலிருந்தால்  இப்போது முட்டாள் என்று நிரூபித்து இருப்பேன். வீடு  கட்டின மஹாபாரத ராமாயணத்தை அப்புறம் சொல்கிறேன்.



Saturday, November 28, 2020

PESUM DEIVAM


 

பேசும் தெய்வம்    J .K SIVAN 



                         ஸ்ரீ காமாக்ஷி சந்நிதியில் கல்யாணம்


நான்  சொல்லாமலேயே  நீங்களே  புரிந்து கொள்வீர்கள்.  இந்த கதையில் வரும்  பக்தர் பெயரை நான் குறிப்பிடவில்லை.  காரணம்  எனக்கு கிடைக்க வில்லை.அவர்  மஹா பெரியவா பக்தர் என்ற அடையாளமே போதும்.  அவர் பூர்வீகம்  கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ள ஒரு கிராமம். அதன் பெயரும் நான் சொல்ல வில்லை.  காரணம் மேலே சொன்னது தான். 

பக்தருக்கு   சென்னையில் ஒரு   தனியார்  நிறுவனத்தில் பலவருஷம் பெரிய உத்யோகம்.   வயதாகி விட்டது.   சில வருஷங்களுக்கு முன்பே  அவர் மனைவி காலமாகி விட்டாள்.  அவருடைய வாரிசுகள்   ரெண்டு  பிள்ளைகள்.   மனைவியின் நகைகளை ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மனுக்கு அர்ப்பணித்து விட்டார். ஏதோ சிறு மனஸ்தாபத்தால்  இரு பிள்ளைகளுடனும்  அவர்  வாழவில்லை.   தனியே  வாழும் நிலை..

சமையலுக்கு ஒரு அம்மா தினமும் வருவாள்.  அவர்  வேலை பார்த்த  தனியார் நிறுவன முதலாளிக்கு  இந்த பக்தர் மேல்  பிரத்யேக அன்பு,  மரியாதை.  ஆகவே   அவருக்கு வெளியே  செல்ல  கம்பனியில்  ஒரு காரும் டிரைவரும் கொடுத்து  இருந்தார்.

ஒரு நாள்  ஸ்ரீ  மஹா பெரியவாளை தர்சனம் செய்ய  பக்தர் மனம்  நினைத்தது.   ஒரு நண்பருடன் சென்றார்.   

 எல்லோரையும் போல்  வரிசையாக  தரிசனம் செய்த பிறகு  அவரது மனதில் ஏதோ தயக்கம் இருப்பதை மஹா பெரியவா கண்டுபிடித்துவிட்டார். அவரை சற்று தள்ளி நிற்க  சொன்னார் . நின்றார்.  சற்று நேரம் கழிந்தது.  கொஞ்சம் கூட்டம் எல்லாம் கழிந்ததும்  பெரியவா அவரை ஜாடையால்  அழைத்தார்.   பக்தர் அருகே சென்று வணங்கி  நின்றார். 

''  நீ என்ன ஏதோ சொல்ல விரும்புகிறாய் போல் இருக்கிறதே. சீக்கிரம் சொல்லு ''
''ஆமாம் பெரியவா  ரொம்ப நாளா  மனசிலே ஒரு எண்ணம்.   என்கிட்ட  ரூ.50,000/- பணம்  சேர்த்து  வச்சிருக்கேன்.   ஏதாவது ஒரு  சின்ன கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்ய உத்தரவு அளிக்க வேண்டும் ''

மஹா பெரியவா பதில் சொல்லவில்லை.   பிரசாதம் கொடுத்து அனுப்பி விட்டார். 

கூட வந்த  நண்பர் காரில் திரும்பும்போது    '' இந்த  ஐம்பதாயிரத்தில் எப்படி ஒரு  கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து, பூஜைக்கு வேண்டிய நிரந்தர நிதி ஏற்படுத்த முடியும் ? என கேட்டார்.

' ஆமாம்  நீ சொல்வது மிகவும் சரியாக இருக்கிறது. ஆதலால் தான் மஹா பெரியவா
 மௌன
மாக  இருந்து விட்டா  போல  தோணுகிறது'' . 

சில நாட்கள் சென்றது.  பக்தர்  உடல் சீர்கெட்டு, படுத்த படுக்கையாகி விட்டார். நண்பரைக் கூப்பிட்டு   ''என்னால்  செல்ல முடியவில்லை,  நீ எனக்காக  மஹா  பெரியவாளைப் போய் தர்சனம் செய்து,   நான் சேர்த்து வைத்த  பணத்தை எப்படி உபயோக  ப்படுத்த வேண்டும் என்று மஹா பெரியவா  கட்டளை இடுகிறாரோ  அப்படியே செய்யக் காத்துக் கொண்டு இருக்கிறேன் '' என்று சொல்லி  அவர் உத்தரவை பெற்றுக்கொண்டு வா அப்பா '' என்கிறார் 

அப்போது மஹா பெரியவா வடக்கே   ஸதாரா சென்று விட்டதால் அங்கே  சென்று  
பெரியவா
தர்சனம் செய்துவிட்டு  காத்திருந்து அவரிடம்  பக்தர் சொல்லி அனுப்பிய விஷயத்தை சொன்னார் நண்பர். 

இப்போதும்  இதற்கும்  பெரியவா  மௌனமாகவே இருந்து விட்டார். ஒன்றும்  பதில் சொல்லவில்லை. உத்தரவிடவில்லை. 

ஆவலாக  காத்திருந்தார் பக்தர்.   ''மஹா பெரியவா என்ன சொன்னார்?''
 ' பெரியவா மௌனம் சாதிச்சா. ஒண்ணுமே  சொல்லலை''
 
ஒருவாரம் பத்துநாள்  ஆகிவிட்டது.  பக்தர் உடல் மேலும்  சக்தி இழந்து பலஹீனம் அதிகமாகி விட்டது.    நண்பரை மீண்டும்  அழைத்து 

''என் உடம்பு ஸ்திதி மிகவும் மோசமாகி விட்டது. ஆதலால்  நீ எப்படியாவது  மஹா பெரியவா  உத்தரவை எப்படியும் வாங்கிக்கொண்டு வா '' என்கிறார் 

மறுபடியும் பெரியவா சந்திப்பு நடந்தது. நண்பர்  பக்தரின்  வேண்டுகோளை அறிவித்து உத்தரவு கேட்டார்.  பெரியவா பேசினார்.  ஆச்சர்யமாக இருந்தது நண்பருக்கு: 

 ''அவன்  பார்யாள்  காலமான பிறகு பிள்ளைகளை கேழ்க்காமல் நகைகளை ஸ்ரீ காமாக்ஷிக்குக் கொடுத்தது தவறு,   அவன் பிள்ளைகள் வந்து என்னைக் கேட்டால், அப்பறம்  ஏதாவது என்ன செய்யலாம் என்று சொல்றேன்'' என்றார்.

பக்தர்  பெரியவா சொன்ன பதிலை கேள்விப்பட்டதும் ஆடிப்போய் விட்டார்.  தனது  மூத்த 
 பிள்ளைக்கு போன் செய்து ஸ்ரீ பெரியவாள் ஆக்ஞையை சொன்னார். மனஸ்தாபங்கள் எல்லாம் மறைந்து, பிள்ளையும் வந்து தகப்பனாரைப் பார்த்து, அவரை தன் வீட்டுக்கு அழைத்துப் போனான் . அங்கு அவர் ஒரு மாத காலம் இருந்து, மாட்டுப்பெண் கொடுத்த ஆகாரத்தைச் சாப்பிட்டு, மன நிறைவுடன் காலமானார்.

பக்தருக்கு நமது முடிவு நெருங்கிவிட்டது தெரிந்தது.  சில நாட்கள் தான் இருக்கிறது என்பதால் ஒரு நாள்  மூத்த மகனை அழைத்து   "இதுவரை  மஹா பெரியவாள் எந்த  உத்தரவும் தரலை. ஆகவே  நானே  சில  தர்ம காரியங்களுக்கு என் சேமிப்பை  அளிக்க  எழுதி வைத்திருக்கிறேன்.   இதற்காவது   பெரியவா
 உத்தரவு  கிடைத்தால்  அப்படியே  செய்யலாம்'' என்று எழுதிக் காண்பித்தார்.  அவரால்  பேச முடியவில்லை. 

பக்தர்  காலமும் முடிந்தது.  கார்யங்களும்  முடிந்தது.   குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்   பக்தரின் நண்பரோடு   காஞ்சிபுரம் சென்று  பெரியவாளிடம் எல்லா விபரத்தையும் சொன்நார்கள்.  

பெரியவா ஒரு நிமிஷம் கண்ணை மூடிக்கொண்டு தியானித்தார்.    பிள்ளையை அழைத்து  ''அவன் வச்சிட்டு போன  பணத்தோடு கூட  கொஞ்சம்   மூலதனமாக  டெபாசிட் பண்ணிடு. அதில் இருந்து வருஷாவருஷம் கிடைக்கிற  வட்டியில் இருந்து,ஏழைகளுக்கு ரூ.2000/- 3000  செலவில் (ஒரு தம்பதிக்கு) பிள்ளை வீட்டார் சம்மதத்தோடு காஞ்சி ஸ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் சந்நதியில் கல்யாணம்  சிக்கனமாக பண்ணி வை. 

 வேறு யாராவது கன்னிகாதானம்  இப்படி  செய்ய  முன்வந்தால்,  நாலு நாள் ஔபாசனம் செய்து வைக்கிற  செலவுக்கு உதவு.  றவர்களுக்கு கீழ்கண்ட லிஸ்டுபடி கல்யாணம் செய்து வைத்து, அன்று  சாயந்திரத்துக்குள்  கட்டுச்சாதக் கூடையுடன் பிரவேச ஹோமத்திற்கு அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.  இது மாதிரி செய்தால் ஏழைகளுக்கு உபகாரமாக இருக்கும், முடிஞ்சா  இதை செய், 

''நான்  என்னுடைய  வருமானம் சேமிப்பும் சேர்த்து  ஒரு லக்ஷம் அப்பாவுடைய சேமிப்போடு  கூட  இதற்கு  தயார் பண்றேன். மற்ற பந்துக்கள்,  நண்பர்கள்  கிட்டே எல்லாம்  சொல்லி அவர்கள் ஏதாவது கொடுத்தாலும் அதையும் இதோடு சேர்த்து   மொத்தமா டெபாசிட் பண்றேன். இது  அதிக  தொகையை  அளிக்க  மஹா பெரியவா அனுக்ரஹம் செய்யணும் .  ஸ்ரீ பெரியவாளின் பூர்ண அனுக்ரஹத்தோடு சென்னை திரும்பினார்கள்
.
ஸ்ரீ காமாக்ஷி சித்தமல்லி வாத்யமான் விவாஹ டிரஸ்டு" என்ற பெயருடன், ஒரு லக்ஷம் மூலதனத்தில் ஆரம்பித்து, அந்த டிரஸ்டு நகலை சென்ற 11-4-82 அன்று ஸ்ரீ பெரியவாள் முன்னிலையில் சமர்ப்பித்து அவர்கள் உத்தரவு பெற்று கொள்ளப்பட்டது. 

 மஹா பெரியவாள்  ஆலோசனையில் தயாரான  கல்யாணத்திற்கு லிஸ்டு (ஒரு தம்பதிக்கு ஆகும் உத்தேச செலவினம்)
(1) திருமாங்கல்யம் 4 கிராம் அளவில்; 
(2) நிச்சயதார்த்த வேஷ்டி, அங்கவஸ்திரம்; 
(3) நிச்சயதார்த்தப்புடவை; 
(4) முஹூர்த்தப் புடவை, (பட்டு இல்லை ) முஹூர்த்த வேஷ்டி, அங்கவஸ்திரம்; 
(5) குத்துவிளக்கு 1 
(6) செம்பு 2;
 (7) பஞ்சபாத்ர உத்தரணி ஒரு செட்;
 (8) தாம்பாளம் 1; 
(9) குத்தடுக்கு 1; 
(10) காசியாத்ரை சாமான்கள்;
 (11) வைதீகச் செலவு, சாப்பாட்டு செலவு எல்லாம் சேர்ந்து ரூ.2000-3000   (அப்போது தீர்மானித்தது)
 அளவில் ஒரு தம்பதிக்கு என்ற முறையில் இந்தத்திட்டம் சமர்பிக்கப்பட்டது. ஜானவாசம் இல்லாமல் நிச்சயதார்த்தம்; வரதக்ஷிணை கிடையாது, நிச்சயதார்த்த, முஹூர்த்தப் புடவைகள், நூல் புடவைகளாக இருக்கும், ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் சந்நிதியில் கல்யாணம் என்ற சிறப்பு அம்சங்களோடு இந்த விவாஹ திட்டம் நடைபெற உத்தரவானது.   

(நான் வலைதளத்தில் மேலே கண்ட  பெயரில்  இந்த டிரஸ்ட் இன்னும் செயல்படுகிறதா, மேலே கண்ட பெரியவா சொன்ன சேவை தொடர்கிறதா என்று அறிய  வலைதளத்தில் தேடினேன்.  என்  முயற்சி வெற்றி பெறவில்லை. விவரம் எதுவும் அகப்படவில்லை. யாருக்காவது விலாசம்,  தொடர்பு டெலிபோன் எண்  தெரிந்தால்  அனுப்பினால் நாமும் உதவலாம்) 

Friday, November 27, 2020

ARUNACHALA DEEPAM

 பேசும்  தெய்வம்   J K  SIVAN  

 
               


 அண்ணாமலைக்கு  அரோஹரா 

ஐப்பசி தீபாவளிக்குப் பிறகு   கார்த்திகை இன்னொரு தீப ஒளி பண்டிகை. முக்யமாக  திருவண்ணா மலையில் தீபம் விசேஷமானது.

கார்த்திகை  முழுதும்  ஹிந்துக்கள் வீடுகள் எல்லாம்  ஜெகஜோதியாக தீபலங்காரம் செய்யப்பட்டிருக்கும். அகல் விளக்கு மறக்கமுடியாத ஒரு  தீபம். வரிசையாக  வீடுகளில் வாசலில், சுவர்களில் மின்னும்  அழகே அழகு.   தீபம் ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||

”புழு,  பக்ஷிகள்,  ஏன்  கொசு கூட,   உயிரற்றது என்று நாம்  நினைக்கிற  தாவரங்களோ,  மற்ற  தரையிலும்   தண்ணீரிலும்  வாழும் அனைத்து  ஜீவராசிகளும்  , மனிதர்களில் வித்த்யாசமில்லாமல் அனைவரும்,   கார்த்திகை  தீபத்தை  ஒருமுறை பார்த்து விட்டால் போதுமாம்,   சகல பாபங்களும்  நிவர்த்தி ஆகிவிடும், ஆகவே  மறுபிறப்பும்  கிடையாது என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.

 தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிறதோ இல்லையோ? அம்மாதிரி இதன் ப்ரகாசம் படுகிற எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகளுக்கும் பாப நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி, சாஸ்வதமான ச்ரேயஸ் கிடைக்க வேண்டும்”- என்றிப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் என்று மஹா பெரியவா சொல்கிறார். 

பெரியவா  மேலும்  விளக்கமாக சொல்வதைக் கேளுங்கள்: 
தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல், பிராம்மணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம், மற்ற நீர்வாழ் ப்ராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி மேலே சொன்னது போல் ப்ரார்த்திக்க வேண்டும்  என்று  பொருளுரைக்கிறார்  மஹா பெரியவா.

முன்பெல்லாம்   ஊர் எங்கும்  சொக்கப்பானை என்று ஆலயத்திலிருந்து தீபத்தைக் கொண்டுவந்து   பொது இடங்களில் பெரிதாக ஏற்றுவார்கள்.   இன்னும்  சில  இடங்களில் இது தொடர்கிறது.  திருவண்ணாமலையில் இப்போதும் மலை உச்சியில் மஹா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுகிறார்களே,  எதற்காக?  அதன் அர்த்தம் என்ன?  தெரியுமா?

சின்ன அகலாக இருந்தால், அதன் ப்ரகாசம் கொஞ்ச தூரம்தான் பரவும். சொக்கப்பானை என்றால் அதன் ப்ரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும். அண்ணாமலை தீபம் மாதிரி ஒரு பெரிய மலைஉச்சியில்  ஏற்றி வைத்து விட்டாலோ, அது எத்தனையோ ஊர்கள் தாண்டிக்கூடத் தெரியும். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகள் மீதும் இந்தப் பிரகாசம் பட்டு அவற்றின் பாபங்கள் போகவேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்  தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்விகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

ஸாதரணமாக இரண்டு கால் ப்ராணி, நாலு கால் ப்ராணிகள்தான் அதிகம். மற்றபடி   வண்டுக்கு ஆறு கால். சிலந்திக்கு எட்டுக் கால்கள். மரவட்டை, கம்பளிப் பூச்சி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எண்ண முடியாத கால்கள். வேதத்தில் அடிக்கடி ‘த்விபாத்” சதுஷ்பாத்’ என்று இருகால், நாற்கால் ப்ராணிகள் க்ஷேமத்தைக் கோருகிற மாதிரியே எத்தனை காலுள்ள ப்ராணிகளானாலும் அவற்றுக்கும், இன்னும் பாம்பு மாதிரி, மீன் மாதிரி காலே இல்லாத ப்ராணிகளுக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் என்று மந்திரங்கள் இருக்கின்றன.

பரம ஞானிக்கு பிராம்மணன்   பிராமணன் இல்லாதவன் என்றெல்லாம்   (ப்ராம்மணே … ச்வபாகே) வித்யாஸம் தெரியாது என்று கீதையில் (5.18) சொல்லியிருக்கிறது. நமக்கும்கூட, காரியத்தில் பேதத்தைப் பார்த்தாலும் மனஸில் சுரக்கும் அன்பில் வித்யாஸமே கூடாது என்கிற மாதிரிதான் ரந்திதேவன் முதலில் பிராம்மணனுக்கும் கடைசியில் பஞ்சமனுக்கும் தானம் பண்ணியிருக்கிறான். 

மேலே சொன்ன  கார்த்திகை தீப   ஸ்லோகத்திலும் ”ஸ்வபசா ஹி விப்ரா: என்று பஞ்சமன், ப்ராம்மணன் இருவரையும் வித்தியாசமின்றி சொல்லியிருக்கிறது. க்ஷேமத்தைக் கோரும்போது ஜாதி வித்யாஸமே இல்லை.   நல்லவன் கெட்டவன் என்றும் வித்யாஸம் பார்க்கக் கூடாது. மஹாபாபத்தைச் செய்துவிட்டு நரகவாஸிகளாயிருப்பவர்களிடமும் அன்பு பாராட்டி, அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்வது நமது  சாஸ்த்ரம். 

ஒரு சமயம்  யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது  அந்த போட்டிக்கு நடுவராக வந்து  பரம சிவன் ஒரு பெரும்  ஜோதியாக  எழுந்து நின்று  அதன்  அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும்,  அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களே  பெரியவர் என்று  அசரீரி  ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது  தேடலைத் தொடங்கினார்கள்.  அன்னப்பறவையாக பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு   பூமியைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார்.  பல ஆண்டுகள் பயணித்தும்  இருவராலும்  தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி  ஜோதிப்  பிழம்பாக , அடிமுடி காணமுடியாத  ஒளி ஸ்தம்பமாக சிவன் தோன்றியதை உலகில் அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில்  ஒளிமயமாய்  சிவன்  வெளிப்பட்ட நாள்  கார்த்திகை தீபம். அக்னி மயமான திருவண்ணாமலையில் தீபத்தை மலை மீது   அன்று  இதனால்  தான் ஏற்றி வைக்கிறார்கள்,

கந்த புராணத்திலே  மேலே சொன்ன  சம்பவத்தைத்  தவிர  இன்னொரு  விவரமும்  இருக்கிறது: 
தேவர்களை  வதைக்கும் சூரபத்மனைக்  கொல்ல வேண்டும் என்ற தேவர்கள் சிவனிடம்  முறையிட, அதற்கான காலம் விரைவில் வரும், சூரனை அழிக்க தமது படைப்பில் ஒருவன் வருவான் என பரமேஸ்வரன்  வாக்களிக்கிறார்.  அவ்வாறே   பரமேஸ்வரன் நெற்றிக்கண்  தீப்பொறிகள்  ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கையை அடைகின்றன.  சக்தியால் உருவான  ஆறு   கார்த்திகைப்
பெண்களிடம்  ஆறு  தீப்பொறிச்சுடரும்  ஆறு குழந்தைகளாக வளர்கிறது. பின்னர்   ஆறுகுழந்தைகளும்  ஒரே குழந்தையாக ,  ஷண்முகனாய், ஆறுமுகத்தோடு  தோற்றம் அளிக்கிறது.  கார்த்திகைப் பெண்கள்  சிவனருளால்  நக்ஷத்ரங்களாகின்றனர்.   நெற்றிக்கண் தீப்பொறிச்  சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த  நாள் கார்த்திகை.  முருகனுக்கு கார்த்திகேயன் என்று பெயர்.

ஒரு பழமொழி அடிக்கடி  சொல்கிறோமே   ‘குன்றிலிட்ட விளக்குபோல’ என்று.   உயரமான ஒரு மலை மேலே  ஏற்றிய விளக்கு போல  என்று.   இது அண்ணாமலைத் தீபத்தை நினைவூட்டும்.   உயரமான இடத்தில் ஏற்றிய தீபம் பலருக்கும் ஒளி வழி காட்டும்.   இது பற்றிய  ஒரு பழங்கதை உண்டு. சுருக்கமாக சொல்கிறேன்.

மலாடபுரம் என்ற ஊரில்  சில  புத்த பிக்ஷுக்கள் வாழ்ந்தனர்.    ஆமணக்கு  விதையில் எண்ணெய்  இருப்பதை  முதலில்  கண்டுபிடித்த  அவர்கள்  இருளைப்போக்க  தீபத்துக்கு  அது பயன் படும் என்பதால்  எல்லோருக்கும் அதன் ஒளி  பயன்பட  அரசனின் ஆணையோடு   ராஜ்யத்துக்கு   வெளியில்   அண்ணாந்து  மலை என்ற  குன்றின் உச்சியில்  அரசன் உத்தரவுடன்    சேவகர்கள்  ஒரு பள்ளத்தை வெட்டி,  அதில்   நிறைய ஆமணக்கு  எண்ணையை  ஊற்றி, பெரிய திரியை ஏற்றி  கொளுத்தினார்கள்.   அண்ணாந்து மலை
உச்சியில் பெரிய தீபம் எரிந்ததைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். அந்த ஒளியினால், புகையினால்,   மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்தவிதமான தீங்கும்  விளையாமல் அனைவருக்கும்
ஒளி கிடைத்தது.  

பிறகு என்ன ?  மக்கள்  வீடுகளில்  அப்புறம்   ஆமணக்கு எண்ணையை  பயன்படுத்தி தீபம் ஏற்ற  ஆரம்பித்தார்கள்.  முதல் மூன்று நாட்கள் தீபத்தை வீட்டுக்கு வெளியே வைத்து சோதித்துப்  பார்த்தார்கள்.  அதனால் புகையோ, நோயோ  விளையவில்லை.    வீட்டுக்குள்ளும்  அந்த விளக்கை  உபயோகித்தனர்.  புத்த பிக்ஷுக்கள் முதலில்  கண்டுபிடித்த அந்த ஆமணக்கு எண்ணையை  பரிசோதித்த  அண்ணாந்துமலை  தான்  ஒருவேளை   திருவண்ணாமலையாக இருக்குமோ?   பிக்ஷுக்கள் கண்டுபிடித்து சோதித்த காலம் முன்பனிக்காலம்.   புத்தமதத்தினர் எதையும்  பௌர்ணமி அன்றுதான் தொடங்குவார்கள்.   புத்த பூர்ணிமா  அவர்களுக்கு  விசேஷமாயிற்றே.   ஆகவே   மழைக்காலம் முடிந்து முன்பனி தொடங்கும் காலத்தின் முதல் பௌர்ணமியில் அவர்கள் கண்டுபிடித்த  ஆமணக்கு எண்ணெய்  சோதனையைச் செய்தனர். கார்காலமும் முன்பனிக் காலமும் இணையும் நாட்கள் குளிராகவும் இருட்டாகவும் இருக்கும். கார் என்பதற்கு இருள், கருமை என்று பொருள். கரிய கார் காலத்தின் இருட்டை துலக்கும் ஆமணக்கு எண்ணெய்   
கண்டு
பிடிக்கப்பட்டதால் அம்மாதத்திற்கு '' காரைத்  துலக்கும்'' என்ற  அர்த்தத்தில்  அந்த மாதத்தை  ''கார்த்துல மாதம்''  என  அழைத்து அதுவே  பின்னால் ''காத்திகை மாதம்''  என்று  ஆகியிருக்கலாம் என்று  ஒரு  பழைய ஆராய்ச்சி. 

இந்த   மலாட புரம் எங்கிருக்கிறது?   திருவண்ணமாலை  அருகே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லவாடி எனும் கிராமமாக இருக்குமோ?    அண்ணாந்து மலை  சைவ சமய  க்ஷேத்ரமாக  மாறி  அங்குள்ள  சிவன் கோயிலை சிவ பக்தர்கள்  பாடிய  பிறகுதான் அது   ''திரு''  அண்ணாமலை  ஆனதோ?. 

'அண்ணாந்து பார்ப்பது என்றால் உயரே பார்ப்பது.   தன்னைக்காட்டிலும் பெரியவனை உயர்ந்திருப் பவனை  அண்(ணா)  மூத்தவனை  அண்+அவன் = அண்ணன் என்கிறோம்.  செங்குத்தாய் உயர்ந்த குன்று அண்ணாந்து பார்க்க வைப்பதால் அது அண்ணாமலை.  மறைந்து போன ஓலைச்சுவடி  கதையாக இது இருந்திருக்கலாம்.

திருவண்ணாமலை  உச்சியில் இன்றும்   சிவபெருமான்   தாமிர, செப்பு,   எண்ணெய்க் கொப்பரை யில் அர்த்தநாரீஸ்வரராக  காண்கிறார்.   எண்ணெய்க்  கொப்பரையில் காடா துணியால் திரியிட்டு, நெய் விட்டு ஏற்றுவார்கள். இரவும் பகலும்  ஒளிமயமாக எரியும் .  எரியும் போது தோன்றும் சூட்டினால், கொப்பரையினை சுற்றி  மேல் பாகத்தில் பெயின்டினால் வரையப்பட்ட  அர்த்தநாரீஸ்வரர்  உருவம் உஷ்ணத்தில்  உருகி  உரிந்து போவது இல்லை.  இது ஒரு அதிசயம். அருகில் சென்று  தீபம் ஏற்றுபவர் களையும்  உஷ்ணம்  தீண்டுவதில்லை . எதற்கு  தாமிரத்தில்,  செம்பிலான கொப்பரையில்  எண்ணெய்  தீபம்?   சிவன்  தாமிர வர்ணன்.  உண்ணாமுலை அம்மன்  உடனுறைவதால்  அர்த்தநாரீஸ்வரன் உருவம்.  ஜோதிமயமானவன்.  சிவனை  தமிழ்  பாடல்கள் செம்பொன்மேனியன் என்று போற்றுகிறது.  செம்பொனார் கோவில் என்று ஒரு ஊரே இருக்கிறது.

திருவண்ணாமலை  தீப  உற்சவம்  பத்து நாட்கள்.  ஊர்வலங்கள்.   மூன்று நாள் தெப்ப திருவிழா, அடுத்து   சண்டிகேசுவர் உற்சவம்.   பரமேஸ்வரன்  காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில்,  விஷ்ணு, ப்ரம்மா  இருவருக்கும்  அக்னியாக  காட்சி தந்ததால்  அன்று தான்   கார்த்திகை தீபம். 

அன்று அதிகாலையில்  அருணாசலேஸ்வரர் சன்னதியில் ஒரு   தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி  பூஜை.   அப்புறம் அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவார்கள். ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’   தத்துவம்   இதுதான்.   பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக  அருள்பாலிக்கிறார்  என்று பொருள். 

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின் றனர்.

மஹா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரம்.  மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி  தருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீப  தரிசனம். 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...