திரு மூலர் J.K SIVAN
சில அற்புத ''மந்திரங்கள்''
விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே
இந்த பூமியில் பிறந்த நாம் எல்லோருமே விண்ணிலிருந்து இங்கே விழுந்தவர்கள் தான். நாம் மீண்டு, அதாவது கர்மவினைகளிலிருந்து மீண்டு தான், அங்கே மீண்டும் செல்ல வேண்டும்.நமது நல்வினைகள் ஒன்றே நம்மை அங்கே கொண்டு சேர்க்கும். இதற்கு தடையாக உள்ளது எதுவென்றால் நமது எண்ணங்கள், அவற்றால் விளையும் தீய கர்மங்கள். மேலும் மேலும் நமது சுமை பெரிதாக வைப்பது இதுதான். கர்ம வினைகளை அறுக்கும் ''களிம்பறுக்கும் '' காரணீஸ்வரனை சரணடைவோம். கன்மமலம் ஒழிப்போம். திருமூலரின் இனிய சந்தத் தமிழ் இதை அற்புதமாக கூறுகிறது.
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
சைக்கிளில் ஏறி அமர்ந்தேன். பின்னாலிருந்து ஒருவர் தள்ளிவிட்டதும் காலால் மிதித்துக்கொண்டே அப்படியும் இப்படியும் ஆடி ஏதோ ஒரு மரத்தின் மேலோ , மாட்டின் மீதோ, மனிதன் மேலோ இடித்து கீழே விழுந்து தான் பாலன்ஸ் balance எனும் சமநிலை கற்றுக்கொண்டேன். முட்டி பெயர்ந்து காயம்படாமல் சைக்கிள் கற்றுக்கொண்டதாக சரித்திரம் கிடையாது. ஒருதரம் அந்த பாலன்ஸ், சமநிலை வந்தால் அப்புறம் விழவே மாட்டான். இந்த பாலன்ஸ் தான் ஆன்மீகத்தில் சிவனை பின்பற்றும் சிவநெறி எனும் பெரு நெறி.
அடைந்துவிட்டால் இது நம்மை பிரிய விடாது. தவறி விழ விடாது. இந்த பாலன்ஸ் பல ஜென்மங்களிலும் தொடர்ந்து உதவும்.
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே.
உடலுக்கு உயிர் காவல். உயிருக்கு உடல் காவல் என்று ஒரு இனிமையான பாடல் கேட்டிருக்கிறேன்.ஒன்றையொன்று தழுவியவை இரண்டுமே. நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை என்கிறமாதிரி. கூண்டிலிருந்து பறவை பிறந்துவிட்டால் கூண்டை இருக்கவேண்டும். புதைக்கவேண்டும். பறவைக்கும் ஒண்ட ஒரு கூடு வேண்டுமே. அடுத்த கூட்டை தேடி அடைக்கலம் புகும். இதன் அருமை தெரியாதவர்களை பற்றி திருமூலர் ஒரு உதாரணம் தருகிறார். மடம் புகும் நாயாம் . மடத்தில் எங்கோ உள்ளே புகுந்த நாய்க்கு மடத்தின் புனிதம், பெருமை தெரியாது. அப்படி அஞ்ஞானிகளாக இல்லாமல் உடம்பின் அற்புதத்தை, அளித்த பரமனின் கருணையை, தேகத்தின் இன்றியமையாத அவசியத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்கிறார் திருமூலர்.
உடலும உயிரும் ஒழிவற ஒன்றிற்
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட்டு இந்த உயிர் எங்குமாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
இந்த உடலை பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டியது நமது கடமை. நமது சாதாரண செங்கல் மண்ணாலான வீட்டையே நாம் சுத்தமாக பெயிண்ட் அடித்து பளிச்சென்று துடைத்து வைத்துக் கொள்கிறோம். அகில உலக நாதன் ஆன்மாவாக உள்ளே குடியிருக்கும் கோயில் இந்த உடல். அதை எவ்வளவோ பரிசுத்தமாக வைக்க கடமைப் பட்டுள்ளோம். இந்த உடலை விட்டு பிரிந்தால் உடனே நேராக மோக்ஷம் போய்விடுவோம் என்று எண்ணுகிறவன் மூடன். இல்லை தம்பி அதற்கு வேறு வழி. ஆன்மாவை உணர்ந்தவன் உடலிலிருந்தவன் தான் மோக்ஷம் அடைவான்.
No comments:
Post a Comment