சுந்தர மூர்த்தி நாயனார் --- ஜே.கே. சிவன்
சுந்தரரும் விருத்தகிரீசரும்
அதோ அந்த பாதையில் மரங்களின் நிழலை ஒட்டி சுந்தரரும் அவர் சிஷ்யர்களும் பக்தர்களும் கூட்டமாக எங்கே போகிறார்கள? அது விருத்தாச்சலம் போகும் பாதை அல்லவா? அவர் அங்கே நடந்து போய் சேர்வதற்கு முன் நம்மிடம் தான் கார் இருக்கிறதே. விர்ரென்று விருத்தாசலம் சென்று
விருத்தகிரீஸ்வரர் என்றும் அழகிய தமிழில் பழமலைநாதர், முதுகுந்தர் என்றும் பெயர் கொண்ட கிழவர் சிவனை, அவரது கிழவி விருத்தாம்பிகை என்றும் அவளே இளைமையாக பாலாம்பிகை, இளைய நாயகி என்றும் பெயர் கொண்ட அம்பாளையும் தரிசிப்போமே. இந்த புனித க்ஷேத்ர தீர்த்தம் மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம். வன்னி மரம் தான் ஸ்தல விருக்ஷம். உலகில் தோன்றி முதல் மலை இன்றும் புதைந்திருக்கிறதாம். விருத்த கிரி. கிழ மலை. மாசி மகம் இங்கே கொள்ளை கொள்ளையாக பக்தர்களை கொண்டு வந்து நிரப்பும்.
ஒரு விஷயம். கிழக்கு ராஜகோபுரம் எதிரே இருக்கிறதே 16 கால் மண்டபம். அதில் 72 வித பரதநாட்டிய அபிநய சிற்பங்கள் வடித்திருக்கிறான் ஒரு பலே சிற்பி. நாட்டியத்தில் விருப்பம் கொண்டவர்கள் யாராவது சிதைக்கும் முன்பு அவசியம் பார்க்கவேண்டும்.
விருத்தாச்சலம் தமிழகத்தின் 22 முக்கியமான சிவஸ்தலங்களில் முக்கியமான ஒன்று. சுந்தரரைத்தவிர அப்பர் ஞான சம்பந்தர்கள் வந்து தரிசித்த பாடல் பெற்ற ஆலயம். எத்தனையோ ஆயிரங்களுக்கு முந்தையது.
பிரபஞ்சம் உருவான வரலாறு தெரியுமல்லவா? முதலில் நாராயணன் பிரம்மனை படைத்து, பிரம்மன் முதலாக எங்கும் நீரை படைக்க, நாராயணன் மது கைடபர்களை அழித்து அவர்களின் உடல்கள் அந்த நீரில் விழ அந்த பெரிய உடலைகளை நீரோடு சேர்த்து கெட்டியாக்கி சிவனை வேண்ட அவரும் ஒரு மலையாகஉருவெடுத்து பூமியில் தோன்றினார். அந்த பழமலைதான் க வடமொழியில் பழுத்த கிழ மலை , விருத்த கிரி, விருத்தாச்சலம்.
இந்த ஆலயத்தை பல ராஜாக்கள் கட்டி பராமரித்திருக்கிறார்கள். கல்வெட்டு சொல்கிறதே. பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அவன் மனைவி செம்பியன் மாதேவி, உத்தம சோழன், இராஜ ராஜ சோழன், இராஜேந்திர சோழன், இராஜாஜி ராஜ சோழன், விக்கிரம சோழன், 2-ம் இராஜராஜ சோழன், 3-ம் குலோத்துங்க சோழன், ஏழிசை மோகனான குலோத்துங்க சோழ காடவராதித்தன், வீரசேகர காடவராயன், அரச நாராயணன் கச்சிராயன், கோப்பெருஞ்சிங்கன், கச்சிராயன் எனும் அரச நாராயணன் ஏழிசை மோகன், விக்கிரம பாண்டியன் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், மாவர்ம பாண்டியன், கோனேரின்மை கொண்டான், அரியண்ணா உடையார், பொக்கண உடையார், கம்பண உடையார், வீரவிஜயராயர், முப்பிடி கிருஷ்ணபதி..... போதுமா லிஸ்ட்?
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
வழிவிடுங்கள் சுந்தரர் நுழைகிறார் ஆலயத்தில். விரித்தகிரீசர் தரிசனம் கண்குளிர சேவித்து விட்டு தங்கக்காசு வேண்டி பதிகம் பாடுகிறார். கிழ ஈசர் புன்னகைத்து ''இந்தா சுந்தரா நீ கேட்டது'' என்று 12,000 பொற்காசுகள் தருகிறார்.
''சபேசா, இந்த கனமான பொற்காசு மூட்டையை நான் எவ்வாறு திருவாருர் வரை சுமப்பது?''
''ஓஹோ. அப்படியென்றால் இதோ மணிமுத்தா நதியில் போட்டுவிடு. திருவாரூர் வந்து சேரும். அங்கே எடுத்துக் கொள்ளேன்''
ஒரே ஒரு காசை மட்டும் அடையாளத்துக்கு ஆதார் கார்டு மாதிரி எடுத்துக் கொண்டு மற்றதை எல்லாம் மணிமுத்தாறு நதியில் எறிந்தார் சுந்தரர். திருவாரூர் பல நாள் நடந்து போய் சேர்ந்த சுந்தரர் பர வை
யோடு திருவாரூர் கமலாலயம் குளத்தில் கரையில் நிற்கிறார். குளத்தின் கிழக்கு கரையில் நீரில் குதித்து மூழ்கினார். தேடினார். அடடா ? காணோமே, எங்கே போயிற்று அத்தனை பொற்காசுகளும்? விடுவாரா? தியாகேசன் மீது ஒரு பதிகம். நீரில் அடியில் பளபளவென்று தங்க காசுகள் இருப்பது தெரிந்தது. அனால் மின்ன வில்லையே . எல்லோரும் வாயைப் பிளக்க ஒரு வேளை இது சித்து வித்தையாக இருக்குமோ? இந்த தங்கம் கையிலுள்ள ஒற்றை காசைவிட மாற்று குறைவோ. 14 காரட்டோ?
''என்ன பரமேஸ்வரா இது. எனக்கு அவசரமாக பொற்காசுகள் வேண்டுமே தானம் செய்ய? இதெல்லாம் என்னவோ போல் இருக்கிறதே?''
மீண்டும் ஒரு பாடல். சுந்தரன் பாட்டை கேட்கத்தானே சிவன் காத்திருந்தான். அனைத்தும் கண் கூச மின்னியது.
சுந்தரர் பார்த்தார். அங்கே ஒரு பிள்ளையார் குளக்கரையில். அவர் தான் எங்கே குளம் இருந்தாலும், அரச மரம் இருந்தாலும் அடியில் செக்யூரிட்டி மாதிரி இருப்பாரே.
''என்ன சுந்தரா உன் முகத்தில் கவலைச் சுருக்கம் சொல். நான் சரி செய்து விடுகிறேன்'' என்கிறார் விநாயகர்.
''இதோ என் கையில் சிவன் கொடுத்த காசு ஒன்று இருக்கிறதே. அதே போல் இந்த தங்கக் காசுகளும் மாற்று குறையாதவையா ?''
''என்னிடம் கொடு நான் உறைத்து பார்த்து சொல்கிறேன்'' அந்த தங்கக்காசுகளை உறைத்து பார்த்து இவை உண்மையான பொற்காசுகள் என்று சொன்ன மாற்றுரைத்த பிள்ளையார் இன்றும் கமலாலய தடாக கரையில் இருக்கிறார் நான் சென்று வணங்கி வந்தேன். நீங்களும் திருவாரூர் சென்றால் அவரை தரிசியுங்கள்.
No comments:
Post a Comment