பார் போற்றும் பரமஹம்ஸர் - J.K. SIVAN
சிஷ்யன் உருவாகிறான்
தக்ஷிணேஸ்வரத்தில் அடிக்கடி ராமகிருஷ்ணரை சந்திக்க நரேந்திரனுக்கு மனசில் ஒரு விருப்பம் வளர்ந்தது. ஒவ்வொரு தடவை அவரை சந்திக்கும்போதும் மனதில் புது உற்சாகம். ''நமது மதத்தின் அற்புத மனிதர் அவர். அவரது ஒரு பார்வை, ஒருதடவை தொட்டால் போதும். இந்த வாழ்க்கை முழுதுமாக மாறிவிடும்''
ஆஹா இதுவரை நான் கேட்காத ஒரு வார்த்தை அல்லவா இவர் சொல்கிறார்.'' நான் கடவுளை பார்த்திருக்கிறேன். அனுபவிச்சிருக்கேன்'' இது என்ன வெறும் புருடாவா? நான் தான் கடவுள் என்னைப்பார், வணங்கு, காசை கீழே வை என்று சொல்கிறார்களே சில காவிகள், அது போலவா இது? ராமகிருஷ்ணர் சொன்னது வெறும் வார்த்தை இல்லை. ஆழமான மனதிலிருந்து ஊற்றாக வந்தவை. முற்றிலும் மாறிய மனத்தோடு, புதிரோடு, நரேந்திரன் கல்கத்தா திரும்பினான்.
எத்தனையோ இடையூறு. வேலைகள், ஈடுபாடுகள். மனது மட்டும் தக்ஷிணேஸ்வரம் போகவேண்டும். ராமகிருஷ்ணரை பார்க்கவேண்டும் என்று நினைக்கும். ஒரு நாள் அவரை ரெண்டாவது முறையாக பார்க்க போனான்.
அப்போது ஒரு அதிசயம் நடந்தது. வெகுநேரம் அவர் அவனோடு பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று தனது வலது காலை நரேந்திரன் மார்பில் வைத்தார். அடுத்த கணமே அவன் மூர்ச்சையானான். அவனைச் சுற்றிலும் அந்த அறை , மரங்கள், செடிகள், கட்டிடம், கோவில், ராமகிருஷ்ணர், வானம், பூமி எல்லாமே தலைகீழாக சுற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்தது. உடம்பு வியர்த்தது. மூச்சு விடமுடியவில்லை. ஏதோ நெஞ்சை பிடித்து அழுத்தியது. ஓ வென்று அலறினான். ''என்ன செய்கிறீர்கள் என்னை? என்னை விடுங்கள். எனக்கு அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் எல்லாம் இருக்கிறார்கள் ''
ராமகிருஷ்ணர் கலகலவென்று சிரிப்பது கேட்டது. அவர் கால் அவன் உடலிலிருந்து விலகியது. '' நரேந்திரா, உனக்குஒன்றும் ஆக வில்லையப்பா எல்லாம் காலக்கிரமத்தில் சரியாகவே ஆகும்''
நரேந்திரனுக்கு திகைப்பு தீரவில்லை. இவர் ஏதோ ஹிப்னாடிசம் வித்தை கற்றவரோ. என்னை மாற்றுகிறாரோ. அவர் மீது வெறுப்பு கூட வந்தது. ஆனால் அதோடு அவரை அடிக்கடி சென்று சந்திக்கவேண்டும் என்ற ஆர்வமும் வளர்ந்தது.
மூன்றாவது முறை நரேந்திரன் ராமகிருஷ்ணரை சந்திக்கும்போது உள்ளூர பழைய அனுபவத்தின் உதறல். பயம்.
''வா நரேந்திரா உனக்காக தான் நான் காத்திருக்கிறேன்''
'' இந்தமுறையும் இவர் ஏதாவது ஹிப்னாடிசம் வித்தை காட்டினால் உஷாராக இருக்கவேண்டும் என்று தன்னை தயார் படுத்திக் கொண்டான் நரேந்திரன்.
பேசிக்கொண்டே இருவரும் காளிகோவில் நந்தவனம் சென்றார்கள். ராமகிருஷ்ணரின் கரம் நரேந்திரனின் மேல் பட்டது. என்ன ஆயிற்று? மீண்டும் பழையபடி மூர்ச்சை ஆனான். அவன் மன உறுதி சுக்கு நூறாக உடைந்தது.
''நரேந்திரன் மயக்க நிலையில் இருந்தபோது ''நீ இதுவரை என்ன செய்தாய், இனி என்ன பண்ணப்போகிறாய்? என்று கேட்டேன். பதில் சொன்னான். திருப்தியாக இருந்தது.'' என்று பின்னர் ராமக்ரிஷ்ணரே சொல்லி இருக்கிறார். நரேந்திரன் பழைய பிறவியில் மாசற்றவன், பரிசுத்தன் என அறிந்தேன் என்று மற்ற சிஷ்யர்களிடம் கூறி இருக்கிறார்.
No comments:
Post a Comment