Wednesday, March 7, 2018

KRISHNA KARNAMRUTHAM


கிருஷ்ண கர்ணாம்ருதம். J.K. SIVAN

பிரிந்தாவனத்துக்கு வாருங்கள்

सायम्काले वनान्ते कुसुमितसमये सैकते चन्द्रिकायाम्
त्रैलोक्याकर्षणाङ्गम् सुरनरगणिकामोहनापाङ्गमूर्तिम्।
सेव्यम् शृङ्गारभावैर्नवरसभरितैर्गोपकन्यासहस्रै
र्वन्देऽहम् रासकेलीरतमतिसुभगम् वश्यगोपालकृष्णम्॥ ३-९९

sāyamkāle vanānte kusumitasamaye saikate candrikāyām
trailokyākarṣaṇāṅgam suranaragaṇikāmohanāpāṅgamūrtim |
sevyam śṛṅgārabhāvairnavarasabharitairgopakanyāsahasrai
rvande'ham rāsakelīratamatisubhagam vaśyagopālakṛṣṇam || 3-99

பிரிந்தாவனம் என்றாலே நந்தகுமாரனை நினைக்காமல் இருக்கமுடியாதே. மந்தமாருத தென்றல் இடைவிடாமல் விதவிதமான மரங்களில் புகுந்து அவற்றின் கிளைகளில் உள்ள அதிமதுர பூந்தேன் சொட்டும் வாசமலர்களை பறித்து மழையாக கீழே போடுகிறது. சூரியன் மறைய மனமின்றி மேற்கே தலையைமட்டும் எட்டி உயர்த்தி வேடிக்கை பார்க்கிறான். அவன் மறைந்தால் அந்த ஆனந்த காட்சியை எப்படி பார்ப்பான். அடர்ந்த மரங்களின் ஊடே பலவித குரல்கள் ஒலிக்கிறது. கோபியரின் ஆனந்தம், பக்ஷி, பறவைகளின் கீதம், பசு கன்றுகளின் நெகிழ்ச்சியான சின்னதும் பெரிசுமாக ''அம்மா'' சப்தம். சூரியன் மறைய அவசர அவசரமாக பூரண சந்திரன் மேலெழும்பி அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. பால் நிலவு. கோபியர்களும் கிருஷ்ணனும் நின்றுகொண்டு இருந்தார்கள் என்று நான் சொல்லவில்லையே. ரோண்ட் நடனம் ஆடுகிறார்கள். ரோண்டு என்று லீலா சுகர் சொல்கிறார். அந்த காளிந்தி நதிக்கரையில் அவர்கள் வெண்மணலில் சுற்றி சுற்றி வந்து ஆடுகிறார்கள் போல் இருக்கிறது.ரோண்டு என்றால் புரியவில்லையென்றால் ரோந்து என்று வைத்துக்கொள்வோம். போலீஸ் காவல் படை, வயதானவர்கள் சங்கம், கூர்க்கா எப்போவாவது இரவில் தெருவில் எல்லாம் விசில் அடித்துக்கொண்டு சுற்றி சுற்றி வருவதும், வெள்ளைக்காரன் வட்டமாக சுற்றி வருவதையு round ரவுண்டு என்று காப்பியடித்து வார்த்தை உண்டாக்கினதையும் ஞாபகம் வைத்துக் கொள்வோம். அவர்கள் மகிழ்ந்து இருந்த அது பிரிந்தாவனமா, அது தானே பூலோக வைகுண்டம். கண்ணன் கடை லவிழிப்பார்வை தங்கள் மீது படுமா என்று அவனைச் சுற்றி சுற்றி வர அவனும் அவர்களை சுற்றி தான் வளையவருகிறான்.அந்த பார்வை ஒன்றே போதுமே. ஈரேழு புவனத்தை, மூன்று உலகங்களை சுண்டி இழுக்கிறதே.
கோபியர்கள் வீடு, வாசல், குடும்பம், கன்று மாடு தனம் எதுவும் மறந்து கண்ணன் ஒருவினிலேயே மனம் லயிக்க ஆனந்தமே தானாக மற்றதெல்லாம் மறந்தவர்கள். அந்த அழகன் ஒருவனிடம் ஆசை வைத்தவர்கள்.

कदम्ब मूले क्रीडन्तम् बृन्दावन निव्शितम्
पद्म आसन स्थितम् वन्दे वेणुम् गायन्तम् अच्युतम्

kadambamūle krīḍantam bṛndāvananivśitam |
padmāsanasthitam vande veṇumgāyantamacyutam || 3-100

ஞான த்ரிஷ்டியால் நேரில் பார்த்த அனுபவத்தை லீலா சுகர் கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் எழுதுகிறார். அதோ அந்த கடம்ப மரத்தை பாருங்கள். எவ்வளவு வயதான பெரிய மரம். என்னமாக கிளைகளை காற்றில் கண்ணன் குழலிசைக்கு அபிநயமாக ஆட்டுகிறது. அதன் அடியில் பெரிய வேர்ஒன்றின் மேல் சிம்மாசனமாக அமர்ந்துள்ளான் கிருஷ்ணன். அவன் உட்கார்ந்ததும் எப்படியாம் தெரியுமா? சிம்மாசனத்தில் பத்மாசனம் போட்டு. கண்கள் அரை மூடி யோகத்தில். தலை அவன் இசைக்கும் ஒலிக்கேற்ப ஆடும்போது காதுகளில் குண்டலங்கள் ஆனந்தமாக ஆடாமலா இருக்கும். அவனை ஆடாது அடங்காது வா கண்ணா என்று இப்போது கூப்பிட முடியாது.

बालम् नीलाम्बुदाभम् नवमणिविलसत्किङ्किणीजालबद्ध
श्रोणीजङ्घान्तयुग्मम् विपुलरुरुनखप्रोल्लसत्कण्ठभूषम्।
फुल्लाम्भोजाभवक्रम् हतशकटमरुत्पूतनाद्यम् प्रसन्नम्
गोविन्दम् नन्दितेन्द्राद्यमरवरम् अजम् पूजयेद्वासरादौ॥ ३- १०१
म् वन्दित इद्र आदि अमर वरम् अजम् पूजयेत् वासर आदौ 3.101

bAlam nIlAmbudAbham navamaNivilasatki~NkiNIjAlabaddha
shroNIja~NghAntayugmamvipularurunakhaprollasatkaNThabhUSham |
phullAmbhojAbhavakram hatashakaTamarutpUtanAdyam prasannam
govindam nanditendrAdyamaravaram ajam pUjayedvAsarAdau || 3- 101

கண்ணா கருமை நிற வண்ணா, கருநீல கண்ணா, நவாபரணங்களும் அலங்கரிக்க அற்புதமாக ஒளிவீசும் நாயகனே, கமல நயனனே மணியோசை ஒலிக்கும் பொற்பாதங்களின் சதங்கைகள் மனதை மயக்குகிறதே. இடுப்பில் கட்டியுள்ள பீதாம்பரத்தை சுற்றியிருக்கும் ஆபரணங்கள் கண்ணை மின்னலென பறிக்கின்றன. தலையாட்டி கன்றுக்குட்டிகளும் பசுக்களும் வேறு அவற்றின் கழுத்து மணி ஓசைகளை எழுப்பி கூட்டு சேர்க்கின்றன. அதென்ன கண்ணனின் கழுத்தில் ஏதோ அசைகிறதே. புதுமாதிரியான ஆபரணம் ஏதாவதா? இல்லை அது ஒரு கருப்பு பட்டை போட்ட உடம்போடு அழகாக துள்ளி திரியும் கலைமானின் நகங்கள். ஓ அது தான் புலி நகம் போல் கழுத்தை அலங்கரிக்கிறதோ.
இவனா அவன், இவனா தனது சிறுகால்களால் சகடாசுரனை பொடித்து கொன்றவன், குழந்தையென நினைத்து விஷப்பால் ஊட்ட அணைத்த அரக்கியை அவள் உயிரையே பாலாக உறிஞ்சி கொன்றவன், பார்க்க இவ்வளவு சாதுவாக இந்திரன் முதலானோர் மயங்கும் சிரித்த முகமாக இருக்கிறானே. அவனுக்கு எல்லாமே சுலபம், எளிதோ?

(குழலோசை இன்னும் ஒலிக்கட்டும் )



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...