நமக்கெல்லோருக்குமே இந்த எட்டாம் நூற்றாண்டு சிவனடியாரை ரொம்ப பிடிக்கும். அவர் ரொம்பவே வித்தியாசமானவர். கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்று பரமசிவனொடு தோழனாக இருந்தவர். ரொம்பநாள் நான் கூட இவரை அறுபத்துமூவரில் ஒரு நம்பராக தான் நினைத்து ஏமாந்தவன். இவர் தனி. ஒரு ஆச்சர்யமான ஆச்சார்யர். சைவ சமய குரவர்கள் என்று நாலு பேரை வைத்திருக்கிறார்களே அதில் ரெண்டாம் ரேங்க். முதல் ரேங்க் அப்பர். (UPPER RANK ).
சுந்தரன் பாட்டில் மதி மயங்கினவர்களில் நான் ஒருவன். எங்கெங்கெல்லாம் சிவன் கோவில் கண்ணில் பட்டதோ அங்கெல்லாம் ஒரு அற்புதமான தேவார பாடல். இந்த தேவாரங்களை பாட ஓதுவார்கள் என்று சில இன்னும் இருக்கிறார்கள். சில சிவாலயங்களில் அவர்கள் தேவாரம் பாடும் அழகில், குரலில், த்வனியில் கண்ணை மூடி என்னை இழந்தது எத்தனையோ முறைகள். இந்த மேலே சொன்ன நாலு சைவ சமய குரவர்களில் மூவர் பாடியது மட்டுமே தேவார பாடல்கள். அந்த மூவர் பேர் மீண்டும் சொல்கிறேன். அப்பர், சுந்தரர் சம்பந்தர்.... நாலாவது மாணிக்க வாசகர் பற்றி சமீபத்தில் நிறைய எழுதினேன் அவர் பாடல்கள் நெஞ்சை உருக்கும் திருவாசகம். அவர் எப்போதுமே தனி.
சுந்தரரைப் பொறுத்தவரை சிவனின் தோளில் கைபோட்டுக்கொண்டு ''எனக்கு இதைக்கொடு அதைக்கொடு'' என்று உரிமையோடு கேட்பவர். சிவனும் சந்தோஷமாக அதை கொடுத்தவன் தான். ஒரு விஷயம். ஆலஹால சுந்தரர் எதற்கு பூமியில் பிறந்தார் என்று ஒரு கதையையும் சொல்லிவிடுகிறேன்.
முற்பிறவியில், திருப்பாற்கடலில் அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலஹால விஷத்தை எடுத்து சிவனிடம் கொடுத்தவர் ''ஆலஹால ''சுந்தரர். கைலாயத்தில் சிவனின் அருகேயே இருந்தவர். சிவத்தொண்டர். உமைக்கு இரு தோழிகள், அணிந்திதி, கமலினி என்று. ஒருநாள் சிவனுக்கு பூக்கொண்டுவரும் போது ஆலஹால சுந்தரர் கண்களில் அவர்கள் பட அவர்கள் அழகில் மயங்கி ஆசை உண்டாக அவர்களும் அவரை விரும்ப சிவபெருமானுக்கு இது ஞான திருஷ்டியில் தெரிந்துவிட்டது.
'ஆலஹால சுந்தரா, அந்தப்பெண்களும் நீயும் காதல் வசப்பட்டது அறிந்தேன். உங்கள் மூவரையும் பூலோகம் செல்ல ஆணையிடுகிறேன். நீ அங்கே அவர்களை மணந்து சுகமாக வாழ்ந்து பிறகு இங்கே வா.''
''ஹரனே , எனக்கு இந்த தண்டனை வேண்டாம். உங்களை பிரிந்து என்னால் இருக்க இயலாது என்று வேண்ட அவரது பூலோக வாழ்க்கையை 18 வருஷங்களாக்கி விட்டார் பரமன்.
உண்மையில் ஆலஹால சுந்தரரை பூமியில் சுந்தரராக அவதரிக்க செய்ததின் நோக்கம் திருத்தொண்ட தொகையை உலகுக்கு அளிக்க அவரே சிறந்தவர் என்று பரமேஸ்வரன் முடிவு செயததால் தான்.
இறைவனின் தோழமையை சுய நலனுக்காக சுந்தரர் துஷ்ப்ரயோகம் பண்ணவில்லை.
ஒரு துயரமான விஷயம் சொல்கிறேன். துணியை எடுத்து கண்களை ஒற்றிக்கொள்ளுங்கள். பாவம் சுந்தரர் இந்த பூமியில் வாழ்ந்தது பதினெட்டு வருஷங்கள் தான். அதற்குள்ளாகவா இந்த அமரத்வம் !
ஆலஹால சுந்தரர் பூமியில் பிறந்தது திருநாவலூரில். வேதங்களும் ஆச்சாரமும் நிரம்பிய பிராமணர்கள் நிறைய வாழ்ந்த ஊர். அவர்களில் ஒருவர் சடையனார். பரம்பரை பரம்பரையாக சிவ பக்தர்கள். அவர் மனைவி இசைஞானி. இந்த பேர்கள் எல்லாம் விசித்திரமாக இருக்கிறதா? அந்தக்காலத்தில் எல்லோருமே விசித்ரமாக வாழ்ந்தவர்கள் தானே.
அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததில் ரொம்ப சந்தோஷம் அந்த தம்பதியருக்கு. குழந்தையின் தாத்தா பேர் வழக்கம்போல் வைத்தார்கள். ''நம்பி ஆரூரன்'' என்று தாத்தா பெயரை வைத்தார்கள் சடையனாரும் இசைஞானியும்.
நாவலூர் ராஜா நரசிங்க முனையர் ஆண்ட தேசம். ராஜாவை சிறுவன் நம்பி ஆரூரனின் அழகு கொள்ளை கொள்ள, பெற்றோர் அனுமதியுடன் ராஜாவிடம் வளர்ந்தான். சந்தக்கவி சிவாச்சாரியார் பெண்ணை நம்பி ஆரூரனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடாகி கல்யாண காரியங்கள் ஜாம் ஜாம் என்று நடை பெற்றுக்கொண்டி ருக்கும்போது திருமண மண்டபத்திற்கு ஜடாமுடியோடு விபூதி, ருத்ராக்ஷம் அணிந்த ஒரு கிழவர் வருகிறார்.
முஹூர்த்த நேரம் நெருங்கியது. நம்பி ஆரூரன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுமுன்
''நிறுத்து இந்த கல்யாணத்தை. யாரைக்கேட்டு இவனுக்கு கல்யாணம் நடக்கிறது இங்கே?'' என்கிறார் வந்த ஜடாதாரி கிழவர்.
''யார் நீங்கள்? என்ன சொல்கிறீர்கள்? பைத்தியமா உங்களுக்கு?'' .
''இந்த பிள்ளையாண்டான், நம்பி ஆரூரன், எனது கொத்தடிமை. அவனது தாத்தாவே கைப்பட இவனையும் சேர்த்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது என்னிடம் உள்ளது. ஆரூரா எழுந்து வா என்னோடு''
எல்லோரையும் அதிர்ச்சியில் தள்ளிவிட்டு ஆரூரன் திருமணம் நின்றுபோய் கிழவரோடு புறப்பட்டான். மணப்பெண் அங்கேயே அவன் காலில் விழுந்து மயங்கி மரணமடைந்தாள்.
''தாத்தா யார் நீ, எங்கிருந்து வந்தாய்? நீ எப்படி என்னை அடிமையாக்கமுடியும்? அப்படி எதை வைத்து என்னை அடிமையாக்கி எங்கே இழுத்துக்கொண்டு போகிறாய்?'' என்றான் ஆரூரன்.
''ஆரூரா பேசாமல் வா. நான் திருவெண்ணெய் நல்லூர் காரன். அங்கே ஊர் பஞ்சாயத்தில் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்.''
பஞ்சாயத்து கூடியது. கிழவர் ஒரு ஓலைச்சுருள் எடுத்து படித்தார். ''சபையோர்களே நான் இதன் வாசகம் படிக்கிறேன் கேளுங்கள்
''நான், திருநாவலூர் ஆதி சைவன். என் பெயர் ஆரூரன், நானும் என் சந்ததிகள் யாவரும், திருவெண்ணெய் நல்லூரை சேர்ந்த பித்தன் என்பவருக்கு மனதாலும் ஜீவனாலும் பரம்பரை அடிமைகள். அவருக்கே ஆட்பட்டவர்கள்''
பஞ்சாயத்தார் அந்த ஓலைச்சுவடியை தக்க சாட்சியங்களோடு பரிசோதித்து தாத்தாவின் கை எழுத்து அங்கீகரிக்கப்பட்டு ஏகமனதாக நம்பி ஆரூரன் அந்த கிழவர் பித்தனின் அடிமை என முடிவானது.
''வா என் வீட்டுக்கு '' என்று ஆரூரனை அழைத்துக்கொண்டு திரு வெண்ணைநல்லூர் அருட்துறையான சிவாலயம் செல்கிறார் கிழவர்.
''இறைவா சிவபெருமானே, எனக்கு இப்படி நேர்வது உனக்கு சம்மதமா'' என்று ஆரூரன் கண்களில் நீர் வழிய கிழவரை தொடர்ந்து சென்றவன்
''வா இந்த கோவிலுக்கு செல்வோம் '' என்று நுழைந்த பித்தன் பின் மற்றவர் தொடர ஆரூரன் செல்கிறான். பித்தன் மாயமாகி எதிரே சிவன் தெரிகிறார்.
''ஓஹோ இது உன் வேலையா. என்னை சம்சார சாகரத்தில் இருந்து தடுத்து ஆட்கொண்டாயா? உன்னை அறியாமல் ஏதேதோ பேசிவிட்டேனே " என ஆரூரர் வருந்துகிறார்.
''சுந்தரா, நீ என்னோடு கைலாயத்தில் கூடவே இருந்த எனது பக்தன் உன்னை பிரிவேனா ' என காட்சி கொடுக்கிறார் அருட்துறை அம்மான் பரமசிவன். சிவனோடு வாதம் செய்ததால் சுந்தரர் ''வன் தொண்டர்'' என பெயர் பெற்றவர். என்னை பித்தா என்றே பாடு எனக்கு பிடிக்கும்'' என்கிறார் மகேஸ்வரன்.
அப்போது திருவெண்ணைநல்லூர் சிவன் ஆலயத்தில் எழுந்தது நாவினிக்க நாம் பாடும் இந்த தேவார பாடல்
''பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே''
இன்றும் இந்த ஆயிரக்கணக்கான வருஷங்கள் முன் கட்டிய அற்புதமான ஆலயம் திருவெண்ணெய் நல்லூர் க்ஷேத்ரத்தில் உள்ளது. தடுத்து ஆட்கொண்ட நாதர். கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர் என்ற ''பித்தன் '' கிழக்கு நோக்கி இங்கே ஸ்வயம்பு லிங்கம். அம்பாள்: வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை.
தொடரும்
No comments:
Post a Comment