Tuesday, March 6, 2018

DROWPATHI


ஆபத் சகாயன் -- J.K. SIVAN
திரௌபதி பஞ்ச மகா கன்னிகைகளில் ஒருவள். அவளுக்கும் கிருஷ்ணனுக்கும் உண்டான உறவு பகவானுக்கும் ஒரு பக்தைக்குமான பரிசுத்தமான ஒன்று ஆகும். அவள் சாதாரணமாக நம் போல் பிறந்தவள் அல்ல யாகத்தீயில் சகோதரன் த்ருஷ்டத்யும்னனோடு அவதரித்தவள். துருபதன் அவள் கல்வி, கேள்விகளிலும் ஒழுக்கம், குடும்ப பாங்கு ஆகியவை அனைத்திலும் தேர்ச்சி பெற ஏற்பாடு செய்தான். அவள் பக்தி பூரா கிருஷ்ணனிடமே இருந்தது. அவளை கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைக்க துருபதனுக்கு எண்ணம். கிருஷ்ணன் "திரௌபதி என்றும் என்னுடைய பிரியமான சகி. அவளை நான் மனைவியாக நினைத்து கூட பார்க்ககூட முடியாதே” என்று மறுத்து விட்டான். கிருஷ்ணனின் யோசனைப்படியே துருபதன் சுயம்வரம் நடத்தி அதில் அர்ஜுனன் வெற்றிபெற்று அவள் பாண்டவர்கள் மனைவியான விஷயம் பிற்பாடு ஒரு கதையாக எடுத்துகொள்ளலாம்.

திருதராஷ்ட்ரனுக்கு கண் இருந்தால் ஒரு கண் வெண்ணை ஒரு கண் சுண்ணாம்பு என்று சொல்லலாம். பாண்டவர்களுக்கு என்று தேசம் பிரித்தபோது ஹஸ்தினாபுரத்தை துரியோதனனுக்கும் ஒன்றுமே விளையாத வறண்ட பூமியான காண்டவ ப்ரஸ்தத்தை பாண்டவர்களுக்கும் பிரித்து கொடுத்தான். கிருஷ்ணனுக்கு துரியோதனனின் பங்கு இதில் உண்டு என்று தெரியும். மயனை அனுப்பி காண்டவப்ரஸ்தத்தை அழகிய சோலை வனம் மிக்க பச்சை பசேலென்ற இந்திர பிரஸ்தமாக மாற்றி அமைத்தான். எல்லாம் திரௌபதியின் மேல் இருந்த பாசத்தால் தான்.

பாண்டவர்களின் வளர்ச்சி புகழ் அனைத்தும் துரியோதனனை பொறாமைத் தீயில் வாட்டியதன் காரணம் தான் அவன் சகுனி மாமாவின் யோசனைப்படி பாண்டவர்களை சூதாட்டத்துக்கு அழைத்தது.

கிருஷ்ணனுக்கு சகுனியால் தான் கௌரவ வம்சமே அழியப்போவது நன்றாக தெரியும். அவன் மூலமே மகாபாரத போர் மூளப்போகிறது என்பது மட்டுமல்ல. சகுனியின் தந்தையின் கால் எலும்பினால் செய்யப்பட்ட தாயக்கட்டை தான் கேட்கும் எண்களைத் தரப்போகிறது, இதனால் தர்மன் தோல்வி நிச்சயம் என்றும் தெரியும். கவுரவர் அழிவுக்கும் பாண்டவர் வெற்றிக்கும் முக்ய காரணம் சகுனி என்பதால் கண்ணன் தக்கசமயம் வரும் வரை பொறுத்தான் . துரியோதனனின் வெறியாட்டத்தில் துச்சாதனனை அனுப்பி தோல்வியுற்ற பாண்டவர்கள் மனைவி திரௌபதியை அலங்கோலமாக இழுத்து மானபங்கப்படுத்த ய்த முயற்சி தோற்றதற்கும் கிருஷ்ணனுக்கு திரௌபதி மேல் இருந்த அளவற்ற பாசத்தால் மட்டுமல்ல அவளுக்கு கண்ணனிடம் இருந்த பக்தியாலும் தான்.

ஒரு சமயம் பாண்டவர்களோடு திரௌபதியும் கிருஷ்ணனும் ஒரு வடதேச யாத்ரை சென்றபோது அங்கு ஒரு பெரிய காட்டாறு கடல்போல் உருண்டு திரண்டு ஓடிக்கொண்டிருந்தது அதன் பேரிரைச்சல் சுற்று வட்டாரத்திலுள்ள விலங்குகளுக்கு கூட அச்சத்தை உண்டு பண்ணியது. அப்போது அதில் நீராடலாமா என்று அர்ஜுனன் கேட்க அனைவரும் அந்த நதியில் இறங்கினர்.

நதியில் வெகுநேரம் நீராடியபின் பாண்டவர்கள் கரையேறினார். கிருஷ்ணன் மட்டும் கரை ஏறாமல் நீரிலேயே நின்று கொண்டிருந்ததை திரௌபதி கவனித்துவிட்டாள். கிருஷ்ணனின் ஆடையை வெள்ளம் அடித்துகொண்டு போனதை அவள் புரிந்து கொண்டுவிட்டாள். சமயோசிதமாக கிருஷ்ணன் இருந்த பக்கமாக ஆற்றில் தன்னுடைய புடைவையில் பாதி கிழித்து கிருஷ்ணன் பார்வை படும்படியாக போட்டாள். கிருஷ்ணன் அதைப் பிடித்து உடுத்திக் கொண்டு கரையேறினான். இதுவே ஒரு மறக்க முடியாத சம்பவமாக மனதில் உறைந்து தக்க சமயத்தில் திரௌபதிக்கு துரியோதனன் சபையில் முடிவில்லாத வஸ்த்ர தானம் செய்து கண்ணன் உதவினான். அவனது நன்றிக்கடனும் இப்படி தீர்ந்ததோ?

அரசவையில் திரௌபதியின் க்ரிஷ்ணபக்தியை மெச்சிய திருதராஷ்ட்ரன் "திரௌபதி, உனது பக்தியும் கணவன்மார் மீது உள்ள பதிவ்ரதமும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது உனக்கு இரண்டு வரம் தர வேண்டும் என்று தோன்றுகிறது. கேளேன்!” என்றான்.

''என் கணவர்களது மேல் அங்கவஸ்தரத்தையும் அவர்களது மகுடங்களை திருப்பிகொடுதாலே போதும் ”

வெந்த புண்ணில் வேலைபாய்ச்சுவது துரியோதனனிடமிருந்து வந்த வித்தை. பாண்டவர்களிடம் அக்ஷய பாத்ரம் இருந்து அதன் மூலம் அன்றாடம் அவர்களுக்கும் வனத்திலிருந்த அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்கிறது, அனைவரும் உண்டு அந்த பாத்ரம் கழுவி வைக்கப்பட்டால் அவ்வளவு தான் அன்று உணவு என்றும் தெரிந்து, துர்வாசரை தன்னுடைய 60000 சிஷ்யர்களோடு பாண்டவர்களைப் போய் மதியத்துக்கு மேல் போஜனம் அளிக்குமாறு கேட்க வைத்தான். அவனுடைய துரதிர்ஷ்டம் அன்று கிருஷ்ணனுடைய பிறந்தநாள். கிருஷ்ணன் பாண்டவர்களை அன்று சந்திப்பது வழக்கம். துர்வாசர் தனது 60000 சிஷ்யர்களோடு ஸ்நானம் செய்து வருவதற்குள் கிருஷ்ணன் அக்ஷய பாத்ரத்தில் ஒட்டிகொண்டிருந்த ஒரு கீரைத்துண்டின் மூலம் தன் பசியாறி துர்வாசரும் அவர் சிஷ்யர்களும் பசியறியாதபடி பண்ணினது ஏற்கனவே எழுதியிருக்கிறேன் அல்லவா? இதெல்லாம் திரௌபதிக்காக கிருஷ்ணன் செய்த ஆபத்சகாயம் தானே!!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...