Monday, March 19, 2018

aindham vedham


ஐந்தாம் வேதம் J.K. SIVAN
                                 
 சில சுவாரஸ்ய சம்பவங்களின் முன்னோட்டம்
                                             
நான்  இதை எழுதும்போ

து  ஒன்று கவனித்தேன்.  சில  விஷயங்கள்  இங்கே  ஒரு பாதியும்  அங்கே மீதியுமாக வருவது ஆச்சர்யமாக இருக்கிறது.  ஸ்லோகத்தில் அப்படியிருக்கிறதோ? கங்குலி - பி. சி. ராய் தொகுத்தது அப்படியோ?   சற்று வித்தியாசமாகவே  பாரதத்தை தொடர்வோமே.  பழைய விஷயமானாலும்  சொல்வதி லாவது புதுமை இருக்கட்டுமே. பாரதத்தில் வரும் சில புகழ்பெற்றவர்களைப் பற்றி ஒவ்வொரு வார்த்தை.
வசுக்களில்  புகழும்  பலமும் வாய்ந்தவர்  பீஷ்மன். கங்கைக்கும்  சந்தனு  மகாராஜாவுக்கும்   மகனாக பிறக்கிறார்.

அணிமாண்டவ்யர் என்று ஒரு ரிஷி. வேதங்களை  நன்றாக கற்றுணர்ந்தவர். அவரைத் திருடன் என்று அரசனின் காவலாளிகள் பிடித்துக்கொண்டு போய்  அரசன்  அவரைக் கழுவேற்ற ஆணையிடுகிறான். ரிஷி தர்மதேவதையிடம் கூறுகிறார்.  

''ஹே,  தர்மராஜா,   இதோ  இந்த  கழுமரத்தில்  இன்னும்  சற்று நேரத்தில்  எனது  வாழ்க்கை முடியப்போகிறது.  நான்  செய்யாத  குற்றத்திற்கு  இது  எனக்கு   தண்டனை.ஆனால்  எனது பால்ய  பருவத்தில் ஒரு சிறு வண்ணத்துப்  பூச்சியைப்  பிடித்து  அதன் சிறகில்  ஒரு  கூர்மையான புல்லைச் செருகி  துன்புறுத்தினது  நினைவிருக்கிறது. வேறு எந்த  பாபமும் செய்யவில்லையே.  இத்தனை காலமும் நான் செய்த பெரும்  தவப்பயன்  நான்  செய்த அந்த ஒரு சிறு பாபத்தைகூட போக்கவில்லையே. ஆகவே, நான்  உனக்கு  ஒரு  சாபத்தை அளிக்கிறேன் கேள். ஒரு பிராமண  ரிஷியைக் கொன்ற பாபத்துக்கு நீ பூமியில் ஒரு மனிதனாகப்  பிறந்து  இழிசொல் பட்டு துன்பம் அனுபவிப்பாய்.''

மாண்டவ்யர்  சாபமிட்டபடி  தர்மராஜா விதுரனாகப்  பிறக்கிறான்.  தர்மதேவதையின் காவலனாக சூர்யனுக்கும்  குந்தி தேவிக்கும்  மகனாக கர்ண குண்டல கவசங்களோடு  இணையில்லாத  தர்மிஷ்டனாக கர்ணன் பிறக்கிறான்.

ஸ்ரீமன்  நாராயணன்  தேவகிக்கும்  வசுதேவருக்கும் மகனாக  கிருஷ்ணாவதாரம் செய்கிறார்.

நாராயணனின்  அணுக்கத் தொண்டர்களான  சட்யகனும்  ஹ்ரிடிகனும்  சாத்யகி  க்ருதவர்மன்  ஆகியோராக அஸ்த்ரவித்தைகளில்  சிறந்தவர்களாக  வருகிறார்கள்.

ரிஷி பரத்வாஜரின்  சக்தி துரோணராக உருவாகிறது.  கௌதமரின்  அம்சமாக  அச்வத்தாமனும் கிருபரும்  பாரதத்தில் தோன்றுகிறார்கள்.  அக்னி  த்ருஷ்டத்யும்னனாக வருகிறான். அக்னியிலிருந்தே  கிருஷ்ணா (திரௌபதி) உருவாகிறாள். ப்ரஹ்லாதனின்  சிஷ்யன் சுவலாவிலிருந்து  சகுனி  தோன்றுகிறான்.காந்தாரி தோன்றுகிறாள்.

வியாசரிடமிருந்து விதுரன்  பாண்டு  திருதராஷ்ட்ரன் உருவாகிறார்கள்.  இதுபோல் எண்ணற்ற  தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள், அப்சரஸ்கள், ரிஷிகள், முனீஸ்வரர்கள் , யோகிகள், பல நாமகரணங்களில்  ரூபங்களில்  பாரதத்தில் வருவதால்  அதன் சுவை  கூடுகிறது.  விவரங்களைப் பார்ப்போம். வேத வியாசர்  இந்த லக்ஷக்கணக்கான   பாரத ஸ்லோகங்களை  மூன்று வருஷங்களில் இயற்றினார். எனக்கு இவற்றை  சுருக்கி முக்யங்களை விடாமல்  சிறு சிறு கதைகளாக்க கிட்டத்தட்ட அதே கால நேரம் தேவைப்பட்டது. ஆனால்  ஒவ்வொருநாளும் குறைந்தது 18-20மணி நேரம்.!!  ஐந்தாம் வேதம்

விட்டுப்போவதற்கு  முன்பு  மற்றொருவரைப்  பற்றியும்  சொல்ல வேண்டாமா?  பரசுராமர்  ரிஷி ஜமதக்னியின் புதல்வர். 21 முறை இந்த பூமியில்  புல்லைச் செதுக்குவது போல் க்ஷத்ரியர்களை  பூண்டோடு களைந்தவர். மேற்கே  மகேந்திர மலையில்  தவம் புரிந்தவர்.   

க்ஷத்ரியர்கள் வம்சங்கள் அழிந்தபோது  அந்த வம்சம்  மீண்டும் துளிர்க்க  க்ஷத்ரியப் பெண்கள் பிராமணர்களை மணந்தார்கள்.  க்ஷத்ரியர்கள்  மீண்டும்  உருவானார்கள். திதியின் மூலம்  தைத்யர்கள் என்கிற அசுரர்கள் பெருகி அதிதி மூலம்  பிறந்த  12 ஆதித்யர்கள்  பிரபஞ்சத்தின் காவலர்களையும் மற்ற தேவர்களையும்  துன்புறுத்தினார்கள். தைத்யர்களில் ஒருவன் தான்  ஹிரண்ய கசிபு. அவன் மகனாக வந்தவன்  பிரகலாதன், அவனுக்குப்  பின் மகாபலி,  சிபி, -  இவர்களைப் பற்றி தான் நமக்குத் தெரியுமே. இதில் ஹிரண்யகசிபு  தான்  பின்னர்  சிசுபாலனாக  பாரதத்தில்  வருகிறான்.  பிரஹலாதனின் சகோதரன் சங்க்லாதன் தான்  சல்லியனாக  வருகிறான். ஒரு  அசுரன்  பகதத்தன்  ஆகிறான்.  இன்னொருவன்  ஏக சக்ரபுர பகாசூரன். பீமனால் கொல்லப்படுபவன்.

33 தேவதைகளில்  8   வசுக்கள்,12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள்,  பிரஜாபதி, வஷட்காரர்  ஆகியோர் உண்டு. இதில் எட்டு வசுக்களில் ஒருவன்  பிரபாசன். இவனே  பின்னர்  பீஷ்மராக  பாரதத்தில் வருவான். . மஹாலக்ஷ்மி பீஷ்மகன் என்கிற அரசனின் மகள் ருக்மிணியாகி  கிருஷ்ணனை மணக்கிறாள்.  இந்திரனின் மனைவி சசியின்  அம்சமாக துருபதன் என்கிற மன்னன் வளர்க்கும்  யாகத்தீயில்  திரௌபதி உருவாகிறாள்.

புரு வம்சத்தின்  அரசன்   துஷ்யந்தன்  ஒரு நாள்  காட்டில் வேட்டையாடி  களைத்து   அங்கு வாழ்ந்த  கண்வர் என்கிற ஒரு  ரிஷியின்  ஆஸ்ரமத்தை அணுக, அதில் சகுந்தலை  என்ற  அவரது அழகிய  பெண்ணை பார்க்கிறான். மையல் கொள்கிறான்.

''நீ  யார் பெண்ணே ?''

''ரிஷி கண்வரின் பெண். ஆனால்  என்னைப் பற்றிய  ஒரு கதையைச்  சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அது என்ன  உன் கதை?

விஸ்வாமித்ர ரிஷியின் கடுந்தவத்தை சிதைக்க, இந்திரன் தேவலோக அழகியான மேனகையை அவரிடம் அனுப்பி  அவர்  தவத்தை கலைக்க முற்பட்டு, அவள் அவ்வாறே செய்து வெற்றி பெற்றதோடு அவருடைய ஒரு  சிசுவையும் பெறுகிறாள்.  மேனகை  குழந்தையை  கண்வர் ஆஸ்ரமத்தின் அருகில்  விட்டுவிட்டு சென்றதால்  அவர்  வளர்ப்பு மகளாக  நான்  பிறந்தேன்.  கண்வர் என்னைப்  பார்க்கும் வரை  என்னை  காத்தவை சில  சாகுந்தல பறவைகள். எனவே   அவர் எனக்கு வைத்த பெயரே  சகுந்தலை ஆகும்.

இந்த  விஸ்வாமித்ரர்  தான் திரிசங்கு என்பவனுக்காக  ஒரு  தனி ஸ்வர்கத்தையே  உருவாக்கியவர். சிறந்த தபஸ்வி. கௌசிக மன்னனாக இருந்து மகரிஷியானவர்.

''உன் அழகில் மயங்கிவிட்டேன் பெண்ணே, நீயே  என் மனைவி,'' என்கிறான் துஷ்யந்தன்.  அரசன் யாராவது  ஒருவளை கண்டவுடன் அவளை  மணக்க  நமது சாஸ்திரங்களில் வழி உண்டே. இதற்கு காந்தர்வ  விவாகம் என்று பெயர்.

அப்படியெனில் எனக்கு பிறக்கும் உங்கள் மகன் அடுத்த  அரசனாவான்  அல்லவா?

''ஆமாம்.''

''சகுந்தலா துஷ்யந்தன் மனைவியாகி  ஒரு பிள்ளை பெறுகிறாள். சிறந்த  வீரனாக  பயிற்சி பெற்று  ரிஷிகளின் செல்லமாக வளரும் அவன் பெயர்  சர்வதமனன் (எல்லாம்  வெல்பவன்).''

காட்டிலிருந்து சென்ற  அரசன்  துஷ்யந்தனோ சகுந்தலையை மீண்டும்  சந்திக்கவில்லை.

ரிஷிகுமாரனாக  வளர்ந்த  சர்வதமனன்  தாய் சகுந்தலையோடு  ஹஸ்தினாபுரம்  அரண்மனையில் துஷ்யந்தனை சந்தித்தபோது

''எந்த காட்டில்  எந்த  ரிஷியின் ஆஸ்ரமத்தில் உன்னை நான்  சந்தித்தேன் என்கிறாய் பெண்ணே? . உன்னை யாரென்றே தெரியவில்லை.  உன்னை ஒருபோதும் சந்தித்ததாகவே  நினைவில்லையே!'' புரியும்படியாகச்  சொல்?'' என்கிறான் துஷ்யந்தன்.

தூக்கி வாரி போடுகிறது சகுந்தலைக்கு. பொறுமையாக பேசுகிறாள்:

 ''இதோ இவன் உன் மகன்,  எனக்கும் உனக்கும் பிறந்தவன். உன் வம்சத்தில் அடுத்த வாரிசு.  என்னைத்தான் யார் என்றே தெரியாது என்று சொல்லிவிட்டாய்.  ஆனால் உன் பிள்ளையான இவனையாவது  ஜாக்ரதையாக  பாதுகாத்து புகழ் பெறுவாய் ''என்று சகுந்தலை கூறிவிட்டு   கானகம் திரும்பினாள் சகுந்தலை.  அப்போது துஷ்யந்தனின் காதில் அசரீரி உரைப்பது கேட்கிறது.

  ''விதிவசத்தால்  நினைவிழந்த நீயே சகுந்தலையின் கணவன். உனது  புரு வம்ச வாரிசான  இந்த  சர்வதமனன் உன் மகனே. அவன் இனி பரதன் என்ற பெயர் பெற்று  முடி  சூடி மறையாப்புகழ் பெறுவான்.

அரசன் மகிழ்ந்தான்.  சகுந்தலையின் வார்த்தையை மட்டும் நம்பி இவனை ஏற்றுக்கொண்டால் மக்கள் பழியை ஏற்க நேரிடும். தேவ வாக்கே  இவ்வாறு  கூறிவிட்டதால் எந்த களங்கமும் இனி இல்லை''  என்று  துஷ்யந்தன் களித்தான்.

இவனால்  பரத குலம் தோன்றி  நமது தேசம் பாரத நாடாகவும்  ஆகிவிட்டது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...