Friday, March 23, 2018

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்     J.K. SIVAN

 

18  மூன்று முறை உயிர் பிழைத்த கச்சன்

நைமிசாரண்ய வனத்தில் சப்தமே இல்லை. காற்றில் இலைகள் அசையும் சப்தம்,  ஒரு சில சமய சந்தர்ப்பம் தெரியாத பறவைகள் குஞ்சு குடுவாக்களுடன்  ஆகார விஷயமாக  ஆர்ப்பரிக்கும்  சப்தம் மட்டுமே.

அடுத்ததாக மேலே   ரிஷி உக்ராஸ்ரவர்  மஹாபாரத வம்சாவளி கதை  என்று ஆவலாக எல்லோரும் கேட்க காத்திருந்தபோது ரிஷி தொடர்கிறார்.

 ''அவன் பின்  நஹுஷன், அவனுக்குப் பின்னர்  யயாதி அரசனாகிறான்.  வயதாகியும்  இளமையை இன்னும் அனுபவிக்க வேண்டி  தனது மகன்களிடம் அவர்களது இளமையை அளிக்க கோருகிறான். ஒரு மகன் புரு மிகவும்  சிறந்தவன். அவன்  தந்தையின்  முதுமையைப் பெற்று  தனது இளமையை அப்பனுக்குத் தந்து முதியோனாக அரசாள,  தகப்பன் இள வயதினனாகி உலகின் இச்சைகளை அனுபவித்து  ''அதற்கு எல்லையே இல்லை, முடிவும் இல்லை'' என்று உணர்ந்து மீண்டும்  தனது முதுமையை மகனிடமிருந்து பெற்று  துறவறம் பூணுகிறான்.

 தேவர்களும் அசுரர்களும் என்றுமே  ஒத்துப்போவதில்லை. எலிகளும் பூனைகளும் தான். தேவ குரு ப்ரஹஸ்பதியின் மகன் கச்சன். அசுர குரு  சுக்ரனிடம் சஞ்சீவனி  என்கிற  சாகா  வர வித்தையைக் கற்றுக்கொண்டு வந்து எங்களக்  காப்பாய்  என்று தேவர்கள் வேண்ட அவன் சுக்ரனிடம் செல்கிறான். அவரின் அன்புக்கு பாத்திரமாகிறான். அவருக்கு ஒரு அழகிய மகள். தேவயானி .இருவரும்  ஒருவரை நேசித்து  கச்சன் 500 வருஷங்கள்  அவளோடு சேர்ந்து இருக்கிறான். வந்த வேலையை மறந்துவிட்டானே  என்று  மற்ற மாணவர்கள்  கோபம் கொண்டு  அவனைத்  தனியே  அழைத்துச்சென்று அவன் கொல்லப்பட்டு அவன் ஏதோ  காரணத்தால் எதிர்ப்பாராமல் இறந்து விட்டதாக  சுக்ரனிடமும் தேவயானியிடமும்  கூற  அவர்கள்  சோகமடைகிறார்கள்.  சஞ்சீவனி சக்தியால்  சுக்ரர்  கச்சனை உயிர்ப்பிக்கிறார். கச்சன்  காட்டில் நடந்ததை எடுத்துக் கூறுகிறான்.


மற்றொரு சந்தர்பத்தில் கச்சன்  மீண்டும் கொல்லப்படுகிறான். இந்த முறை அவனது  உடல்  பல கூறுகளாக சிதைக்கப்பட்டு கடலில் வீசப்படுகிறது.  தேவயானி  அழுது கொண்டு தந்தை சுக்ராச்சரியாரிடம்  வேண்ட, அவன் மீண்டும் சுக்ராச்சாரியாரால்  உயிர் பெறுகிறான். 

மூன்றாம் முறையாக  மற்ற சிஷ்யர்களால் கொல்லப்பட்ட கச்சன் சுட்டுப் பொசுக்கப்பட்டு  அவர்கள் திட்டமிட்டு அந்த சாம்பலை சுக்ரச்சாரியரின் பானத்திலேயே கலந்து கொடுக்க, அவரும் அதைக் குடித்துவிடுகிறார்.   தேவயானி  வழக்கம்போல் அழுது  கொண்டு ''எனக்கு  உடனே கச்சன்  வேண்டும்  உயிர் பெற்று கொடுங்கள்'' என்று  தனது தந்தியிடம் கேட்க சுக்ராசாரியர்  ஞான திருஷ்டியில்  நடந்தது   என்ன என்று அறிகிறார்.

''கச்சா இங்கே   வா '' என்று  கூப்பிட்ட சுக்ராச்சாரியார் குரலுக்கு

''எப்படி  வருவது. நான் தான்  உங்கள்  வயிற்றுக்குள்  இருக்கிறேனே''   என்கிறான்  கச்சன் .

''இதோ பாரம்மா, தேவயானி,   கச்சன் உயிருடன் வரவேண்டுமானால்  என்  வயிறு பிளந்து நான்  சாக வேண்டும்.  ஆகவே  கச்சன்  அல்லது உன் தந்தை நான்,  இரண்டு பேரில் ஒருவர் தான் உனக்கு, யார் வேண்டும் என்று நீயே  சொல் என்கிறார் சுக்ராச்சாரியார் ''

''ரெண்டு பேருமே வேண்டும்'

சுக்ரருக்கு கடைசியில் ஒரு யோசனை தோன்றுகிறது. ரெண்டுபேருமே  பிழைக்க  ஒருவழிதான்.  முதலில்  சஞ்சீவனி மந்திரத்தை சுக்ராச்சாரியார்  வயிற்றுக்குள் இருக்கும் கச்சனுக்கு  போதித்து  ''கச்சா உன்னை வெளியே கொண்டுவரும்போது நான் இறந்துவிடுவேன். இந்த  மந்திரத்தை உனக்கு உபதே
சித்தேனே. அதை உச்சாடனம் பண்ணி என்னை  நீ உயிர் பிழைக்க வைக்கிறாயா?

''அப்படியே  குருநாதா''  என்கிறான் கச்சன்.

கச்சன்  தான்  கற்க விரும்பிய சஞ்சீவனி மந்திரத்தை இவ்வாறாக தெரிந்து கொள்கிறான்.  வெளியே வருகிறான்.  மந்த்ர உச்சாடனத்தால் சுக்ராசாரியாரும் உயிர் பெறுகிறார்.  தேவயானி '' கச்சா  நீ  என்னை  மணந்து கொள்'' என்கிறாள்.

''எப்போது  நான்   உன் தந்தை வயிற்றில் இருந்து பிறந்தேனோ இனி அவர் எனக்கு  தாயும்  தந்தையும்.  எனவே  நீ எனக்கு  உடன் பிறந்தவள்.  நான் உன் சகோதரன்''   என்று  டயலாக் தொடர்கிறது. கதை கல்யாணத்தில் முடியாமல் கச்சன்  தேவலோகம்  போகிறான்.

அரசன் வ்ருஷ பர்வன்  மகள்  சர்மிஷ்டை   தேவயானியுடன்  தோழியானாலும்  நட்பு  நெருக்கம்  இருவருக்கும் என்று சொல்லமுடியாது. சண்டை சச்சரவு வரும். ஒரு தடவை   சர்மிஷ்டை தேவயானியுடன் பிணக்கு அதிகரிக்க அவளை ஒரு கிணற்றில் தள்ளிவிடுகிறாள்.  அந்தப்பக்கமாக  நமது  யயாதி ராஜா வேட்டையாடிவிட்டு  தாகத்தோடு  வருகிறான். கிணற்றைக் கண்டவன்  அரைச் சொம்பு   நீர் தேடியவன்   அழகி  தேவயானியை  கை நீட்டி அவள் கரம் பற்றி   வெளியே  கொண்டுவருகிறான்.

தந்தையிடம் சென்று சர்மிஷ்டை  '' தேவகுரு ப்ரஹஸ்பதியை விட  நீங்கள் மதிப்பு குறைந்தவராம் போற்றப்படாதவராம்'' என்று சொன்னதால் எனக்கு கோபம் வந்தது. இந்த சண்டையில் சர்மிஷ்டை என்னை கிணற்றில்   தள்ளி விட்டாள் .''

''மகளே, கோபத்தால்  ஆவது ஒன்றுமில்லை. தவறு செய்பவர்களை மன்னிப்பதில் உள்ள  இன்பமும் அமைதியும் எதிர்ப்பதில் கிட்டாது. குழந்தைகள் தான்  உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பவர்கள்.  அனுபவமிக்கவர்கள் இதற்கு இடம் கொடுக்கக்கூடாது.''

ராஜா  ரிஷபர்வன் காதுக்கு  இந்த   விஷயம் எட்டியதும் அவன் தேவயானியைக் கூப்பிட்டு  சமாதானப்படுத்தி  என்னவேண்டுமோ கேள்''   என்கிறான். ' உங்கள் மகள்  சர்மிஷ்டை எனக்கு பணிபெண்ணாக வேண்டும்'' என்கிறாள். அரசனும் கட்டளையிடுகிறான்.

தேவயானி  ஒரு நாள்  காட்டுவழியாக செல்லும்போது  நமது  ராஜா யயாதி அங்கு வழக்கம்போல் வேட்டையாடி தாகத்தோடு தண்ணீர் தேடி வழக்கம்போல் தேவயானியைக்  கண்டு தாகத்தோடு மோகமும் சேர்ந்து,  அவள்  அவன் மனைவியாகிறாள்.

எத்தனையோ குட்டிக்கதைகள்  இந்த பாரதத்தில் இடம்பெறும். நிறைய சம்பவங்கள் முன்னுக்குப் பின் மாறி வந்தாலும் கதை அந்தர் பல்டி  அடிக்காமல் சீராகச் செல்லும். காட்டாறு   தனது  பாதையை அடிக்கடி மாற்றிக்கொண்டால்  நமக்கென்ன?. அதன் தெளிந்த நீர் சீராக ஓடி, நம் உடலை குளிர்வித்து, தாகமும் தீர்க்கிறதே. அது போதாதா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...