ஐந்தாம் வேதம் J.K. SIVAN
நைமிசாரண்யத்தில் வனத்தில் எல்லா ரிஷிகளும் ஆர்வமாக உக்ரஸ்ரவர் சொல்லும் விஷயங்களை கேட்டுக்கொண்டிருந்தார்கள் அல்லவா. அப்போது ரிஷி சௌனகர் குறுக்கிட்டு ''சௌடி மகரிஷி, எனக்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறதே சில கேள்விகள் கேட்கட்டுமா'' என்றார் . சரி என்று உக்ரஸ்ரவர் ஒப்புக்கொண்டதும்
'' எதற்கு காச்யபர் ஒரு பெரிய பறவையான கருடனை மகனாகப் பெற்றார்?
எப்படி கருடனுக்கு அவ்வளவு வலிமை கிடைத்தது?
இந்திரனால் கருடனை தடுக்க முடிந்ததா?
அமிர்தத்தை கருடன் கொண்டு போனானா?''........
கேள்வி மேல் கேள்வியாக துளைத்தார் சௌனகர்.
''சௌனகா, நீ கேட்டதற்கெல்லாம் புராணத்தில் பதில் இருக்கிறது என்று ஆரம்பித்தார் சௌடி என்று அழைக்கப்பட்ட உக்ரஸ் ரவர்.
சௌடி மூலம் நமக்கும் விடை கிடைக்கட்டுமே.
"காச்யபர் தவமிருந்து புத்திர பாக்கியம் பெற்றவர். கந்தர்வர்கள், தேவர்கள், வலகில்ய ரிஷிகள், இந்திரன் போன்றோர் மிக்க மதிப்புடன் அவரை அணுகுபவர்கள். ஒரு தடவை இந்திரன் மலையளவு கொண்ட ஒரு பொருளை சுலபமாகத் தூக்கிண்டு நடந்தான். வழியில் அநேக ரிஷிகள் ஒரு கட்டை விரல் அளவு குள்ளர்கள் ஒரு சிறு பலாச இலையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்ததைப் பார்த்தான். அவர்கள் வழியில் ஒரு பசுவின் குளம்பு பதித்த ஆழத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கியவாறு தவித்துக்கொண்டு அந்த பலாச இலையை சுமந்ததைப் பார்த்து ஏளனமாக சிரித்து அவர்களைத் தாண்டிச் சென்றான்.
''சௌனகா, ரிஷிகளுக்கு கோபம் வருமா வராதா சொல்? என்று கதையை நிறுத்தினார் சௌடி .
''ஆமாம், மகரிஷி, இந்திரன் செய்தது தப்புதானே. மேலே என்ன நடந்தது என்று சொல்லுங்கள்'' என்றார் சௌனகர்.
''விரைவில் வேறொரு இந்திரன் வந்து உன்னை பதவி விலக்குவான்'' என்றல் அந்த குள்ள ரிஷிகளின் சாபம் இந்திரனைத் திணற அடித்தது. காச்யபரிடம் ஓடினான். அவரிடம் முறையிட்டு பாதுகாப்பு வேண்டினான். காச்யபர் ''வலகில்ய முனிவர்களே, இந்த இந்திரன் பிரம்மாவினால் பதவியில் இருப்பவன். அவரது வார்த்தையை மீறக்கூடாது அல்லவா என்றார்?
காஸ்யப முனிவரே, நீங்கள் புத்ரனை வேண்டி தவமிருப்பதால் உங்கள் புத்திரன் சரியான தேவர் தலைவனாக அமைந்தால் நல்லது தானே. எது சரி முறை என்று தங்களுக்குத் தெரியாதா?'' என்றார்கள் அந்த முனிவர்கள்.
காஸ்யபரின் மனைவி வினதை சத் புத்ரர்கள் பெற வேண்டி விரதமிருந்தாள் . எனவே காச்யபர் அவளுக்கு வரமளித்தார். நான் செய்யும் யாக தவ பயனாக உனக்கு இரு புத்ரர்கள் பிறந்து மூன்று உலகம் புகழும் பெருமையோடு போற்றப்படுவார்கள்'' என்றார்.
எனவே ''இந்திரா, என் மகன்கள் அருணனும் கருடனும் உனக்கு சகோதரர்களாக உதவுவார்கள்'' என ஆறுதல் அளித்தார் காஸ்யபர்.
இந்திரனும் தேவர்களும் அமிர்தத்தைக் காக்க கருடனோடு பெரும் யுத்தம் ஒன்று நடத்த வேண்டி இருந்தது . அனைவரையும் வென்று கருடன் அமிர்தத்தை நெருங்கினான். அதைச் சுற்றிலிலும் அக்னி சூரியனைக்காட்டிலும் பல மடங்கு வெப்பத்துடன் காத்தது. கருடன் பல சமுத்ரங்களைக் குடித்து அந்த நீரைகொண்டு தீயை அணைத்தான். அமிர்த கலசத்தைச் சுற்றி ஒரு கூர்மையான சக்ரம் சுழன்று அருகில் நெருங்க முடியாமல் ஒளி வீசியது. மிகச் சிறிய உருவெடுத்து அந்த சக்ரத்தின் இடைவெளியில் புகுந்தான் கருடன். இரண்டு பெரிய சர்ப்பங்கள் அமிர்தத்தைக் காப்பதற்கு அங்கு கொடிய விஷத்தைக் கக்கியவாறு தயாராக காத்திருந்தன. கண நேரத்தில் கருடன் அவைகளைக் கொன்றான்.
இவ்வாறு கருடன் அமிர்தத்தைக் கைப்பற்றினான். அந்த சக்ரத்தைத் தூளாக்கினான். பறந்தான். வழியில் விஷ்ணுவைப் பார்த்தான். வணங்கினான். அவனது வீரத்தை மெச்சி
'கருடா இனி நீ என் வாகனம்'' என்றார் நாராயணன். மிக்க பெருமையோடு அவ்வாறே அன்று முதல் அவரது வாகனம் ஆனான் கருடன்.
கருடனின் பலத்தையும் வீரத்தையும் மெச்சின இந்திரன் ''சகோதரா, இந்த அம்ருதத்தை யாரிடமும் தராதே. அவர்கள் தேவர்களது எதிரிகளாகி துன்புறுத்துவர். ''
''இந்திரா புரிகிறது. நான் இந்த அம்ருதத்தை எடுத்துச்செல்வது என் தாயை அடிமைத்தளையிலிருந்து மீட்பதற்கு மட்டுமே'' என்றான் கருடன். நான் எனது காரியம் முடிந்தவுடன் தரையில் இந்த அம்ருத கலசத்தை வைத்தவுடன் நீ எடுத்துச் செல்'' என்றான் கருடன். இந்திரன் மகிழ்ந்தான். கருடன் அம்ரித கலசத்தோடு தாய் விநதையிடம் திரும்பினான்.
தொடரும்
No comments:
Post a Comment