Monday, March 12, 2018

BARATHIYAR



     ''நீயின்றி நானில்லை கண்ணம்மா ''
                            J.K. SIVAN

இந்த உலகத்திலேயே அவனைப் போல வேறே யாரையுமே பற்றி இவ்வளவு கேள்விப்பட்டதே கிடையாது.  ஆமாம்  வாஸ்தவம். கிருஷ்ணன் ஆணல்ல.  பெண். ஆமாம் அவனைப் பெண்ணாக பார்த்தவர்களுக்கு அவனைப் போல்  அழகான, சாதுர்யமான பெண் இல்லை.   ஆணாக பார்த்த  பெண்கள் அத்தனைபேரும்  இவ்வளவு  கம்பீரமா, வீரமா, சாதுர்யமா, சமயோசிதமா, அழகா, ஆண்மையா  என்று வியக்க வைக்கிறான்.   

கிருஷ்ணனை பெண் என்று பார்த்தால்  தயவு செயது அவளை  சாதாரண பெண் என்று நினைக்கவேண்டாம். சொல்ல முடியாத  அழகுடையவள்.  என் காதலி வேறு. அவளோ  ராஜ குடும்பம் நானோ சாதாரணன். அவளை நான்  நேசித்தேன். சிறு குழந்தை  அவள். அவளை நான்  பொன்னே  போல் அல்லவா  சிறப்புற நடத்துவேன்..
அவளை ஒரு வேலையும் செய்யாமல் உட்கார வைத்து பார்த்துக்கொண்டே இருந்தால் போதுமே. என் மனமே ஆகாயத்தில் பறக்குமே .

''ஹே  கண்ணம்மா, உன் அழகிய முகத்தை ஏனடி மூடிக்கொண்டிருக்கிறாய். திரையை  விலக்கு''  என்றேன். பேசாமல் இருந்தாள் .
அவள் முகத்திரை  துகிலை என் கைகளால்  விலக்கினேன்.

''கண்ணம்மா  எதற்காக உன்  முகத்தை  மூடினாய்? புரியவில்லையே  சொல்?  நான்  உன்னை  இது வரை பார்க்காதவனா?. புதியவனா? என்ன வெட்கம்?  நான் அந்நியமா? பாசமாக  நேசமாக  உன்னிடம் இல்லாதவனா?.  நீவேறு  நான்  வேறு என்றா இருந்தோம்?  இரண்டு கண்களில்  ஒன்று இன்னொன்றை பார்த்து வெட்கப்படுமா சொல் பெண்ணே?''  - எப்படி என் டயலாக்.
............. பதில் இல்லை.

''இதோ பார்  கண்ணம்மா,  நான்  மற்றவர்களைப்  போல்  நைந்து போன,  பழைய  கதைகளை  தூசி தட்டி   சொல்பவனா?  என் மனதில் உதிக்கும்  எண்ண  வெள்ளத்தை  அப்படியே  உன் மீது  பாயச் செல்பவன்  என்று  உனக்கு புரியாதா? 
 பாட்டும்  ஸ்ருதியும்  ஒன்று  கலந்தால்  எப்படி  இணை பிரியாது ஒன்றே சேர்ந்ததாக  செவியில் பாயுமோ  அதைப் போல் அல்லவோ  நீயும்  நானும்.  தனியாக  உன்னை  வேற்றுமனிதர் போல் உபசரிக்க வேண்டுமா என்ன?

 ''அதோ பார் மேலே.  நீ இங்கே அல்லவோ இருக்கிறாய். அட  அதற்குள்  எப்படி மேலே   பூரண  சந்திரனாக  தனது கிரணங்களோடு  குளிர்ந்த  பால் வெண்மையை ஆகாயத்தில்  பரப்புகிறாய் . ஆகாயத்தை வணங்கி  புகழ்ந்து விட்டா  அதை செய்கிறாய்.   திகு திகு என  எரியும்  அக்னியில் விறகு ஒன்று சேரும்போது சொல்லிவிட்டா  உபசாரத்துக்காக  காத்திருக்கிறது.?

''நான் என்ன செய்தேன் என்று  சொல்கிறேன் கேள் கண்ணம்மா. ஒரு ஜோசியனைப் போய் பார்த்தேன்.   என் கையை, ஜாதகத்தை பார்த்து.  உனக்கும்  எனக்கும் உள்ள  உறவு இன்று நேற்று வந்ததில்லை.  எத்தனை ஜென்மமாக,  காலம் காலமாக  தொடர்ந்து வரும்  உறவு இது என்று அவை சொல்லியதாம். நான் சொல்லவில்லை அந்த ஜோசியன் சொன்னான்.''

 ''த்ரேதா யுகத்தில் நான் ராமன் என்றிருந்தால் நீ சீதையாம் கண்ணம்மா.  நட்பில்  நீ  அந்த புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணனாக இருந்தபோது உன் நண்பன் மனதிற்கினிய  அர்ஜுனன் நான் தான்.  ஒரு காலத்தில் நான்  மூர்க்கனாக இருந்தபோது, அது தான்  கொடிய  ஹிரண்யனாக  இருந்தபோது  என்னை தவிர்க்க வந்தவன் நீ  நரசிங்கன். தப்பு செய்தாலும் உன்னோடு சம்பந்தப் பட்டிருப்பேன்.  ஒரு காலத்தில்  நான் புத்தன் என்று   ஞானம்  தேடி இரவும் பகலும் வாடிய  போது  எனக்குதவிய  அசோதரை  நீயே. .  இப்படி எல்லாம் சரித்திரத்தில்  புராணத்தில்  நம்மிருவர்  உறவு பற்றி சொன்னால் அதில் இம்மியும்  தப்பில்லை. இந்த உறவு உலகம் இருக்கும் வரை  நமக்குள் இருக்கும் கண்ணம்மா. எதற்கு வெட்கம் உனக்கு?

நண்பர்களே, நான் மேலே  சொன்னதை எல்லாம்  ஒரு பாடலாக பண்ணினால் இன்னும் எவ்வளவு ருசியாக இருக்கும் படிக்க.  அந்த வேலையைத் தான் மஹா கவி பாரதியார் செய்த்திருக்கிறார். படியுங்கள்:

கண்ணம்மா -- என் காதலி --    நாணிக் கண் புதைத்தல்
(நாதநாமக்கிரியை -- ஆதி தாளம். சிருங்கார ரசம்)

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை -- இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாணமுற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்றகருத்தோ -- இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன் -- நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? -- எனக்
கெண்ணப் படுவதில்லை யேடிகண்ணம்மா!
1 கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? -- கன்னங்
கன்றிச் சிவக்கமுத்த மிட்டதில்லையோ?
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை, -- இரண்
டாவியுமொன் றாகுமெனக் கொண்டதில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே? -- துகில்
பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டுவெள்குமோ?

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர்சொல்லும் -- சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியுமொன்று கலந்திடுங்கால் -- தம்முள்
பன்னி உபசரணை பேசுவதுண்டோ?
நீட்டுங் கதிர்களொடு நிலவுவந்தே -- விண்ணை
நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினையச் சோதிகவ்வுங்கால் -- அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? 3

சாத்திரக் காரரிடம் கேட்டுவந்திட்டேன்; -- அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில்வந்த உறவன்றடீ; -- மிக
நெடும்பண்டைக் காலமுதல் நேர்ந்துவந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, -- அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தைநான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான்;

முன்னை மிகப்பழமை இரணியனாம் -- எந்தை
மூர்க்கந் தவிர்க்கவந்த நரசிங்கன் நீ,
பின்னையொர் புத்தனென நான்வளர்ந்திட்டேன் -- ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னையெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில் மிகவல்லர்காண்; -- அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரணமில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; -- இதில்
எதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...