பட்டினத்தார் -- J.K. SIVAN
''நறுக்கு ஓலை நச் என்று சொல்லிவிட்டதே!''
அவர் இருந்த ஊர் கடல் வாணிபம் செய்யும் காவிரிப்பூம்பட்டினம்.
அவர் திருவெண்காடு சிவன் அருளால் பிறந்தவர் என்பதால் பெற்றோர் அவருக்கும் சூட்டிய பெயர் ஸ்வேதாரண்யர் என்ற வடமொழி வார்த்தைக்கு ஈடான திருவெண்காடர் என்ற தமிழ்ப்பெயர். சைவர். அப்பா அம்மா சிவநேசர், ஞானக்கலை. அந்த ஊர் செட்டியார்கள் முக்கால்வாசி பேர்களின் பரம்பரைத் தொழில் கடல் வாணிப வியாபாரம். ஆகவே எங்கு திரும்பினாலும் வியாபாரிகள் .
அப்பா சிவநேசரும் திருவிடைமருதூரில் வியாபாரம் செய்தவர். ஐந்து வயதில் திருவெண்காடர் தனது தந்தையை இழந்தவர்.
நிறைய சிவனடியார்களுக்கு தான தர்மம் செய்யும் குடும்பம். சிவநேசன் செட்டியார் காலத்திற்கு பின் மகன் திருவெண்காடர் வியாபாரத்தில் நிறைய செல்வம் சேர்த்தவர். அந்த ஊரில் இன்னொரு வணிகர் பெரும்பணக்காரரான சிவசிதம்பரம் செட்டியார். அவர் மகள் சிவகலைக்கு யார் தகுதியான மாப்பிள்ளை என்று தேடிக்கொண்டிருந்தவர் கண்ணில் பட்டு விட்டார் திருவெண்காடர். எனவே அந்த கால வழக்கப்படி பதினாறு வயதிலேயே திருவெண்காடருக்கு சிவகலையோடு கல்யாணம்.என்ன செல்வமிருந்து என்ன பிரயோஜனம். பதினைந்து வருஷமாகியும் குழந்தை பாக்யம் இல்லை திருவெண்காடருக்கு.
அந்த ஊரில் சிவசர்மா என்று இன்னொருவர். அவரும் சிவ கைங்கர்யத்தில் ஈடுபாடு கொண்டு அன்னதானம் செய்பவர். வாரி வழங்குபவர். சொத்து கரைந்தாலும் குறைந்தாலும் அன்னதான கைங்கர்யம் நிற்கவில்லை. மனைவி நகைகள் உணவாயின. மனைவியின் தாலியும் அன்ன தானத்துக்கு உதவியது.
ஒரு நாள் சிவன் கனவில் தோன்றி ''சிவ சர்மா, நான் காட்டும் இடம் செல். அங்கே ஒரு குழந்தை நான் குறிப்பிடும் இடத்தில் இருக்கும். நீ அதை தூக்கிக்கொண்டு நேராக திருவெண்காடர் என்ற வணிகர் வீட்டுக்கு போய் குழந்தையை அவர்களிடம் கொடு. அன்னதானத்திற்கு பணம் கேட்டாயே, இந்த குண்டு குழந்தையின் எடைக்கு எடை பொற்காசுகள் கொடுப்பார் உன் அன்னதானம் தொடரட்டும்.'' என்கிறார் சிவன்
''சிவகலை, நமக்கு சிவனருளால் என்ன ஒரு அற்புதமான குழந்தை கிடைத்திருக்கிறது என்று பூரித்தார் திருவெண்காடர். அப்பாவின் வழியாகவே மருதவாணன் என்கிற அந்த மகனும் வியாபாரத்தில் தலை எடுத்தான். மரக்கலங்களில் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து அநேக வியாபாரிகள் வெளிநாடுகள் சென்று வியாபாரம் செயது நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு வருவார்கள். மருதவாணனும் அவ்வாறே செய்தான்.
திருவெண்காடர் ஒருமுறை மகனை நிறைய சரக்குகள் வாங்கி ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பினார். நிறைய பணம் சம்பாதித்துக்கொண்டு மருதவாணன் பல மாதங்கள் கழித்து கப்பலில் திரும்ப காத்திருந்தார்.
கப்பலில் திரும்பினான் மருதவாணன் . நிறைய மூட்டைகள் வந்து இறங்கின. திருவெண்காடர் அவைகளை பார்வையிட சென்றபோது ஆச்சர்யமாக இருந்தது அவருக்கு. அத்தனையும் உமி,தவிடு, சாம்பல், எரிமுட்டை எனும் விரட்டிகள். எப்படி இருக்கும் திருவெண்காடருக்கு.
''முட்டாள் இப்படியா ஒருவன் வியாபாரம் செய்வது. நல்ல பாடம் கற்பிக்கிறேன்.'' என கோபத்தோடு திருவெண்காடர் மார்தவணனை ஒரு அறையில் அடைத்து பூட்டிவிட்டார். கடற்கரையில் நின்றிருந்த கப்பல் அருகே அத்தனை உமி தவிடு சாம்பல் மூட்டைகளையும் தூக்கி எறிந்தார். என்ன ஆச்சரியம். வெளியே எடுத்த போது தான் தெரிந்தது. மேலே தவிடு, உமி ஆனால் உள்ளே அத்தனை மூட்டைகளிலும் சொக்கத் தங்க காசுகள். தவிடு அல்ல அதெல்லாம் தங்கப்பொடி, தங்க பஸ்பம், அந்த விரட்டிகளில் நவ ரத்ன வைர வைடூர்ய கோமேதக மாணிக்க கற்கள் பொதிந்திருந்தனவே.
தலை தெறிக்க தான் செய்த தவறுக்கு தண்டனை பெற, மன்னிப்பு கேட்க மகனைத் தேடி வீடு நோக்கி ஓடினார் திருவெண்காடர். பூட்டிய அறையில் மகன் மருதவாணன் இல்லையே.
''சிவகலை எங்கே மருதவாணன்? அலறினார் திருவெண்காடர்.
''அவன் எங்கேயோ சென்றுவிட்டானே.''
''ஆஹா எங்கே, எதற்கு ஏன்? என்ன சொன்னான்?''
''ஒன்றுமே சொல்லவில்லை. இதை மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டு நீங்கள் திரும்ப வரும்போது உங்களிடம் தரும்படி சொன்னான்''
சிவகலை ஒரு ஓலைப்பெட்டியை திருவெண்காடரிடம் நீட்டினாள். ஆவலாக அதை பிரித்து உள்ளே பார்த்தார் திருவெண்காடர். அதில் ஒரு பனை ஓலை நறுக்கு, அதோடு ஒரு காது இல்லாத ஊசி. எதற்கு இந்த காதற்ற ஊசி. ஓலையில் ஏதோ எழுதியிருக்கிறதே? அது என்ன?''
''காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' -- தம்பி நீ இந்த வாடகை இல்லாத பூமியில் நிறைய அகடவிகட சாமர்த்தியம் எல்லாம் பண்ணி சம்பாதித்து கோட்டை கட்டி சேர்த்த செல்வம் எல்லாம்.... பாவம் நீ திடீரென்று நோட்டீஸ் இல்லாமல் இதைவிட்டு கிளம்பும்போது கூட வரப்போவது இல்லை. அதெல்லாம் வேறு எவனுக்கோ. இதோ இந்த காது கூட இல்லாத ஊசியைக் கூட உன்னால் கூட கொண்டுபோக முடியாது. கவனம் இருக்கட்டும்.''
அப்படியே சிலை போல் வெகுநேரம் அந்த ஓலை வாசகத்தை திரும்ப திரும்ப படித்தார். ஏதோ என்று மிகவும் பாரமாக கனமாக அவர் நெஞ்சில் அமர்ந்து வலித்தது. வாசகம் அவர் மனதில்பாய்ந்து உள்ளே ஓடி வேலை செய்தது. தலை சுற்றியதா? இந்த உலகம் சுற்றியதா? அதில் காண்பதெல்லாம் சும்மாவா? வீடு வாசல், மனைவி, சுற்றம், செல்வம், ......எல்லாமே வெறும் பயாஸ்கோப் தானா? நிழலைத்தேடி அலைந்தேனா..அடடா,
எவ்வளவு காலம் விரயமாகி விட்டது. விலையுயர்ந்த ஆடைகளை களைந்தார். ஒரு துணியைக்கிழித்து கோவணமாக அணிந்தார். என்னென்னவோ பாட்டுகள் இதயத்திலிருந்து பீறிட்டு வந்தன.
அதெப்படி அத்தனையும் அற்புத தத்துவப் பாடல்களாக அமைந்தன. திருவெண்காடர் திசையெதுவும் தேடாமல் மனம்போன போக்கில் கால் இழுத்துக் கொண்டு போன இடம் அலைந்தார். இவர் காவிரிப்பூம் பட்டினத்தை சேர்ந்தவர் என்று அறிந்து சுருக்கமாக பட்டினத்தார் என்று எல்லோரும் அழைத்தார்கள் நமக்கு நிலையாக ஒரு சித்தர் கிடைத்துவிட்டார்.
ஸ்ரீ காளஹஸ்தி சென்றார். சிவனை ஒரு கேள்வி கேட்டார் அற்புதமாக இருக்கிறது. நீங்களும் ரசியுங்கள்.
''பொன்னாற் பிரயோசனம்
பொன்படைத் தார்க்குண்டு பொன்படைத்தோன்
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங்
கேதுண்டு? அத்தன்மை போல்
உன்னாற் பிரயோசனம் வேணதெல்
லாம் உண்டு உனைப் பணியும்
என்னாற் பிரயோசனம் ஏதுண்டு?காளத்தீயீச்சுரனே!
'காளத்தீசா, இதோ பார் செட்டியார் நிறைய தங்கம் சேர்த்தார், அதால் நிச்சயம் நிறைய பயன் இந்த செட்டியாருக்கு உலகத்தில் இருக்கிறது. அதுசரி அதை வைத்திருந்தாரே செட்டியார், அவரால் ஒரு நயாபைசா பிரயோஜனம் அந்த தங்கத்திற்கு உண்டா? நான் உன்னெதிரே வந்து நிற்கிறேன். தரிசிக்கிறேன் உன்னால் போதும் போதும் என்ற அளவிற்கு எனக்கு புண்ணியம் பயனாக உண்டு. ஆனால் அதே நேரம் உன்னைப் பணிகிறேன், என்னால் உனக்கு ஏதாவது ஒரு சிறு உபயோகமாகவாது உனக்கு உண்டா சொல் சிவா''
எப்படி இருக்கிறது பட்டினத்தார் எளிய பாடல்? இன்னொன்று
''இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே – பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்''
ஆரிய பவன் அல்வா சாப்பிட மூணு மணிக்கே கிளம்பி குடை பிடித்து நடந்து ரயில் ஏறி, படி இறங்கி நடந்து இந்த தொந்தியை வளர்த்தேன். தொந்தியை தடவிக்கொடுத்தேன் செல்லமாக. பகீரென ஒரு எண்ணம். இது எனதா?? இல்லை செட்டியார், எங்களது?? யார் சொல்வது இப்படி என்று பார்க்கிறேன். பேய்கள். கழுகுக, நாய், நரிகள்..நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு என் பெரிய தொப்பையை பார்க்கின்றனவே. ஒருநாள் என் செல்ல தொப்பையை என் உடலோடு ஒருநாள் தூக்கிக்கொண்டு ஒரு இடத்தில் போட்டுவிடுவார்களே . அப்போது பாய்ந்து வந்து இந்த பேய்கள், நாய்கள், நரிகள், கழுகுகள், அல்வாவோடு இந்த தொப்பையை கிழித்து.....ஐயையோ , போதும் நிறுத்து...வேண்டாம். நான் இந்த உலகில் இருப்பதே அநித்தியம். பொய் ,நிச்சயம் இதை அப்படியே விட்டுவிட்டு கட்டின துணியோடு போவது மட்டுமே நிச்சயம். நித்யம்...
பட்டினத்தாரை தொடர்வோம்.
பட்டினத்தார் அப்படியே நடந்து எண்ணூர் பக்கம் வந்தார். திருவொற்றியூர் வந்தது. அங்கே தியாகராஜனை தரிசித்தார். மனம் மகிழ்ந்தது. தங்கிவிட்டார். எங்கெங்கெல்லாமோ பட்டினத்தார் சந்நிதிகள் உள்ளன. திருச்சி தேவதானம் நன்றுடையான் விநாயகர் கோவிலில் இருக்கிறார்.
இன்னும் பட்டினத்தார் பற்றி நிறைய தெரிந்து கொள்வோம்.
No comments:
Post a Comment